ஆயத்துல் குர்ஸி
அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய "குர்ஸி" வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன். (2:255)
ஆயத்துல் குர்ஸியின் பயன்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா
ஆயத்துல் குர்ஸியின் மகத்துவம்
உண்மையை கூறிய ஷைத்தான்
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பின் வரும் ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான் விட்டு விட்டேன்.
விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரை விட்டு விட்டேன்! என்றேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன்.
அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னை விட்டு விடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனி நான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்.
விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள்.
மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன்.
அதற்கவன் 'என்னை விட்டு விடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன்.
'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான்.
விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன்.
நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 2311)
ஹஜ்ரத் அபூ அய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்களின் அறிவிப்பில், உமது வீட்டில் ஆயத்துல் குர்ஸியை ஓதி வாரும். உம்மிடம் ஷைத்தான், ஜின் யாரும் வரமாட்டார்கள்'' என்று ஷைத்தான் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது. (திர்மிதீ)
ஆயத்துகளின் தலைவன்
சூரா பகராவில் ஓர் ஆயத் உண்டு, அது சிறப்புமிக்க குர்ஆனின் எல்லா ஆயத்துக்களுக்கும் தலைவனாகும். அந்த ஆயத் எந்த வீட்டில் ஓதப்படுமோ அங்கு ஷைத்தான் இருந்தால் உடனே வெளியேறி விடுவான். அது "ஆயத்துல் குர்ஸீ'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்தத்ரக் ஹாக்கீம், தர்கீப்)
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சிகரம் உண்டு (அது எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து இருக்கும்) சங்கைமிக்க குர்ஆனின் சிகரம் சூரத்துல் பகரா'', இந்த சூராவில் புனித குர்ஆனின் அனைத்து ஆயத்துகளின் தலைமையான ஆயத் இருக்கிறது. அதுதான் ஆயத்துல்குர்ஸி என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (திர்மிதீ)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஈஸா நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஆற்றங்கரை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.