நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வாழ்க்கை வரலாறு (மதீனா வாழ்க்கை)
குறைஷிகளின் கொலைத் திட்டம்
ஒரு நாள் காலையில் மக்காவின் நகர மன்றமாகிய தாருன் நத்வாவில் குறைஷிகளின் 10 கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஒன்று கூடினர். முஸ்லிம்கள் மக்காவை விட்டுக் காலி செய்து போவதால் முஹம்மது (ஸல்) அவர்களும் விரைவில் சென்று விடக் கூடும் என ஆலோசனை செய்தனர். முடிவில் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்து விடுவதே மேல் எனக் கருதி, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு வாலிபர் உருவிய வாளுடன் வீட்டை முற்றுகையிட்டனர். நபித்துவம் கிடைத்த 13 ஆம் ஆண்டு ஸபர் மாதம் இறுதி வெள்ளிக்கிழமை இரவு இம்முற்றுகை நடைபெற்றது. இரவில் கொலை செய்வது கேவலம் என்பதால் விடியும் வரை காத்திருந்தனர்.
இறைவனின் கட்டளை வந்தது, அமானிதம் ஒப்படைப்பு
குறைஷிகளின் கொலைத் திட்டத்தை வானவர் ஜிப்ரயீல் (அலை) வந்து அறிவித்து, அன்றிரவே அண்ணலார் யத்ரிப் புறப்பட வேண்டும் எனக் கூறி சென்றார். அப்பொழுதே அண்ணலார், அலீ அவர்களை அழைத்து விபரத்தைக் கூறி, அமானிதங்களை மறுநாள் உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுமாறு பணித்து அவரைத் தமது படுக்கையில் படுத்து தம பச்சைப் போர்வை கொண்டு போர்த்திக் கொள்ளுமாறு சொல்லி வைத்தார்கள்.
நள்ளிரவு இரண்டாம் சாமம் கடந்த பின் பெருமானார் ஓசை படாது கதவைத் திறந்தார்கள். சிறிது மண்ணை எடுத்து இறைவனின் திருநாமத்தை உச்சரித்து யாஸீன் என்னும் அத்தியாயத்தின் முதல் ஒன்பது வசனங்களை ஓதி வெளியில் நின்றவர்கள் மீது வீசி எறிந்து விட்டுக் கிளம்பினார்கள். குறைஷி வாலிபர்களால் பெருமானாரைக் கண்டு கொள்ள முடியாமற் போயிற்று.
பெருமானாரை தேடிய குறைஷிகள்
காலை புலர்ந்த போது பெருமானார் வீட்டுக் கதவு இலேசாகத் திறந்திருப்பதைக் கண்டு, சந்தேகமுற்று, குறைஷி வாலிபர்கள் வீட்டினுள் பாய்ந்தனர். படுக்கையில் பச்சைப் போர்வை போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரைப் பெருமானார் என்று எண்ணி ஆவலோடு சட்டென போர்வையை நீக்கினர். அலீ (ரழி) அவர்கள் இருந்தார்கள். வந்த வாலிபர்கள் குழப்பமடைந்தவர்களாக முஹம்மது எங்கே? என்று வினவினர். பிறகு பெருமானாரைத் தேடும் படலம் ஆரம்பமாயிற்று. மக்காவில் எங்கு தேடினும் கிடைக்காத காரணத்தினால் முஹம்மது (ஸல்) அவர்களைப் பிடித்துக் கொண்டு வருபவருக்கு 100 பெண் ஒட்டகைகளைச் சன்மானமாகத் தருவதாக குறைஷித் தலைவர்கள் அறிவித்தனர். அதனால் குறைஷிகள் பெருமானாரை மக்காவிற்கு வெளியிலும் வாகனங்கள் மீது ஏறிச் சென்று தேட ஆரம்பித்தனர்.
நாம் இருவர் அல்ல, நாம் மூவர்
இல்லம் துறந்த பெருமானார் நேராக அபூபக்ர் (ரழி) வீடு நோக்கிச் சென்று அவர்களையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக மக்காவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள ‘தெளர்’ என்னும் குன்றின் பொதும்பு ஒன்றில் போய்த் தங்கினார்கள். பெருமானாரைத் தேடிச் சென்ற ஒரு குழுவினர் தெளர் குகையை அடைந்து அண்ணலாரும் அபூபக்ரும் தங்கியிருந்த பொதும்பினுள் நுழைந்து பார்க்கலாமா? வேண்டாமா? என விவாதித்துக் கொண்டனர். அவர்களின் காலோசைகளையும் பேச்சையும் கேட்டு அபூபக்ர் பெருமானாரிடம், “நாம் இருவர் தாமே இருக்கின்றோம்.” என்று கலக்கத்துடன் கூறினார். இச் சொற்களைக் கேட்ட அண்ணலார், “கவலைப்படாதீர் அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான். நாம் மூவர் இருக்கிறோம்” என மறுமொழி பகர்ந்தனர்.
இறைவனருளால் சிலந்தி வலையும், இரு புறாக்களும்
இறைவனருளால் அப்பொதும்பின் வாயிலை அடைக்கும் வண்ணம் சிலந்திப் பூச்சி வலையைப் பின்னியிருந்தது. அதை கவனித்த அந் நேரத்தில் இருபுறாக்கள் அப்பொதும்பினின்று வெளிக்கிளம்பிப் பறந்து செல்வதையும் குறைஷிகள் கண்டனர். உடனே அக்குழுவினரில் இருந்த ஒருவன் இவற்றைச் சுட்டிக்காட்டி குகையினுள் மனித நடமாட்டமில்லையென தீர்க்கமாகக் கூறினான். அவனது பொருத்தமான வாதத்தை ஏற்று, வந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து அகன்றனர். அண்ணலாரும் அபூபக்ரும் ஆறுதல் பெருமூச்சு விட்டவர்களாய் ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
யத்ரிபு நோக்கித் தனது ஹிஜ்ரத் பயணம்
இருவரும் அப்பொதும்பினுள் மூன்று இரவு, மூன்று பகல் தங்கினர். அவர்களுக்கு அபூபக்ர் (ரழி) உடைய புதல்வரும், மகளாரும் இரவில் உணவு கொண்டு வந்து கொடுத்தனர். அபூபக்ர் (ரழி) அவர்களின் பணியாள், அம்ரு பின் பஹீரா காலை நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிப் போவது போல தெளர் மலைக்குச் சென்று இருவருக்கும் தேவையான பாலைக் கறந்து கொடுத்து விட்டுத் திரும்புவார்.
மக்காவில் கொந்தளிப்பு அடங்கியதும், கி.பி 622 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, ரபீஉல் அவ்வல் முதலாம் நாள் திங்கள் இரவு நபிகள் நாயகம் (ஸல்) தெளர் குகையை விட்டு யத்ரிபு நோக்கித் தனது ஹிஜ்ரத் பயணத்தைத் தொடங்கி வழக்கமான பாதைக்கு மாற்றமான பாதையில் சென்றனர். ஹிஜ்ரத் பயணத்திற்கு அபூபக்ர் இரண்டு ஒட்டகக்களை வாங்கி வளர்த்து வந்தார்கள். அப்துல்லாஹ் பின் அரீகத் அந்த ஒட்டகங்களை தெளர் மலைச் சாரலில் மேய்த்துக் கொண்டிருந்தார். நள்ளிரவில் கஸ்வா என்ற ஒட்டகையின் மீது அண்ணலாரும், அபூபக்ரும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். மற்றொரு ஒட்டகையின் மீது வழிகாட்டியும் ஆமீர் பனி பஹீராவும் ஏறிக் கொண்டனர்.
முதல் பள்ளிவாசல்
மக்காவிலிருந்து புறப்பட்ட எட்டாம் நாள் நண்பகலில் யத்ரிபிற்கு மூன்று மைல் தொலைவில் உள்ள குபா என்னும் சிற்றூரை அடைந்தனர். குபாவிலுள்ள மக்களை ஒன்று திரட்டி அங்கொரு பள்ளிவாசலை நிர்மாணிக்க பணியைத் துவக்கித் தாங்களே அதற்காகக் கல் மண் சுமந்தார்கள். இதுவே முஸ்லிம்களின் தொழுகைக்காகக் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசலாகும். இதற்கிடையில் அலீ (ரழி) அவர்கள் பெருமானார் தம்மிடம் ஒப்படைத்த அமானிதங்களை எல்லாம் உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு மூன்று தினங்கள் கால்நடையாகவே குபாவை வந்தடைந்தார்கள்.
யத்ரிப் மதீனாவானது, ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டது
யத்ரிப் நகரினுள் பெருமானார் (ஸல்) நுழைந்த போது அந்நகரத்தின் ஒவ்வொரு குடும்பத் தலைவருடன் ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவரும் மாநபி அவர்களைத் தங்களுடன் வசிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். நபிகள் நாயகம் எவருக்கும் ஏமாற்றமளிக்க விரும்பாமல் அவர்களை நோக்கி, அன்பர்களே! நான் வீற்றிருக்கும் இவ்வொட்டகம் எங்கு போய்ப் படுக்குமோ, அதையே நான் தங்குமிடமாகக் கொள்வேன்! எனக் கூறி ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றை அவிழ்த்து விட்டார்கள்.
ஒட்டகம் அபூ அய்யூப் (ரழி) என்பவரின் வீட்டுக்கு எதிரே போய் படுத்துக் கொண்டது. அபூ அய்யூப் (ரழி) ஓடி வந்து, முகமன் கூரி பெருமானாரை அழைத்துச் சென்று உபசரித்தார். அன்று கி.பி. 622 செப்டம்பர் 24-ம் நாள், நபித்துவம் 13-ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1, ரபீஉல் அவ்வல் பிறை 12, இந்நாளிலிருந்து தான், ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வந்தது. பின்னர் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் அரபு வருடப் பிறப்பான முஹர்ரம் மாதத்திலிருந்தே ஹிஜ்ரீ ஆண்டின் கணக்கை நிர்ணயம் செய்தார்கள். நபிகள் நாயகம் தங்கள் ஊரில் வந்து குடியேறியதின் நினைவாக, யத்ரிப் மக்கள் அன்று முதல் தங்கள் ஊரின் பெயரை மதீனத்துந்நபி (நபிகளாரின் பட்டணம்) எனச் சிறப்புடன் அழைத்து வந்தனர். அதுவே இன்று சுருங்கி மதீனா என்று அழைக்கப்படுகிறது.
பத்ருப் போர்
மதீனாவை தலைநகரமாகக் கொண்டு இஸ்லாம் வெகுவாகப் பரவியதைக் கண்டு குமுறிய மக்காவாசிகள் முஸ்லிம்களின் மீது தாக்குதல் தொடுத்து வந்தனர். இவற்றைத் தடுத்து முஸ்லிம்கள், பல தற்காப்புப் போர்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
முஸ்லிம்களின் மீது படையெடுப்பு நடத்துவதற்கும், அதிகத் தொலைவிலுள்ள மதீனாவைத் தாக்குவதற்கும் அதிகமான பொருள் தேவை என்பதை உணர்ந்து அதை திரட்டுவதற்கு மக்காவில் குறைஷிகள் ஆலோசித்துத் திறமை வாய்ந்த வியாபாரியான அபூஸுஃப்யான் என்பாரை சிரியா சென்று வியாபாரம் செய்து பொருள் திரட்டி வருமாறு அனுப்பி வைத்தனர். அவ்விதமே அவர் சென்று, வியாபாரம் செய்து பொருள்களுடன் திரும்பும் செய்தி பெருமானாருக்கு எட்டியவுடன் இவர்கள் கொண்டு வரும் பொருள்கள் மக்கா போய்ச் சேர்ந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து விளையும் என நினைத்து, பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமலான் மாதம், 86 முஹாஜிரீன்கள், 227 அன்சாரிகள், 70 ஒட்டகங்கள், 5 குதிரைகள், 6 கவசங்கள் கொண்ட படையுடன் சிரியாவிலிருந்து வரும் வியாபாரக் கூட்டத்தை வழி மறிக்கப் பத்ரை நோக்கிப் புறப்படத் தயாரானார்கள்.
முஸ்லிம்கள் தன்னை வழிமறிக்கத் திட்டமிட்டுள்ளதை அறிந்த அபூஸுப்யான் மக்காவிற்கு ஆளனுப்பித் தனக்கு உதவ ஒரு படை வேண்டுமெனச் சொல்லியனுப்பினார். உடனே அபூஜஹ்ல் 1000 வீரர்கள், 700 ஒட்டகங்கள், 100 குதிரைகள், 600 கவசங்கள், ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் முதலியவற்றுடன் மதீனா நோக்கிப் புறப்பட்டார். ஆனால் அபூஸுப்யான் வேறு வழியில் மக்கா சென்று விட்டார்.
அபூஜஹ்ல் படை வருவதையறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா வாசி (அன்சாரி) களை நோக்கி அகபா உடன்படிக்கையில் மதீனாவைத் தாக்க வந்தால் உதவுவதாக வாக்களித்தீர்கள். தற்போது மதீனாவிற்கு வெளியே போரிடுவதைப் பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டார்கள். உடனே அன்சாரிகள், நாயகமே! தாங்கள் இடும் கட்டளைப்படி நாங்கள் நடக்கச் சித்தமாயிருக்கிறோம். கடலில் வீழ்ந்து உயிரை விடுவதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம் என்று உறுதி கூறினார்கள். இதனைக் கேட்ட அனைவரும் உற்சாகத்துடன் அபூஜஹ்லின் படையை எதிர்க்கத் தீர்மானித்துப் பத்ரு பள்ளத்தாக்கின் மேடான பகுதியில் சென்று தங்கினர். அதன் மறுபுறம் குறைஷிப்படை வந்து பாளையமிறங்கியது.
இச்சமயம் பெருமானார் கவலை கொண்டு கூடாரத்தினுள் நுழைந்து இறைவனைத் தொழுது ஸஜ்தாவில் இருந்து எல்லாம் வல்ல இறைவனே! நீ வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுபவன்! மனம் நொந்து வாடும் உன் அன்பர்களுக்கு உதவி புரிவாயாக! இன்று இச்சிறிய முஸ்லிம் படை எதிரிகளால் அழிவுறுமாயின், இத்தரணியில் உன்னைத் தூய உள்ளதோடு வணங்குவதற்கு எவரும் இல்லாமல் போய் விடும்! எனக் கண்ணீர் வடித்துப் பிரார்த்தித்தார்கள். இந்நிலையில் இருக்கும் போது அவர்களைச் சிறு தூக்கம் ஆட் கொண்டது. அதில் இறைவனின் மறுமொழி கிடைத்தவுடன் புன்முறுவல் பூத்தவர்களாய் எழுந்து வெளியே வந்த மாநபி இறைவனின் அருளால் குறைஷிகள் ஓடயிருக்கிறார்கள் என மொழிந்தார்கள்.
ரமலான் 17-ஆம் நாள் வெள்ளிக்கிழமை பத்ருப்போர் ஆரம்பித்தது. அக்காலத்திய அரபிகளின் போர் முறைக்கேற்ப முதலில் தனி வீரர் போரிட்டனர். பத்ருப் போர் மூன்று நாட்கள் நடைபெற்றது. உற்றார் உறவினர்களே ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்போரில் அபூஜஹ்ல் போன்ற குறைஷித் தலைவர்கள் மாண்டனர். அல்லாஹ் மலக்குகளை வானிலிருந்து இறக்கி முஸ்லிம்களுக்கு உதவி செய்தான். குறைஷிகள் தங்கள் ஆயுதங்கள், பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு விட்டு ஓடிவிட்டனர்.
இப்போரில் 6 முஹாஜிரீன்களும், 8 அன்சாரிகளும் உயிர் துறந்தனர். குறைஷிகள் 70 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் சிறைப்பட்டனர். முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றி கிட்டியது. பெருமானார் (ஸல்) மதீனா திரும்பியவுடன் போர்க்கைதிகளை என்ன செய்வதென்று ஆலோசனை செய்தார்கள். கைதிகளை மீட்புப் பணம் பெற்றுக் கொண்டு விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. மீட்புத் தொகை செலுத்த இயலாத கைதி ஒவ்வொருவரும் பத்து முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக் கொடுத்த பின் விடுதலை செய்யப்பட்டனர்.
உஹுத் போர்
தற்பெருமையும் தன்மானமும் கொண்ட குறைஷிகள் பத்ரு போர்களத்தில் தோற்றதால் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு கி.பி. 625 இல் மூவாயிரம் வீரர்களுடன், வீரர்களை ஊக்குவிக்க 13 பெண்களும் மதீனாவுக்கு வடக்கே மூன்று மைல் தொலைவிலுள்ள உஹுத் மலைச் சாரலில் வந்து பாளையம் இறக்கினர்.
குறைஷிகள் மதீனாவைத் தாக்க வந்திருப்பதை அறிந்து, பலர் மதீனாவுக்கு வெளியே போரிட விரும்பியதால் பெருமானார் போர்க்கோலங் கொண்டு 1000 வீரர்களுடன் உஹுத் நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் அப்துல்லாஹ் இப்னு உபை என்னும் நயவஞ்சகனான மதீனாத் தலைவன் தான் கூட்டி வந்த 300 பேரையும் பிரித்துத் திரும்பி அழைத்துச் சென்று விட்டான். எஞ்சிய 700 வீரர்கள் அடங்கிய படை உஹுத் பள்ளத்தாக்கை அடைந்தது. மறுநாள் காலை தொழுகைக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூவாயிரம் வீரர்களை எதிர்த்துப் போர்புரிய வந்துள்ள 700 முஸ்லிம் வீரர்களை அணி வகுத்தார்கள். முஸ்லிம்கள் தங்கியிருந்த பகுதியில் ஒரு சிறு கணவாய் இருந்தது. அக்கணவாய் வழியாக எதிரிகள் வராமல் தடுப்பதற்காக 50 வில் வீரர்களை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) இடம் ஒப்படைத்து வெற்றி தோல்வி ஆக எந்த நிலையிலும் அவ்விடத்தை விட்டு இம்மியளவேனும் நகரக்கூடாது எனக் கண்டிப்பாக உத்திரவிட்டார்கள்.
முதலாவதாகத் தனித்து நின்று போர் செய்வது ஆரம்பமாயிற்று. பிறகு பொதுப் போர் ஆரம்பமானவுடன் சண்டை மிக உக்கிரமாக நடந்தது. பெருமானார் குதிரையின் மீதமர்ந்து அங்குமிங்கும் பாய்ந்து சென்று வீரர்களுக்கு உற்சாக மூட்டினார்கள். குறைஷிகள் பலர் மடிந்தனர். எதிரிகள் சீர்குலைந்து ஓடலாயினர்.
குறைஷிகள் சிதறி ஓட ஆரம்பித்தவுடன் முஸ்லிம் வீரர்கள் எதிரிகள் விட்டுச் சென்ற பொருள்களை எடுப்பதில் முனைந்தனர். இதைக் கண்ட கணவாயைக் காத்து நின்ற ஐம்பது முஸ்லிம் வில் வீரர்கள், குறைஷிகள் தோல்வியடைந்ததால் இனி கணவாயைக் காக்க அவசியமில்லையெனக் கருதி பெருமானாரின் ஆணைக்குப் புறம்பாக அவர்களும் கலைந்து பொருள்களை எடுப்பதில் ஈடுபட்டனர். போர்த் தந்திரம் மிகுந்த காலித் பின் வலீதின் கூரிய கண்கள் இதைக் கவனித்து விட்டன. அவ்வளவு தான். நூறு குதிரை வீரர்களுடன் கணவாய்ப் பக்கமாக பின்னாலிருந்து முஸ்லிம்களைத் தாக்கினார். இதைக் கண்ட குறைஷி வீரர்களும் ஊக்கமடைந்து முன் பக்கமாகவும் உக்கிரமாகத் தாக்க ஆரம்பித்தனர். இரு முனைத் தாக்குதலில் கலவரமடைந்த சமயம் முஸ்லிம் கொடியைத் தாங்கி நின்ற முஸ்அப் வெட்டுண்டு வீழ்ந்தார். இவர் அண்ணலாரின் முகச் சாயலுள்ளவராகையால் பெருமானாரைக் கொன்று விட்டதாக எதிரி கூச்சலிட்டான். முஸ்லிம்கள் இதைக் கேட்டு அதைரியமுற்று சிதறி ஓட ஆரம்பித்தனர். இந்த சந்தடியில் ஹம்ஸா இப்னு அப்துல்முத்தலிப்(ரழி) மீது வஹ்ஷி என்பவன் ஈட்டியை வீசினான். ஈட்டி அவர்களின் உடலைத் துளைத்து, வீர மரணம் எய்தினார்கள்.
முஸ்லிம்கள் சிதறி ஓடுவதைக் கண்ணுற்ற அண்ணலார் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று முஸ்லிம்களே, சிதறி ஓடாதீர். இறைவனின் தூதர் முஹம்மது இதோ இருக்கிறேன். இங்கே ஓடி வாருங்கள். வீரத்துடன் நின்று போர் புரியுங்கள். வெற்றி அல்லாஹ்வினுடையதாக இருக்கும் எனக் கூவி அழைத்தார்கள். முஸ்லிம்கள் அனைவரும் ஓடி வந்து திரும்ப குறைஷிகளைத் தாக்கினார்கள். பெருமானார் மீது நடந்த தாக்குதலில் அவர்களின் இரு பற்கள் உடைந்து விழுந்தன.
உடனிருந்த அலீ (ரழி)யும், தல்ஹா (ரழி)யும் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கணவாய்க்கு அருகிலுள்ள பத்திரமான ஓர் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றனர். பெருமானார் உயிருடன் இருப்பதைக் கண்ட முஸ்லிம்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர். சிறிது ஓய்வு கொண்ட பின் பெருமானார் எழுந்து போர்க்களத்தைப் பார்வையிட்டார்கள். பத்ருப் போருக்குப் பழி வாங்கி விட்டோம் எனக் கூறி அபூஸுஃப்யான் தனது தெய்வங்களைப் புகழ்ந்து தமது படையினரை அழைத்துக் கொண்டு மக்கா திரும்பினார்.
அகழ்ப்போர்
குபாவிலிருந்து மூன்று மைல் தூரத்தில் வசித்த பனூநுளைர் என்னும்யூதக் கூட்டத்தினர் பெருமானாருக்கு தீங்கு விளைவிக்க முற்பட்டனர். ஆதலின் பெருமானாருக்கு தீங்கு விளைவிக்க முற்பட்டனர். ஆதலின் பெருமானார் ஒரு படையுடன் சென்று அவ்வூரை முற்றுகையிட்டு அவர்களை வெளியேற்றினார்கள். நாடு கடத்தப் பட்ட பனூநுளைர் யூதர்களும் மக்கா குறைஷிகளும் ஒன்று சேர்ந்து 10,000 வீரர்களுடன் மதீனாவைத் தாக்க புறப்பட்டனர். இச்செய்தியறிந்து பெருமானார் தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தனர். மதீனாவின் மூன்று பக்கங்களிலும் கட்டிட சுவர்களும், சிறு குன்றுகளும் கோட்டை கொத்தளங்களும் இருந்தன. வட மேற்குப் பகுதி பாதுகாப்பின்றி இருந்தது. எதிரிகள் மதீனாவிற்குள் பிரவேசிக்கா வண்ணம் அப்பகுதியில் அகழி தோண்டி மதீனாவைப் பாதுகாக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. நபிகள் நாயகம் அவர்களின் தோழர்கள் 3,000 பேர் அகழி தோண்டும் பணியில் ஈடுபட்டு 20 முழ அகலமும், 10 முழ ஆழமும் கொண்ட மூன்றரை மைல் அகழை வெட்டி முடித்தனர். பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பான கோட்டைகளில் கொண்டு போய் வைக்கப்பட்டனர். ஊர்க்காவல் படை ஒன்றும் அமைக்கப்பட்டது. ஹிஜ்ரீ 5ஆம் ஆண்டு மத்தியில் முஸ்லிம்கள் எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க ஆயத்தமாயினர்.
எதிரிகள் உஹுதைக் கடந்து வந்து கொண்டிருப்பதை அறிந்த பெருமானார் 3,000 வீரர்கள் வில், அம்பு, வாள், கேடயக்களுடன், அகழி நெடுகிலும் நிறுத்தினார்கள். அகழை நெருங்கிய குறைஷிகள் படை திக்பிரமை அடைந்து நின்று விட்டது. இரு சாராரும் அம்பு மழை பொழியத் தொடங்கினர். இரண்டு வாரங்கள் முற்றுகையிட்டும் பலன் ஏதுமில்லாததால் குறைஷித் தலைவர்கள் ஊக்கம் குன்றி நம்பிக்கை இழந்தனர்.
பகைவர்கள் முற்றுகையில் வெளிப் போக்குவரத் தில்லாமல் முஸ்லிம்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். உணவு இல்லாமல் பசி பட்டினியால் வாடினர். பசிக் கொடுமையிலிருந்து சிறிது ஆறுதல் பெற ஸஹாபாக்கள் தங்கள் வயிறுகளில் கற்களை வைத்துக் கட்டினர். முற்றுகை நீடித்த காரணத்தினால் குறைஷிகளிடமிருந்த உணவுப் பொருள்களும், கால் நடைகளின் தீனிகளும் கூட தீர்ந்து போயின. கடுங்குளிரும், கொடுங்காற்றும் வீசவே கால்நடைகள் செத்து மடியலாயின. எனவே அபூஸுஃப்யான் தனது எஞ்சிய படைகளுடன் புறமுதுகிட்டு மக்கா திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
ஹுதைபிய்யா உடன்படிக்கை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டுப் புறப்பட்டு ஆறாண்டுகளாயின. இதற்குள் மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில் வசித்த மக்களில் பலர் முஸ்லிமாயினர். முஸ்லிம்களின் பொருளாதாரமும் சற்று அபிவிருத்தி அடைந்தது. எனவே பெருமானார் மக்கா செல்ல நாட்டம் கொண்டு தம் எண்ணத்தைத் தோழர்களிடம் வெளியிட்டார்கள். மக்காவிலுள்ள இறை ஆலயத்தை தரிசிக்க ஆவல் கொண்டனர். அரபு மக்களிடம் துல்கஃதா மாதமும் அதை ஒட்டிய இரண்டு மாதங்களும், ரஜப் மாதமும் கூட போர் செய்யக் கூடாத புனித மாதங்களாகும். எனவே, போர்க் கருவிகளின்றி 1400 தோழர்களுடன் பெருமானார் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள்.
துல்ஹுலைபா என்ற இடத்தை அடைந்ததும் அனைவரும் இஹ்ராம் கட்டிக் கொண்டனர். மாநபியவர்கள் மக்காவை நாடி வருகிறார்கள் என்ற செய்தியறிந்ததும் குறைஷிகள் அஞ்சினர். தங்களைத் தாக்க வருகிறார்களோ எனச் சந்தேகித்தனர். எனவே பெருமானாரையும் அவர்களின் தோழர்களையும் மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தும் பொருட்டு காலித் இக்ரிமா தலைமையில் 200 குதிரை வீரர்களை அனுப்பினர். எதிரிகளின் குதிரைப்படை வருவதையறிந்து, பெருமானார் மோதலைத் தவிர்க்க மாற்றுப் பாதையில் சென்று மக்காவிலிருந்து ஜித்தா செல்லும் வழியில் ஹுதைபிய்யா என்னுமிடத்தில் தங்கினர். மேலும் குறைஷித் தலைவர்களிடம் கஅபாவை தரிசிக்க வந்திருப்பதாகவும், போரிடும் எண்ணம் இல்லை என்றும் பெருமானார் சொல்லி யனுப்பினார்கள். குறைஷித் தலைவர்கள் அதற்கு இணங்கவில்லை. குறைஷித் தலைவர்களில் பேச்சுத் திறன் மிக்கவரான சுஹைல் என்பவரை பேச்சு வார்த்தை நடத்தி முடிவு கண்டு வர அனுப்பி வைத்தனர்.
பெருமானாரும், சுஹைலும் நீண்ட நேரம் பேசி ஒருவித உடன்பாட்டிற்கு வந்தனர். பெருமானார் ஹல்ரத் அலீ (ரழி) அவர்களை அழைத்து உடன்படிக்கை எழுதச் சொன்னார்கள். மகத்துவமிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கை வருமாறு:
உடன்படிக்கை முடிந்ததும் பெருமானாரும் அவருடன் வந்தவர்களும் ஹுதைபிய்யாவில் மூன்று நாட்கள் தங்கி, தலைமுடி களைந்து ஒட்டகங்களை அறுத்து குர்பானி கொடுத்தும் உம்ராவுக்குரிய செய்கைகளைச் செய்தும் மதீனா திரும்பினர்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை எழுத்து மூலம் முஸ்லிம்களுக்குப் பாதகமாகவும், குறைஷிகளுக்குச் சாதகமாகவும் தோன்றினாலும் முஸ்லிம்களுக்கு இவ்வுடன்படிக்கையால் பெரும் பயன் கிட்டியது. இவ்வுடன்படிக்கைக்கு பின் குறைஷிகள் அதிகமாக மதீனா வரத் தொடங்கினர். பலர் இஸ்லாத்தில் இணைந்தனர். இவ்வுடன்படிக்கையால் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொண்டனர்.
மக்கா வெற்றி
குறைஷிகள் உடன்படிக்கையை முறித்ததால் ஹிஜ்ரீ 8-ஆம் ஆண்டு ரமலான் பிறை 10 புதன் கிழமை கி.பி.630 ஜனவரி 2-ஆம் நாள், நோன்பு நோற்றவர்களாய் நபிகள் பெருமானார் பத்தாயிரம் வீரர்களுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். பிரயாணம் செய்து மக்காவிற்கு அருகில் ஒரு மேட்டுப் பாங்கான இடத்தில் பாளையமிறங்கினார்கள். அன்றிரவு அம்மேட்டுப் பகுதியில் ஆளுக்கு ஒரு அடுப்பு வீதம் 10,000 அடுப்புகள் அண்ணலாரின் கட்டளைப்படி மூட்டப்பட்டன. இதனால் அப்பகுதியே பிரகாசத்தால் ஒளிமயமாகக் காட்சியளித்தது. இதைக் கண்ட குறைஷிகள் ஆச்சரியமுற்று விபரமறிய அபூஸுஃப்யானையும் மற்றும் இருவரையும் அனுப்பினர். ஹலரத் அப்பாஸ் (ரழி) இதை அறிந்து குறைஷிகளுடன் சமரசம் காண மக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் அபூஸுஃப்யானைக் கண்டு, “நீங்கள் எதிர்ப்பதாயின் மக்கா அழியும். எனவே, பெருமானாருடன் இணங்கிப் போவது தான் நல்லது.” என ஹலரத் அப்பாஸ் (ரழி) கூறினர். இதைக் கேட்ட அபூஸுஃப்யான் மனம் தளர்ந்து மற்ற இருவரையும் மக்காவிற்கு அனுப்பிவிட்டு தாம் மட்டும் பெருமானாரைக் காண ஹலரத் அப்பாஸ் (ரழி) அவர்களுடன் புறப்பட்டார். காலையில் பெருமானாரைக் கண்டு, கலிமாச் சொல்லி முஸ்லிமானார்.
பிறகு மக்கா திரும்பி, குறைஷிப் பிரமுகர்களிடம் முஸ்லிம்களின் படைபலத்தைப் பற்றியும், மக்காவாசிகளுக்கு அபயம் எவ்வாறு கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கினார். மறுநாள் நபிகள் நாயகம் நீராடி உடைமாற்றி கஸ்வா ஒட்டகை மீது அமர்ந்து படை சூழ மக்கா நோக்கிப் புறப்பட்டனர். முஸ்லிம்களின் படை மக்காவின் நாற்புறங்களிலும் வருகிறது என்பதை அறிந்த குறைஷிகள் கிலிபிடித்துச் சிதறி ஓடினர். கஅபாவிற்குள் தஞ்சம் புகுந்தவர்களும், தக்களின் வீடுகளுக்குள் தாழிட்டுக் கொண்டவர்களும், ஆயுதங்களைக் கையில் ஏந்தாதவர்களும், அபயம் பெறுவர். முஸ்லிம்கள் தீங்கிழைக்க மாட்டார்கள் எனப் பெருமானார் (ஸல்) பிரகடனம் செய்தார்கள். ஹலரத் அலீ (ரழி) குதிரை மீதமர்ந்து இஸ்லாமியக் கொடியைத் தாங்கி முன்னே செல்ல, ஹலரத் அபூபக்ர் (ரழி) வலப்புறத்திலும், ஹலரத் உமர் (ரழி) இடப்புறத்திலும் ஹலரத் உஸாமா (ரழி) பின்னேயும் வர, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடுநாயகமாக சிரம்பணிந்து இறைவனுக்கு நன்றி செலுத்தியவாறு ரமலான் பிறை 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மக்காவினுள் பிரவேசித்தார்கள்.
முஸ்லிம் படைகள் அணிவகுத்து வரும் போது தெருக்களில் நடமாட்டமே இல்லை. வாளெடுத்துப் போராடாமல், இரத்தம் சிந்தாமல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. பத்தாயிரம் வீரர்கள் புடை சூழ பெருமானார் கஅபாவிற்கு வந்து அதை ஏழு முறை இடம் சுற்றினார்கள். பிறகு க அபாவிற்குள் நுழைந்து தொழுது விட்டு, அந்நாள் வரை கஅபாவை மாசுபடுத்திய 360 விக்கிரகங்களையும் தங்களின் கைத்தடியால் கீழே தள்ளி நொறுக்கினார்கள். கஅபாவைச் சுத்தப்படுத்திய பின்னர் பெருமானார் ஹலரத் பிலால் (ரழி) அவர்களைக் கஅபாவின் மீது ஏறி நின்று பாங்கு சொல்லப் பணித்தார்கள். முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையில் கலந்து கொண்டனர்.
யூசுப் நபி தன் சகோதரர்களை மன்னித்தது போல் பெருமானாரும் மக்கா குறைஷிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பளித்தார்கள். பெருமானாரின் தயாள குணமும் மன்னிக்கும் மாண்பும் மக்கா குறைஷிகள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவ வழி கோலியது. பல ஆண்டுகளாகத் தங்கள் வீடுகளில் வைத்து வணங்கி வந்த விக்கிரகங்களை வீதிகளில் தூக்கி எறிந்து உடைத்தார்கள்.
இறுதி ஹஜ்
ஹிஜ்ரீ 10 ஆம் ஆண்டு இறுதியில் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்த இறைவனின் இறுதிக் கடமையை நிறைவேற்ற முற்பட்டார்கள். மக்கா சென்று கஅபாவைத் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றி தங்கள் தூதுக்கு இறுதி வடிவம் கொடுக்கத் தீர்மானித்தார்கள். அண்ணலார் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்த முஸ்லிம்கள் பிரயாண ஆயத்தங்களுடன் மதீனா நோக்கிச் சாரி சாரியாக வந்தனர். பல ஆயிரம் தோழர்கள் புடை சூழ தக்பீர் முழக்கத்துடன் அண்ணலார் மக்காவை நோக்கிப் புனித யாத்திரை புறப்பட்டார்கள். மதீனாவிற்கு ஆறு மைல் தொலைவிலுள்ள துல்ஹுலைஃபா என்ற இடத்தில் தங்கி எல்லோரும் நீராடி இஹ்ராம் கட்டி ‘லப்பைக், அல்லாஹும்ம லப்பைக்’ எனத் தல்பியாவை மொழிந்து கொண்டு துல்ஹஜ் மாதம் பிறை 4-ல் மக்காவை அடைந்தார்கள்.
அண்ணலாரைத் தொடர்ந்த அனைவரும் கஅபாவை தவாஃப் செய்து, ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டு, இறைவனைத் தொழுது பின்னர் ஸஃபா, மர்வா குன்றுகளுக்கிடையில் தொங்கோட்டம் ஓடி ஜம் ஜம் நீரைப் பருகினர்.
துல்ஹஜ் மாதம் பிறை 8-ல் மக்காவை விட்டுப் புறப்பட்டு 3 மைல் தூரத்திலுள்ள மினா என்னுமிடத்தில் தங்கி மறுநாள் காலை அதை விட்டுப் புறப்பட்டு 6 மைல் தொலைவிலுள்ள அரஃபாத் மணல் வெளியில் 1,24,000 தோழர்களும் கூடாரங்கள் அடித்து தங்கினர்.
பிறை ஒன்பது மாலை அனைவரும் பெருமானாரை பின் தொடர்ந்து 3-மைல் தொலைவிலுள்ள முஜ்தலிஃபா என்ற இடத்தில் வந்து தங்கினார்கள். அங்கு இரவு தங்கி மறுநாள் காலைத் தொழுகையை முடித்துக் கொண்டு மினாவை நோக்கிப் புறப்பட்டார்கள். பிறை 10 முற்பகல் மினாவில் ஜம்ரத்துல் உக்பா என்ற இடத்தில் ஏழு கற்களை எறிந்தனர். அதன் பின்னர் பெருமானார் தாங்கள் கொண்டு வந்த ஒட்டகங்களை அறுத்துக் குர்பானி கொடுத்தனர். குர்பானியை முடித்து தலைச் சவரம் செய்தார்கள். மினாவில் மூன்று நாட்கள் தங்கி தவாஃபு செய்து இடையில் கஅபா திரும்பினார்கள். மூன்று தினங்களும் மாலையில் தவறாது ஜம்ரத்துல் உக்பா, ஜம்ரத்துல் ஊலா, ஜம்ரத்துல் உஸ்தா என்ற இடங்களுக்குச் சென்று கல் எறிந்தார்கள்.
துல்ஹஜ் மாதம் 9-ம் நாள் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குப் பின் பெருமானார் கஸ்வா என்னும் தம் ஒட்டகையின் மீது அமர்ந்து அரபாத் மைதானத்தில் திரண்டிருந்த 1,24,000 தோழர்கள் முன்னிலையில் ஒரு பேருரையை ஆற்றினார்கள். இறுதியாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் அங்குக் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தை நோக்கி மக்களே! இறைவனின் தூதை நான் உங்களிடம் சரி வர அறிவித்தேனா? என வினவிய போது அனைவரும் ஒருமித்த குரலில் இறைவன் உங்களுக்கிட்ட திருப்பணியை சம்பூர்ணமாக நிறைவேற்றி விட்டீர்கள் என முழக்கம் செய்தனர். நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள் தங்கள் கலிமா விரலை வானத்தின் பக்கம் உயர்த்தி இறைவா! இதற்கு நீயே சாட்சி என மும்முறை கூறினார்கள்.
அது சமயம் இன்று உங்களுக்காக இஸ்லாத்தை நேரிய மார்க்கமாகத் தேர்ந்தெடுத்து, எனது அருட்பேறுகளை உங்கள் மீது சம்பூரணமாக்கி விட்டேன் என்ற திருவசனத்தை இறைவன் இறக்கி வைத்தான். இந்த இறுதிப் புனித யாத்திரையை முஸ்லிம்கள் ஹஜ்ஜத்துல் விதா என்றழைக்கின்றனர். அதன் பிறகு பெருமானார் மதீனா திரும்பி ஹிஜ்ரீ 11-ம் ஆண்டு தொடக்கத்தில் நோயுற்றார்கள்.
இறுதிப் பயணம்
ஹிஜ்ரீ 11-ம் ஆண்டு ரபீவுல் அவ்வல் 12-ம் நாள் திங்கட்கிழமை சூரியன் உச்சி நகர்ந்த நேரம் பெருமானார் தமது 63-ம் வயதில் இறுதிப் பயணத்தை மேற்கொண்டு இவ்வுலகை விட்டுச் சென்றார்கள். பெருமானார் உயிர் நீத்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அவ்விடம் மதீனாவில் ‘ரவ்ளா ஷரீப்’ என்றழைக்கப்படுகிறது.
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இத்ரீஸ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஸுலைமான்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி யூனுஸ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....