ஷைகு உதுமான் வலி
மாபெரும் இறைநேசச் செல்வர்களான இவர்கள் கடையநல்லூரில் ஹிஜ்ரி 1111 முஹர்ரம் 10 ஆம் நாள் வியாழக்கிழமை பிறந்தார்கள். தந்தை ஷைகு மீரான் லெப்பை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழி வந்தவர்கள். கிழ்ரு (அலை) அவர்களின் கனவில் தோன்றிக் கூறியவண்ணம் திட்டு விளையிலிருந்து கடையநல்லூர் வந்து அங்குப் புதிதாய்க் கட்டப்பட்ட பெரிய குத்பா பள்ளியில் இமாமாய் பணியாற்றினார்கள். தங்கள் தந்தையிடமே மார்க்கக் கல்வி பயின்ற இவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கனவில் தோன்றி அறிவித்த வண்ணம் மஸ்வூத் வலி அவர்களிடம் பைஅத் (தீட்சை) பெற்றார்கள்.
ஹிஜ்ரி 1143 இல் கடையநல்லூர் வந்த நவாப் மஹ்பூஸ்கான் இவர்களது மான்பினை அறிந்து இவர்களையும் இவர்களது தமையனார் ஹாஃபிஸ் உமர் முஹ்யித்தீன் லெப்பையையும் அழைத்து வருமாறு தங்களுடைய பல்லக்கை அனுப்பி வைத்தார். இவர்களை தம்முடன் அழைத்துச் செல்ல அவர் வேண்டிய பொழுது இவர்கள் மறுத்து விட்டார்கள். அவர் மீது இவர்கள் அரபியில் பாமாலை இயற்றி அரங்கேற்றினார்கள். அதை கேட்டு மகிழ்ந்த நவாப் அவ்விருவரிடமும் அவர்களுக்கு ஏதேனும் தேவைப்படின் கேட்குமாறு கூற இவர்களின் சகோதரர் தமக்கு ஒரு குர்ஆனும் ஒரு ரைஹாலும் வேண்ட, இவர்களோ தம் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ஐந்து பைசா ஆகிறது என்று கூறினார்கள். அவ்வாறே அவர் இவர்கள் இருவருக்கும் வழங்கியதோடு இவர்களுக்கு தனிச் சிறப்பு செய்யும் வகையில் 12 மரக்கால் விதைப்பாடுள்ள நஞ்சை நிலமும் வழங்கினார். இது இன்றளவும் இவர்கள் குடும்பத்தினரிடம் உள்ளது. அந்த குர்ஆனும் ரைஹாலும் இப்பொழுதும் இருக்கின்றன.
இவர்கள் ஓடும் தேரை நிறுத்தவும், பறக்கும் பல்லக்கில் பயணம் செய்யவுமான பற்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். இவர்கள் தமிழில் பல ஞானப் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இவரது மாணவரே ஷைகு பஷீர் அப்பா வலி ஆவர்.
ஷைகு உதுமான் வலி அவர்கள் ஹிஜ்ரி 1191 இல் ரஜப் பிறை 6 திங்கட்கிழமை தம் 91 ஆம் வயதில் கடையநல்லூரில் காலமானார்கள். இவர்கள் தங்களுடைய தவச்சாலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.