சையிது இப்ராஹீம் ஷஹீது வலி
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அடங்கப் பெற்றிருக்கும் இறைநேசச் செல்வரான இவர்கள், ஹிஜ்ரி 530 ரமலான் பிறை 3 இல் மொரோக்கோவில் பிறந்தனர். தந்தை : சையிது அஹ்மது, அன்னை : பாத்திமா. தந்தையார் மொரோக்கோவின் ஆளுநராகப் பனிபுரிந்தார். இளமையில் மதீனாவில் கல்வி கற்ற இவர்கள் வயதேறப் பெற்றதும் ஹுஸைனி யூசுப் என்ற தர்வேஷுடன் சேர்ந்து பல நாடுகளுக்கும் சென்று, இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர்.
ஹுஸைனி யூசுப் இறந்ததும் இவர்களே அத் தர்வேஷ்களின் குழுவுக்குத் தலைமை தாங்கி டூனிஸ், திரிப்போலி, எகிப்து, லிபியா, எரிட்ரியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கெல்லாம் சென்று சமயப் பிரச்சாரம் செய்தனர். பின்னர் மூவாயிரம் பேர்களுடன் சென்று சிலுவைப் போர் வீரர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்தனர். போர் முடிவில் இவர்கள் பலஸ்தீனின் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். 24ஆவது வயதில் இவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்தது. மனைவியின் பெயர் சையிதா அலீ பாத்திமா.
மதீனாவில் இவர்கள் ஓரிரவு படுத்துறங்கும் பொழுது, இந்தியா சென்று மார்க்கப் பணி புரியுமாறு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கனவில் தோன்றி பணித்து விட்டுச் சென்றதற்கேற்ப, இவர்கள் ஆயிரம் போர் வீரர்களுடன் சிந்து வந்தார்கள். அங்கு ஆண்டு வந்த அரசர்களுக்கு இஸ்லாத்தில் இணையுமாறு அழைப்போலை விடுக்க ஏற்றனர் சிலர், எதிர்த்தனர் சிலர். எதிர்த்தவர்களுடன் இவர்கள் போர் செய்து வென்றார்கள். பின்னர் மதீனா திரும்பி சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த இவர்களுக்கு அபூதாஹிர், ஜைனுல் ஆபிதீன் ஆகிய நன் மக்கள் பிறந்தனர்.
இதன் பின் தம் குடும்பத்தார் 121 பேர்களுடனும், 9000 படை வீரர்களுடன் மக்கா வந்து ’உம்ரா’ செய்துவிட்டு, ஜித்தா வந்து ஹிஜ்ரி 571 ரபீயுல் ஆகிரில் கப்பல் ஏறினார்கள். அப்பொழுது இவர்களின் அணியில் 23,000 பேர் வரை சேர்ந்து விட்டனர். நாற்பது நாட்கள் கடலில் பயணம் செய்து, இவர்கள் கண்ணனூர் வந்து சேர்ந்தார்கள்.
அந்த சமயத்தில் முதுமை எய்திய அதிவீரராம பாண்டியன், தம் மூத்த மகன் திருப்பாண்டியனுக்கு பட்டம் கட்டினான். அவனுடைய இளவல் விக்கிரமபாண்டியன் குழப்பம் செய்து நாட்டில் ஒரு பகுதியைத் தனக்கு வேண்ட, தன் நாட்டை மூன்று கூறிட்டுத் தம் மக்கள் மூவருக்கும் அளித்துவிட்டு இறந்தான் அதிவீரராம பாண்டியன். இப்பொழுது மூத்த சகோதரர்களான திருப்பாண்டியனும், விக்கிரமபாண்டியனும் ஒன்று சேர்ந்து , தம் இளவல் குலசேகரபாண்டியனுக்குத் தொல்லை கொடுக்க, அவன் கண்ணனூர் வந்து சையிது இப்ராஹீம் வலி அவர்களின் உதவியை வேண்டினான்.
சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறைத் தீர்த்து வைக்கும் நோக்குடன் குலசேகரபட்டணத்திற்கு அண்மையிலுள்ள காயல்பட்டணத்தில் வந்து தஙகிய இவர்கள், முஹ்யித்தீன், இம்யான் ஆகிய இருவரை திருப்பாண்டியனிடம் தூது அனுப்பினர். திருப்பாண்டியன் தன் நாட்டில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுமதியளித்து விட்டு, தன் குடும்பத்தினருடன் திருப்பதி சென்று விட்டான். தம்முடன் வந்த ஜித்தாவின் முன்னாள் ஆளுநர் சிக்கந்தருக்கு இவர்கள் பட்டம் சூட்டியதுடன் திருப்பாண்டியன் அபகரித்த பகுதிகளை எல்லாம் குலசேகர பாண்டியனுக்கு இவர்கள் அளித்தனர்.
பின்னர் விக்கிர பாண்டியனுக்கு இவர்கள் தூது அனுப்பி, குலசேகர பாண்டியனுக்கு உரிய பங்கை அவனுக்கு கொடுத்து விடுமாறு கூற, அவன் போருக்கெழுந்தான். தாம் ஒரு மார்க்கப் பிரச்சாரகரேயன்றி வேறில்லை என்று இவர்கள் எவ்வளவோ கூறியும் கேளாது, போர் தொடுத்தான் அவன். ஒரு வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டிருக்கும் பொழுது பாண்டியார் படை தாக்குதல் துவங்கியது. போரில் இவர்களின் மகன் சையிது அப்தாஹிர் இந்திரபாண்டியனைக் கொன்றார். முஸ்லிம் படையணியில் இம்யான் கொல்லப்பட்டார். பத்தாம் நாள் விக்கிரம பாண்டியனே போர்களம் வந்தான். சையிது இப்ராஹீம் அவர்கள் விடுத்த அம்பொன்று பல்லக்கிலிருந்த அவனுடைய உயிர் குடித்தது. அரசன் மாண்ட செய்தி அறிந்து பாண்டியர் படை சிதறுண்டது.
சையது இப்ராஹீம் அவர்கள் மதுரையில் நல்லாட்சி புரியத் துவங்கினார்கள். இப்பொழுது இந்தியா வந்து மூன்று ஆண்டுகளாகி விட்டதால் அவர்களுடன் வந்த ஆயிரம் பேர் அரபு நாடு திரும்பினர்.
திருப்பதி சென்ற திருப்பாண்டியன் வட நாட்டு மன்னர்களின் உதவியுடன் மதுரை மீது படையெடுத்தான். சையது ஜைனுலாபிதீனைக் கொன்று விட்டு, பவுத்திர மாணிக்கத்தின் மீது படை நடாத்திச் சென்ற அவனை இவர்கள் எதிர்த்து நின்றார்கள். இவர்களின் ஈட்டி அவன் மீது பாய அவன் சாய்ந்தான். அவன் மாய்ந்தான் என்று எண்ணி இவர்கள் ஓய்ந்த பொழுது, அவன் மயக்கம் தெளிந்தெழுந்து தன் கையிலிருந்த ஈட்டியால் இவர்களைக் குத்த இவர்கள் இறப்பெய்தினார்கள். மரணக்காயம் பெற்ற திருப்பாண்டியனும் மூன்றாம் நாள் இறந்தான்.
சையது இப்ராஹீம் அவர்களது நல்லுடல் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஆண்டு தோறும் இவர்களின் நினைவு விழா கொண்டாடப்படுகிறது.