Home

அலீ  இப்னு  அபூதாலிப் (ரழி)

            அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அமீர் உல் முஃமினீன் (கி.பி. 600 - கி.பி. 661) அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களின் மருமகனும், நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையார் அபூதாலிபின் மகனுமாவார்.  அலீ(ரழி) அவர்கள் கிபி 656 முதல் கிபி 661 வரை நான்காவது கலீபாவாக ஆட்சி செய்தார்கள், அலீ(ரழி) ”குலாபாயே ராஷிதீன்” கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார்கள். நபி (ஸல்) அவர்களின் திருவதனங்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட 10 நன்மக்களில் அலீ (ரழி) அவர்களும் ஒருவராவார்.

மக்கா குறைஷியரின் மிக மதிக்கத்தக்க தலைவராக கருதப்படும் அபூதாலிப் இப்னு அப்துல்முத்தலிப் மற்றும் பாத்திமா பின்ந் அஸாத் என்பவர்களின் மகனாக கி.பி. 600 ஆம் ஆண்டில் மக்காவில் பிறந்தார். நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல்முத்தலிப் மறைவுக்கு பின்னர் நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பில் நபிகள்நாயகம் அவர்கள் இருந்து வந்தார்கள். அபூதாலிப் அவர்களின் குடும்பம் மிகப் பெரியது. என்றாலும் அவர்களது குடும்பம் வசதியானது தான். அலீ (ரழி) அவர்கள் பிறந்த பொழுது, நபி(ஸல்) அவர்கள் நல்ல வாலிப் பருவத்தில் இருந்தார்கள். அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். எனவே, அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் அலீ (ரழி) அவர்களை தன்னுடன் வைத்துப் பராமரித்துக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின்னர் இஸ்லாத்தை ஏற்ற சிறுவர்களில் முதல் நபர் அலீ(ரழி) அவர்களே ஆவார். அப்போது அவருக்கு வயது பத்தேயாகும்.

நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தையும், இஸ்லாமிய இறைநெறியையும் ஏற்காத குறைஷிகள் நபி(ஸல்) அவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டினர். குறிப்பிட்ட இரவில் குறைஷிகள் கொல்ல வருமுன், இளைஞர் அலீ (ரழி) அண்ணலாரின் படுக்கையில் அவரது போர்வையைப் போர்த்தித் தீரமுடன் தூங்க, அண்ணலார் மக்கா மக்கள் கொடுத்து வைத்திருந்த அமானித பொருள்களை அலீ (ரழி) வசம் உரியவர்களிடம் ஒப்படைக்க சொல்லி கொடுத்து விட்டு மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

கொலையாளிகளுக்கும் அஞ்சாத தீரம் அலீ (ரழி) அவர்களுடையது என்பதை இச்சம்பவம் மூலம் நன்குணரலாம். வாள் வீச்சிலும் மற்போரிலும் தன்னிகரற்று விளங்கினார். இவரது வாள் இருமுனை கொண்ட இரட்டை வாள் ஆகும்.

நபி(ஸல்) அவர்களுக்கும் மக்காக் குறைஷிகளுக்கும் இடையே நடைபெற்ற பத்ருப் போரில் அலீ (ரழி) அவர்களின் மாவீரத்தைப் பாராட்டும்வகையில் தம் அன்பு மகள் ஃபாத்திமாவை நிக்காஹ் (திருமணம்) செய்து தந்தார்கள். அலீ(ரழி) ஃபாத்திமா(ரழி) தம்பதியரின் அருமந்தப்புதல்வர்களே ஹஸன்(ரழி), ஹுசைன்(ரழி). நபி (ஸல்) அவர்களின் பேரப் பிள்ளைகளான இவர்களே பின்னாளில் இறைநெறியை நிலைநாட்ட இன்னுயிர் நீத்த ஏந்தல்கள்.

உஹதுப் போர்க்களத்தில், நபி (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் நின்று போரிடக் கூடிய வாய்ப்பை பெற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகக் கூட வதந்திகள் பரப்பப்பட்டன. இத்தகைய குழப்பமான அந்த நேரத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நிலைகுலையாமல் நின்று கொண்டிருந்த ஒரு சில நபித்தோழர்களில் அலீ (ரழி) அவர்களும் ஒருவராவார்கள். இந்தப் போரில் அலீ (ரழி) அவர்களுக்குக் கூட 17 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.

மதீனாவைக் காக்கும் பொருட்டு மதீனாவைச் சுற்றிலும் அகழ் ஒன்றை நபி(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் தோண்டினார்கள். ஒருநாள் எதிரிகளின் தரப்பிலிருந்து, அரேபியாவின் மிகப் பிரசித்தி பெற்ற வீரனான அப்து என்பவன், அந்த அகழியை குதிரையில் இருந்தவாறே தாண்டி விட்டான். அவனை எதிர்த்து நிற்பதற்கு அனைவரும் பயந்தனர், அவனருகே செல்வதற்குக் கூட முஸ்லிம்கள் பயந்து கொண்டிருந்த பொழுது, அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அலீ (ரழி) அவர்கள் முன் வந்தார்கள்.

அலீ அவர்களே..! கவனம் தேவை. அவன் அப்தூத்..! இது நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையாக இருந்தது. நல்லது, அவனைப் பற்றி நான் அறிவேன், இது அலீ (ரழி) அவர்களது பதிலாக இருந்தது. சற்றுச் சில நிமிடங்களில் அலீ (ரழி) அவர்கள், அந்த எதிரியினுடைய கழுத்தை அவனது உடலிலிருந்து துண்டித்தார்கள்

ஹுதைபிய்யா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கையை மக்கத்துக் குறைஷிகளுடன் முஸ்லிம்கள் முதன் முதல் ஏற்படுத்தின் கொண்ட போது, நபி (ஸல்) அவர்கள், அந்த உடன்படிக்கையின் வாசகங்களைக் கூறக் கூற, அலீ (ரழி) அவர்கள் எழுதிக் கொண்டு வந்தார்கள். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு முதல் ஹஜ் நடைபெற்றது. அந்த நேரத்தில், இணைவைப்பாளர் கஃபாவில் நுழையக் கூடாது என்று இறைவன் கட்டளை விதித்தான். இந்தக் கட்டளையை ஹஜ்ஜில் மக்கள் கூடுகின்ற பொழுது தான் அறிவிக்க முடியும். அன்றைய கால வழக்கப்படி, இந்த அறிவிப்பை நபி(ஸல்) அவர்களோ, அல்லது அவருக்கு நெருங்கிய உறவினர்களோ தான் செய்ய முடியும் என்றிருந்த நிலையில், இந்தப் பணிக்கு அலீ (ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள்.

மக்காவின் வெற்றியின் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழையும் பொழுது முஸ்லிம்களின் கொடியை அலீ (ரழி) அவர்களின் கரங்களில் தான் கொடுத்தார்கள். மக்கா நகரை வெற்றி கொண்ட பின், நபி(ஸல்) அவர்கள் அலீ(ரழி) அவர்கள் தோள் மீதேறி நின்று கஃபா வின் தலைமைத் தெய்வ விக்கிரகம் ஹுபலை உடைக்க முனைந்தார்கள். அண்ணல் அவர்களை அலீ(ரழி) அவர்களால் தூக்க இயலவில்லை. தாங்கமுடியாத கனத்தால் அலீ(ரழி) தடுமாறினார். அப்போது பெருமானார் அவர்கள் அலீ(ரழி) அவர்களை நோக்கி ‘நபித்துவத்தைத் தூக்க உங்களால் இயலாது. எனவே, என் தோளில் ஏறி சிலையை உடையுங்கள்’ எனப் பணித்தார். அலீ(ரழி) அவர்களும் அவ்வாறே செய்தார்.

உமர்(ரழி) கலீஃபாவாக இருந்த போது இஸ்லாமிய ஆண்டு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது அலீ(ரழி) ஆலோசனைபடி ஹிஜ்ரிஆண்டு உறுவாக்கப் பட்டது.

உதுமான் (ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இறந்த பிறகு,மூன்று நாட்கள் கழிந்தன. இப்பொழுது மதீனா முழுவதும் கலவரக்காரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. காஃப்கி என்ற எகிப்தினைச் சேர்ந்தவர் தான் கலவரத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார், இப்பொழுது இவரே தலைமை தாங்கி இமாமாக நின்று கொண்டு நபி(ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். இந்த கொடூரமான மனித இனப் படுகொலையானது மதீனாவில் நடந்து கொண்டிருந்த இந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமான நபித்தோழர்கள் மதீனாவை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள்.

மதீனாவை விட்டும் வெளிச் செல்லாமல் தங்கி இருந்தவர்களோ, எந்தவித உதவியுமின்றி, இதனைத் தடுத்து நிறுத்த சக்தியற்றவர்களாக இருந்தார்கள். இந்த கலவரக்காரர்கள் தான் அலீ (ரழி) அவர்களின் பெயரை கலீபா பதவிக்கு முன்மொழிந்தார்கள். இன்னும் அவரையே கலீபாவாக பதவியேற்றுக் கொள்ளும்படி வேண்டி நின்றார்கள். அலி (ரழி) அவர்களோ முதலில் அவர்களது இந்தக் கோரிக்கையை மறுத்தார்கள். ஆனால், இந்தக் கலவரச் சூழலை யாராவது ஒருவர் முன்னின்று அமைதிக்குக் கொண்டு வர வேண்டிய அவசியமும் அங்கு நிலவியது.

தலைநகரத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற அத்தனையும் இஸ்லாத்திற்கு முரணாகவே நடந்து கொண்டிருந்தன. இப்பொழுது அலி (ரழி) அவர்கள், மதீனாவில் எஞ்சியிருந்த நபித்தோழர்களை அழைத்து கலந்தாலோசனை நடத்த ஆரம்பித்தார்கள். அலீ (ரழி) அவர்களே..!  கலவரச் சூழல் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள், இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஏதேனும் செய்யுங்கள், மக்களுக்கு அமைதி தேவையாக இருக்கின்றது என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

எனவே, நிலைமையின் பாரதூரத்தை எடை போட்டுப் பார்த்த அலீ (ரழி) அவர்கள், முஸ்லிம்களிடையே ஏற்பட்டு விட்ட இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவராக, கலீபா பதவியைத் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள். தல்ஹா (ரழி) மற்றும் ஜுபைர் (ரழி) ஆகிய இருவரும், அப்பொழுது மதீனாவில் இருந்த முக்கியமான நபித்தோழர்களாவார்கள். எனவே, இந்த இருவருடைய சம்மதத்தையும், இன்னும் இந்த இருவரில் யாருக்காவது கலீபாவாக ஆக விரும்பம் இருக்கும்பட்சத்தில் அதனையும் முயற்சி செய்து பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் இருவரையும் அழைத்து வர ஆள் அனுப்பி வைத்தார்கள். இன்னும் இவர்களில் எவரொருவராவது கலீஃபாவாக ஆக விரும்பினார் எனில், அவரிடம் நான் எனது வாக்குறுதியை அளிக்கத் தயராக இருக்கின்றேன் என்றும் அலீ (ரழி) அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆனால் இந்த இருவரும், இந்த மிகச் சுமையான பொறுப்பை ஏற்பதிலிருந்தும் விலகிக் கொண்டனர். அப்படியானால், என்னிடம் வாக்குறுதி அளியுங்கள்-பைஅத் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார், அலீ (ரழி) அவர்கள். சம்மதமின்மை காரணமாக ஜுபைர் (ரழி) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்பொழுது, அங்கிருந்த மாலிக் உஸ்தர், கூறினார், ஜுபைரே..! அலீ (ரழி) அவர்களிடம் பைஅத் செய்கின்றீர்களா? எனத் தனது வாளை உருவியவாறே.., இல்லை உங்களது தலையைத் துண்டாடட்டுமா? எனக் கேட்டார். பின், ஜுபைர் (ரழி) அவர்கள் தனது வாக்குறுதியை அளித்தார்.

அடுத்தது, சஅத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்களது முறை, அவரும் அழைக்கப்பட்டார்,. என்னைப் பற்றிப் பயப்பட வேண்டாம், இத்தனை நபர்களும் உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கும் பொழுது, நான் மறுக்க மாட்டேன், நானும் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன் என்றார்.

இன்னும் முன்னணி நபித்தோழர்கள் பலர் அலீ (ரழி) அவர்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை. உமைய்யா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிரியாவை நோக்கிச் சென்று விட்டார்கள். இரத்தம் தோய்ந்த உதுமான் (ரழி) அவர்களின் ஆடைகளைத் தங்களுடனேயே எடுத்துச் சென்று விட்டதல்லாமல், உதுமான் (ரழி) அவர்களின் மனைவியாகிய நைலா (ரழி) அவர்களின் துண்டிக்கப்பட்ட விரல்களையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.

அலீ (ரழி) அவர்கள் கலீபாவாகப் பதவியேற்ற பின்பு முதன்முதலாக உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். அவர்களது உரை தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தது. தான் செல்லக் கூடிய பாதை மிகவும் கடினமானது என்பதை அலீ (ரழி) அவர்கள் நன்கறிந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கு பேணப்படாத அந்த நேரத்தில், அதனை மீட்டுக் கொண்டு வர வேண்டியதிருந்தது. அலீ (ரழி) அவர்கள், இந்த விஷயத்தில் மக்கள் தனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.

அலீ (ரழி) அவர்களது முதல் உரை முடிந்தவுடன், நபித்தோழர்களில் சிலர் அலீ (ரழி), ஜுபைர் (ரழி) மற்றும் தல்ஹா (ரழி) ஆகியோரைச் சந்தித்தார்கள்.

நீங்கள் இப்பொழுது கலீபாவாகப் பதவி ஏற்றிருக்கின்றீர்கள் என்று வந்தவர்களில் ஒருவர் கூறி விட்டு, நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி, இஸ்லாமிய ஷரிஆ வை நிலைநாட்ட வேண்டும் என்றார். இன்னும் உதுமான் (ரழி) அவர்களைப் படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் இதில் தவறு செய்ய மாட்டீர்கள் என்பதால் தான் நாங்கள், உங்களுக்கு எங்களது வாக்குறுதியைத் தந்தோம் என்று கூறினார்கள்.

தயவு செய்து பொறுமையோடிருங்கள். சூழ்நிலைகள் நமக்கு சாதகமானதுடன், நிச்சயமாக, குற்றவாளிகளை நான் தண்டிப்பேன், அது என்னுடைய கடமையும் கூட என்று கூறினார், அலீ (ரழி) அவர்கள். அலீ (ரழி) அவர்களின் பதில் வந்திருந்தோருக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. அவர்களில் சிலர், அலீ (ரழி) அவர்கள், பிரச்னையில் இருந்து ஒதுங்க நினைக்கின்றார் என்றே கருதினார்கள்.

அலீ (ரழி) அவர்கள் தான் இன்னும் மிக மோசமாக பாதையைக் கடக்க வேண்டியதிருக்கின்றது என்பதை உணர ஆரம்பித்தார். தன்னை கலவரக்காரர்கள் ஏன் தேர்ந்தெடுக்க முன் வந்தார்கள் என்பதும், இன்னும் அதற்காக அவர்கள் கையாண்ட முறையையும் அலீ (ரழி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இன்னும் அவர்களைத் தண்டித்தே ஆக வேண்டும் என்பதிலும் அலீ (ரழி) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதற்காக ஒட்டு மொத்த நபித்தோழர்கள் மற்றும் அனைத்து அதிகார மட்டத்தின் ஆதரவும் தனக்குத் தேவை என்பதையும் அலீ (ரழி) அவர்கள் விரும்பினார்கள். ஆனால், அவர் விரும்பியவாறு அவருக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை.

உதுமான் (ரழி) அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் யாவும், அவரைச் சுற்றி இருந்த அவரது உறவினர்களினால் விளைந்தவைகள் தான் என்பதில் அலீ (ரழி) அவர்கள் மிகவும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்கள். எனவே, அலீ (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் முதல் பணியாக, அனைத்து பிராந்தியக் கவர்னர்களையும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார்கள். அனைத்துப் புதிய கவர்னர்களும் தங்களுக்கப் பணிக்கப்பட்ட பிராந்தியங்களுக்குச் சென்று, பணியில் அமர ஆரம்பித்தார்கள்.

ஆனால், அவர்கள் பணியில் அமர்ந்தார்களோ இல்லையோ, அவர்களது பயணங்கள் கூட அமைதியற்றதாகவும் மிகவும் சிரமமுமாகவுமே அமைந்தது. புதிய கவர்னரை அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட போதிலும், மிகவும் உறுதியான மக்கள் கூட்டம் ஒன்று, உதுமான் (ரழி) அவர்களின் படுகொலைக்கு உடனடித் தீர்வு ஒன்றை எடுக்க வேண்டும், கொலைகாரர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதற்கான உடனடி நடவடிக்கையை அவர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யலானார்கள். கூபா கவர்னர் செல்லும் வழியில் இருந்து கொண்டிருந்த பொழுது, ஒரு மிகப் பெரும் ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டார். அவர்களின் எச்சரிக்கையினால் பயந்து போன அலீ (ரழி) அவர்களால் நியமிக்கப்பட்ட அந்த கவர்னர், மீண்டும் அவர் மதீனாவிற்கே வந்து விட்டார்.

சிரியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த இன்னொரு கவர்னர், தபூக்கை அடைந்த பொழுது அங்கே முஆவியாவின் வீரர்கள் அவர் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இவர்களை எதிர்த்து எதனையும் செய்ய இயலாத அந்தக் கவர்னரும் மதீனாவிற்கே திரும்பி வந்து விடுகின்றார்.

கூபா மற்றும் சிரியாவின் கவர்னர்கள் வெளிப்படையாக தாங்கள் அலீ (ரழி) அவர்களை எதிர்ப்பதாக அறிவித்தார்கள். எனவே, தன்னை எதிர்ப்பதற்கான காரணமென்ன என்பதற்கு விளக்கமளிக்குமாறு இரண்டு கவர்னர்களுக்கும் ஒரு தூதுவரை அனுப்பி வைத்தார்கள்.

கூபா கவர்னராக இருந்த அபூ மூஸா அஷ்அரி (ரழி) அவர்கள் தன் சார்பாக திருப்திகரமான பதிலை அனுப்பி வைத்ததோடு, புதிய கலீபாவுக்குத் தான் விசுவாசமாக நடந்து கொள்வதாகவும் பதில் அனுப்பி வைத்தார்.

மிகவும் தந்திரசாலியான முஆவியா (ரழி) அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமானதொரு பதிலை அலீ (ரழி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அதில், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதைத் தவிர வேறொன்றும் எழுதப்படாமல் இருந்தது. அலீ (ரழி) அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்கும் இடையே ஆரம்பித்த இந்தப் பனிப்போர், மதீனாவில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கியது.

ஆதரவாளர்களின் ஆலோசனையை ஏற்று ஆயிஷா(ரழி) பஸ்ராவுக்கு செல்வது என முடிவு செய்தார்கள். கலீஃபா பொறுப்பைக் கைப்பற்றுவதல்ல, ஆயிஷா அவர்களின் நோக்கம்; கொலைகாரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே!. ஆயிஷா படையுடன் ஜுபைர் (ரழி) மற்றும் தல்ஹா (ரழி) ஆகியோரும் சென்றனர். பஸ்ராவின் கவர்னர் உதுமான்பின்ஹனீப் ஆதரவாளர்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள். ஆயிஷாவின் ஆதரவாளர்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.  காயம் பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கில்லாமல் போகவே, இரு தரப்பும் சமாதானமான முடிவொன்றை எடுப்பது குறித்த முடிவுக்கு வந்தனர்.

இன்னும் மதீனாவிற்கு ஒருவரை அனுப்புவது என்றும், அவர் தல்ஹா (ரழி) அவர்களும், ஜுபைர் (ரழி) அவர்களும் அலீ (ரழி) அவர்களிடம் விரும்பி பைஅத் - உறுதிப் பிரமாணம் செய்தார்களா? அல்லது வற்புறுத்தலின் பேரில் அவர்களிடம் பைஅத் பெறப்பட்டதா? என்பதை அறிந்து வருவது என முடிவாகியது. இதன் படி பஸ்ராவின் நீதிபதி ஒருவர், மதீனா சென்று “தல்ஹா, ஜுபைர் ஆகியோர் வற்புறுத்தலின் பேரில் பைஅத் – பிரமாணம் பண்ணினார்கள்” என்ற செய்தியை அறிவித்தார். பஷராவில் நடந்து வருபவைகள் பற்றி அலீ (ரழி) அவர்கள் கேள்விப்படுகின்றார்கள். அதனையடுத்து, பஷராவை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று கவர்னருக்குக்கு எழுதிய கடிதத்தில் அலீ (ரழி) அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள். இதனால் பஸ்ராவின் கவர்னர் பஸ்ராவை விட்டு போக முடியாது என்று தெரிவித்தார். இதனால் அவரை சிறை பிடித்தனர் ஆயிஷா அவர்களின் ஆதரவாளர்கள்.

பஷராவை ஆயிஷா(ரழி) ஆதர்வாளர்கள் கைப்பற்றியவுடன், தல்ஹா (ரழி) அவர்களும், ஜுபைர் (ரழி) அவர்களும் உதுமான் (ரழி) அவர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக இறங்கி விடுகின்றார்கள். நூற்றுக்கணக்கான ஆண்கள் சுற்றி வளைக்கப்பட்டு, அவர்கள் அதில் பலர் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்ததும், அவர்களை விசாரணைக்குப் பின் கொலை செய்யவும் படுகிறார்கள். இந்த செய்தி பல நாடுகளுக்கும் பரவியது.

ஹிஜ்ரி 36 ரபிய்யுல் அவ்வல் மாதம் அலீ (ரழி) அவர்கள் படையுடன் ஈராக்கை நோக்கிப் புறப்பட்டார்கள். தி கார் என்ற இடத்தை அடைந்த பொழுது, பஷரா நகரம் ஆயிஷா (ரழி) அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக தகவல் வருகின்றது. எனவே, அங்கேயே அலீ (ரழி) அவர்கள் தங்கி விடுகின்றார்கள். ஆயிஷா(ரழி) அவர்களின் ஆதரவாளர்களும், தல்ஹா, ஜுபைர் ஆகியோர் தலைமையில் ஒன்று திரண்டார்கள்.

பஸ்ரா அருகே இருதரப்பினரும் எதிரும், புதிருமாக சந்தித்தனர். அப்போது போரை நிறுத்தவும், சமரசத் தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டது. அன்று இரவு அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, விஷமிகள் சிலர் ஆயிஷா அவர்களின் ஆதரவாளர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இருட்டாக இருந்ததால் போரை தொடக்கியது யார் என்று யாருக்கும் புரியவில்லை. திடீரென்று கடும்போர் நடந்தது போரை நிறுத்த கலீஃபா அலீ(ரழி) அவர்கள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை.

ஆயிஷா(ரழி) அவர்களைப் பாதுகாக்க ஒரு படையை அலீ(ரழி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்த படை அங்கு செல்வதற்குள், ஒருவன், ஆயிஷா அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகத்தின் பின்னங்காலை வெட்டினான். இதனால் அந்த ஒட்டகம் அப்படியே கீழே அமர்ந்து விட்டது. இது போருக்கு ஒரு முடிவை ஏற்படுத்தியது. ஆயிஷா அவர்களின் ஆதரவாளர்கள் ஓட்டம் பிடித்தனர். கலீஃபா அலீ(ரழி) அவர்கள் அங்கு சென்று ஆயிஷா அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள். ஆயிஷா அவர்களை பாதுகாப்போடு அவர்கள் தங்கி இருந்த இல்லதில் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள்.

போர் ஓய்ந்து பொழுது சாய்வத்ற்கு முன், கலீஃபா அவர்கள் போர்களத்தைப் பார்வை யிட்டார்கள். “ஒட்டகைப் போர்” என்று அழைக்கப்படும் இந்த போரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து கிடந்த காட்சி அவர்களின் நெஞ்சை உலுக்கியது. கலீஃபா தலைமையில் இறந்தவர்களுக்கான “ஜனாஸா” தொழுகை நடத்தப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் மரியாதையுடன் புதைக்கப் பட்டது.

ஒட்டகைப் போர் முடிந்ததும், அலீ(ரழி) அவர்கள் “ கூபா” என்ற இடத்தில் தங்கியதும், கூபாவை தலைநகராக மாற்றியதும், சிரியாவின் கவர்னராக இருக்கும், முஆவியா அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

கலீஃபா அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யாத ஒருவராய், முஆவியா மட்டுமே இருந்தார். உதுமான்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள முயன்றார். முஆவியாவுடன் அம்ர் பின் ஆஸ்(ரழி), முகைரா பின் ஷுபா(ரழி), அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) ஆகியோர் சேர்ந்து கொண்டனர்.

எனவே 50 ஆயிரம் பேர் கொண்ட படையுடன் கலீஃபா அலி(ரழி) அவர்கள் சிரியா நோக்கி புறப்பட்டார்கள்.”ஸிப்பின்” என்ற இடத்தில்,புராத் நதி கரையில் அகன்ற சமவெளிப்பகுதியை முஆவியா அவர்களின் படை தம் வசப்படுத்திக் கொண்ட்து. குடிநீர் துறையை ஆக்கிரமித்து கொண்டு அலீ(ரழி) அவர்களின் படைகளுக்கு தண்ணீர் தர மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே போர் மூண்டது. இதில் கலீஃபா அவர்களின் படை முன்னேறி, மூஆவியா அவர்களின் படை வீரர்கள் தங்கியிருந்த பெருவெளியைக் கைப்பற்றிக் கொண்டனர். இப்போது புராத் நதி நீர் முழுவதும் கலீஃபாவின் கைவசம் ஆகி இருந்தது. இதனால் முஆவியா அவர்களின் படையினருக்குத் தண்ணீர் தடைப்பட்டது. எதிர் தரப்பு வீரர்கள் நீர்த்துறைக்கு வந்தபோது, அவர்களுக்கு தண்ணீர் தர, கலீஃபா அவர்களின் படைவீரர்கள் தடுத்தனர். உடனே அலீ(ரழி) அவர்கள், “தண்ணீருக்குத் தடை விதிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை; நமது பண்பாடும் அதை ஏற்கவில்லை” என்றார்கள். இதை தொடர்ந்து, எதிர் தரப்பினர் குறிப்பிட்ட நேரத்தில் நீர் துறையை பயன் படுத்தி கொள்ள அனுமதித்தார்கள்.

இரு தரப்பினரும் எதிரும், புதிருமாக அங்கு முகாமிட்டிருந்தனர். அலீ அவர்களை கலீஃபாவாக ஏற்கும் படி தூதுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர். உதுமான் அவர்களைக் கொன்றவர்கள் பழி வாங்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் முஆவியா அவர்கள் வலியுறுத்தினார்கள். தூதுக்குழுவின் சமரச முயற்சிகள் தோல்வி கண்டன. இப்படியே மாதங்கள் பல கடந்தன. அலீ(ரழி) அவர்கள், முஆவியா அவர்களை நேருக்கு நேர் போர் புரிய அறைகூவல் விடுத்தார்கள். ”நம் இருவருக்கும் இடையில் இருக்கும் தகராறை நானும், நீங்களும் முடிவுக்கு கொண்டு வருவோம், வீணாக மற்றவர்கள் ரத்தம் சிந்த வேண்டாம்” என்று கூறினார்கள். இந்த அறைகூவலை முஆவியா ஏற்றுக் கொள்ளவில்லை. சமாதானத்திற்காக எந்த வழியும் பிறக்கவில்லை. இதனால் போர் தொடங்கியது. அலீ அவர்கள் முஆவியா அவர்களின் படையை பிளந்து முன்னேறி சென்றார்கள். முஆவியா தூண்டுதலின் பேரில் அம்ர் பின் ஆஸ், அலி அவர்களுடன் போரிட முன் வந்தார். இதில் அலீ அவர்கள் கொடுத்த அடி அவர்களைக் குதிரையில் இருந்து கீழே விழ வைத்தது. அவர் உயிர் தப்பி ஓடினார். முஆவியா படைகள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது.

அலீயை வீரத்தால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. அதனால் தந்திரத்தால் அவரை வெல்ல முஆவியா திட்டமிட்டர். மறுநாள் போர் ஆரம்பிக்கும் பொழுது, முஆவியா (ரழி) அவர்களின் படையில் இருந்த அனைவரும் குர்ஆனின் பிரதிகளைத் தொங்க விட்டவர்களாக, இவ்வாறு முழங்க ஆரம்பித்தார்கள். ஓ ஈராக் வாசிகளே..! நீங்கள் எங்களைக் கொன்று போட்டால் எங்களது குடும்பத்தவர்களின் கதி என்ன ஆகும்.., அதேபோன்று நாங்கள் உங்களைக் கொன்று போட்டால் உங்களது மனைவி, மக்களின் நிலை என்னவாகும். இந்த துக்ககரமான போரை நாம் நிறுத்திக் கொள்வோம், திருமறையின் வழியாக நம்முடைய பிரச்னையைத் தீர்த்துக் கொள்வோம்” என்று முழங்கினார்கள்.

சிரியப் படையினர் முழங்கிய முழக்கத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே ஈராக்வாசிகள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டனர், அத்துடன்.., சரி.. அவ்வாறே திருமறையின் மூலம் நம்முடைய பிரச்னையைத் தீர்த்துக் கொள்வோம்” என்று பதில் முழக்கமிட்டார்கள்.

இந்த சூழ்நிலையின் மாற்றத்தை உணர்ந்து கொண்ட அலி (ரழி)அவர்கள் இது முஆவியா (ரழி) அவர்களின் தந்திரமான வேலை, போரின் தோல்வியைத் தவிர்ப்பதற்காக அவர் செய்திருக்கும் யுக்தி என்று கூறினார். இந்த தந்திரமான வலைப் பின்னலில் சிக்கி விட வேண்டாம், போரைத் தொடர்ந்து நடத்தி, இறுதி வெற்றி காண்போம் என்று தனது ஆதரவாளர்களைப் பார்த்துக் கூறினார்கள். அலி (ரழி) அவர்களின் இந்த அறிவுரை, ஈராக் வாசிகளைக் கவரவில்லை. ஈராக்கைச் சேர்ந்த ஸைத் பின் ஹஸன் என்பவர் மற்றும் முஸ்தர் பின் பித்கி என்பவரது தலைமையில் இயங்கிய கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் கொண்ட படையானது அலி (ரழி) அவர்களுக்கு எதிராக வெளிப்படையாகக் கிளர்ச்சி செய்தது, தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டார்கள்.

இதன் பின்னர், “குர் ஆன் கூறுகின்ற முறைப்படி தகராறைத் தீர்த்துக் கொள்ள ஒரு குழு ஏற்படுத்துவோம்” என்று முஆவியா கூறினார். இதில் சூது இருக்கிறது என்பதை கலீஃபா அவர்கள் உணர்ந்திருந்தாலும். ஈராக் கலகக்காரர்களின் வீண் பிடிவாதத்தால் வேறு வழியின்றி இதற்கும் இணங்கினார். நடுவர்களாக முஆவியா தரப்பில் அம்ர் பின் ஆஸ், கலீஃபா தரப்பில் அபூமுஸா ஆகியோர் நியமிக்கப்பட்டு, படைகள் திரும்பி செல்லவும், ஆறு மாதகாலத்திற்க்குள் நடுவர்கள்  சுதந்திரமாக தீர்ப்பளிக்க வேண்டும் என முடிவு ஏற்பட்டு படைகள் திரும்பின.

இதற்கிடையே ஸிப்பின் என்ற இடத்தை விட்டு நீங்கி கூபா வரும் வழியில் 12 ஆயிரம் பேர் கலீஃபா அவர்களின் படையை விட்டு விலகி ஹரூரா என்ற இடத்தில் தங்கி இருந்தார்கள். இவர்கள் “காரிஜிய்யின்”கள் என்று அழைக்கப் பெற்றனர். இதுவரை விதண்டாவாதம் செய்து வந்த காரிஜிய்யின்கள், இப்போது அராஜகச் செயலில் ஈடுபட்டனர். நபிகளாரின் தோழர் அப்துல்லாஹ் பின் கப்பாப் அவர்களும், அவருடைய தோழர்கள் சிலரும் காரிஜிய்யின்களால் கொல்லப்பட்டனர். இதை அறிந்த அலீ அவர்கள் சொல்லொணாத் துயரம் அடைந்தார்கள்.

நடுவர் தீர்ப்பு சொல்லும் நாள் வந்தது. அப்போது அபூமுஸா அவர்கள் “அமைதியும், உடன்பாடும் ஏற்பட வேண்டுமானால் அலீ அவர்களும் முஆவியா அவர்களும் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று அறிவித்தார். இதன் பின் பேசிய அம்ர் பின் ஆஸ் அவர்கள் “ அவர் அலீயை விலக்கினார். அதை நானும் உறுதி செய்கிறேன். ஆனால் முஆவியாவை நான் விலக்கவில்லை, அவர் தம் பதவியில் நீடிக்கிறார். கலீஃபா பதவிக்கு அவர் மிகவும் சிறந்தவர்” என்று தெரிவித்தார் கூட்டம் குழப்பத்தில் ஆழ்ந்தது. நடுவர்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று அலீ அவர்களின் ஆதரவாளர்கள் கனவிலும் கருதவில்லை.

நடுவர் தீர்ப்பு எனும் கபட நாடகம் முடிந்ததும், அதன் முடிவை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் அவர்கள், அலீ அவர்களிடம் தெரிவித்தார்கள். இதை அலீ(ரழி) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அபூ முஸா தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்து நாணமுற்று மக்கா மாநகர் சென்று ஒதுங்கி வாழத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் 65ஆயிரம் பேர் கொண்ட பெரும் படையுடன் கலீஃபா அவர்கள் சிரியா நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள். காரிஜிய்யிகளை அடக்கிய பிறகே சிரியா செல்ல வேண்டும் என்று படைவீரர்கள் தெரிவித்தனர். அலீ(ரழி) அவர்களும் ஏற்று கொண்டு காரிஜிய்யிக்கள் மீது படை யெடுத்தார். இதில் பெரும்பாலான காரிஜிய்யிக்கள் கொல்லப்பட்டார்கள். பலர் சிதறி பல பக்கமும் ஓடினார்கள்.

அலீ(ரழி) அவர்கள் படை வீரர்களை சிரியா புறப்படுமாறு உத்தரவிட்டார்கள். இதை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை. வீடுகளுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று வீர்ர்கள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர். இதனால் கலீஃபா அவர்கல் சிரியா செல்லும் திட்டத்தைக் கை விட நேர்ந்தது. இதற்கிடையில், முஆவியாவின் படைகள் எகிப்தை கைபற்றி கவர்னர் முஹம்மது இப்னு அபூபக்ர் கொல்லப்பட்டார். எகிப்தின் இழப்பு அலீ(ரழி) அவர்களை அவதியுற செய்தது.

ஒரு பக்கம் முஆவியா அவர்கள் குழப்பம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் காரிஜிய்யின்கள் கலகம் செய்தனர். இதனால் கலீபா அலீ(ரழி) அவர்கள் விரக்தியின் விளிம்புக்கே சென்றார்கள். அலீ(ரழி) அவர்களின் உற்ற தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அப்பாஸ் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பஸ்ராவின் கவர்னர் பதவியை துறந்து மக்கா புறப்பட்டார். அவரின் சகோதரர் அக்கீல் சிரியா சென்று முஆவியாவுடன் சேர்ந்து கொண்டார். இந்த நிலைமையைச் சமாளிக்க அலீ அவர்களுக்கு புதிய படையை உருவாக்க இயலவில்லை. இருக்கும் படைவீரர்களின் உள்ளத்தில் விசுவாசத்தை உண்டாக்கவும் முடியவில்லை. ஆங்காங்கே பிரச்சனைகளும், கலகங்களும், குழப்பமும் ஏற்பட ஏற்பட கலீஃபாவின் படைகள் போராடி சீராக்கி வந்தார்கள்.

அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்றால், முதலில் மூன்று முக்கிய நபர்களைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்றதொரு சதித்திட்டதைத் காரிஜிய்யாக்கள் தீட்டினர் அந்த மூவர் : அலி (ரழி), முஆவியா (ரழி), மற்றும் அம்ருப்னுல் ஆஸ் (ரழி) ஆகியோர்கள் ஆவர்.

மக்காவில் ஒன்று கூடிய காரிஜிய்யாக்கள், மூன்று இளைஞர்களை நியமித்தார்கள். இவர்களில் அப்துர் ரஹ்மான் பின் மல்ஜம் அல் சரிமி என்பவர், கூஃபாவில் இருக்கும் அலி (ரழி) அவர்களைத் தீர்த்துக் கட்ட நியமிக்கப்பட்டார்கள். பர்க் பின் அப்துல்லா என்பவர், முஆவியா (ரழி) அவர்களைத் தீர்த்துக் கட்டுவதற்காக நியமிக்கப்பட்டார். அம்ர் பின் அபுபக்கர் என்பவர், அம்ருப்னுல் ஆஸ் (ரழி) அவர்களைத் தீர்த்துக் கட்ட நியமிக்கப்பட்டார்.

இந்த இளைஞர்கள் தங்களது வாட்களை நன்கு கூர் தீட்டிக் கொண்டதோடு, அதில் விஷத்தையும் தோய்த்து எடுத்துக் கொண்டார்கள். கூபா வந்த அப்துர் ரஹ்மான் பின் மல்ஜம் அல் சரிமி அங்கு வெர்தன் மற்றும் ஷவ்பிப் பின் பிஜ்ரா ஆகிய மேலும் இருவருடன் புறப்பட்டனர்.

ரமளான் மாதம் பதினேழாம் நாள், பஜ்ர் வேளை, முதல் நபராக அலி (ரழி) அவர்கள் பள்ளிக்குள் வந்து தொழுகைக்காக தக்பீர் கட்டியவுடன், விஷம் தோய்ந்த வாளைக் கொண்டு ஓங்கி வெட்டிவிட்டு வெளியேறி ஓடி விட்டார்கள். மேற்கொண்டு சிகிச்சைகள்  பலன் அளிக்காததால் அலீ(ரழி) அவர்கள் மரணம் அடைந்தார்கள். கூஃபாவிற்குத் தெற்கே சில மைல்கள் தூரம் ஒட்டகத்தில் கொண்டு சென்று  ஒரு இடத்தில் மிகவும் ரகசியமான முறையில் அலி (ரழி) அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் ஈராக்கின் நஜஃப் பகுதி என அறியப்பட்டது.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...

Umar RA

அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Kathija

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuSalama

உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ali RA

அமீருல் முஃமினீன் உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sawdha

உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuHabiba

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sabiya

உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

zuvairiya

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.