Home

அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரழி)

அன்னை கதீஜா(ரழி)(கி.பி. 555-கி.பி.619) அவர்கள் மிகவும் வசதியான, கௌரவமிக்க குடும்பத்தில் பிறந்திருந்த அருமைத் தாயார் ஆவார்கள். இயற்கையிலேயே இறைநம்பிக்கை, வாய்மை, பண்பாடுகள், அருங்குணங்கள் இன்னும் கொடைத் தன்மை மிக்கவர்களாக வளர்ந்து வந்தார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதை முதன் முதலாக ஏற்று இறைவிசுவாசம் கொண்டு, அதனைத் தனது வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக் கொண்டவர் களாகத்  திகழ்ந்தார்கள்.

மக்காவில் கி.பி.556 ஆம் ஆண்டு ஃபாத்திமா பின்த் ஸயீத் மற்றும் குவைலித் பின் அஸத் என்பவருக்கும் மகளாக கதீஜா (ரழி) அவர்கள் பிறந்தார்கள். இவருடையதந்தை குவைலித் பின் அஸத் மக்கத்துக் குறைஷிகளின் கோத்திரத்தில் மிகச்சிறப்புமிக்க கோத்திரத்தவராவார். மிகவும் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த கதீஜா (ரழி) அவர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.

அபூ ஹாலா மலக் பின் நபஷ் பின் ஸர்ராஹ் பின் அத் தமீமி என்பவரைத் தனது முதல் கணவராகத் திருமணம் செய்தார்கள். தனது கணவர் மிகப் பெரும் வணிகராகத் திகழவேண்டும் என்ற ஆசை கொண்ட கதீஜா (ரழி) அவர்கள், தனது செல்வத்தை தனது கணவரின் வாணிபத்தில் முதலீடு செய்தார்கள். ஆனால் குறுகிய காலத்திலேயே தமீமிஅவர்கள் மரணமடைந்து விட்டார்கள். முதல் கணவர் இறந்ததன் பின் அதீக் பின் அய்த் பின் அப்துல்லா அல் மக்சூமி என்பவரைத் திருமணம் செய்தார்கள், ஆனால்இவர்களது திருமணம் வெகு விரைவிலேயே முறிந்து விட்டது. இந்த இரண்டாவதுதிருமணத்தின் மூலம் கதீஜா (ரழி) அவர்கள், ஹிந்தா என்றொரு பெண் குழந்தையை மகவாகப் பெற்றார்கள். இந்த இரண்டாவது திருமண முறிவுக்குப் பின் தனது குழந்தையை வளர்த்தெடுப்பதிலும், மேலும் தனது வியாபாரத்தைப் பெருக்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள்.

வியாபாரத்தில் இவர்கள் காட்டியதிறமை, குறைஷிகளிலேயே மிகச் சிறந்த வியாபாரியாக இவரைத் திகழச் செய்தது.இவர் தனது வியாபாரத்தில் திறமைமிக்க, கடின உழைப்பு மற்றும் நேர்மையான வேலையாட்களை நியமித்து, அதன் மூலம் தனது வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திவந்தார். இன்றைக்கு இருப்பது போல தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில், தனக்குப் பதிலாக தொலை தூர நாடுகளுக்குச் சென்று தனது பொருட்களை வாணிபம் செய்து விட்டு வர, நாணயமான திறமையான தொழிலாளர்களை நம்பி இருக்க வேண்டியதிருந்தது. இவர் தனது பொருட்களை மக்காவிலிருந்து சிரியா போன்றநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, அங்கிருந்து மக்காவிற்கு சிலபொருட்களை இறக்குமதி செய்து வந்தார்கள். ஏனெனில் மக்கா என்பது உலக வணிகச்சந்தையின் மார்பிடமாகத் திகழ்ந்து வந்ததும் ஒரு காரணமாகும்.

நபி(ஸல்) அவர்களின் நேர்மையான நாணயமான நற்குணங்களைப் பற்றிக்கேள்விப்பட்ட கதீஜா (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை ஏற்று நடத்துவதற்கு சம்பள அடிப்படையில் வேலைக்கு வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார்கள். கதீஜா (ரழி) அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நபி(ஸல்) அவர்கள், கதீஜா (ரழி) அவர்களின் நன்னம்பிக்கையைப் பெற்ற  அடிமையான மைஸரா என்பவருடன் வியாபார நிமித்தமாக வெளிநாடு களுக்குச் சென்றார்கள்.

இந்த வியாபாரப் பயணத்தில் கதீஜா (ரழி) அவர்களுக்கு மிகப் பெரிய இலாபம் கிடைத்ததோடு, நபி(ஸல்) அவர்களிடம்காணப்பட்ட நற்குணங்கள், நம்பிக்கை, நாணயம், ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல், கொடுக்கல் வாங்கலில் காணப்பட்ட நாணயம், மற்றும் வியாபாரத் திறமை ஆகியவையாவும் மைஸராவை அதிசயிக்க வைத்தன. நாடு திரும்பியவுடன் முதல் வேலையாக, தன்னுடைய எஜமானியான கதீஜா (ரழி)அவர்களிடம் சென்று பயண நெடுகிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மைஸரா விவரிக்க ஆரம்பித்து விட்டார். நபி (ஸல்) அவர்களைப் பற்றி மைஸரா மூலம் அறிந்து கொண்ட கதீஜா (ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களை மணமுடித்துக் கொள்ள ஆவல் கொண்டார்கள்.

குறைஷிக் கோத்திரங்களில் மிகப் பெரும் கோத்திரத்தவர்கள் பலர் தன்னை மணமுடிக்க விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அவை அத்தனையையும் கதீஜா (ரழி) அவர்கள் மறுத்தொதுக்கி இருந்த அந்தநேரத்தில், நபி(ஸல்) அவர்களைத் தான் மணமுடிக்கத் தயாராக இருப்பதுபற்றி தான் எவ்வாறு வெளிப்படுத்துவது என்ற தயக்கமும் இருந்தது. எவ்வாறு முஹம்மது அவர்களை அணுகுவது என்பதில் ஒரு முடிவுக்கு வரஇயலாத குழப்பான நிலையிலேயே இருந்தார்கள். கதீஜா (ரழி) அவர்களின் தோழியான நஃபீஸா பின்த் மன்பஃ அவர்கள், கதீஜா (ரழி) அவர்களின் இதயத்துடிப்பை அறிந்து, அதற்கு உதவ முன்வந்தார்கள், இன்னும் முஹம்மது (ஸல்) அவர்களிடம் தூது போகவும் முடிவெடுத்தார்கள்.

மிக எளிதான முறையில் நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் என்று முஹம்மது (ஸல்)அவர்களிடம் விண்ணப்பித்த நஃபீஸா அவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அதற்கு எதிர்ப்பேதும் இல்லாது சம்மதத்திற்கான அறிகுறிகள் கிடைத்தவுடன், நீங்கள் ஏன் இன்னும் திருமணம் முடிக்காமல் இருக்கின்றீர்கள்? என்றுகேட்டார். அதற்கு முஹம்மது (ஸல்) அவர்கள் திருமணம் முடிக்கும் அளவுக்கு என்னுடைய பொருளாதார நிலை இல்லை என்று பதிலளித்தார்கள்.

பொருளாதாரத்தைப் பற்றிப் பிரச்னையில்லை, குறைஷிக் குலத்தில் மிகப் பெரும் குலத்தில் பிறந்த வசதியான இன்னும் தங்களையே மணமுடிக்க வேண்டும் என்று விரும்புகின்ற அழகானதொரு பெண்ணை நீங்கள் மணமுடிக்க விரும்புகின்றீர்களா? என்று நபீஸா அவர்கள் கேட்டார்கள். நீங்கள் எந்தப் பெண்ணைப் பற்றிக் கூறுகின்றீர்கள்? என்று நபி (ஸல்)அவர்கள் வினாத் தொடுத்தார்கள்.

நஃபீஸா அவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து, அவர் என்னை மணக்க விருப்பம் தெரிவித்தால் நான் அவரை மணந்து கொள்ளவிரும்புவதாகத் தன்னுடைய விருப்பத்தை நபி(ஸல்) அவர்கள் தெரிவித்து, மணமுடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட கதீஜா (ரழி)அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். அப்பொழுது நபி (ஸல்)அவர்களுக்கு 25 வயதும், கதீஜா (ரழி) அவர்களுக்கு 40 வயதும் ஆகியிருந்தது.

நபி(ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார்களான ஹம்ஸா (ரழி) அவர்களும், அபூதாலிப் அவர்களும் கதீஜா (ரழி) அவர்களின் சிறிய தகப்பனாரான உமர் பின்அஸத் அவர்களை அணுகி பேசி திருமணத்திற்கு முடிவுசெய்தார்கள். ஷாமிலிருந்து திரும்பிய மூன்றாம் மாதத்தில் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் ஹாஷிம் கிளையாரும் முழர் கோத்திரத்தின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் 20 மாடுகளை மஹராகக் கொடுத்தார்கள். நபி(ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தின் பொழுது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாயான ஹலீமா ஸஃதிய்யா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்கள். தனது கிராமத்திலிருந்து திருமணத்திற்காக மக்கா வந்த ஹலீமா அவர்களுக்கு, வீட்டுச் சாமான்களையும், ஒட்டகம் மற்றும் 40 ஆடுகளைப் பரிசாக அவர்களுக்குக் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.

நபி (ஸல்) மற்றும் கதீஜா (ரழி) தம்பதிகளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. காசிம், அப்துல்லா என்ற இரண்டு மகன்களும் மற்றும் ஸைனப், ருக்கையா, உம்மு குல்தூம் மற்றும் ஃபாத்திமா ஆகிய மகள்களையும் கதீஜா (ரழி)அவர்கள் பெற்றெடுத்தார்கள். அருமையான மனைவி, வசந்தமான வாழ்க்கை, குதூகலிக்கவைக்கும் குழந்தைகள் இத்தனை இருந்தும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதனையோ இழந்தவர்கள் போல இருந்தார்கள், வருடத்திற்கு ஒரு முறை, ஒரு மாதம் முழுவதும் ஹிரா என்னும் குகைக்குச் சென்று தவமிருக்கலானார்கள்.

இவ்வாறிருக்கையில் ஒருநாள் இனம் புரியாத உருவம் ஒன்று கைகளினால் தன்னை இறுக அணைத்து அழுத்திப் பிடிப்பதை உணர்ந்தார்கள். பின் தன்னுடைய பிடியைத் தளர்த்திய அந்த உருவம், எங்கே ஓதுவீராக என்று கூறியது. அதற்கு, நான் படிப்பறியாதவன் - எனக்கு ஓதத் தெரியாது என்று பதில் கூறினார்கள். இருந்தும் வந்த அந்த உருவம் மீண்டும் இவரைக் கட்டிப் பிடித்து இப்பொழுது ஓதுவீராக! என்று கூறியதும், மீண்டும் எனக்கு ஓதத் தெரியாதே! என்றார்கள். இவ்வாறு பலமுறை நிகழ்ந்த பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமறைக்குர்ஆனின் வசனங்களான ”இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதி கலக்” என்ற வசனத்தை ஓத ஆரம்பித்தார்கள். பின்பு அந்த உருவம் மறைந்து விட்டது.

எதிர்பாராத இந்த நிகழ்ச்சியின் காரணமாக நபி(ஸல்) அவர்கள் பயந்து நடு நடுங்கியவர்களாக, வியர்த்து வழிகின்ற நிலையில், தன்னுடைய வீட்டை அடைந்து தன்னுடைய துணைவியார் கதீஜா (ரழி) அவர்களை அழைத்து என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள் என்று கூறிகின்றார்கள். சற்று நேரம் அவர்கள் இளைப்பாறியதன் பின்பு சகஜ நிலைக்கு நிலைக்கு வருகின்றார்கள். அதன் பின்பு என்னுடைய உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என நான் அஞ்சுகின்றேன் என்று கூறியவாறு, தனக்கு நேர்ந்தவைகளை நபி(ஸல்) அவர்கள் தனது துணைவியார் கதீஜா (ரழி) அவர்களிடம்விவரிக்கின்றார்கள்.

நீங்கள் ஏழைகளுக்கு உதவுகின்றீர்கள், பிறர் மீது அன்பும் கருணையும் உடையவர்களாக இருக்கின்றீர்கள், இந்த நிலையில் எந்த வித தீங்குகளும் உங்களை அணுகாமல் இறைவன் உங்களைப் பாதுகாப்பான், நீங்கள் பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுகின்றார்கள். கதீஜா (ரழி) அவர்களின் இந்த விவேகமான ஆறுதலான வார்த்தைகள் நபி(ஸல்)அவர்களது மனதிற்கு தெம்பையும் தைரியத்தையும் வரவழைத்துக் கொடுத்தது.

பின்பு நபி (ஸல்) அவர்களை தனது சிறிய தகப்பனாரின் மகன் வரகா பின் நவ்பல் அவர்களிடம் அழைத்துக் கொண்டு சென்று, நடந்த விபரங்களை விவரித்தவுடன், ஹிரா குகையில் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டுச் சென்றது, ஜிப்ரில் (அலை) அவர்கள் தாம் என்பதை உணர்ந்து கொண்டு, முதுமையின் காரணமாக நான் இறந்து விடாது உயிருடன் இருந்தால், பின் வரும் காலத்தில் இந்த மக்கத்து மக்கள் தங்களை இந்த நாட்டை விட்டே வெளியேற்றுவதை நான் காணக்கூடியவனாக இருப்பேன். இன்னும் அந்த நேரத்தில் நான் வாழ்ந்தால், தங்களுக்கு நான் உதவக் கூடியவனாக இருப்பேன் என்றும் வரகா பின் நவ்பல் அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) மற்றும் கதீஜா (ரழி) அவர்களின் மணவாழ்க்கையின் விளைவாக ஆறு அழகான குழந்தைகளுக்குத் தம்பதியர்களாக ஆனார்கள். இவர்களில் நான்கு பெண்குழந்தைகள் இஸ்லாத்தின் இறைநம்பிக்கை மிக்கவர்களாகவும் இன்னும் மனஉறுதிமிக்க பெண்மணி களாகவும் வளர்த்தெடுக்கப் பட்டார்கள். இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்களுமாவார்கள்.

ஸைனப் (ரழி) அவர்கள் அபுல் ஆஸ் பின் ரபீஆ என்பவரையும், ருக்கையா (ரழி)அவர்கள் உதுமான் (ரழி) அவர்களுக்கும், பின்னர் ருக்கையா (ரழி) அவர்கள்இறந்தவுடன் உம்மு குல்தூம் (ரழி) அவர்களை உதுமான் (ரழி) அவர்கள் மணந்துகொண்டார்கள், ஃபாத்திமா (ரழி) அவர்களை அலி பின் அபீதாலிப்  அவர்கள் மணந்துகொண்டார்கள். முதல் மூன்று மகள்களும்  நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்திலேயே மரணமடைந்தார்கள். ஃபாத்திமா (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் இறந்து ஆறு மாதம் கழித்து மரணமடைந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மகள்கள் இரண்டு பேரை, ஒருவர் இறந்த பின் இன்னொருவரை மணந்ததன் காரணமாக உதுமான் (ரழி) அவர்களை துன்னூரைன் என்ற புனைப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு.நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு மகன்கள் கதீஜா (ரழி) அவர்கள் மூலமாகவும், ஒரு மகன் மாரிய்யா கிப்திய்யா (ரழி) அவர்கள் மூலமாகவும் பெற்றெடுத்தார்கள். முதல் மகனின் பெயர் காஸிம், இவரது பெயரால்தான் நபி(ஸல்) அவர்களை அபுல் காஸிம் என்றும் அழைப்பதுண்டு. இரண்டாவது மகனின் பெயர் தாஹிர் (பரிசுத்தம்) அல்லது தய்யிப் (நல்லது) என்றழைக்கப்பட்ட அப்துல்லா. இவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்தின் போதேஇறந்து விட்டார்கள். இவர்கள் இருவரும் இறந்தது மக்கத்துக் குறைஷிகளுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது மட்டுமல்ல, முஹம்மதுக்கு வாரிசு இல்லாமல்போய் விட்டது என்று ஆனந்தப்பட்டார்கள். மூன்றாவது குழந்தையாகிய மாரிய்யா கிப்திய்யா (ரழி) அவர்களுக்குப் பிறந்த இப்றாஹிம் அவர்களும் குழந்தையாகஇருந்த பொழுதே மரணமடைந்து விட்டார்கள்.

         இஸ்லாத்தின் மீது கதீஜா(ரழி) அவர்களுக்கு இருந்த ஈடுபாடு, உறுதியான நம்பிக்கை, இன்னும் அவரது அரும் பெருங் குணங்கள் இவையனைத்தும் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளுக்கும், இன்னும் இறைவன் வானவதூதர் ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலமாக இவர்களுக்கு தனது ஸலாமைத் தெரிவிக்கும் அளவுக்கு இறைவனது உவப்புக்கு உரிய நங்கையாகத் திகழ்ந்தார்கள் அன்னை கதீஜா (ரழி) அவர்கள்.

அன்னை கதீஜா (ரழி) அவர்கள் இன்னும் நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியும், அதனை விட இவர்கள் உயிரோடு இருந்த காலம் வரைக்கும் நபி(ஸல்) அவர்கள் இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. நபி(ஸல்) அவர்களுடன் 24 ஆண்டுகள் அன்போடும், பாசத்தோடும் குடும்பம் நடத்தினார்கள். இன்னும் இவர்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற காலத்தில், கதீஜா (ரழி) அவர்களது வீட்டில் வைத்து, வானவ தூதர் ஜிப்ரில் (அலை) கொண்டு வந்த தூதை நபி(ஸல்) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அன்னை அவர்கள் வசதியான குடும்பத்தில் பிறந்து, வசதியான வாழ்வுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும், மக்கத்துக் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களையும், இன்னும் அவர்கள் கொண்டு வந்த தூதைச் சுமந்த நெஞ்சங்களையும், அபூதாலிப் கணவாய்க்கு அனுப்பி வைத்து, சமூக பகிஷ்காரம் செய்த பொழுது, நபி(ஸல்) அவர்களது வலக்கரமாக இருந்து செயல்பட்டு, நபி(ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றார்கள் அன்னை கதீஜா(ரழி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களை மணந்த நாள் முதல், அவர்களது தூதை ஏற்ற நாள் முதல், நபி(ஸல்) அவர்களுடன் பல இன்னல்களையும், கஷ்டங்களையும், சுமந்தபோதிலும் தளராத அந்த நெஞ்சம், இறைவனது அழைப்பை ஏற்று - மரணத்தைத் தழுவியபொழுது, நபி(ஸல்) அவர்களது இதயம் சற்று நின்று தான் போனது. தணலில்விழுந்த புழுவாய் துடித்த நபி(ஸல்) அவர்கள், இறைவனது விதியை ஒப்புக் கொண்டவர்களாக, தானே முன் நின்று தனது பிரிய மனைவிக்கு மண்ணறையை முன்னின்று தோண்டினார்கள், தானே குழிக்குள் இறங்கி குழியைச் சரிசெய்தார்கள், இன்னும் தானே அவர்களது உடலை வாங்கி மண்ணறைக்குள் வைத்தார்கள். கதீஜா(ரழி) அவர்கள் தனது 65வது வயதில் காலமானார்கள். அவர்களது அடக்கஸ்தலம் மக்காவின்  ஜன்னத்துல் முஅல்லாஹ் மண்ணறை வளாகத்தில் உள்ளது.

இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசித்த அந்த ஆரம்பநாட்களில், அதனைக் கை கொண்டு மறைக்கப் பார்த்த குறைஷிகள், அதனை வாய் கொண்டுஅணைக்க முற்பட்ட போது, அன்னை அவர்கள் தோள் கொடுத்து இறைத்தூதர் (ஸல்)அவர்கள் துவண்டு விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இன்னும் சொர்க்கத்துப் பெண்களின் தலைவி எனப் போற்றப்படும் ஃபாத்திமா (ரழி)அவர்களைப் பெற்றெடுத்த பாக்கியமிக்க பெண்மணியும் கூட. இன்னும்சொர்க்கத்தின் வாச மலர்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மணம்பரப்பப்பட்ட ஹஸன் (ரழி) மற்றும் ஹுஸைன் (ரழி) ஆகியோர்களின் தாயாரைப் பெற்றபாக்கியம் பெற்றவருமாவார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் :

எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களைப் பற்றிப் பேசுகின்றார்களோ, அப்பொதெல்லாம் அவர்களை மிகவும் உயர்த்தியே பேசுவார்கள். ஒருநாள் மிகவும் இளமையான மனைவியாக இறைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு என்னை அளித்திருக்க, கதீஜா (ரழி) அவர்களை இவ்வளவு உயர்வாகப் பேசுகின்றார்களே என பெண்களுக்கே உரிய அந்த குணத்தினால், ஆயிஷா (ரழி)அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், அந்த மனைவியிடம் தாங்கள் என்ன தான் கண்டீர்கள் என்ற பொருள் படக் கேட்டு விடுகின்றார்கள்.

இந்தக் கேள்வி இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சங்கடப்பட வைத்தது, இருப்பினும்அவர்களுக்கே உரித்தான அந்த சகிப்புத் தன்மை காரணமாக அதனைப் பெரிது படுத்தாமல், ஆயிஷா (ரழி) அவர்களுக்கு இவ்வாறு பதிலளித்தார்கள் :

அவளை (கதீஜா) விட மிகச் சிறந்த மனைவியை நான் கண்டதில்லை. என்னுடைய குடும்பமும், என்னுடைய கோத்திரமும் என்னை விசுவாசிக்க மறுத்த பொழுது, யாருமே என்னுடைய தூதை ஏற்றுக் கொள்ள முன் வராத போது என்னையும் நான் கொண்டுவந்த தூதையும் முதன் முதலாக விசுவாசித்தார். அல்லாஹ் அனுப்பிய தூதனாக என்னையும், என்னை தூதனாக அனுப்பி வைத்த அல்லாஹ்வையும் அவர் விசுவாசித்தார். அந்த விசுவாசத்தின் காரணமாக தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் இழந்தார். என்னையும் நான் கொண்டு வந்த தூதையும் ஒரு சேர அணைத்து விட முழு உலகமும் துடித்துக் கொண்டிருந்த பொழுது, தனது உடலாலும், பொருளாலும் என்னையும், நான்கொண்டு வந்த தூதையும் அவள் காப்பாற்ற உதவினாள். இன்னும் அவள் மூலகமாகத்தான் இறைவன் எனக்கு குழந்தைப் பாக்கியத்தையும் நிரப்பமாக வழங்கி அருளினான் என்று கூறினார்கள்.

அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தரையில் நான்கு கோடுகளை வரைந்து, இந்தக் கோடுகளின் அர்த்தம் என்னவென்று தெரியுமா? என்று தனது தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள். அதற்கு, இறைவனும், இறைத்தூதரும் தான் அறிவார்கள் என்று தோழர்கள் பதில் கூறினார்கள். இந்தக் கோடுகள் இந்த உலகின் மிகச் சிறந்த நான்கு பெண்மணிகளைக் குறிக்கக் கூடியதாகும். அவர்களாவன : கதீஜா பின்த் குவைலித், ஃபாத்திமா பின்த் முஹம்மத், மர்யம் பின்த் இம்ரான் (ஈஸா (அலை)அவர்களின் தாயாரான மர்யம் (அலை)) மற்றும் ஆஸியா பின்த் மஸாஹிம் (பிர்அவ்னின்மனைவி) என்று பதில் கூறினார்கள்.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabi SAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...

Umar RA

அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Kathija

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuSalama

உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ali RA

அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sawdha

உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuHabiba

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sabiya

உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

zuvairiya

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.