Home


லூத் அலைஹிஸ்ஸலாம்

        இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரருடைய குமாரர் லூத் அலைஹிஸ்ஸலாம். இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷாம் தேசப் பயணத்தை மேற்கொண்ட போது லூத் (அலை) அவர்கள் உடனிருந்தார்கள். இவர்களை இறைவன் ஜோர்தான் நதி தீரத்திலிருந்த ’முதஃபகாத்’ நாட்டிற்கு நபியாக அனுப்பி வைத்தான். அங்குள்ள மக்கள் காட்டு மிராண்டித் தனத்திலும், ஆண் சேர்க்கையில் ஈடுபடும் அவலட்சண நடவடிக்கைகளிலும், சிலை வணக்கத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

ஆரம்ப கால வாழ்வு

        லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் சகோதரர் ஹாரான் என்பவரின் மகன் என்றும், சகோதரி மகன் என்றும், ஸாரா அம்மையாரின் சகோதரர் என்றும் பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது. இவர்கள் மீது இப்ராஹீம் (அலை) அவர்கள் அதிக அன்பு செலுத்தினார்கள். எனவே இவர்களின் இயற்பெயராகிய ‘லித்து’ என்பதை மாற்றி லூத்து என்று வழங்கினர். லூத் என்பது அன்பு கொள்ளுதல் எனப் பொருள்படும். இவர்கள் இளமையிலேயே ஒரே இறை வணக்கத்தை மேற்கொண்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மனைவி ஸாராவையும், இவர்களையும் அழைத்துக் கொண்டே பாபல் நகர் விட்டுச் சிரியா நோக்கிப் புறப்பட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.

வேறு ஒரு சமூகத்திற்கு நபியாக

        இறைவன் இவர்களை ஜோர்தான் நதி தீரத்திலிருந்த முதஃபகாத் நாட்டிற்கு நபியாக அனுப்பி வைத்தான். இந்நாட்டின் தலைநகராகிய ஸதூமில் எழுபதாயிரம் பேர் வாழ்ந்தனர். இவர்களின் கூட்டத்தினர் நான்கு லட்சம் குடும்பத்தினர் என்று முஜாஹிது (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். தாம் பிறந்த சமூகத்திற்கன்றி வேறு ஒரு சமூகத்திற்கு நபியாக அனுப்பி வைக்கப் பட்டவர்கள் இவர்கள் ஒருவரேயாவார்கள். இவர்கள் அங்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணமுடித்துப் பெண் மக்களை ஈன்று வாழ்ந்தார்கள். லூத் நபியவர்களின் மனைவி பெயர் ‘ஹல்சகா’ வென்றும், ‘வாலியா’ வென்றும் கிரந்தக் குறிப்புகளில் காணப்படுகிறது.

திருக்குர்ஆனில் 

        லூத்தையும் (நம்முடைய தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி "உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கின்றீர்கள்?  7:80. 

        நிச்சயமாக நீங்கள் பெண்களைவிட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கின்றீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள்" என்று கூறினார். 7:81.

        அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) "இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்திவிடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகி விடலாமெனப் பார்க்கின்றனர்" என்றுதான் பதில் கூறினார்கள். 7:82. 

        ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர, அவரையும் (மற்ற) அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொண்டோம். அவருடைய மனைவி (அவரைப்) பின்பற்றாதவர்களுடன் சேர்ந்துவிட்டாள். 7:83. 

        அவர்கள் மீது (கல்) மழையை பொழிந்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே (இக்)குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். 7:84. 

வரம்பு மீறிய அவ்வூர் மக்கள்

        அவ்வூர் மக்கள் ஆண் புணர்ச்சியில் இன்பம் கண்டார்கள். இறைவனுக்கு அஞ்சுமாறும், அதனை விட்டொழிக்குமாறும் இவர்கள் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் கேட்கவில்லை. அழகிய இளவல்கள் சிலர் இவர்களின் இல்லத்திற்கு விருந்தினராய் வந்திருப்பதை இவர்களின் மனைவி அவ்வூர் மக்களுக்கு இரகசியமாய்த் தெரிவித்தாள். அவர்கள் இங்கு வந்து அவ்விளவல்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். அவர்களின் தீய எண்ணத்தை அறிந்து கொண்ட இவர்கள், அவ்விதம் செய்ய மறுத்துத் தம் பெண் மக்களை அவர்களுக்கு மணமுடித்துத் தருவதாய்க் கூறினார்கள். அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுள் ஒருவன்  வன்முறையில் அவ்விளவல்களில் அழகு மிக்கவரைக் கைபற்ற முயன்றார். அப்பொழுது அவ்விளவல் தம் மூச்சை அவர் மீது ஊத அவரது கண் குருடாகியது.

லூத்தை மிரட்டிய மக்கள்

        இது கண்ட அவர்கள், “நீர் சூனியக்காரர்களை உம் இல்லத்தில் விருந்தினராய் வைத்துள்ளீர். எனவே, நீரும் உம்முடைய குடும்பத்தினரும் இவ்வூரை விட்டும் புறப்பட்டு விட வேண்டும். இல்லையேல், உம் கண்களையும் குருடாக்கி விடுவோம்” என்று கூறினார்கள். அது கேட்டு வருந்திய இவர்கள் அவ்விளவல்களை நோக்கி, “நீங்கள் நல்லவர்கள் போலத் தோன்றினும், அநியாயக்காரர்களாக இருக்கின்றீர்களே” என்று கூறினார்கள்.

இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்கள்

        அப்பொழுதுதான் அவ்விளவல்கள் தாம் அவ்வூரை அழித்தொழிக்க இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர்களென்றும், உடனே இவர்களும் இவர்கள் குடும்பத்தினரும் அவ்வூரை விட்டு அகல வேண்டுமென்றும், அதனைத் திரும்பிப் பார்க்க வேண்டாம் என்றும், வைகறையில் அவ்வூர்கள் அழிக்கப்படுமென்றும் கூறினார்கள். அவ்விதமே இவர்கள் செய்தார்கள். திரும்பிச் செல்லும் பொழுது, “என் இனத்தவரே! என் இனத்தவரே!!” என்று கூறித் திரும்பிப் பார்த்த இவர்களின் மனைவி கல்லுருவானாள்.

இறைவனின் கட்டளைப்படி அழிக்கப்பட்டது

        இவர்கள் ‘முதஃபகாத்தின்’ எல்லையைக் கடந்ததும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அந்நாட்டின் ஐந்து நகரங்களையும் தங்கள் சிறகுகளால் விண்முட்டும் உயரத்தில் தூக்கிக் கீழே அறைந்தார்கள். அவ்வூர்கள் அனைத்தும் சுக்கு நூறாயின. ஆங்கிருந்தோர் அனைவரும் மாண்டொழிந்தனர். *சாக்கடலின் (Dead Sea) தெற்கில் இப்பொழுதும் அவ்வூர்கள் மூழ்கியுள்ளன. எனவே தான் அரபிகள் சாக்கடலை “பஹ்ரெலூத்” (லூத்தின் கடல்) என்றழைக்கின்றனர். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவ்விடத்தை வந்து பார்க்கும் பொழுது புகை வெளி வந்து கொண்டிருந்ததாகப் பைபிள் கூறுகிறது. அப்பகுதியில் பெட்ரோலியமும், நெருப்பு ஆவி (கேஸ்) இருக்கின்றன என்று இப்பொழுது ஆய்வாளர்கள் கண்டுபித்துள்ளார்கள்.

அது பற்றி திருக்குர் ஆனில்

        (இப்ராஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்த பொழுது, அவர் (அம்மலக்குகளைத் தம் மக்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி "இது மிக நெருக்கடியான நாள்" என்று அவர் கூறினார். 11:77.

        (இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதனை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு ("லூத்" நபி அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களை திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களிடம் இல்லையா?" என்று கேட்டார். 11:78.

        அதற்கவர்கள் "உங்களுடைய பெண்மக்களிடம் எங்களுக்கு யாதொரு தேவையும் இல்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்கள்" என்றும் கூறினார்கள். 11:79.

        அதற்கவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?" என்று (மிக துக்கத்துடன்) கூறினார். 11:80.

        (அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) "லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய மலக்கு)களாவோம். இவர்கள் நிச்சயமாக உங்களை வந்தடைய முடியாது. (இன்று) ஒரு சிறு பகுதி இரவில் இருக்கும் பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுங்கள்; (உங்களுடைய சொல் கேளாத) உங்களுடைய மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களைத் தொடும் வேதனை நிச்சயமாக அவளையும் பீடிக்கும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?" என்று கூறினார்கள். 11:81.

        நம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை மேல் கீழாக கவிழ்த்து விட்டோம். அன்றி, (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். 11:82.

        (எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) 11:83.

மேலும் திருக்குர் ஆனில்

        (பின்னர் மலக்குகளை நோக்கி, "இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?" என்று கேட்டார். 15:57.

        அதற்கவர்கள் "(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். 15:58.

        "எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்.) நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம். 15:59.

        எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்" (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்.) 15:60.

        (இறைவனால்) அனுப்பப்பட்ட (அம்)மலக்குகள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது,  15:61.

        அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கின்றீர்களே!" என்று கூறினார். 15:62.

        அதற்கவர்கள், "(உங்களது மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். 15:63.

        மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்துவிடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம். 15:64.

        ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்" என்றார்கள்.  15:65.

        அன்றி, நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அம்மலக்குகள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம். 15:66.

        (இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர். 15:67.

        (லூத் நபி அவர்களை நோக்கி) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவுபடுத்தாதீர்கள். 15:68.

        அன்றி நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்" என்று கூறினார். 15:69.

        அதற்கவர்கள் "உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?" என்று கூறினார்கள். 15:70.

        அதற்கவர் "இதோ! என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர். நீங்கள் (ஏதும்) செய்தே தீரவேண்டுமென்று கருதினால் (இவர்களை திருமணம்) செய்துகொள்ளலாம்" என்று கூறினார். 15:71.

        (நபியே!) உங்கள் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை.) 15:72.

        ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. 15:73.

        அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டிவிட்டோம். 15:74.

        உண்மையைக் கண்டறிபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 15:75.

        நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப்போகக் கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது. 15:76.

        நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது. 15:77.

*சாக்கடல் (Dead Sea ) சிறு குறிப்பு

        சாக்கடல் (Dead Sea) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இஸ்ரேல்(பாலஸ்தீனம்) , ஜோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் ஜோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது.  இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்தகடல் என அழைக்கப்படுகிறது. முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...