ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி)
ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) (கி.பி.595 - கி.பி.674) அவர்கள் ஸஅத் இப்னு மாலிக் என்றும் அறியப்படுகிறார்கள். திருமறைக் குர்ஆனில் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பல நபித்தோழர்களில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் உஹதுப்போர்க்களத்தில் தனது வில்லிலிருந்து அம்புகளை மழை என எதிரிகளின் மீது பொழிந்து எதிரிகளை நிலைகுலையச் செய்தவரும் ஆவார். மேலும் முக்கியமாக கதீஸிய்யாப் போருக்கு தலைமைத் தளபதியாக ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் நியமித்தார்கள். கி.பி636இல் ஈரானைக் கைப்பற்றியதிலும் தளபதியாக இருந்தார்கள். ஈரான் கவர்னராகவும், கி.பி 651இல் உஸ்மான்(ரழி) அவர்கள் காலத்தில் சீனாவிற்க்கு சென்று திரும்பிய தூதுவராகவும் பணியாற்றியவர்கள். நபி (ஸல்) அவர்களால் இவ் உலகிலேயே செர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பெற்ற பத்து பேரில் இவர்களும் ஒருவர்.
பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் கி.பி.595இல் மக்காவில் பிறந்தார். இவரது தந்தை குரைஷி குலத்தில் பனூ ஜுஹ்ரா கிளையைச் சேர்ந்த அபூ வக்காஸ் (என்ற) மாலிக் இப்னு உஹைப் இப்னு அப்த் மனாஃப் இப்னு ஜுஹ்ரா ஆவார். தாயார் பெயர் ஹம்னா பின்த் சுஃப்யான் இப்னு உமய்யா இப்னு அப்து ஷ்ம்ஸ் இப்னு அப்துல் மனாஃப்.
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தாயாரான ஆமீனா அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றார்கள், அப்பொழுது ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அங்கே நுழைந்த பொழுது, நபி (ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களைக் குறித்து, இவர் தான் எனது தாய்மாமா, உங்களில் எவராவது இவரை விடச் சிறந்த தாய்மாமா ஒருவரை எனக்கு நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் என்று பெருமைபடக் கூறினார்கள்.
இவர்கள் தனது பதினேழாவது வயதில் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். முதன் முதலில் இஸ்லாத்தினை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபொழுது அவர் இளமை ததும்பும் வாலிபப் பருவம் கொண்ட இளைஞர். இவர் இஸ்லாத்தைஏற்றுக் கொண்டதன் காரணமாக இவரது தாயார் மிகவும் கவலையடைந்தார்.
தாயின் பாச போராட்டம்
நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு தன் மகன் சென்று விட்டானே என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார், அழுது புலம்பினார், தன்னுடைய மகனை எப்பாடு பட்டாவது தன்னுடைய பழைய மார்க்கத்திற்குக் கொண்டு வந்து விடவேண்டும் என்று துடியாய்த் துடித்தார். அதற்காக வழக்கமாக தாய்மார்கள் கடைபிடிக்கும் அனைத்து வித முயற்சிகளையும் செய்து பார்த்தார். ஆனால் எதிலும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் இணங்கிப் போகவில்லை. இஸ்லாத்தில் உறுதியாக நிலைத்திருந்தார்கள். இறுதியாக, ஸஅதே..! நீ மீண்டும் நமது முன்னோர்களின் பழைய மார்க்கத்திற்கு வரவில்லை என்று சொன்னால், நான் சாகும் வரை உண்ண மாட்டேன், பருக மாட்டேன்..! என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சபதமிட்டார். இறுதியாக..! என்னுடைய மகனை ஒரு முஸ்லிமாகப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் செத்து மடிவதே மேல் என்றார். தாயினுடைய இந்த தந்திரங்களுக்கெல்லாம், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் மசிந்து இடங்கொடுத்து, விட்டுக் கொடுத்துப் போகவில்லை, உணர்ச்சிகளுக்கு அடிமையாகவில்லை.
இறை நம்பிக்கையில் உறுதி
அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தஅந்த இஸ்லாமிய வேர், இறைநம்பிக்கை என்னும் மரமாக வளர்ந்திருந்ததன் காரணமாக, எத்தகைய புயல் காற்றும் கூட, அவரது பாதத்தின் உறுதியைப் பெயர்த்து, அந்த மரத்தை அசைக்கக் கூட யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது சாகும் வரை உண்ண, பருக மாட்டேன் என்ற சபதமெடுத்த ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்களது தாயார் பசிக் கொடுமையின் காரணமாக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். தனது தயாரைப் பார்த்து, தனது இறைநம்பிக்கையின் உறுதியை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்.
என்னுடைய தாயாரே! உங்களுக்கு ஒரு நூறு உயிர்கள் வழங்கப்பட்டு ஒவ்வொருஉயிராக உங்களிடம் பறிக்கப்பட்டுப் போய்க் கொண்டிருந்தாலும், நான் என்னுடைய இறை நம்பிக்கையிலிருந்து, நான் கொண்டிருக்கும் ஈமானின் வேகத்தில் ஒன்றையேனும் நான் இழக்கத் தயாராக இல்லை, நான் எனது இறை மார்க்கத்தை விட்டு விட்டு, உங்களது உயிரைப் பாதுகாக்க நான் முன் வரப் போவதில்லை, எனவே இந்த உங்களது தந்திரங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது தாயார் அவர்களே! நீங்கள் உண்ணுவதும் அல்லது உண்ணாமல் இருப்பதும், இன்னும் பருகுவதும் பருகாமல் இருப்பதும் உங்களது விருப்பம். நான் என்னுடைய இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விட்டும் நான் வர மாட்டேன் என்று கூறி விட்டார்.
நம்முடைய தந்திரங்கள் எதுவும் பலனளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்தத் தாய், தன்னுடைய உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார். அவரது இந்தத் துணிவும் உறுதியும் இன்றைக்கும் நமக்கொரு சிறந்த பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனைப் பற்றி இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :
“ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணைவைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள் (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்." (31:15)
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த ஆரம்ப நாட்களில் தாருல் அர்க்கம் என்ற பயிற்சிப் பாசறையில் வைத்து நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவரும், கல்வி பெற்றவருமாவார். அவ்வாறு இவருடன் அந்தப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்களில் பெருமை மிகு தோழர்களான அபுபக்கர் (ரழி), உஸ்மான் பின் அஃப்பான் (ரழி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), தல்ஹா இப்னு அப்துல்லா (ரழி), சுபைர் இப்னு அவ்வாம் (ரழி) ஆகியோர்களும் அடங்குவர். மக்கத்துக்குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத அளவுக்கு இருந்த பொழுது, தங்களது தொழுகைகளை இறைவணக்கத்தை நிறைவேற்ற இவர்கள் மக்காவின் ஒதுக்குப் புறமான பகுதிகளுக்குச் சென்று விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்து முதல் தாக்குதல்
ஒருமுறை இவர்கள் ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்து, இறைவணக்கத்தில் தங்களது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, மக்கத்து ரவுடிக் கும்பலொன்று இவர்களது இருப்பிடத்தை அடையாளம் கண்டு கொண்டு, அங்கே சிறியதொரு கலவரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கே கீழே கிடந்த ஒட்டகத்தின் எலும்பை எடுத்து அவர்களை நோக்கி படுவேகமாக வீசியெறிந்தார்கள் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள். இவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையில் அந்த எலும்பு பட்டு, படுகாயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. ஒரு சிறுவன் அடிபட்டதும் மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டு வெருண்டோடி விட்டார்கள். இது தான் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் மிகவும் சாதுர்யமாக தீரமாக இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்து தொடுத்த முதல் தாக்குதலாகும்.
ஹிஜ்ரத் மற்றும் பத்ரு போர்
மக்காவில் இருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து பத்ரு போரிலும் ஸ அத் (ரழி) அவர்களும் அவரது இளைய சகோதரர் உமைர் (ரழி) அவர்களும் கலந்து கொண்டு சண்டையிட்டார்கள். இளம் வயதினராக இருந்ததால், உமைர் (ரழி) அவர்கள் போருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, ஆனால் போராடி அழுத பின்னர், போரில் சண்டையிட நபி (ஸல்) அவர்கள், அவருக்கு அனுமதி வழங்கினார்கள். பத்ரு போரில் ஷஹித் என்னும் மறு உலக உயர்பதவி அடைந்த பதினான்கு முஸ்லிம்களில் உமைரும் ஒருவர். பின்னர் ஸஅத்(ரழி) அவர்கள் தனியாக மதீனாவுக்குத் திரும்பினார்.
உஹத் போரில் ஸஅத்(ரலி)
உஹதுப் போரில் முஸ்லிம்களின் இதயங்களை ஆட்டிப் படைத்து கலங்கடித்த எதிரிகளை நேருக்கு நேராக எதிர்த்துப் போர் புரிந்தவர். உஹதுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது, ஸஅதே உமது அம்பை இன்னார் மீது எறியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்பொழுது தான் அம்பு தீர்ந்து விட்டதை ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) உணர்கின்றார்கள். இருப்பினும், கட்டளை இட்டது நபி (ஸல்) அவர்களாயிற்றே! நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாயிற்றே! உடனே அங்கு மிங்கும் தேடுகின்றார்கள், ஒரு அம்பும் கிடைக்கவில்லை, பின் இறுதியில் ஒரு உடைந்த அம்பு ஒன்று தான் கிடைத்தது. அதனைத் தனது வில்லில் பூட்டி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அந்த நபரை நோக்கி, அம்பெய்துகின்றார்கள். அந்த அம்பானது அந்த எதிரியின் முன்நெற்றியில் பட்டு, அந்த இடத்திலேயே அந்த நபர் தரையில் சாய்ந்து, தனது உயிரை விடுகின்றார். அதுபோல அடுத்த ஒரு வில்லைக் கண்டெடுக்கின்றார்கள். அந்த வில்லை எதிரியின் கழுத்துக்குக் குறி வைக்கின்றார்கள். அந்த வில்லும் சரியான இலக்கைத் தாக்க, தொண்டையில் குத்திய அம்பு அவனது நாக்கை வெளிக்கொண்டு வந்து விட்டது, அந்த எதிரியும் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டான்.
ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்! நபி (ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள், யா அல்லாஹ்! அவரது குறியை மிகச் சரியாக ஆக்கி வைப்பாயாக! அவரது பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக!
ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களின் பிரார்த்தனைகள் யாவும் நன்கு தீட்டப்பட்ட கூர்மையான வாளைப் போன்றது, இறைவன் அவரது பிரார்த்தனைகளை உடனே ஏற்றுக் கொள்ளவும் செய்தான்.
நபி (ஸல்) அவர்களுடன் இறுதி ஹஜ்
நபி (ஸல்) அவர்களுடைய இறுதி ஹஜ்ஜின் பொழுது, அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற நேரத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்பொழுது, நபி (ஸல்) அவர்களே! என்னிடம் அதிகமான சொத்துக்கள் உள்ளன. அதற்கு எனது ஒரே ஒரு மகள் மட்டுமே வாரிசுதாரியாக உள்ளார். எனவே எனது சொத்தில் மூன்றில் இரண்டு பாகங்களை இறைவனுக்காக நான் தானம் செய்ய விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அப்பொழுது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஸஅதே! இது மிகவும் அதிகம், என்று கூறிய பொழுது, அப்படியானால் பாதிக்குப் பாதி கொடுத்து விடுகின்றேன். ஊஹும்! இல்லை. இதுவும் அதிகம் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். பின் நான் மூன்றில் ஒரு பகுதியைத் தருகின்றேன் என்று ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் கூறிய பொழுது, அப்படியே செய்யும்.! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்பொழுது ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களது நோய் மேலும் மேலும் முற்றிக் கொண்டிருந்தது. இன்னும் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களது விருப்பம் என்னவெனில், தனது மரணம் தனது விருப்பத்திற்குரிய நகரமாகிய மதீனாவில் வைத்து நிகழ வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக அவரது இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அமைதியற்றும் இருந்தது. ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களது அமைதியற்ற அந்த நிலையைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களின் மார்பின் மீது கையை வைத்து, இறைவனிடம் அவரது நோய் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்தார்கள். என்ன ஆச்சரியம்! முன்னைக் காட்டிலும் அவர் மிகவும் ஆரோக்கியமான மனிதராக மாறி விட்டிருந்தார். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களது நோயைக் இறைவன் குணப்படுத்தினான். நபி (ஸல்) அவர்களின் அந்த பிரார்த்தனை ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் பழுத்த பழமாக மாறும் வரைக்கும் நீடித்திருந்தது.
கதீஸிய்யாப் போர்
உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த கதீஸிய்யாப் போர் நடைபெற்றது. இந்தப் போருக்கு தலைமைத் தளபதியாக ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களை உமர் (ரழி) அவர்கள் நியமித்தார்கள். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவாக நிறைவேற்ற விரும்பிய ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள், உயிர் தியாகத்தில் வேட்கை மிக்க, ஒரு பக்கம் வீரத்தையும், இன்னொரு பக்கம் இறைநம்பிக்கையில் உறுதியும் மிக்க முப்பதாயிரம் படையினரைத் தயார்படுத்தினார்கள். அவர்கள் தங்களது கையிலே ஆயுதத்தையும், இதயத்தில் இறைநம்பிக்கை உறுதியையும் எடுத்துக் கொண்டவர்களாக மதீனாவை விட்டு கதீஸிய்யாவை நோக்கி, தங்களது எதிரிகளை சந்திக்கப் புறப்பட்டார்கள். ஈரானியப் படைகளும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை, அவர்களும் தங்களது முழுப் பலத்தையும் திரட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். இன்னும் இது மாதிரியானதொரு படையை அவர்கள் இதற்கு முன் கண்டதுமில்லை. இரு படைகளும் முழு வலிமையுடன் தங்கள் தங்கள் வீரப் பெருமைகளை அசை போட்டுக் கொண்டு, படைக்களத்தில் மோதிக் கொண்டன. ஈரானின் மிகப் புகழ் வாய்ந்த படைத்தளபதி ஜெனரல் ருஷ்தும் என்பவரது தலைமையில் ஈரானியப் படைகள் போர்க்களத்திற்கு வந்திருந்தன. ஈரானியப் படைத்தளபதி தனது படைகளை நடுவே நிற்க வைத்து, படைக்கு இடதும், வலதுமாக யானைப் படையை காவலுக்கு அமைத்து படைகளை அனுப்பிக்கொண்டிருந்தான். ஆனால், ஈரானியத் தளபதியின் இந்த யுக்தியை அறிந்த அம்ர்பின் மஆத் யக்ரப் (ரலி) அவர்கள், யானைகளின் மீது தாக்குதல் தொடுக்குமாறுதனது படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
யானைகளின் மீது தாக்குதல் ஆரம்பமானது, யானைகளின் தும்பிக்கைகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. தும்பிக்கைகளை இழந்த யானைகள், மிரண்டு போய், தனது படைகளின் நடுவே திரும்பி ஓட ஆரம்பித்தது. யானைகளின் காலடியில் சிக்கிக் கொண்ட ஈரானிய வீரர்கள், மடிந்ததோடல்லாமல், தோல்வியையும் தழுவினார்கள். இருப்பினும் மீண்டும் மீண்டும் ஈரானில் இருந்து போர் வீரர்களை ஈரானிய மன்னன் அனுப்பிக் கொண்டே இருந்தான்.
காகா பின் அம்ர் (ரழி) அவர்களைக் கண்ட ருஷ்தும், தானே முன் வந்து அவர்களுடன் போர் செய்ய எத்தணித்தான். பின் இது நடவாத காரியம் என்பதை அறிந்து கொண்டவனாக, அங்கிருந்து தப்பிப் போக முயற்சி செய்து, அந்த இடத்தை விட்டே ஓட ஆரம்பித்த அவன், அருகில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிப் போக முயற்சி செய்தான். ஆற்றில் குதித்து தப்பிப் பிழைக்க நீந்திக் கொண்டிருப்பதைக் கண்ட முஸ்லிம் படைவீரர்களில் ஒருவரான ஹிலால் (ரழி) அவர்கள், தானும் ஆற்றில் குதித்து ருஷ்துமை விரட்ட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் ருஷ்துமை எட்டிப் பிடித்த ஹிலால் (ரழி) அவர்கள், அவனை இறுக்கப்பற்றிப் பிடித்துக் கொண்டு, தனது குறுவாளால் ஓங்கி ஒரு குத்து குத்தினார். இப்பொழுது, ருஷ்தும் ஆற்றிலேயே பிணமாக மிதக்க ஆரம்பித்தான்.
ஈரானியப் படைத்தளபதி கொல்லப்பட்ட செய்தியை, ஈரானியப் படைவீரர்களுக்குமத்தியில் மிக வேகமாகப் பரப்பப்பட்டது. தன்னுடைய தளபதி இறந்த செய்தியைக்கேட்ட ஈரானியப் படைவீரர்கள் இப்பொழுது தாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில்நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர், படைக்களத்தை விட்டுப் புறமுதுகிட்டு ஓடஆரம்பித்தார்கள். ஓடிய அவர்களை மிக அதிக தூரம் விரட்டிச் சென்றதோடு, போரைமுஸ்லிம்கள் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இப்பொழுது போரில் முஸ்லிம்கள் முழு வெற்றி பெற்று விட்டார்கள்.
மத்யன் போர்
கதீஸிய்யாவில் ஈரானியர்களை வெற்றி பெற்ற பின், அதே ஈரானியர்களை மீண்டும் மத்யன் என்ற இடத்தில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் போரிலும் ஈரானியர்கள் கதீஸிய்யாப் போருக்கு வந்திருந்ததைப் போலவே மிக மிக முன்னேற்பாடுகளுடன், அதிகமான ஆயுதங்களுடனும் வந்திருந்தார்கள். இந்தப்போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய தடையை தஜ்லா என்ற நதி ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஈரானியப் படை ஒரு கரையிலும், மறு கரையில் முஸ்லிம்களின் படையும் நின்று கொண்டிருந்தது.
இப்பொழுது ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் ஒரு புது வித யுக்தி ஒன்றைவகுத்தார்கள். அதன் படி ஒரு படைப்பிரிவு ஆஸிம் பின் அம்ர் (ரழி) அவர்கள்தலைமையில் ஆற்றில் இறங்குவது, இன்னும் அடுத்த படைப்பிரிவு முதல் பிரிவுக்குசற்றுத் தூரத்தில் காகா பின் அம்ர் (ரழி) அவர்கள் தலைமையில் ஆற்றில்இறங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தைத் தெளிவாகத் தன்னுடைய படைவீரர்களுக்கு விளக்கிய பின், இறைவன் மீது நம்பிக்கை கொண்ட என்னுடைய படைவீரர்களே! அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்களாக இந்த ஆற்றில் இறங்குங்கள் என்று ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் உத்தரவிட்டார்கள். இப்பொழுது, முஸ்லிம் வீரர்கள் ஒவ்வொருவரின் உதடும், அல்லாஹ்வின் திருநாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தது, இன்னும் அவர்கள் ”ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வக்கீல்” - அதாவது ”எங்களுக்கு உதவி செய்ய அல்லாஹ்வே போதுமானவன்” என்று கூறிக் கொண்டே இப்பொழுது ஆற்றில் இறங்க ஆரம்பித்தார்கள். ஆழமான அந்த தஜ்லா நதியை எந்தவித பயமுமின்றி இப்பொழுது முஸ்லிம் வீரர்கள் கடக்க ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு ஆற்றைக் கடந்த முஸ்லிம் வீரர்களில் சல்மான் அல் பார்ஸி (ரழி) அவர்களும் ஒருவராவார். அவர் கூறினார் : இஸ்லாம் என்ற இந்த இறைமார்க்கம் உன்னதமானது, சிறப்பு மிக்கது, அது வானத்திலிருந்து இந்த உலகத்திற்கு இறக்கி அருள் செய்யப்பட்டது. அந்த வல்லஅல்லாஹ்வின் மீது சத்தியமாக, இந்த ஆறானாது இறை நம்பிக்கை கொண்ட நல்லடியார்களுக்கு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த பாலைப் பூமியைப் போன்றதே! எவனுடைய கைவசத்தில் என்னுடைய உயிர் இருக்கின்றதோ..! அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக..! ஆற்றில் யார் யாரெல்லாம் இறங்கினார்களோ அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே அதன் மறு கரையை அடைந்தார்கள். ஆழமான அந்த நதி அவர்களில் எவருக்கும் எந்த கெடுதியையும் ஏற்படுத்தவில்லை.
முஸ்லிம்கள் ஆற்றைக் கடந்து வருவதைப் பார்த்த ஈரானியப் படைகள், தங்களது கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை, பயத்தால் நடுங்கினார்கள், இன்னும்படையை விட்டு ஓடவும் விரண்டோடவும் செய்தார்கள். ஆனால் ஈரானியப் படைத்தளபதி உறுதியுடன் முஸ்லிம்களை எதிர்த்து நின்றார், விரண்டோடிய சிலர் மீண்டும் அவருடன் வந்து ஒட்டிக் கொண்டனர். ஆனால் ஈரானியப் படைக்கு முதல் நாளிலேயே முஸ்லிம் வீரர்கள் சமாதி கட்டி விட்டனர். ஈரானியர்களின் மத்யன் பிரதேசமும், கோட்டைகளும், அரண்மனைகளும் இப்பொழுது முஸ்லிம்கள் வசமாகின. ஈரானியப் பேரரசர் தோல்வியடைவதற்கு முன்பே, மத்யனை விட்டு யஸ்ட்கார் என்ற பகுதியை நோக்கிச் சென்று விட்டார். மத்யனின் அத்தனை பொருள்களும், இன்னும் கஜானாக்களும் கைப்பற்றப்பட்டு, மதீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈராக்கின் கவர்னர்
ஈராக்கின் முழுப் பகுதியும் இஸ்லாமியப் படைகளின் கைவசம் வந்ததும், ஈராக்கின் கவர்னராக ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) நியமிக்கப்பட்டார்கள். வெற்றி கொள்ளப்பட்டவுடன் அந்த தேசத்தை ஒருங்கிணைத்து அதனை ஆள்வதென்பது மிகவும் சிரமமானதொரு பணியாக இருந்தது. ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் தன்னுடைய தோழர்களது தீர மிக்க தியாகத்தையும், வீரத்தையும் கண்டு இறைவனுக்கு நன்றி கூறினார். இன்னும் வெகு சீக்கிரத்திலேயே ஈராக் பிரதேசத்தை மிகவும் செழிப்பான, வியக்கத்தக்க மாறுதல்களைக் கொண்ட பூமியாக, ஒரு முன்மாதிரி மிக்க தேசமாக மாற்றிக் காட்டினார். ஈராக்கின் சீதோஷ்ண நிலை நமது வீரர்களுக்கு ஒத்து வரவில்லை. அநேக வீரர்கள் இதனால் கடுமையான நோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்று ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் கலீபா உமர் (ரழி) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
அதற்கு, சரியான இடத்தைத் தேர்வு செய்து அங்கு புதியதொரு நகரை நிர்மாணிக்கும் படியும், படைவீரர்களுக்கு அங்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் படியும் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களுக்கு உமர் (ரழி) அவர்கள் பதில் கடிதம் எழுதினார்கள். எனவே, புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது, புதிய நகரம் கூஃபா நிர்மாணிக்கப்பட்டது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது, நகரின் மார்பிடத்தில் மிகப் பெரியபள்ளிவாசல் ஒன்றும் கட்டப்பட்டது. அந்தப் பள்ளியில் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் நின்று தொழும் அளவுக்கு விசாலமாக அந்தப் பள்ளி கட்டப்பட்டது.
சரியான நிர்வாகம், பாரபட்சமில்லாத நீதி, இன்னும் மக்களை சரியான முறையில்வழி நடத்தியதால் மக்கள் அமைதியையும், சுபிட்சத்தையும், சந்தோஷத்தையும் இஸ்லாமிய ஆட்சியில் அனுபவித்தார்கள். ஆனால், எப்பொழுதும் பிரச்னைகளை உருவாக்கி அதில் குளிர்காய விரும்பும் ஒரு கூட்டம் எங்கும் இருந்து கொண்டிருப்பது போல கூஃபாவிலும் ஒரு சிறு கூட்டம் உருவாகியது. இன்னும் அந்தக் கூட்டம் அரசைக் குறை கூறிக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் தொழ வைப்பதில்லை என்றும் இன்னும் வேலைகளில் சோம்பேறித் தனத்தையும், பொடுபோக்காகச் செயல் படுவதாகவும் கவர்னர் மீது குற்றம் சாட்டினார்கள்.
ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டைப் பெற்றுக்கொண்ட கலீபா உமர் (ரழி) அவர்கள், உடனே மதீனாவிற்குப் புறப்பட்டு வரும்படி ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களுக்கு உத்தரவிடுகின்றார்கள். அந்த உத்தரவைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்திலேயே, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் மதீனாவுக்கு பயணமாகின்றார்கள்.
அங்கு ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி உமர்(ரலி) விசாரணை செய்கின்றார்கள். ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களே! உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
சிரித்துக் கொண்டே! நான் நபி (ஸல்) அவர்கள் எந்த முறையில் தொழவைத்தார்களோ, அதே முறையில் தான் தொழ வைக்கின்றேன். நபி (ஸல்) அவர்கள் முதல் இரண்டு ரக் அத்துக்களை எவ்வாறு பிந்திய இரண்டு ரக் அத்துக்களை விட நீட்டித் தொழ வைத்தார்களோ அதனைப் போன்றே நானும் மக்களுக்கு தொழ வைக்கின்றேன் என்று கூறினார்கள். ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களது பதிலால் திருப்தியுற்ற உமர் (ரலி) அவர்கள், சரி..! இப்பொழுது நீங்கள்மீண்டும் ஈராக் சென்று கவர்னர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுகூறினார்கள்.
ஆனால் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களோ! சிரித்துக் கொண்டே, என் மீது திருப்தி கொள்ளாத, இன்னும் என்னுடைய தொழுகையில் சந்தேகம் கொண்டு நான் சரியாகத் தொழுகையை நடத்தவில்லை என்று என்னைப் பற்றிப் புகார் செய்த மக்களிடமா என்னை மீண்டும் திருப்பி அனுப்புகின்றீர்கள். என்னுடைய வாழ்வை இனி நான் மதீனாவில் கழிக்க விரும்புகின்றேன், எனக்குப் பதிலாக வேறுயாரையாவது நியமித்து விடுங்கள் என்று ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கோருகின்றார்கள். எனவே, இதுவரை ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களுக்கு உதவியாக இருந்த உதவி கவர்னரையே, ஈராக்கின் கவர்னராக நியமித்து விடுகின்றார்கள்.
உமர் (ரழி) அவர்களை மரணம் நெருங்கிக் கொண்டிருந்த வேலையில், உமர் (ரழி) அவர்களை அடுத்து ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்றதொரு பிரச்னை உருவாகியது. நபி (ஸல்) அவர்களின் பேரன்பைப் பெற்ற தோழர்களைக் கொண்ட, ஆறுநபர் கொண்ட கமிட்டியை நியமித்து, அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து புதிய கலீபாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களும் ஒருவராவார்.
மீண்டும் ஈராக் கவர்னராக!
உதுமான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், ஈராக் பகுதியின் கவர்னராக மீண்டும் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களைச் சென்று பதவியேற்றுக் கொள்ளுமாறு பணித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் உத்தரவுப்படி, மீண்டும் ஈராக் சென்று அங்கு மூன்று வருடம் ஆட்சிப் பொறுப்பில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் கடமையாற்றினார்கள். சிலவருடங்கள் கழித்து, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களுக்கும் நிதியமைச்சராகப் பதவி வகித்த அப்துல்லா பின் மஸ்ஊத் (ரழி) அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக மீண்டும் தனது பதவியை ராஜினாமாச் செய்து விட்டு, மதீனாவிற்கே திரும்பி வந்தார்கள்.
கி.பி. 650 ஆம் ஆண்டில், டாங்கின் பேரரசர் கய்சோங் ஆட்சியின் போது, சீனாவிற்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியதற்காக சீன முஸ்லிம்களால் ஸஅத்(ரழி) பாரம்பரியமாக மதிக்கப் படுகிறார்கள். பங்களாதேஷின் லால்மோனீர்ஹாட் மாவட்டத்தில் ஒரு மசூதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது 648 ஆம் ஆண்டில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது,
இருதி நாட்கள்
சீனாவில் பிரச்சார பணி முடித்து பின்னர் மதீனாவிற்கு திரும்பி வந்தார்கள். மதீனாவிற்கு அருகில் சில மைல்கள் தூரத்தில் உள்ள அகீக் என்ற இடத்தில் தனக்கென ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு, தனிமையான வாழ்வை வாழ ஆரம்பித்தார்கள். நபித்தோழர்கள் பலரது உயிர்களையும் குடித்த ஜமல்யுத்தம், ஸிப்பீன் யுத்தம் போன்வற்றிலும் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டார்கள்.
கி.பி.674 இல் அந்த அகீக் என்ற இடத்தில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தபொழுது, அவருடைய இறுதி நிலையில், அவரது மகனிடம் ஸ அத் (ரழி) அவர்கள் மகனே! அந்த அலமாரியைச் சற்று திறப்பாயாக! என்று கூறி, அதில் நான் மடித்துவைத்திருக்கும் பழைய துணி ஒன்றை எடுத்து வருவாயாக என்று கூறினார்கள். நான் அந்தப் பழைய துணியை எடுத்து வந்து கொடுத்தேன். அதனைப் பார்த்து, இதை நான் பத்ர் யுத்தத்தின் பொழுது அணிந்திருந்தேன், அதனால் அதனை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். இன்னும் இந்ததுணியைக் கொண்டே எனக்கு நீ கபனிடுவாயாக! இந்தத் துணி பழைய துணியாக இருக்கின்றதே என்று நீ கவலைப்பட வேண்டாம். அது பழையதாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதனைக் கொண்டே எனக்கு நீ கபனிட்டு அடக்கம்செய்! என்றும் கூறினார்கள். அவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவர்களது உயிர் விண்ணை நோக்கிச் சென்று விட்டது. மதீனாவின் கவர்னர் ஜனாஸா தொழுகை நடத்த பின்பு அவரது ஜனாஸா ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி இத்ரீஸ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.