Home


இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்)

இஸ்ஹாக் (அலை) அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது மகனாவர். ஸாரா அம்மையார் மூலம் பிறந்தவர்கள் ஆவர்  இவர்கள்.  ஒருநாள் வானவர் பன்னிருவர் வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஸாரா மூலம் இஸ்ஹாக் என்னும் புதல்வரும் யஃகூப் என்னும் பேரரும் பிறக்கப் போகிறார் என்று நன்மாராயம் கூறியபொழுது தம்பதிகள் இருவரும் பெரிதும் வியப்புற்றனர். அதற்குக் காரணம் அப்பொழுது இருவருக்கும் அதிக வயதாக இருந்ததுதான். இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறக்கும் பொழுது அவர்களின் பெற்றோர்களுக்கு எத்தனை வயது என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. இவர்கள் ஆஷுரா நாளில் பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது.

திருமறை குர் ஆனில்

        இஸ்ஹாக் (அலை) அவர்களைப் பற்றியும் பல இடங்களிலே குர் ஆன் ஷரீப் குறிப்பிடுகிறது. என்றாலும் மற்ற நபிமார்களான இப்ராஹீம், இஸ்மாயீல், யஃகூப் ஆகியோர்களோடு சேர்த்தே பெரும்பாலும் இஸ்ஹாக் நபியவர்களின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. தனியாக வரும் வசனங்கள் சிலவற்றிலிருந்து சில சம்பவங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது...

        அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம். (11:71.)

        அதற்கு அவர் கூறினார்: “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!” (11:72.)

        (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.  (11:73.)

மக்கா வருகை

        இவர்கள் உருவத்தில் தம் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களைப் பெரும்பாலும் ஒத்திருந்தனர். இவர்களை இப்ராஹீம் (அலை)  அவர்கள் மக்காவிற்கு அழைத்து வந்தனர். இப்பொழுது தான் இவர்கள் தம் சகோதரர் இஸ்மாயீல் (அலை) அவர்களை முதன் முதலாகப் பார்த்தனர். இதன் பின் இவர்கள் தம் தந்தையுடன் ஆண்டு தோறும்  மக்கா வந்து சென்றார்கள். இவர்களின் அன்னையார் ஸாரா அம்மையார் தம் 130ஆவது வயதில் உலகு நீத்தனர்.

நபித்துவம்

        இறைவனால் நபித்துவம் அருளப்பட்டவர்களில் இஸ்ஹாக் (அலை) அவர்களும் ஒருவராவார். இஸ்ஹாக் (அலை) அவர்கள் தம் தந்தையின் ஆணைப்படி கன்ஆன் நாடு சென்று அங்கு ஒரிறை வழிபாட்டை மக்களுக்கு எடுத்துரைத்தனர். அங்குத் தம் மாமன் மகள் ரூபக்காவையும் மணமுடித்து வாழ்ந்த இவர்களுக்கு எண்பது வயதான பொழுதும் மகப்பேறு இல்லை.

குழந்தைகள் பிறந்தன

        பின்னர் இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். முதலாவது ஓர் ஆண் குழந்தையும், அதன் குதிகாலில் கொழுவிக் கொண்டு மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தது. முன்னால் பிறந்ததற்கு ‘முன்னால் பிறந்தது’ என்று பொருள்படும் ஈஸ் என்றும் அடுத்துப் பிறந்ததற்கு ‘குதிகாலில் கொழுவிக் கொண்டு வந்தனர்’ என்று பொருள்படும் யஃகூப் என்றும் பெயரிட்டனர். மூத்த மகன் மீது தந்தையும், இளைய மகன் மீது அன்னையும் அன்பு செலுத்தினர். ஈஸ் வேட்டையாடுவதையும், யஃகூப் ஆடு மேய்ப்பதையும் தொழிலாகக் கொண்டிருந்தனர்.

இறுதி காலம்

        மூத்த குமாரராகப் பிறந்த  ஈஸ் என்பவரின் பரம்பரையில் பெரும் பெரும் மன்னர்கள் தோன்றினார்கள். இரண்டாவது குமாரரான யஃகூப் (அலை) அவர்களின் சந்ததியிலிருந்தே வரிசைக் கிரமமாகப் பல நபிமார்கள் தோன்றினார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை அவர்கள், மக்களிடையே எடுத்துக் கூறி, பலரை நேர் வழிக்குக் கொணர்ந்தார்கள்.  

இஸ்ஹாக் (அலை) அவர்கள் தம் உடைமைகளைச் சமமாகப் பங்கிட்டு இருவருக்கும் வழங்கினர். பிறகு இறைவனைத் தொழுது வந்த பள்ளிவாசலை யஃகூப் (அலை) அவர்களின் பொருப்பில் ஒப்படைத்து விட்டுத் தம் 180ஆவது வயதில் இயற்கை எய்தினார். இவர்களின் உடலம் இவர்களின் பெற்றோர்களுக்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருமறை குர் ஆனில்

        (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். (19:49.)

        மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம். (19:50.)


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...