அல் ஃபாத்திஹா
1:1 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1:1. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
1:2. அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
1:3. (அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.
1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ
1:5. (எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
1:6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
1:7. எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக). (அவ்வழி உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையதும் அல்ல; வழி தவறியவர்களுடையதும் அல்ல.
ஆமீன்.
சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும். இதுவே இறைவனால் ஒரே தடவையில் முதலாவதாக, முழுதாக அருளப்பட்ட அத்தியாயமாகும். இது மக்காவில் அருளப் பட்டதாகும். இதன் பொருள் தோற்றுவாய் என்பதாகும். இது திருகுர்ஆனின் துவக்கத்தில் இடம் பெற்றிருப்பதால் இதற்கு இப் பெயர் ஏற்பட்டது என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதில் ஏழு ஆயத்துக்கள் உள்ளன. இதைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது, “(நபியே!) திரும்பத் திரும்ப ஒதக் கூடிய ஏழு வசனங்களையும் (ஸப்வுல் மஸானீயையும்) இந்த மேலான குர் ஆனையும் நாம் உமக்கு வழக்கியுள்ளோம்” (15:87) என்று குறிப்பிட்டுள்ளான்.
“இந்த அத்தியாயமே திருக்குர் ஆனிலுள்ள மிகவும் மேலான அத்தியாயமாகும். இதுவே ஸப்வுல் மஸானீயும் எனக்களிக்கப் பட்ட மேலான குர் ஆனும் (குர் ஆனுல் அளீமும்) ஆகும். இத்தகு அத்தியாயம் தெளராத், இஞ்சீல், ஸபூர் ஆகிய வேதங்களில் அருளப்பட வில்லை. இது எனக்கும் என் உம்மத்களுக்கும் பங்கிடப்பட்டது.” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள், “ சூரத்துல் ஃபாத்திஹா தெளராத்தில் இடம் பெற்றிருப்பின் பனீ இஸ்ராயீல் (யூதர்)கள் வழி கெட்டுப் போயிருக்க மாட்டார்கள். இஞ்சீலில் இருந்திருபின் ஈஸா(அலை) அவர்களின் கூட்டத்தினர் (கிருஸ்தவர்கள்) வழி தவறிச் சென்றிருக்க மாட்டார்கள். ஸபூர் வேதத்தில் காணப்பெறின் தாவூத் (அலை) அவர்களின் கூட்டத்தினர் உருவம் மாற்றப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினர்.
மேலும் அவர்கள், “இதனை ஒரு தடவை ஓதியவர், குர் ஆன் முழுவதையும் ஓதியது போன்றும், முஸ்லிம்களாகிய ஆண், பெண் அனைவருக்கும் ஸதகா (தர்மம்) செய்தது போன்றும் உள்ள பலனை எய்தப் பெறுவார்” என்றும் கூறினர்.
இந்த ஓர் அத்தியாயத்தில் குர் ஆனின் மற்றப் பகுதிகளின் சாரம் முழுவதும் அமைந்துள்ளது. இதனை குர் ஆனின் இரத்தினச் சுருக்கம் என்றும் கூறலாம். இதற்கு “அஸாஸுல் குர் ஆன்” (குர் ஆனின் அடித்தளம்) என்றும் பெயர் உண்டு. குர் ஆனின் வேறு அத்தியாயங்களை ஓதத் தெரியாதவர், இது ஒன்றையேனும் ஓதி இதன் உண்மையை விளங்கிக் கொளின் இஸ்லாம், இறைவணக்கம் ஆகியவை பற்றி ஒருவாறு விளங்கிக் கொண்டவராவர்.
”ஃபாத்திஹா இல்லாது தொழுகை இல்லை” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இது ஓதப்படவில்லையெனில் தொழுகை நிறைவேறாது. எனவே இதற்கு, “சூரத்துஸ் ஸலாத்” (தொழுகையின் அத்தியாயம்) என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது.
இதில் வரும் “அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்” (அனைத்துப் புகழும் அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே) என்ற வாக்கியத்தைக் குழந்தைகள் ஒதுவதன் மூலம் நரகத்தில் கிடந்து அவதிப்படும் அவர்களின் பெற்றோர்கள் நாற்பது ஆண்டுகள் வேதனை நீங்கப் பெறுவர் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களைக் காணின், சூரத்துல் பாத்திஹாவை அதிகமாக ஓதி வருமாறு கூறுவர்.
“சூரத்துல் ஃபாத்திஹாவில்” சகல நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது என்று ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்மலிக் இப்னு உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தாரமீ)
இந்த அத்தியாயத்தின் சிறப்பு என்னவெனில், மற்ற சிறு அத்தியாயங்கள் எல்லாம் திருக் குர்ஆனின் இறுதியில் இருக்கும் பொழுது, இது மட்டும் துவக்கத்தில் இருப்பதுதான். மற்ற அத்தியாயங்களெல்லாம் அறிவுரைகளாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவையாகவும், வரலாறுகளாகவும் இருக்கும் பொழுது, இது மட்டும் இறைஞ்சுதலாக இருப்பது தான். இதில் மட்டும் ஆமீன் என்ற சொல் இணைக்கப் பட்டுள்ளது. இவ்வத்தியாயத்தைத் தாம் ஓதி முடித்ததும் “ஆமீன்” (இந்த இறைஞ்சுதலை ஏற்றான்) என்று கூறுமாறு ஜிப்ரீல் (அலை) தம்மிடம் இயம்பியதாக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மொழிந்துள்ளனர்.
அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல், பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.)
மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்) Book :39 ஹதீஸ் எண்: 655.
சூராத்துல் ஃபாத்திஹா, இதற்கு உம்முல் குர் ஆன், அல்ஹம்து, ஸப்வுல் மஸானீ, அஷ்ஷுக்ரு, அல்வாகியா, ஷிஃபா, சூரத்துத் துஆ, சூரத்துல் ஹம்து ஆகிய பெயர்கள் உண்டு.
பொதுவாகத் தமிழ்நாட்டில் ஒரு நற்செயலை செய்வதற்கு முன், இறைவனின் அருள் வேண்டி இறைஞ்சுவதற்குப் ஃபாத்திஹா ஓதுதல் என்று கூறப்படுகிறது. அவ்விறைஞ்சுதலுக்கு முன் சூரா பாத்திஹாவையும், சூரத்துல் இக்லாஸையும், சூரத்துல் ஃபலக்கையும், சூரத்துந் நாஸையும் ஓதிவிட்டு இறைஞ்சுவதனாலேயே அதற்கு அப் பெயர் ஏற்பட்டது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஈஸா நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஆற்றங்கரை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.