உம்மு ஸலமா ஹிந்த் பின்த் அபூ உமைய்யா (ரழி)
உம்மு ஸலமா (ஹிந்த் பின்த் அபூ உமைய்யா) ரழி (கி.பி.596-கி.பி.680) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார். அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்முஸலமா (ரழி) என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். வரலாறு அவ்வாறே அவர்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. பிறப்பு மற்றும் வம்சாவழிச் சிறப்புகளின் அடிப்படையில், இயற்கையிலேயே புத்திக் கூர்மையுள்ள, கல்வியறிவுள்ள, நேர்மையான மற்றும் உறுதியான செயல்பாடுகள் கொண்டவர்களாக அன்னையவர்கள் திகழ்ந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களோடு திருமணம் புரியும் முன் :
உமைய்யா பின் அப்துல்லா பின் அம்ர் பின் மக்சூம் என்ற தந்தை, மற்றும் அதீகா பின்த் ஆமர் பின் ரபீஆ பின் மாலிக் பின் கஸீமா என்ற தாய்க்கும் மகளாக மக்காவில் கி.பி.596ல் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் பிறந்தார்கள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஹிந்த். இவரது பெற்றோர் பொது நலச் சேவைகள் மற்றும் தான தர்மங்களின் மூலமாக அரபுலகில் மிகவும் பிரபலமாக மதிக்கப் பட்டவர்களாவார்கள். இவர் தந்தையுடன் பயணம் செய்யக் கூடியவர்கள் தங்களது தேவைக்காவென எந்தப் பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தன்னுடன் வரக் கூடியவர்கள் அனைவரும் தனது விருந்தாளிகள் என மதிப்பளித்து, உணவிலிருந்து அத்தனைச் செலவுகளையும் அவரே பொறுப் பேற்றுச் செலவு செய்யக் கூடிய தனவந்தராக உம்மு ஸலமாவின் தந்தை திகழ்ந்தார். எனவே, தனது தந்தையைப் போலவே உம்மு ஸலமா அவர்களும் ஏழைகளுக்கு இரங்கக் கூடியவராகவும், இன்னும் தான தர்மங்களில் அதிகம் ஈடுபடக்கூடியவராகவும் திகழ்ந்தார்கள்.
மக்காவில் அன்றையதினம் வாழ்ந்த குறிப்பிடத்தக்க செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றான மக்சூம் குலத்திலிருந்து வந்த அபூ ஸலமா என்றழைக்கப்படக்கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி (ரழி) என்பவர். இவர் நபி (ஸல்) அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். மேலும் நபி (ஸல்)அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆன அபூ ஸலமா அவர்களைக் கைப்பிடித்து, மணமகளாக மக்சூம் கோத்திரத்தாரின் இல்லத்திற்கு சென்ற உம்மு ஸலமா அவர்கள், அங்கும் தனது பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நங்கையாகத் திகழ ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு ஸலமா என்ற முதல் குழந்தை பிறந்தது. இந்த பிள்ளையின் தந்தை என்பதற்க்கு அபூ ஸலமா என்றும், இந்த பிள்ளையின் தாய் என்பதற்க்கு உம்மு ஸலமா என்றும் பெயரை மரியாதைக்கு மக்கள் அழைத்து, அதுவே நிரந்தரமாக அழைக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு உமர், ஜைனப் மற்றும் ருக்கையா என மொத்தம் நான்கு குழந்தைகள். இஸ்லாமிய அழைப்பை ஏற்று கொண்டு விசுவாசிகள் ஆன முதல் பத்து பேரில் இத்தம்பதியினரும் இருந்தார்கள்.
சந்தோஷமான அபூ ஸலமா தம்பதியினர் வாழ்வில் இஸ்லாத்தைத் அவர்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதன் பின்பு, தலைகீழாக மட்டுமல்ல, அடியோடு அந்தச் சூழ்நிலைகள் மாற்றம் பெற ஆரம்பித்தன. முழு கோத்திரத்தாரும் இவர்களுக்கு எதிராகப் புயலெனக் கிளர்ந்தார்கள். பிறரைக் கொடுமைப்படுத்தி அதில் இன்பங் காண்பதே பிழைப்பாகக் கொண்டு திரியும், வலீத் பின் முகீரா போன்றவர்கள் இவர்களுக்கு தினம் தினம் புதுப்புதுப் பிரச்னைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக, மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத நிலைக்குச் சென்ற பொழுது, நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை, சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடியவரான நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அபீஸீனியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முதல் குழுவில் இருந்த 16 நபர்களில், 12 பேர் ஆண்களும், 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இந்தப் 16 பேர் கொண்ட குழுவில் அபூ ஸலமாவும், உம்மு ஸலமாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முதல் குழுவிற்கு அடுத்தாக ஒரு குழு அபிஸீனியாவிற்குக் கிளம்பியது. அதில் 83 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவர். இந்தக் குழுவில் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களும் இடம் பெற்றிருந்தார். அபிஸீனியாவில் தொடங்கிய புது வாழ்க்கை எந்தவித அடக்கு முறைகளும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் இருந்தது. முஸ்லிம்கள் அபிஸீனியாவில் மன்னரது நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டதுடன், அங்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றார்கள் என்று கேள்விப்பட்ட மக்கத்துக் குறைஷிகள், சதித் திட்டங்கள் தீட்டி அபிஸீனியா மன்னரிடம் சென்று முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு புகார் அளித்தார்கள்.
மக்கா குறைஷிகளின் கருத்துகளை கேட்டு கொண்டு, தீர்ப்பு என்பது இரு பக்கங்களின் விவாதங்களைக் கேட்ட பின்பே வழங்க வேண்டும் என்று முடிவெடுத்த மன்னர் நஜ்ஜாஸி, அகதிகளின் தலைவரை அழைத்து உங்களது தரப்பு வாதம் என்னவென்பதைக் கூறுமாறு பணித்தார். எனவே, தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக, முஸ்லிம்கள் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களை தலைவராகக் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார்கள். ஜாஃபர் (ரழி) அவர்களின் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், உங்களது இறைத்தூதருக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருவதாக நான் கேள்விப்பட்டேன், அதிலிருந்து சிலவற்றை ஓதிக்காட்டுங்கள், அதனை நான் செவிமடுக்க விரும்புகின்றேன் என்று கூறினார்.
கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஜாஃபர் (ரழி) அவர்கள், மர்யம் அத்தியாயத்திலிருந்து சில வசனங்களை ஓத ஆரம்பித்தார்கள். திருமறையின் வசனங்களைச் செவி மடுத்த மன்னர் நஜ்ஜாஸியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடி, அவரது தாடியை நனைத்துக் கொண்டிருந்தது. இறுதியாக, சுயநினைவிற்கு வந்த மன்னர், இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் வசனங்களைப் போலவே இருக்கின்றது, இரண்டும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை தான் என்று கூறினார்.
இப்பொழுது, மக்காவிலிருந்து வந்திருந்த குறைஷிகளின் பிரதிநிதிகளை நோக்கிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், இவர்கள் உயர் பண்புகளுக்குச் சொந்தக் காரர்களாக இருக்கின்றார்கள், இன்னும் இவர்கள் விரும்பும் காலம் வரைக்கும் இந்த அபீசீனிய மண்ணில் வாழ்ந்து கொள்ளலாம் என்று பதிலளித்தார். இன்னும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வித பாதுகாப்புகளும் கொடுக்கப்படும் என்றும் கூறிய அவர், எனக்கு நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற இந்தப் பரிசுப் பொருட்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு மலையளவு தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டினாலும், இந்த நேர்வழி பெற்ற மக்களை நான் உங்களது கைகளில் ஒப்படைக்க மாட்டேன் என்று கூறி குறைஷிகளைத் திருப்பி அனுப்பினார்.
நிம்மதி அடையாத குறைஷி பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த நாள் காலையில் மன்னரது அவைக்குச் சென்று, நேற்றைய தினம் நாங்கள் ஒரு தகவலை உங்கள் முன் கொண்டு வரத் தவறி விட்டோம், அதாவது இந்த முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களை இறைவனது மகனாக ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக, அவரை ஒரு மனிதராகவும் இன்னும் இறைவனது அடிமையாகவும் தான் கருதுகின்றார்கள். எனவே, நீங்கள் அந்த முஸ்லிம்களை மீண்டும் அழைத்து, ஈஸா (அலை) அவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கை என்ன வென்பதைக் கேட்டறிய வேண்டும் என்ற கோரிக்கையை மன்னர் நஜ்ஜாஸி முன் வைத்தனர்.
இப்பொழுது முஸ்லிம்கள் அவைக்கு வரவழைக்கப்பட்டு, ஈஸா (அலை) அவர்கள் பற்றிய உங்களது நம்பிக்கைகள் என்ன என்று கேட்கப்பட்டது. ஜாஃபர் (ரழி) அவர்கள் சத்தியத்தை முழங்கினார்கள். எங்களது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஈஸா (அலை) அவர்கள் பற்றிக் கூறும் போது, அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது திருத்தூதருமாவார்கள், இன்னும் அல்லாஹ்வினுடைய ஆவி (ரூஹ்)யினாலும், இன்னும் அவனது வார்த்தை (கலிமா) யினாலும் வந்துதித்தவராவார் என்றும், தனது பதிலைமுடித்தார்.
ஜாஃபர் (ரழி) அவர்களிடமிருந்து, ஈஸா (அலை) பற்றித் தெரிவித்த அந்த முழுமையான கருத்தைச் செவிமடுத்த மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், தனது பாதங்களை தரையில் அடித்துக் கொண்டு, ஆச்சரியத்துடன், ''நான் எதனை உங்களிடமிருந்து கேட்டேனோ அவை அனைத்தும் சத்தியம், ஈஸா (அலை) அவர்கள் தன்னைப்பற்றி என்ன கூறியிருக்கின்றார்களோ, அதிலிருந்து நீங்கள் எதனையும் மாற்றவுமில்லை, சேர்க்கவுமில்லை, மிகச் சரியாகச் சொன்னீர்கள் என்று கூறினார். இப்பொழுது முஸ்லிம்களின் பக்கம் திரும்பிய மன்னர் நஜ்ஜாஸி அவர்கள், நீங்கள் எனது தேசத்தில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழலாம், உங்களுக்கு எந்த சிறு தொந்தரவுகளும் அணுகாது.
பின்னர் குறைஷிகளின் தூதர்களின் பக்கம் திரும்பிய மன்னர், ''இறைவனுடைய மிகப் பெரும் கருணையால், நாங்கள் எங்களுக்குத் தேவையான பதிலையும், விளக்கத்தையும் பெற்றுக் கொண்டோம்". நீங்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்களை எடுத்துக் கொண்டு, உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள். அவர்கள் இந்த முழு வரலாற்றையும் பதிவு செய்து வைத்து, நமக்கு வரலாற்றுப் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள்.
ஒரு நபிமொழி அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட சம்பவத்தின் பின்னணி தான் அபீசீனியாவிலிருந்து மக்காவிற்கு அவர்களைத் திரும்பத் தூண்டியது. ஒருமுறை நவி(ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து சில வசனங்களை கஅபாவில் ஓதிக் கொண்டிருந்த பொழுது, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இறை நிராகரிப்பாளர்கள் அனைவரும் தங்களை அறியாமலேயே, நிலத்தில் சிரம் தாழ்த்தினார் (சுஜுது செய்தார்)கள். இந்தச் சம்பவம் தான் பெரிதாக்கப் பட்டு, புரளியாக அபீசீனியாவிற்குச் சென்று, குறைஷிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள் என்ற செய்தியாகப் போய்ச் சேர்ந்தது. இந்தச் செய்தியை உண்மை என நம்பித் தான் அவர்கள் நாடு திரும்பினார்கள்.
முஸ்லிம்களுக் கெதிரான குறைஷிகளின் கொடுமைகள் குறையவில்லை யாதலால், முஸ்லிம்கள் மீண்டும் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்தனர். அதேகால கட்டத்தில் அகபாவில் உடன்படிக்கை எடுத்துக் கொண்ட மதீனத்து முஸ்லிம்கள், இப்பொழுது மக்காவில் உள்ள முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருமாறு அழைத்தார்கள், நபி(ஸல்) அவர்களும் அவர்களது அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, அபீசீனியாவை விடுத்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு பணித்தார்கள்.
அபூ ஸலமா (ரழி) குடும்பத்தினரின் ஹிஜ்ரத்:
அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஒட்டகத்தில் ஏறி பயணமாகத் தொடங்கினார். இதனை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தார்கள் ஓட்டகத்தை மறித்து, அபூ ஸலமாவே..! நீங்கள் எங்கு செல்ல விரும்புகின்றீர்களோ அங்கு நீங்கள் போய்க் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால் உங்கள் மனைவியோ எங்களைச் சேர்ந்தவள், எனவே, அவரை நீங்கள் இங்கு விட்டு விட்டுத் தான் போகவேண்டும். நேற்றைக்கு அபிசீனியாவிற்கு கூட்டிக் கொண்டு போனீர்! இன்றைக்கு மதீனாவிற்குக் கூட்டிக் கொண்டு போகின்றீர், அவளை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்தத் தெரியாத உமக்கு எதற்கு மனைவி என்று அவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள்.
உம்மு ஸலமா (ரழி) அவர்களது குடும்பத்தினர் நடந்து கொண்ட விதத்தைக் கேள்விப் பட்ட அபூ ஸலமா குடும்பத்தினர் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் வந்து, நீ பெற்றிருக்கின்ற பிள்ளைகள் எங்களது இரத்த வழி வாரிசுகள், அதனை உன்னுடைய வளர்ப்பில் நாங்கள் விட முடியாது, அவர்களை நாங்கள் எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி, பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று விட்டார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந் தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார். ஆக, மொத்த குடும்பமே இப்பொழுது மூன்று பிரிவாக பிரிந்து போய் நிற்க, நடப்பது அத்தனையும் நிஜமா! என்று கண் கலங்கிய உம்மு ஸலமா (ரழி) அவர்கள், பிரிவுத் துயரால் வாடி நின்றார்கள். ஒவ்வொரு நாளும் தனது கணவரையும், பிள்ளைகளையும் பிரிந்த அந்த இடத்திற்கு வந்து அந்த சோக நினைவுகளில், தன்னை இழந்து அழுது கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் அந்த வழியே போய்க் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, உம்மு ஸலமாவே..!உமக்கு என்ன நேர்ந்தது, ஏன் இப்படி அழுது கொண்டிருக்கின்றாய்? என்றுகேட்டார். நடந்த அந்தத் துயர நிகழ்வுகளை அவரிடம் சொன்னார். அந்த மனிதர் உம்மு ஸலமா (ரழி) மற்றும் அபூ ஸலமா (ரழி) ஆகியோர்களின் உறவினர்களிடம் போய் பேசி குழந்தைகளுடன் மதீனாவுக்குச் செல்வதற்கும் அவர்கள் அனுமதி வாங்கி தந்தார். ஆனால் அவருடன் மதீனா வருவதற்கு யாரும் தயாராக இல்லை. இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தன்னந் தனியாகவே தனது பிள்ளைகளுடன் ஒட்டகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் மதீனாவில் ஒன்றிணைந்தார்கள், குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.
அபூ ஸலமா (ரழி) ஏற்கனவே பத்ருப் போரில் கலந்து கொண்டு, சிறப்புப் பெற்றிருந்தார்கள், அதனைப் போலவே உஹதுப் போரிலும் கலந்து கொண்ட சிறப்புக்குரியவராகத் திகழ்ந்தார். ஆனால் இந்தப் உஹதுப்; போரில் அபூ உஸமாஜஸ்மி என்பவர் எறிந்த கத்தி ஒன்று மிக ஆழமான காயத்தை அபூ ஸலமா (ரழி)அவர்களுக்கு ஏற்படுத்தியது, அதன் மூலம் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். மாதக் கணக்கில் அதற்கான மருத்துவம் செய்தும் பலனளிக்கவில்லை. மேற்புறத்தில் ஆறிய புண், உள்பகுதியில் சீழ் வைத்தது வெளியில் தெரியவில்லை.
உஹதுப் போர் முடிந்து சற்று இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், பனூ அஸத் குலத்தவர்கள் முஸ்லிம்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள், பனூ அஸத் குலத்தவர்களுக்கு எதிராகப்புறப்பட்ட படைக்குத் தலைமைத் தளபதியாக அபூ ஸலமா (ரழி) அவர்களை நியமித்தார்கள். இப்பொழுது, அபூ ஸலமா (ரழி) அவர்களது தலைமையில் 150 பேர் கொண்ட இஸ்லாமியப்படை கிளம்பியது. பனூ அஸத் குலத்தவர்களது எல்லைக் கோட்டுக்கருகே வந்த இஸ்லாமியப் படை சற்றும் தாமதிக்காது தங்களது தாக்குதலைத் தொடுத்தார்கள். இறுதியில் பனூ அஸத் கோத்திரத்தாரை வேரறுத்து வெற்றி வாகை சூடினார்கள்.
அபூ ஸலமா (ரழி) மரணம்:
இறைத் திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் அபூ ஸலமா (ரழி) அவர்கள் போரிட்டார்கள். அவர்களது வாள் அனைத்துப் பக்கமும் சுழன்று, எதிரிகளை நிலை குலைய வைத்தது. இறுதியில், முஸ்லிம்களின் வீரத்திற்கு முன்னால் மண்டியிட்டு, தோற்று ஓடினார்கள் பனூ அஸத் குலத்தவர்கள். இப்பொழுது ஏற்கனவே காயம் பட்ட இடத்தில் இருந்து ரணம், வலியாக மாறி, அந்தஇடத்தில் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. மதீனா திரும்பிய அபூ ஸலமா (ரழி) அவர்களின் காயத்தைப் பார்த்த உம்மு ஸலமா (ரழி) மிகுந்த மன வேதனை அடைந்தார்கள்.
அபூ ஸலமா (ரழி) அவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது, நபி(ஸல்) அவர்கள் அபூ ஸலமாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். அபூ ஸலமா (ரழி) அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த நபி(ஸல்) அவர்கள், அபூ ஸலமா (ரழி) அவர்களின் மீது கையை வைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ ஸலமா (ரழி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அபூ ஸலமா (ரழி) அவர்களும் இறைவனிடம் பிரார்தித்தார்கள், இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
அபூ ஸலமா(ரழி) அவர்களை மரணம் வந்தடைந்தது. நபி(ஸல்)அவர்கள் தனது கரங்களால் அபூ ஸலமா(ரழி) அவர்களின் கண்களை மூடினார்கள். உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நபி(ஸல்) அவர்களே..! நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கேட்டார்கள்.
நீங்கள் உங்களுடைய மற்றும் அபூ ஸலமா (ரழி) அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக இறைவனிடம் துஆச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும்படி இறைவனிடம் முறையீடு செய்து கொள்ளுங்கள் என்ற பிரார்த்தனையை நபி(ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் திருமணம்:
கணவர் இறந்ததன் பின்பு முஸ்லிம் பெண்கள் அனுஷ்டிக்கக் கூடிய அந்த இத்தா என்ற காத்திருப்புக் காலம் முடிவடைந்தது. இப்பொழுது இறைவன் உம்மு ஸலமா (ரழி) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதற்கிணங்க, முதலில் அபுபக்கர் (ரழி) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் ஒரு தூதுவரை அனுப்பி, அவர்களை மணந்து கொள்ளத் தயாராகக் இருப்பதாகக் கூறுகின்றார்கள். ஆனால் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அபுபக்கர் (ரழி) அவர்களை மணந்து கொள்ள மறுத்து விடுகின்றார்கள்.
பின்பு உமர் (ரழி) அவர்கள் மணந்து கொள்ளத் தயாராக இருந்தும், அதனையும் மறுத்து விடுகின்றார்கள். பின்பு நபி(ஸல்) அவர்கள், தான் மணக்கத் தயாராக இருப்பதாகச் செய்தி சொல்லி அனுப்பி விடுகின்றார்கள்.
இப்பொழுது உம்மு ஸலமா (ரழி) அவர்களை மணந்து கொள்ள மூன்று நபர்கள் காத்திருக்கின்றார்கள். தலை வெடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு! அதற்குக் காரணமும் இருந்தது.
முதலாவதாக, நபி(ஸல்) அவர்களின் வேண்டுகோளை நான் உதாசிணம் செய்தால், நான் செய்து வைத்திருக்கின்ற நற்செயல்கள் அழியக் காரணமாகி விடுமே! இரண்டாவதாக, நானோ வயதான பெண். மூன்றாவதாக, எனக்கோ அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் நான் எந்த முடிவை எடுப்பது என்று திணறிக் கொண்டிருந்த உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு, நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு ஆலோசனை கூறினார்கள்.உம்மு ஸலமா (ரழி) அவர்களே! நீங்கள் அவசரப்பட வேண்டாம். இறைவனிடம் முறையிட்டு, இதற்கு சரியான தீர்வை வழங்குமாறு அவனிடமே உதவி கோருங்கள், நானும் உங்களுக்காக துஆச் செய்கின்றேன் என்று கூறி அவர்களது மனஉலைச்சலுக்கு தீர்வு சொன்னார்கள்.
இன்னும் உம்மு ஸலமா (ரழி) அவர்களுக்கு நபி(ஸல்) இவ்வாறு பதில் கூறினார்கள். நீங்கள் வயதான பெண்மணி என்றால் நானும் வயதானவன் தான், பிள்ளைகளைப் பொறுத்தவரை நீங்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு நான் பாதுகாவலனாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கவும் பொறுப் பேற்றுக் கொள்கின்றேன் என்று வாக்குறுதி யளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் இந்த பதிலால், மனம் மகிழ்ந்த உம்மு ஸலமா(ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை மணக்கச் சம்மதித்தார்கள். நபி (ஸல்) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் அபூ ஸலமா (ரழி) அவர்கள் தனது மனைவிக்குச் செய்த பிரார்த்தனைகள் நிறைவேறியது. ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் நபி (ஸல்) அவர்களுக்கும், உம்மு ஸலமா (ரழி)அவர்களுக்கும் திருமணம் நடந்தது.
அன்னையின் சிறப்புக்கள்:
அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் அறிவிப்பின்படி, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு நாளின் அஸர் தொழுகையின் பின்பு தனது மனைவிமார்களின் வீட்டிற்குச் சென்று, அவர்களின் நலம் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்து வரக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் மனைவிமார்களின் வீடுகளுக்குப் புறப்படும் பொழுது, எங்களில் மூத்தவரான உம்மு ஸலமா (ரழி) அவர்ளின் வீட்டிலிருந்து ஆரம்பித்து, இறுதியில் எனது (ஆயிஷா (ரழி) வீட்டோடு முடித்துக் கொள்வார்கள்
அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் அழகு, கல்வி மற்றும் ஞானத்தின் காரணமாக நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் சிறந்த இடத்தினை வகித்தார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பலிப் பிராணிகளைக் அறுத்துப் பலியிட்டு விட்டு, தங்களது தலைமுடியை சிரைத்துக் கொள்ளும்படி தனது தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்களின் கட்டளையை உடனே செயல்படுத்துவதில் தோழர்கள் சற்று ஆர்வங்குன்றி இருந்தார்கள் என்பதோடு, யாரும் பலிப்பிராணிகளை அறுக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.
நிலைமையைப் புரிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசனை கலந்தபொழுது அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்,
நீங்கள் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். முதலில் நீங்கள் சென்று உங்களது பலிப் பிராணிகளை நீங்களே அறுத்துப் பலியிடுங்கள். நீங்கள் அதனைச் செய்த பின்பு, உங்களது தோழர்கள் உங்களுக்குக் கட்டுபட வேண்டியது அவசியமாகி விடும் பொழுது, அவர்கள் தானாகவே வந்து அவரவர் பலிப் பிராணிகளை அறுத்துப் பலியிட்டுவிட்டு, முடிகளை சிரைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.
அதன்படியே நடந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கொடுத்த ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள். தனது தோழர்களும் இப்பொழுது தங்கள் பலிப் பிராணிகளை அறுத்துப் பலியிட ஆரம்பித்து விட்டதுடன், அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் அவர்கள் கல்வியறிவு பெற்றிருந்ததுடன், ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடையவர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் இருந்த காலங்களில் பல முறை திருமறையின் வசனங்கள் அருளப்பட்டிருக்கின்றன.
இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பல போர்களுக்குச் சென்றுள்ளார்கள். பனீ முஸ்தலக் போர், தாயிஃப் போர், கைபர், ஹுனைன் மற்றும் மக்கா வெற்றியின் பொழுதும் அன்னையவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுதும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் பைத்அத்தும் செய்து கொண்டார்கள்.
அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் மார்க்க விசயங்களில் நல்ல கல்வி ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் நபி மொழிகளில் 387 நபிமொழிகளை மனனமிட்டு வைத்திருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களில் உறவுமுறைகள் குறித்தும், தத்தெடுத்தல் மற்றும் மணவிலக்கு குறித்தும் நுணுக்கமான சட்டங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அப்துல்லா பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அன்னையிடம் வந்து கலந்தாலோசனை செய்து விளக்கம் பெற்றுக் கொள்வார்கள்.
இஸ்லாமியச் சட்ட வழங்கல்களில் மற்றும் தீர்ப்பு வழங்குவதில் தனிச் சிறப்புப் பெற்ற நபித் தோழர்கள் பலர் அன்னையின் பெயரால் பல மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அன்னையின் பெயரால் அறிவிக்கப்படும் பல சட்டத் தீர்ப்புகளைக் கொண்டு, அந்தத் தீர்ப்புகள் செல்லத்தக்கவை என்று அவர்கள் சான்று பகர்ந்திருக்கின்றார்கள். நீதித்துறையில் தீர்ப்பு வழங்கும் தகுதி பெற்ற நபித் தோழர்களின் பட்டியலில் அன்னையவர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.
அன்னையவர்கள் தனது 84 ஆம் வயதில் ஹிஜ்ரி 62 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். நேர்வழி பெற்ற கலீபாக்களின் ஆட்சியை கண்டு களிக்கும் நற்பேறு பெற்றவர்களாக இருந்தார்கள். அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அன்னையர்களிலேயே இறுதியாக மரணமடைந்தார்கள். யஸீத் பின் முஆவியா அவர்களது ஆட்சியின் பொழுது தான் அன்னையவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃயில் மற்ற அன்னையர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...