Home


அன்னை ஸஃபிய்யா பின்த் ஹய் (ரழி)

ஸஃபிய்யா பின்த் ஹய் (ரழி) (கி.பி.610-கி.பி.670) அவர்கள் இஸ்ரவேலர்களின் பனூ நழீர் கூட்டத்தாருடைய தலைவரின் மகள். கைபர் போரில் கைதியானார். இவரை நபி (ஸல்) தனக்காக எடுத்துக் கொண்டு இஸ்லாமுக்கு வரும்படி அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ளவே நபி (ஸல்) அவரை உரிமை விட்டு, கைபரிலிருந்து திரும்பும் போது ஹிஜ்ரி 7 இல் மணமுடித்துக் கொண்டார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் ஆவார்.

ஸஃபிய்யா பின்த் ஹய்யின் ஆரம்ப வாழ்வு

        யூதர்களின் பனூ நழீர் குலத்தாரின் தலைவரான ஹய் இப்னு அஹ்தப் என்பவருக்கும் அவரது மணைவி பர்ரா பின்த் ஷமாவல் என்ற பனூ குறைழா குலத்தவருக்கும் மகளாக கி.பி 610 ஆம் ஆண்டில் ஸஃபிய்யா மதீனாவில் பிறந்தார்.

        யூதக் குலத்தில் பிறந்திருந்தாலும் மிகவும் கண்ணியமிக்க, அழகுமிக்க, பெண்மணியாகத் திகழ்ந்தார்கள், முந்தைய தூதரான ஹாரூன் (அலை) அவர்களது வழித் தோன்றல்களில் வந்தவர்களாகவும் இருந்தார்கள். இவர் முதலில் ஸல்லாம் இப்னு மிக்‌ஷம் என்பவரின் மனைவியாக இருந்தார். (இவருடைய மற்றொரு மனைவி ஜைனப் பின்த் ஹாரிஸ் நபி(ஸல்) அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்து அதில் விஷமூட்டப் பட்ட ஆட்டிறைச்சியை உண்னக் கொடுத்தார்.)

இதன் பின்னர் புதிதாக கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரை இரண்டாவதாக மணந்து கொண்டார்கள். ஸபிய்யாவும், அவரது கணவர் கினானாவும், அவருடைய தந்தை ஹய் என்பாரும் மதீனாவில் வசித்து வந்தனர். மதீனாவிலிருந்த யூதர்களும், கைபர் பகுதியில் இருந்த யூதர்களும் தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வந்தனர். நபி (ஸல்) அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி மக்காவின் காபிர்களுக்கு நாட்டு இரகசியங்களைக் கூறி குழப்பம் செய்து வந்தனர். எனவே கைபர் பகுதி யூதர்களுடன் போர் செய்வதற்கான முயற்சியில் நபி(ஸல்) அவர்கள் இறங்கினார்கள். இதை அறிந்த ஸபிய்யாவும் அவரது தந்தையும் கணவரும் மதீனாவைக் காலி செய்து விட்டு கைபருக்குப் புறப்பட்டனர்.

கைபர்  போர்

முஸ்லிம்களின் படையணி கைபரை அதிகாலை நேரத்தில் வந்தடைந்திருந்தது, ஆனால் படையணிகள் ஊருக்குள் நுழையாமல் நன்கு பொழுது புலரும் வரை காத்திருந்தது. அதிகாலை நேரத்தில் வயல் வேலைகளுக்காக தங்களது வீடுகளை விட்டு மண்வெட்டி சகிதம் வந்த யூதர்கள், தங்களது வயல் வெளிகளின் பக்கம் முஹம்மது (ஸல்) அவர்களது படையணியைப் பார்த்து விட்டு நம்மைத் தாக்க முஹம்மது அவர்களின் படை வந்திருக்கின்றது என்று கத்திக் கொண்டே ஊருக்குள் விரைந்தார்கள்.

யாருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதோ, அவர்களது அன்றைய காலைப் பொழுது கெட்டபொழுதாகவே புலர்ந்தது. நபி(ஸல்) அவர்கள் பனூ நழீர் கோத்திரத்தாரின் ஒவ்வொரு கோட்டையாகக் கைப்பற்றிக் கொண்டு சென்றார்கள். அவர்களின் சொத்துக்கள் மற்றும் பெண்களையும் கைப்பற்றினார்கள். அத்தகைய பெண்களில் கைதியாகப் பிடிக்கப்பட்டவர் தான் அன்னை ஸஃபிய்யா பின்த் ஹய் (ரலி) அவர்கள்.

கைபர் போரில் முஸ்லிம்கள் அணியில் 15 பேரும், யூதர்கள் அணியில் 93 பேரும் உயிரிழந்தனர். இந்தப் போரில் யூதப் பெண் ஸஃபிய்யாவின் (இரண்டாவது) கணவர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரும் கொல்லப்படுகிறார். நபி (ஸல்) அவர்களுக்கு, ஸஃபிய்யா என்ற யூதப் பெண் யாரென்றே தெரிந்திருக்கவில்லை. ஸஃபிய்யாவைப் பற்றிய எணணமும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. போர் முடிந்து கைபர் நகரத்தைக் கைப்பற்றிய பின், திஹ்யா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்குத் தாருங்கள்’ என்று கேட்கிறார். ”நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் திஹ்யா (ரழி) ஸஃபிய்யாவைப் பெற்றுக் கொள்கிறார்.

ஸஃபிய்யா (ரழி) உடன் நபி (ஸல்) திருமணம்

இந்நிலையில் ”அல்லாஹ்வின் தூதரே! பனூ குறைழா, பனூ நழீர் குலத்தாரின் தலைவரான ஹய்யின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! என்று ஒருவர், யூதர்களின் அரச குடும்பத்துப் பெண்ணாக ஸஃபிய்யாவை அடையாளம் காட்டிய பிறகு, திஹ்யா (ரழி) அவர்களிடம் வேறு அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்குப் பின் ஸஃபிய்யாவுக்கு இஸ்லாமை எடுத்துக் கூற, அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.  நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை  உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமை விட்டதையே அவருக்குரிய மஹராக ஆக்கினார்கள்.

மதீனா திரும்பும் வழியில் “ஸத்துஸ்ஸஹ்பா” என்ற இடத்தில் ஸ்ஃபிய்யா(ரழி) மாத துடக்கிலிருந்து தூய்மையடைந்தார்கள். உம்மு ஸுலைம் (ரழி) ஸஃபிய்யாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய், மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபி (ஸல்) வலிமா விருந்து அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸ்ஃபிய்யா (ரழி) அவர்களுடன் நபி (ஸல்) தங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து ‘‘இது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழுநிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து, மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடு தான் இது'' என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

நஞ்சு கலந்த உணவு

கைபரை முழுமையாக வெற்றி கொண்டு நபி (ஸல்) அவர்கள் முழு நிம்மதிஅடைந்தார்கள். அப்போது ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி ‘ஜைனப்பின்த் ஹாரிஸ்' என்பவள், நபி (ஸல்) அவர்களுக்கு விருந்து ஒன்று ஏற்பாடுசெய்தாள். விருந்தில் ஓர் ஆட்டை விஷத்துடன் சமைத்தாள். குறிப்பாக, நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்ணும் பகுதி முன் சப்பை என்பதை தெரிந்து அதிலேஅதிக விஷத்தை ஏற்றினாள்.

நபியவர்கள் அதிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கடித்தார்கள். ஆனால் அதைவிழுங்காமல் துப்பிவிட்டார்கள். ‘‘இந்த எலும்பு தன்னில்விஷமேற்றப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது'' என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். பின்பு அப்பெண்ணை அழைத்து விசாரிக்கவே அவள் உண்மையை ஒப்புக்கொண்டாள். ‘‘இவ்வாறு செய்ததற்கான காரணம் என்ன?'' என்று நபி (ஸல்)விசாரித்தார்கள். அதற்கு அவள், ‘‘நீங்கள் அரசராக இருந்தால் உங்களைக்கொல்வதில் எங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். நீங்கள் தூதராக இருந்தால் உண்மைஉங்களுக்கு தெரிந்து விடும். அதனால்தான் அவ்வாறு செய்தேன்'' என்றுகூறினாள். நபியவர்கள் அவளை மன்னித்து விட்டு விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் பிஷ்ர் இப்னு பரா (ரழி) என்ற தோழரும் சாப்பிட்டார்.அவர் அந்த ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்டதால் அந்த விஷம்அவரது உடலில் கலந்து மரணித்து விட்டார். அப்பெண் முற்றிலும் மன்னிக்கப்பட்டாளா? அல்லது கொல்லப்பட்டாளா? என்பதைப் பற்றி பல மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளன.

இதைப் பற்றி அறிஞர்கள் கூறுவதாவது: நபியவர்கள் ஆரம்பத்தில் அப்பெண்ணைமன்னித்து விட்டார்கள். அடுத்து, அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரழி)இறந்துவிடவே அவளைக் கொல்லும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல்மஆது, இப்னு ஹிஷாம்)

இறுதி ஹஜ்ஜில் நபி (ஸல்)

        நபியவர்கள் தனது வாழ்நாளில் செய்த முதலும் இறுதியுமான ஹஜ்ஜில் நபியவர்களுடன் கலந்து கொண்ட மனைவியர்களில் அன்னை ஸஃபிய்யா (ரழி) அவர்களும் ஒருவராவார்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பினார்கள். அப்போது (தம் துணைவியாரான) ஸஃபிய்யா (ரழி) அவர்கள் தமது கூடார வாசலில் சோர்வாகவும் கவலையாகவும் இருக்கக் கண்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷியரின் வழக்கில் (செல்லமாகச் ஏசப்படும் வார்த்தையில்) அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! உனக்குத் தொண்டை வலி வரட்டும்! நீ எம்மை (மக்காவிலிருந்து புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாய்” என்று கூறினார்கள். பிறகு, “நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வந்தாயா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரழி) அவர்கள், “ஆம்” என்று சொன்னார்கள். “அப்படியானால் (உன் ஹஜ் பூர்த்தியாகி விட்டது). நீ புறப்படு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி : 6157)

நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே நபியுடனேயே இருந்தவர்களில் ஒருவராக ஸஃபிய்யா (ரழி) அவர்களும் திகழ்ந்தார்கள். கி.பி 656 ஆம் ஆண்டு கலிஃபா உஸ்மான் இப்னு அப்பான் (ரழி) அவர்களுக்கு பக்க பலமாக இருந்தார்கள். கலகக்காரர்களால் இல்லம் முற்றுகையிடப்பட்ட காலகட்டத்தில் உஸ்மான் (ரழி) அவர்களை  அணுக மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்ற போதும், அவரின் வசிப்பிடத்திற்கும் அவருக்கும் இடையில் இருந்த பலகை வழியாக  அவருக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கினார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு இறுதியில் நபி (ஸல்) அவர்களின் மனைவியாகிய அன்னை ஸஃபிய்யா (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 52 ல் முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் போது மரணமடைந்தார்கள். அவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃயில் மற்ற அன்னையர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...

Umar RA

அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Kathija

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuSalama

உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ali RA

அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sawdha

உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuHabiba

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sabiya

உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

zuvairiya

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.