Home


அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி)

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) (கி.பி. 581-கி.பி.654) அவர்கள், அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர்களில் இவரும் ஒருவராக இருந்தார். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இவ் உலகிலேயே செர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். பத்ரு, உஹது, மற்றும் பல போர்களிலும் தீரமுடன் கலந்து கொண்டு வீரப் போர் புரிந்துள்ளனர். சிறந்த கொடையாளியாகவும் திகழ்ந்தார்.

ஆரம்ப வாழ்வு

        அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் மக்காவில் கி.பி.581 இல்  'அவ்ஃப் இப்னு' அப்த்-அவ்ஃப் மற்றும்  தாயார் அல்-ஷிஃபா இப்னுத் 'ஆவ்ஃப் ஆகியோரின் மகனாக பிறந்தார். அவரது பெற்றோர் இருவரும் மக்காவில் உள்ள குரைஷி குல பழங்குடியினரின் ஜுஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆவார்கள். தாயார் அல்-ஷிஃபா தான் ஆமினாவுக்குப் பிள்ளைப்பேறு பார்த்தவர். அன்னையின் வயிற்றிலிருந்து இவரின் கையில் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விழுந்தனர்.

இஸ்லாமிய அழைப்பு பணி

        இஸ்லாமிய அழைப்பு முதன்முதலாக விடுக்கப்பட்ட அந்த நாட்களில் அபூபக்ர் (ரலி) அவர்களின் அழைப்பை ஏற்று முதன் முதலில் இணைந்த எட்டு பேரில் இவரும் ஒருவர். தனது 30 வது வயதில் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ளும் முன் அப்து அம்ர் என்றோ, அப்துல் கஃபா என்றோ அழைக்கப்பட்டனர்., நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் என பெயரை மாற்றினார்கள். அதன் பிறகு மக்கள் இவரை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் என்றே அழைக்கலானார்கள். சிறந்த புத்திகூர்மையையும் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன்பிலிருந்தே மதுபானம் அருந்துவதை வெறுத்தொதுக்கிய நற்குணத்திற்குச் சொந்தக்காரராவார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க, இருமுறை ஹிஜ்ரத்செய்த - அதாவது ஒருமுறை அபீசீனியாவிற்கும் இன்னொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து சென்ற நற்பேற்றுக்கும் உரியவராவார்.

ஹிஜ்ரத்

மக்காவில் ஒரு சிறந்த வணிகராக  அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) இருந்தார்கள். அவர்கள் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டதால், மக்கத்து குரைஷிகளால் முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருள்கள் வாங்காமல் எதிர்ப்பும், கொடுமைகளும் செய்ய ஆரம்பித்ததால், மற்ற நபித் தோழர்களைப் போலவே அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களும் கடுமையான கஷ்டத்திற்க்கு ஆளானார். இந் நிலையில் நபி (ஸல்) அவர்கள்  அவரை அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து போக உத்திரவு அளித்தார்கள். இறைவனுடைய திருப் பொருத்தத்திற்காக நாடு துறந்து சென்ற முதல் முஸ்லிம்கள் குழுவில் பன்னிரண்டு ஆண்களில்  அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களும் இருந்தார்கள். மேலும் நான்கு பெண்களும் இருந்தனர். இவர்களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார்கள். வியாபாரக் கப்பல்களில் ஏறி அபீஸீனியாவிற்கு புறப்பட்டு சென்றார்கள். அங்கு இராண்டவது வந்த குழுவினர்களும் அபீஸீனியாவில் பிரச்சனைகள் இன்றி வாழ்ந்து வந்தனர். மதீனாவிற்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து சென்ற பின்னர் அபீஸீனியாவில் இருந்த தோழர்கள் மதீனாவுக்கு சென்றார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்துசென்ற பொழுது அவர்கள் வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எந்தவித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில், ஸஃது இப்னு ரபீஆ அன்ஸாரீ (ரழி) என்ற நபித் தோழருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக நபி (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவரை வரவேற்றுக்கண்ணியப்படுத்திய ஸஃது இப்னு ரபீஆ அன்ஸாரீ (ரழி) அவர்கள் கூறினார்கள் :

சகோதரரே! இறைவன் என்மீது அளவற்ற அருட்கொடைகளைச் சொறிந்துள்ளான். இந்த மதீனாவிலேயே நான் தான் மிகப் பெரிய செல்வந்தனாகவும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் இரண்டு மிகப் பெரிய தோட்டங்களும், இரண்டு மனைவிகளும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு தோட்டங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றதோ அதனையும், இரண்டு மனைவிகளில் உங்களுக்குப் பிடித்த மனைவி ஒருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தோட்டத்தை உங்கள் பெயரிலும்,  நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற மனைவியை நான் விவாகாரத்தும் செய்து தருகின்றேன், அவளது இத்தா தவணை முடிந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் இப்பொழுது என்னுடைய இஸ்லாமிய சகோதரராக இருப்பதின் காரணமாக உங்களது வாழ்வில் நல்லனவற்றை நாடுவதும், ஒரு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் உங்களது தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு இஸ்லாம் நமக்குக் காட்டித்தந்திருக்கின்ற வழிமுறையும், சமூகக் கடமையுமாகும் என்று கூறினார்கள்.

ஆனால், கண்ணியமும், சுயமரியாதையும் கொண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது சகோதரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், அவர் கூறினார் :

அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிவானாக! இன்னும் உங்களது உடமைகளிலும், உங்களது குடும்பத்தினர் மீதும், உங்களது குழந்தைகளின் மீது அருள் பாலிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு வணிகச் சந்தைக்கான வழியைக் காட்டுங்கள். எனது வாழ்வாதாரத்தை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு ஒரு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்றுகூறினார்கள்.

மதீனாவில் வியாபாரம்

        அதன் பின்பு வணிகச் சந்தைக்கான வழியை அறிந்து கொண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அவர் எப்பொழுது தனது சொந்த வியாபாரத்தைத் தொடங்கினாரோ அப்பொழுதிலிருந்து இறைவன் அவரது வியாபாரத்தின் மீது அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.

        அங்கு நெய், மாவு ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்த இவர்கள் விரைவில் பெரும் வணிகரானார்கள். குறைந்த ஆதாயத்திற்கே இவர்கள் பொருள்களை விற்றார்கள். ஒரு முறை இவர்கள் நூறு ஒட்டகைகளை விற்றபொழுது ஒட்டகை கட்டிய கயிறுகளைத் தவிர இவர்களுக்கு அவற்றின் மூலம் வேறு இலாபம் கிடைக்கவில்லை.

        அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் வியாபாரத்தில் இறைவன் தனது பூரண அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்துச் சென்றன. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் ஒருகல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தான். வியாபாரத்தை அடுத்து, விவசாயத்திலும் அதிகக் கவனம் செலுத்தினார். மிகப் பரந்த அளவில் விவசாயத்தை ஆரம்பித்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு, கைபரில் ஒரு பெரிய நிலத்தையே நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு வழங்கினார்கள். இத்தனை சொத்துக்களில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை, அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

        ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய வணிகப் பொருட்களுடனும், தானியங்களுடனும் மதீனமா நகரத்துக்குள் நுழைந்த பொழுது, அந்த வணிகக் கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த சலசலப்பை செவியுற்ற அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரே சலசலப்பாக இருக்கின்றதே! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள். அப்துர்ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப் பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரழி)அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் : ''அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;" என்றுகூறினார்கள்.

        இதனைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்று கேட்டார்கள். அன்னையவர்களும் ஆம்! எனச் சொன்னதும், நபி (ஸல்) அவர்களின் திருவதனங்களால் தனக்குஅறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால் இந்த வணிகப்பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும் நான் இந்த முஸ்லிம் உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள்.

போர்களத்தில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி)

        பத்ரு, உஹத் ஆகிய போர்களில் பங்கேற்று வீரப் போர் புரிந்துள்ளனர். பத்ரு போர்களத்தில் அபூஜஹ்லைக் கொல்வதற்காகத் தேடி வந்த இரு வீரச் சிறுவர்களான முஆத் இப்னு அம்ருப்னுல் ஜமூத் (ரழி) மற்றும் முஆத் இப்னு அஃப்ரா (ரழி) ஆகிய இருவரிடம் கவசம் தரித்திருந்த அபூஜஹ்லைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் அவனுடைய இறப்புக்கு வழி கோலியவர்கள் இவர்களேயாவர்.

        உஹத் போர்களத்தில் அண்ணல் நபி (ஸல்) அவைகளைக் காத்து நின்று வீரப் போர் செய்த இவர்களின் உடலில் இருபது காயங்கள் ஏற்பட்டன. காலில் படுகாயம் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் தம் ஆயுள் முழுவதும் நொண்டி நடக்க வேண்டியதாயிற்று.

        ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு தெளமத்துல் ஜந்தல் என்ற இடத்தை முஸ்லிம்களின் நிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பனூ கலப் என்ற குலத்தவர்கள் வசித்து வந்தார்கள், இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரிகளாகச் செயல்பட்டார்கள். இந்தப்படைக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்த நபி (ஸல்) அவர்கள், தலைவருக்கான தலைப் பாகையையும் அணிவித்து, அவரது கையில் இஸ்லாமியக் கொடியையும் கொடுத்து அனுப்பி வைக்கின்றார்கள். ஆனால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் அமைதியான பிரச்சாரப் பணியின் மூலமாக போர் இல்லாது, எந்தவித உயிர் மற்றும் பொருட்சேதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் அந்தப் பகுதி மக்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். மேலும் அந்த குலத் தலைவர் தனது மகளை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார்.

        தபூக் போரிலும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் மிகவும் தாராளமாக பொருளுதவி செய்தார்கள். இஸ்லாமியப் படை தபூக் நோக்கி நகர்ந்த பொழுது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களும் அந்தப் படையில் இணைந்து கொண்டார்கள்.முஸ்லிம் படை ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி ஓய்வெடுத்த பொழுது, அங்கு நபி (ஸல்) அவர்கள் இல்லாத காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் முன்னிற்க தொழுகை நடத்தப்பட்டது. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் இமாமாக முன்னின்று தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும்பொழுது, இடையில் வந்த நபி (ஸல்) அவர்கள் கொடைத்தன்மைக்கும், பரிசுத்த ஆன்மாவுக்கும், நேர்மைக்கும் பெயர் போன தனது ஆருயிர்த் தோழரைப் பின்பற்றி தொழ ஆரம்பித்தார்கள்.

மக்கா வெற்றி

        இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரபல்யமான வரலாற்றுச் சம்பவமான மக்காவெற்றியின் பொழுதும், இன்னும் அதனை அடுத்து ஹஜ்ஜத்துல் விதா என்ற இறுதிஹஜ்ஜின் பொழுதும் நபி (ஸல்) அவர்களுடன் உடன் இருந்த நற்பேறு பெற்றவருமாவார்.

        ஒரு ஹஜ்ஜின் பொழுது, இறை நம்பிக்கை யாளர்களின் தாய்மார்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு சரியாக வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பயண நெடுகிலும் அவர்களது தனிமைக்காக வேண்டிய பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த ஹஜ் நெடுகிலும் அவர்களது கண்ணியத்தையும், கௌரவத்தையும் பேணிப் பாதுகாக்கும் விதத்தில் அத்தனை ஏற்பாடுகளும் அமைத்திருந்தார். இத்தனையையும், அவர்கள் தனக்காக பிரத்யேகமாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தார்.

        அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காலமான பொழுது இவர்கள் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்து பல நாட்கள் வரை உணவருந்தாது இருந்தார்கள். பின்னர் இவர்கள் பலரின் வற்புறுத்தலின் மீதே உணவருந்தலானார்கள்.

மறுமை பற்றிய கவலை

        தம்முடைய செல்வம் நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வருவதைக் கண்ட இவர்கள் கவலையுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான உம்மு ஸல்மா (ரழி) அவர்களை அணுகி, “என்னுடைய செல்வப் பெருக்கு என்னை அழித்து விடுமோ என்று அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள், அதற்கு அவர்கள் “அதனை ஸதகா தர்மம் செய்யுங்கள்” என்று கூறினர்.

அதிலிருந்து இவர்கள் தம் பெரும் செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு அள்ளி வழங்கியதுடன், ஏராளமான அடிமைகளை விடுதலை செய்வதிலும் பயன்படுத்தினர். இவர்களால் முப்பதாயிரம் அடிமைகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. ”இறைவன் ஏழைகளின் நன்மையைக் கருதியே என்னிடம் பெரும் செல்வத்தை அமானிதமாகத் தந்துள்ளான்” என்று அடிக்கடிக் கூறுவர். இவர்களால் ஏறத்தாழ மூவாயிரம் குடும்பங்கள் நலன் பெற்றன. ஒரு முறை இவர்கள் தம்முடைய நிலங்களை விற்று வந்த நாற்பதாயிரம் தீனார்களையும் அப்படியே ஏழைகளுக்கு தர்மம் செய்து விட்டார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது ஆரம்ப நாள் முதல் இறுதி நாள் வரையும், கணக்கில்லாமல் தனது சொத்துக்களை தானம் வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு தானமாக வழங்கினாலும், அவரது சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவரது சந்ததிக்காக மிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவற்றை வெட்டி, அவரது சந்ததியினரிடையே பங்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார். இவ்வளவு செல்வ வளங்களையும் பார்த்து சந்தோஷப்படுவதை விட்டு விட்டு, எப்பொழுதும் மறுமை நினைவிலேயே, அதன் எதிர்பார்ப்பிலேயே கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

சிறந்த வாய்மையாளர்

அபூபக்ர் (ரழி) அவர்கள் தம் கிலாஃபத்தின் போது இவர்களிடமே அதிகமாக ஆலோசனை கலந்ததாகக் கூறப்படுகிறது. உமர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் இவர்களே முக்கிய இடம் வகித்தனர். முக்கியமான பிரச்சனைகளில் இவர்களின் முடிவே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் வந்தது.

உமர் (ரழி) அவர்கள் இறந்த பின் புதுக் கலீபாவைத் தேர்ந்தெடுக்க நியமிக்கப் பட்ட குழுவில் இவர்களும் ஒருவராகயிருந்தனர். அப்பொழுது ஸ அத் (ரழி) அவர்கள் அப் பதவிக்கு இவர்களே தகுதியானவர்கள் என்று கூற, இவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாது உஸ்மான் (ரழி) அவர்களையே கலீபாவாகத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். தம்முடைய இவ்வாலோசனைக்கு  அலீ (ரழி) அவர்களையும் இணங்க வைத்தனர்.

சிறந்த வாய்மையாளராக இருந்த இவர்களின் சாட்சியம் பிரதம நீதிபதியால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவர்களது மறைவு

        உஸ்மான் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில்,  இவர்கள் ஹிஜ்ரி 31 ஆம் ஆண்டில் கி.பி.654இல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் முன்னின்று நல்லடக்கத்தை செய்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி)அவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabi SAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...

Umar RA

அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Kathija

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuSalama

உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ali RA

அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sawdha

உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuHabiba

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sabiya

உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

zuvairiya

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.