Home

உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி)

உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அமீர் உல் முஃமினீன் (கி.பி.579-கி.பி.656) அவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மருமகனும், பிரசித்திப் பெற்ற நபித்தோழர்களில் ஒருவரும் ஆவார். ”குலாபாயே ராஷிதீன்” இஸ்லாத்தின் மூன்றாம் கலீபாவாக (கி.பி.644முதல் கி.பி.656 வரை) பதவி வகித்தார்கள். இவரின் ஆட்சியில் ஈரான், வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடற்படை உருவாக்கப்பட்டது. திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.

அஃப்பான் இப்னு அபி அல்ஆஸ் இவர் குறைஷி குலத்தில் உமையாக் கிளையினர். தாயார் அர்வா பின்த் குரைஸ் இவர் குறைஷி குலத்தில் அப்தாம்ஸ் கிளையினர் ஆகியோரின் மகனாக தாயிப் நகரில் கி.பி.579 உஸ்மான் (ரழி) அவர்கள் பிறந்தார். இவர்களது பெற்றோர் இருவருமே மக்காவில் செல்வந்தர்களாக இருந்தார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்களின் இளம் வயதில் வெளிநாட்டிற்கு வியாபாரம் நிமித்தம் சென்ற தந்தை இறந்து விடுகிறார். சிறந்த படிப்பாளரான இவர்,  சிறந்த வியாபாரியாக பரிணாமம் பெற்று மக்காவில் வெற்றிகரமான வியாபாரி என்ற அந்தஸ்துப்  பெற்றவரானார். நல்ல  சிறப்பான வியாபார முன்னேற்றம், செல்வத்தை அதிகரித்ததோடு, மக்கள் மத்தியில் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்தது இருப்பினும் அவர் இளகிய மனம் படைத்தவராக இருந்தார். அவர் தனது பொருளாதார வளத்தை ஏழைகளுக்கு உதவுவதற்காகவே தேடினார். பணம் ஒருவரது துன்பத்தைப் போக்குமென்று சொன்னால், உஸ்மான் (ரழி) அவர்கள் அவ்வாறான உதவிகள் செய்ய  எப்பொழுதும் தயாராக இருந்தார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்கள் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு அபூபக்ர் (ரழி) அவர்கள் தான் காரணமாக இருந்தார்கள். இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாவார்கள். நபி (ஸல்) அவர்கள் பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்தவர்கள், உஸ்மான் (ரழி) அவர்கள் பனூ உமைய்யா குலத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு குலங்களும் மிக நீண்ட காலமாக பரம வைரிகளாக இருந்து வருபவர்கள் எனினும் இவையாவும் உஸ்மான் (ரழி) அவர்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதனின்றும் தடுத்து விடவில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களில் உஸ்மான் (ரழி) அவர்களும் ஒருவராவார். நபி(ஸல்) அவர்கள் தனது மகளான ருக்கையா (ரழி) அவர்களை உஸ்மான்(ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக அவர்களது குலத்தவர்களின் கடும் பகையைச் சம்பாதிக்க வேண்டி வந்தது. இவரது மாமா வானஹகம், உஸ்மான் (ரழி) அவர்களின் கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டு வீட்டில் இருட்டு சிறையில் அடைத்து வைத்தார், மற்ற நபித் தோழர்களைப் போலவே உஸ்மான் (ரழி) அவர்களும் கடுமையான சித்திரவதைக்கு ஆளானார். உஸ்மான் (ரழி) அவர்களை மிகவும் விரும்பிய குறைஷிகள் இப்பொழுது வெறுக்க ஆரம்பித்தனர். இது அவர்களை மிகவும் பாதித்தது.

இந் நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து செல்ல அனுமதி கேட்டார்கள். இறைவனுடைய திருப் பொருத்தத்திற்காக நாடு துறந்து சென்ற முதல் முஸ்லிம்களின் குழுவில் உஸ்மான் (ரழி) அவர்களும் இருந்தார்கள். பின்னர் கதீஜா(ரழி) அவர்களின் மறைவுக்கு பின் மக்கா திரும்பிய உஸ்மான் (ரழி) அவர்களின் குடும்பம் மீண்டும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் நடைபெற்ற பொழுதும், மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனாவில் சென்று தங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த நபித்தோழர்களில் உஸ்மான் (ரழி) அவர்களும் ஒருவராவார். நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போர் தவிர மற்ற அனைத்து போர்களிலும் கலந்து கொண்டார்கள். உஸ்மான்(ரழி) அவர்களின் மனைவி ருக்கையா (ரழி) அவர்கள் சுகவீனமாக இருந்த காரணத்தால் பத்ருப் போருக்கு வர வேண்டாம் என்றும், அவர்களை இருந்து கவனித்துக் கொள்ளுமாறும் நபி (ஸல்) அவர்கள் கூறியதால் கலந்து கொள்ள இயலாமல் போய் விட்டது. சுகவீனத்தில் இருந்து மீள முடியாது போகவே ருக்கையா (ரழி) அவர்கள் மரணமடைந்தார்கள். மனைவியின் பிரிவால் உஸ்மான்(ரழி) அவர்கள் மிகவும் சோகமாகவும், வேதனையின் உச்சத்திலும் இருந்த்தார்கள். உஸ்மான்(ரழி) அவர்களின் சோகத்தை கண்ட நபி (ஸல்) அவர்கள், தனது இன்னொரு மகளான உம்மு குல்தூம் (ரழி) அவர்களை உஸ்மான் (ரழி) அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்கள். இதன் காரணமாக, “துன்னூரைன்” என்ற சிறப்பு பெயர் உஸ்மான்(ரழி) அவர்களுக்கு உண்டு.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு நடந்த ஹுதைப்பிய்யா உடன்படிக்கையின் பொழுது, அதன் அமைதி நடவடிக்கைகளில் சிறப்புப் பங்காற்றிய பெருமைக்குரியவர் உஸ்மான் (ரழி) ஆவார்கள். உஸ்மான்(ரழி) அவர்களைத்தான் குறைஷிகளிடம் அமைதிப் பேச்சு வார்த்ததைக்காக நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் குறைஷிகளால்  கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி காட்டுத் தீ போல பரவி, மக்காவை தாண்டி நபி(ஸல்) அவர்களை வந்தடைந்தது. கடும் கோபத்திற்கு ஆளானதோடு, நிலமையின் விபரிதத்தை புரிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் இதற்குப் பலிக்குப் பலி எடுப்பது என்று முடிவெடுத்து, எந்த சூழ் நிலையிலும் பின் வாங்க மாட்டோம், உறுதியோடு எதிரிகளைச் சந்திப்போம் என்று தனது தோழர்களிடம் பைஅத் என்ற உறுதிப் பிரமாணத்தை வாங்கிக் கொண்டார்கள். பின்னர் அந்த வதந்தி பொய் என்று தெரியவந்தது. உஸ்மான் (ரழி) அவர்களும் எந்த வித ஆபத்துமின்றி  முஸ்லிம்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்து சேர்ந்த பொழுது, அங்கு தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்தாடியது. தண்ணீருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பொழுது மதீனாவில் ஒரே ஒரு தண்ணீர்க் கிணறு தான் இருந்தது அதுவும் ஒரு யூதனுக்கு சொந்தமானதாக இருந்தது. அவன் அனுமதி மறுத்தால், அதிகத் தொகையை கொடுத்து மக்கள் நீர் பெற வேண்டியிருந்தது.  இதை அறிந்த உஸ்மான்(ரழி) பெரும் தொகை கொடுத்து அக் குடிநீர்க் கிணற்றை விலைக்கு வாங்கி, முஸ்லிம்களுக்காக “வக்ஃபு” செய்து விட்டார். “பிஃரு உஸ்மான்” எனும் அக்கிணறு இன்றும் அவர்களது நினைவுச் சின்னமாகத் திகழ்ந்து வருகிறது.

மதினாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் முதலில் கட்டிய பள்ளிவாசல் போதாத நிலையில் இருந்தது. அந்தப் பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த நிலத்தைவாங்கி பள்ளிவாசல் விரிவாக்கப்பணிக்கு தானமாக வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 9 ம் ஆண்டு பைஸாந்தியப் பேரரசன் மதீனாவைத் தாக்குதவற்கு தயாராகி வருகின்றான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள், அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முஸ்லிம்கள் தயாராகும்படி கட்டளையிட்டுவிட்டு, அதற்கான தயாரிப்புகளுக்கு பொருளாதார உதவியை வழங்கும்படி தனதுதோழர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட உஸ்மான் (ரழி) அவர்கள், ஆயிரம் ஒட்டகங்களையும், 50 குதிரைகளையும், ஆயிரம் தங்கக் கட்டிகளையும் அந்தப் போருக்காக வழங்கினார்கள்.

இறைத்தூதை எழுதும் எழுத்தாளர்களில் ஒருவராக உஸ்மான் (ரழி) அவர்கள் இருந்தார்கள். திருமறைக் குர்ஆனின் ஒரு பகுதியை எழுதிய  நற்பேற்றுக் குரியவரும் ஆவார்கள். நபி(ஸல்) அவர்களிடம் நெருக்கமாக இருந்த காரணத்தால், நபித்தோழர்களிலே மிகவும் மதிக்கப்பட்ட தோழராக உஸ்மான் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். இன்னும் அபுபக்கர் (ரழி) மற்றும் உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் பொழுது, இரண்டு கலீபாக்களுக்கும் ஆலோசகராகவும் இருந்தார்கள்.

உமர் (ரழி) அவர்கள் தனக்குப் பின் வரக் கூடிய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழுவை சிபாரிசு செய்திருந்ததோடு, இவர்கள் ஆலோசனை செய்து தங்களுக்குள் ஒருவரை ஆட்சியாளராகத் மூன்று நாட்களுக்குள் தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்றும்  உயிலில் எழுதி இருந்தார்கள். அதன் படி பல்வேறு ஆலோசனைக்கு பின் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், உஸ்மான் (ரழி) அவர்களை மூன்றாவது கலீபாவாக தேர்வு செய்து அறிவித்தார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்கள் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், முதல்ஆணையாக தனது ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு இவ்வாறுஉத்தரவிட்டார்கள். 'உங்களது நடவடிக்கைகளில் நேர்மையைப் பேணுங்கள், அதனைப் போல பண விஷயத்திலும் நாணயத்தைப் பேணுங்கள், இன்னும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். இன்னும் நீங்கள் எதிரிகளிடம் வாக்குறுதி செய்திருந்தாலும் அதனைத் தவறாது நிறைவேற்றிடுங்கள். இன்னும், நீங்கள் மக்களுக்குச் சேவை செய்ய நியமிக்கப்பட்ட மற்றும் அவர்களது பாதுகாவலர்களேஅன்றி அவர்களது தலைவர்களோ அல்லது ஆட்சியாளர்களோ அல்ல என்பதை மறந்து விடவேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

சஅத் பின் அபீவக்காஸ் (ரழி) அவர்கள் கூபாவின் கவர்னராகப்பொறுப்பேற்றிருந்தார்கள். அப்துல்லா பின் மஸ்ஊது (ரழி) அவர்கள் கருவூலகத்திற்கு அதிகாரியாக நியமிக்கப்                                                                                                                                                                                       பட்டிருந்தார்கள். கருவூலத்திலிருந்து கடனாகப் பெற்ற தொகையை, குறித்த காலத்தில் செலுத்தத்தவறிய காரணத்தால், இதனை அப்துல்லா பின் மஸ்ஊது (ரழி) அவர்கள், கலீஃபாஉஸ்மான் (ரழி) அவர்களுக்குத் தெரிவித்த பொழுது, கலீஃபா அவர்கள் சஅத் பின்அபீ வக்காஸ் (ரழி) அவர்களை கவர்னர் பதவியை விட்டுக் கீழிறங்கும்படிஉத்தரவிட்டார்கள்.

அஸர்பைஜானும், அர்மீனியாவும் உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுதுவெற்றி கொள்ளப்பட்டு விட்டன. பின்பு அவை இஸ்லாமிய ஆட்சியின்பிடியிலிருந்து நழுவி விட்டன. இந்த இரண்டு பகுதிகளும், கூபாவின் ஆளுகையின்கீழ் நியமிக்கப்பட்டிருந்தன. சஅத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவுடன், அஸர்பைஜான் புரட்சி செய்து இஸ்லாமியஆட்சியின் கீழ் இருந்து விலகிக் கொண்டது. உஸ்மான் (ரழி) அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மீண்டும், அஸர்பைஜான் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது.

முஆவியா (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுது, சிரியாவின் கவர்னராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். பைஸாந்தியத்தின் கீழ்அனாடோலியா இருந்து வந்தது. ஹிஜ்ரி 26 ன் பொழுது, அனடோலியாவின் மீதுபடையெடுத்த முஆவியா (ரழி) அவர்கள், அதன் அமூரியா என்ற நகரத்தைக் கைப்பற்றினார்கள். அதனை அடுத்து உள்ள பிரதேசத்தையும் கைப்பற்ற நினைத்த முஆவியா (ரழி) அவர்களுக்கு, தரை மார்க்கம் வழியாக முன்னேறுவது மிகவும்சிரமமாக இருந்தது. எனவே, அத்துடன் தனது படையெடுப்பை நிறுத்திக்கொண்டார்கள்.

ஹிஜ்ரி 28 ஆம் ஆண்டு, கப்பலுடன் கூடிய கப்பற் படை ஒன்றை முஆவியா (ரழி)அவர்கள் நிறுவினார்கள். எகிப்தின் கவர்னரும், முஆவியா (ரழி) அவர்களும்இணைந்து கொள்ள, இரு கப்பற்படையும் சைப்ரஸிற்குள் நுழைய ஆரம்பித்தது.சைப்ரஸ் தீவு மக்கள் மிகவும் தீரத்துடன் போராடியும் முஸ்லிம்களை வெற்றிகொள்ள இயலவில்லை. இறுதியில் முஸ்லிம்களுடன் சமரச ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். சைப்ரஸ் தீவைப் பாதுகாப்பது முஸ்லிம்களின் பொறுப்பில் வந்ததுடன், இன்னும் சைப்ரஸ் தீவை முஸ்லிம்களின் படைத்தளமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு மத்திய தரைக்கடல் பகுதியின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்தஆரம்பித்த முஆவியா (ரழி) அவர்கள், மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கான திட்டமிடுதலில் இறங்கினார்கள்.

அரபுலக வரலாற்றில் ஹிஜ்ரி 31 ல் முதன் முதலாக கடல் போர் நடந்தது. அப்பொழுது கான்ஸ்டான்டின்நோபிளை தலைநகராகக் கொண்டு பைஸாந்திய மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். அவர் முஸ்லிம்களின் கைவசம் இருந்த எகிப்தின் அலெக்ஸாண்டிரியா நகரைக் கைப்பற்றியே தீருவேன் என்று சூளுரைத்திருந்தார். அதன் அடிப்படையில் 500 போர்க் கப்பல்களுடன் பைஸாந்தியத்தை விட்டு படைகள் அலெக்ஸாண்டிரியாவை நோக்கிக் கிளம்பின.இதனைக் கேள்விப்பட்ட முஸ்லிம்கள் பைஸாந்தியப் படைகளை தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, முதன் முதலாக கடல் போரில் குதித்தனர்.

முஆவியா (ரழி) அவர்களின் படை சிரியாவிலிருந்தும், அப்துல்லா பின் ஜர்ராஹ் (ரழி) அவர்களின் படை எகிப்தில் இருந்தும் கிளம்பியது. பைஸாந்தியப் படைகள் அலெக்ஸாண்டிரியாவை அடைவதற்கு முன்பே அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் படைகள் கிளம்பின. இரண்டு படைகளும் நடுக்கடலில் எதிரிப்படைகளைச் சந்திக்கும் முன்பே சந்தித்துக் கொண்டன. இணைந்து கொண்டன.போர் மிகவும் கடுமையாக நடைபெற்றது.

முஸ்லிம்களுக்கு இதுவே முதல் போராக இருந்தாலும், அவர்கள் எதிலும் நாங்கள் முன்னணி வகிக்கக் கூடியவர்கள் தான் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். அந்தப் பகுதியின் கடல் நீர் தனது நீலத் தன்மையை மாற்றிக் கொண்டு, சிவப்பாகக் காட்சி அளிக்க ஆரம்பித்தது. எங்கும் பைஸாந்தியப் படைகளின் இறந்த உடல்கள் தான் மிதந்து கொண்டிருந்தன. இருப்பினும் பைஸாந்தியப் படைகள் தங்களது நிலைகளை விட்டுக் கொடுக்காமல் போராடிக் கொண்டிருந்தார்கள்.இறுதியில் எதிரிப் படைகள், சிசிலித் தீவினில் அடைக்கலம் புகுந்து கொண்டார்கள். முஸ்லிம்கள் வெற்றியுடன் நாடு திரும்பினார்கள். ஹிஜ்ரி 31 ல்ஆரம்பித்த இந்த வலுவான கடற்படை, தனது ஆதிக்கத்தை 16 ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருந்தது. அதன் பின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, இந்தக் கடற்படை பலமிழக்க ஆரம்பித்தது.

உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த உள்நாட்டுக் குழப்பம் ஆரம்பமானது. இயற்கையிலேயே உஸ்மான் (ரழி) அவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவராக இருந்தார்கள். பிறருடையகுறைகளை அவர் அதிகம் பெரிது படுத்திக் கொள்வதில்லை. இதனால், தவறு செய்வது என்பது பிரதேசக் கவர்னர்களிடம் கூட மலிந்து வந்தது. உமர் (ரழி) அவர்களைப் போன்றதொரு மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் திறனற்ரவராக உஸ்மான் (ரழி)அவர்கள் திகழ்ந்தார்கள். இதனால், மீண்டும் ஈரானும், பைஸாந்தியமும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சூழ்நிலை உருவானது. இது உஸ்மான் (ரழி) அவர்களின் இயலாமையைப் பெரிதாகப் பறைசாற்ற ஆரம்பித்தது. இதன் விளைவுஒவ்வொரு பகுதியின் தலைநகரிலும் எதிரொலித்தது. ஆங்காங்கே, அமைதியற்ற தன்மை தொடர்ந்தது. சில சுயநலமிகள் குழப்பங்களை தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் சாதனமாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அப்துல்லா பின் சபா, என்றொரு யூதன் அல்லது யமன் தேசத்தைச் சேர்ந்தவன் தான் அரேபியாவின் முழுக் குழப்ப நிலைக்கும் காரண கர்த்தாவாகத் திகழ்ந்தான். அதிருப்தியும், அமைதியின்மையும் இஸ்லாமிய சாம்ராஜ்யமெங்கும் பரவஆரம்பித்தன. இதன் எதிரொலி இப்பொழுது மதீனாவிலும் ஒலிக்க ஆரம்பித்தது. மிகப்பிரபலமான நபித்தோழர்கள் பலர், நிலைமையின் விபரிதம் முற்றுவதற்குள் ஏதாவதுசெய்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும்படி உஸ்மான் (ரழி) அவர்களைவேண்டிக் கொண்டார்கள். உஸ்மான் (ரழி) அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.ஹிஜ்ரி 34 ன் பொழுது நடைபெறவிருக்கின்ற ஹஜ்ஜுக்கு வருகின்ற அனைத்துகவர்னர்களும், மதீனாவில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கலீபா உஸ்மான் (ரழி)அவர்கள் அனைத்து கவர்னர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிவைக்கின்றார்கள்.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் நிலவக் கூடிய அமைதியின்மைக்கான காரணம் யாது? உஸ்மான் (ரழி) அவர்கள் கவர்னர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கின்றார்கள்.

இது சூழ்ச்சியாளர்களின் சதி வலையினால் பின்னப்பட்டது என்ற பதில் வருகின்றது. இந்தச் சதியாளர்கள் ஆட்சித்தலைவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் சேற்றை வாறி இறைக்கின்றார்கள். இன்னும், இந்த அரசைத் திட்டமிட்டு கவிழ்க்கும் சதியிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? உஸ்மான் (ரழி) அவர்களிடமிருந்து மீண்டும் கேள்வி பிறக்கின்றது.

பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆனால் இதில் அனைவரும் ஒன்றை மட்டும் அதிகமாக வலியுறுத்தினார்கள். சதிவலைகள் பின்னக் கூடியவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றே அனைவரும் ஒருமித்துக் கூற ஆரம்பித்தார்கள். இதற்குஉஸ்மான் (ரழி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியாக கவர்னர்களுக்குஆற்றிய உணர்ச்சி மிக்க உரையில் உஸ்மான் (ரழி) அவர்கள் இவ்வாறுகுறிப்பிட்டார்கள்.

''உங்களது ஆலோசனைக் கேட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த முன்னறிவித்த வன் செயல்களாக இருக்குமோ என்று அச்சம் கொள்கின்றேன். என்னால் இயன்றதை நான் செய்வேன், என்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட வகையில் இரக்கத்தோடும், மன்னிப்போடும் நிலைமையைச் சீர்திருத்த முயற்சிக்கின்றேன், இதன் மூலம் தீமைகளின் வாசல்களை அடைப்பேன். என்னுடைய செயல்களால் அதனை நடத்திக் காட்டுவேன், இதில் நான் எந்தக் குறையையும் மக்களுக்கு வைக்கமாட்டேன். நாளை அல்லாஹ்வைச் சந்திக்கும் பொழுது, மக்கள் என்மீது குற்றம்சுமத்தும் அளவுக்கு நிலைமையை விட்டு வைக்க மாட்டேன். தீமைகள் மிகைக்கும் காலம் நெருங்கி விட்டதாகவே நான் உணர்கின்றேன். இதற்காக உஸ்மான் உயிரை இழந்தால் அது அவருக்கு ஆசிர்வாதங்களாக இருக்கும், அவ்வாறில்லை எனில் அருட்கொடைகளுக்குப் பதிலாக சாபங்களைத் தான் பெற்றுத் தரக் கூடியதாகஇருக்கும்”.

மாநாடு நிறைவுற்றதுடன், அனைத்துக் கவர்னர்களுக்கும் உஸ்மான் (ரழி) அவர்கள் பிரியா விடை கொடுத்தார்கள். அப்பொழுது, இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே..! என்றழைத்த முஆவியா (ரழி) அவர்கள் “இந்த மதீனா நகரம் உங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் என்னுடன் சிரியாவுக்கு வருவது நல்லது” என்று கூறினார்கள். ''என்னுடைய தலை துண்டாடப்படினும் சரி.., என்னால் வர முடியாது””, எந்த விலைகொடுப்பினும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நெருக்கத்தை விட்டும் என்னால் வரஇயலாது, என்று பதிலளித்த உஸ்மான் (ரழி) அவர்கள் மதீனாவை விட்டு விட்டுநான் வர மாட்டேன் என்றார்கள்.

மதீனாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு கூஃபாவிற்குத் திரும்பிய கவர்னரை, கூஃபாவிற்குள் அனுமதிக்க மறுத்தார்கள், கூஃபா வில் இருந்த சதியாளர்கள். அவர்கள் அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்கள் தான் தங்களது கவர்னராக வரவேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள். இவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கலீஃபா அவர்கள், அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களையே கூஃபாவின் கவர்னராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள்.

தங்களது முதல் சதியில் வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த சதித்திட்டங்களை நிறைவேற்ற முனைப்புடன் களமிறங்கினார்கள். இப்பொழுது இஸ்லாமிய சாம்ராஜ்யமெங்கும் பரவி இருந்த இந்த சதியாளர்களின் கூட்டம் மதீனாவில் ஒன்றுகூடுவது என்று முடிவெடுத்தது. தலைநகரில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும்எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காகவே அந்தந்தப் பகுதியின் தலைவர்கள் அனைவரும் மதீனாவில் ஒன்று கூடினார்கள்.

கலீபா பதவியையும் விட்டும்நீங்கள் கீழிறங்க வேண்டும் என்றார்கள் கலவரக்காரர்கள். கலவரக்காரர்களது கோரிக்கையை உஸ்மான் (ரழி) அவர்கள் நிராகரித்தார்கள். அல்லாஹ் என்மீது சுமத்திய சுமையை, அவனது அளித்த கண்ணியமிக்க பணியை நான் என்றைக்கும் நானாகவே கீழிறக்கி வைக்க முடியாது என்று கூறி விட்டார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்களின் வீட்டின் மீதான முற்றுகையை இப்பொழுது இறுக்கமாக்கிட ஆரம்பித்தார்கள். உஸ்மான்(ரழி) அவர்கள் முன்பு போல் சுதந்திரமான முறையில் வெளியில் வந்து போக அனுமதிக்கப்படவில்லை. பள்ளிவாசலுக்குக் கூட செல்ல அனுமதிக்கப் படவில்லை. இப்பொழுது ஆமிர் காஃபிகி என்பவர் தொழுகையைத் தலைமையேற்று நடத்த ஆரம்பித்தார். இப்பொழுது மதீனா நகரமே கலவரக்காரர்களின் பிடிக்குள் வந்து விட்;டது. உஸ்மான் (ரழி) அவர்களின் வீட்டிற்குள் உணவு மற்றும் அத்தியாவசியப் பண்டங்களைக் கூட கொண்டு போக இப்பொழுது அவர்கள் அனுமதிக்க மறுத்தார்கள். இறுதியாக தண்ணீரைக் கூட உள்ளேகொண்டு போக தடை விதித்தார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்கள் ஆளுநர்களுக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் மூலம் நிலமையின் விபரிதத்தை உணர்ந்த சிரியா மற்றும் பஷராவின் கவர்னர்கள் அவரச உதவிப் படையினை அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை மதீனாவை அடையுமுன்பே, உஸ்மான் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 35 துல்ஹஜ் 18 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள். இந்த செய்தியை அறிந்து கொண்ட மாத்திரத்திலேயே உதவிப்படைகள், மீண்டும் தங்கள் தங்கள் பகுதிக்குத் திரும்பி விட்டன. இன்னும் இமாம் ஹஸன் (ரழி) அவர்களும், இன்னும் சிலரும் கலவரக்காரர்களுக்கு எதிராக ஆயுதமேந்துவதற்காக உஸ்மான் (ரழி) அவர்களிடம் அனுமதி கோரிய பொழுது, அனுமதி மறுத்த உஸ்மான் (ரழி)அவர்கள் தன்னுடைய வீட்டை விட்டும் வெளியேறிச் சென்று விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில், இறைவனது கட்டளை என்னவாக இருக்குமோ, அதனை தவிர்த்து விடுவதற்கு உஸ்மான்(ரழி) அவர்கள் விரும்பவில்லை. மாறாக, இறைவன் நாடியது நடக்கட்டும் என்று எண்ணியதோடல்லாமல், தன்னால் ஒரு உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர்கள், தன்னுடைய இன்னுயிரையே விலையாகத் தர முன்வந்தார்கள். இந்த நிலையில் உதவிக்கு வந்தபடைகள் கூட, உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டன. இதனையும் கூட கலவரக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டு, 'பாருங்கள், பல்வேறு பகுதிகளுக்கு உஸ்மான் (ரழி) அவர்கள் தன்னுடைய உறவினர்களேயே கவனர்ராக நியமித்திருந்த போதிலும், இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் கூட அவர்கள் இவருக்கு உதவ முன்வராத அளவுக்கு, இவர் மக்களிடம் செல்வாக்கற்றவராக இருந்திருக்கின்றார் என்று ஏளனமாகக் குறிப்பிட்டார்கள். இஸ்லாத்தின் உன்னதம் வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிரையே இழக்க முன் வந்தார்கள் உஸ்மான் (ரழி) அவர்கள். இறைவா! உன்னுடைய கருணையின் நிழலின் கீழ் வாழக் கூடிய வாய்ப்பை அவர்களுக்கு வழங்கிடுவாயாக..!

உஸ்மான்(ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பும் திருப்தி அடையாத கலவரக்காரர்கள், மேலும் மேலும் அவர் மீது வஞ்சகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பினர். அவரது உடலையும் சிதைக்க விரும்பினார்கள். இன்னும் அவரது உடலை அடக்கம் செய்வதற்குக்கூட அனுமதிக்க மறுத்தனர். கலவரக்காரர்களில் சிலர் உஸ்மான்(ரழி) அவர்களின் உடலை சிதைக்க முயன்ற பொழுது, உஸ்மான்(ரழி) அவர்களின் விதவை மனைவியர்கள் தங்களது கணவரது உடல் மீது விழுந்து, உரத்துக்குரல் எழுப்பினார்கள். அவர்களது அபயக் குரழின் ஓசையானது, கலவரக்காரர்களை சற்றுத் தள்ளியே நிற்க வைத்தது. இந்த நிலையில், உஸ்மான்(ரழி) அவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்து விடக் கூடாது என்ற முடிவில் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தனர் கலவரக்காரர்கள்.

இறந்த உடல் அடக்கம் செய்யப்படாமல், மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது, உஸ்மான்(ரழி) அவர்களது மனைவி, உஸ்மான் (ரழி) அவர்களின் ஆதரவாளர்களை அணுகி, உடலை அடக்கம் செய்வதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். அவர்களது அழைப்பிற்கு மிகச் சிலரே செவிமடுக்கின்றார்கள். அவர்களில் மர்வான் பின் ஹகம், ஸைத் பின் தாபித் (ரழி), ஹுவாதிப் பின் அல்ஃபராஅ, ஜாபிர் பின் முத்அம், அபூ ஜஹ்ம் பின்ஹுதைஃபா, ஹாகிம் பின் ஹஸம் மற்றும் நியார் பின் முகர்ரம் ஆகியோர்களாவார்கள். மாலை மங்கும் நேரத்தில் உடல் எடுக்கப்பட்டது. வீட்டைச்சுற்றிலும் முற்றுகை இருந்ததன் காரணமாக, ஜனாஸாவை எடுத்துச் செல்லப் பயன்படும் கூடு பயன்படுத்தப் படவில்லை. தண்ணீர் கிடைக்காததன் காரணமாக உடலும் கழுவப்படவில்லை. அவர் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் அணிந்திருந்த ஆடையுடன் மைய வாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

உஸ்மான் (ரழி) அவர்களது உடல் ”பகீஃ அல் ஃபர்கத்” என்னும் அடக்கத்தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கூடிய கலவரக்காரர்களில் சிலர், முஸ்லிம்களை அடக்கப் பயன்படும் அடக்கத்தளமாகிய இதில் கூட அவரை அடக்கம் செய்யக் கூடாது என்று அவர்கள் கலவரம் செய்ய ஆரம்பித்தார்கள். வேறு வழியின்றி உஸ்மான் (ரழி) அவர்களின் உடல்அருகில் உள்ள யூதர்களின் அடக்கத் தளமாகிய ''ஹுஷ் கவ்கப்” என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கேயே அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸாத் தொழுகையை ஜாபிர் பின் முத்ஆம் (ரழி) அவர்கள் முன்னின்று நடத்தினார்கள்.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...

Umar RA

அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Kathija

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuSalama

உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ali RA

அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sawdha

உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuHabiba

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sabiya

உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

zuvairiya

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.