இந்தியாவின் இயற்கை விஞ்ஞானி சலீம் அலி
சலீம் மொய்ஜுத்தீன் அப்துல் அலி (Salim Moizuddin Abdul Ali) (12 நவம்பர் 1896 – 20 ஜுன் 1987) அவர்கள் உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார்கள். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான விபரங்களைத் தொகுத்து ஆராய்ச்சி செய்தவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக்(Bombay Natural History Society)கழகத்தின் முக்கிய நபராக விளங்கியவர், 1947இல் இவருடைய சுய முயற்சியால் இந்திய அரசின் கனிவு பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்திற்கு கிடைத்தது, எனவே அதிகமான பறவைகள் சரணாலயங்கள் தோன்றின. சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர். பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். இவரை பறவையியல் உருவாக்க உதவிய இயற்கை ஆர்வலர் என்றும் இந்தியாவின் ”பறவை மனிதர்” "Birdman of India" என்றும் அழைக்கின்றனர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.
இளமை வாழ்வு
பம்பாயில் சுலைமானி போஹ்ரா (Sulaymani Bohras) குடும்பத்தில் மொய்ஜுத்தீன் மற்றும் ஜீனத்துன் நிஷா இவர்களின் ஒன்பதாவது மற்றும் கடைசி குழந்தையாக பிறந்தார். இவர் பிறந்து ஒரு வயதில் தந்தையையும், மூன்று வயதில் தாயையும் இழந்து, தனது தாய் வழி மாமா அமிருத்தீன் தையப்ஜீ அவரது குழந்தையில்லா மனைவி ஹமீதா பேகம் ஆகியோரிடம் நடுத்தரமான குடும்பத்தில் பம்பாயில் கேத்வாடி என்ற பகுதியில் வளர்ந்தார்.
சலீம் தனது இரண்டு சகோதரிகளுடன் ஜெனானா பைபிள் & மருத்துவ மிஷன் நடத்தும் குயின் மேரி ஸ்கூலில் கல்வி கற்றார். பின்னர் பம்பாயின் புனித சேவியர் கல்லூரிக்கும் சென்றார். 13 வயதில் அவர் தலைவலியால் அவதிப்பட்டார், இதனால் அவர் அடிக்கடி வகுப்பிலிருந்து இடைநிற்றலுக்கு ஆளானார். வறண்ட காற்று உதவக்கூடும் என்று நினைத்து ஒரு மாமாவுடன் தங்குவதற்காக அவர் சிந்துக்கு அனுப்பப்பட்டார், மேலும் படிப்புகளில் இத்தகைய இடைவெளிகளுக்குப் பிறகு திரும்பி வந்த அவர், 1913 இல் பம்பாய் பல்கலைக்கழகத்தின் மெட்ரிகுலேஷன் தேர்வில் உடனே தேர்ச்சி பெற முடியவில்லை.
ஆரம்பகால அலியின் ஆர்வம் இந்தியாவில் வேட்டை பற்றிய புத்தகங்களில் இருந்தது, மேலும் அவர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டினார், இது அவரது வளர்ப்பு தந்தை அமிருதீனால் ஊக்குவிக்கப்பட்டது. இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு சிட்டுக் குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் வளர்ப்பு தந்தையிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் உறுப்பினராக இருந்ததால், அந்த பம்பாய் இயற்கை வரலாற்றுக்(Bombay Natural History Society)கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த W.S.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார்.
மில்லர்ட் பறவைகளை எவ்வாறு அறிந்து கொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலிக்கு தெரிவித்து அது சம்பந்தமான புத்தகங்களையும் படிக்க வழங்கினார். அப்பொழுதிலிருந்து சலீம் அலிக்கு பறவைகள் மீது தீராத நாட்டம் பிறந்தது. அவர் தனது 10 வயதிலேயே பறவைகள் பற்றி டைரியில் குறிப்புகள் எழுத தொடங்கி விட்டார். பின்பு கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் சகோதரனுக்கு தொழிலில் உதவுவதற்காக இடையில் பர்மா சென்று விட்டார். அங்குச் சென்று தமையனுக்கு காட்டில் சுரங்கத்தில் தாது பொருட்களை எடுக்க உதவுவதை விட அங்கு காட்டில் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் 1917இல் மீண்டும் சலீம் அலி பம்பாய் திரும்பினார்.
பின்னர் சலீம் அலி முறையான படிப்பைத் தொடர முடிவு செய்தார். டாவர்ஸ் வணிகக் கல்லூரியில் வணிகச் சட்டம் மற்றும் கணக்கியல் படிக்க சென்றார், ஆனால் அவரது உண்மையான ஆர்வத்தை புனித சேவியர் கல்லூரியில் ஃபாதர் எத்தேல்பர்ட் பிளாட்டர் கவனித்தார், அவர் அலியை விலங்கியல் படிக்க தூண்டினார். எனவே டாவர்ஸ் கல்லூரியில் காலை வகுப்புகளில் கலந்து கொண்ட பின்னர், புனித சேவியர் கல்லூரியில் விலங்கியல் வகுப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார், மேலும் விலங்கியல் பாடத்திட்டத்தை அவரால் படித்து முடிக்க முடிந்தது.
திருமண வாழ்க்கை
சலீம் அலியின் 18-ஆவது வயதில், 1918 திசம்பரில் சலீம் அலிக்கும், அவரது தூரத்து சொந்தகார பெண் தெஹ்மினா(Tehmina)வுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலீம் அலி வேலையின்றி வாடினார். ஆனால் அவரது மனைவி தெஹ்மினா பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு அவரைத் தாக்கவில்லை. வேலையின்றி இருந்த நாட்களில் சலீம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார்.
அவரது மனைவி தெஹ்மினா அவரது ஆரம்பகால ஆய்வுகளில் அவருடன் சேர்ந்து ஆதரவளித்தார், மேலும் 1939 ஆம் ஆண்டில் ஒரு சிறிய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவர் இறந்தபோது சலீம் அலி மிகவும் கவலை அடைந்தார். பிறகு, சலீம் அலி தனது சகோதரி கமூ மற்றும் மைத்துனருடன் அவரது வீட்டில் தங்கினார்.
ஆரம்ப கால வேலைகள்
இந்திய அரசு விலங்கியல் கணக்கெடுப்பிற்கு ஒரு பறவையியலாளர் பதவிக்கு ஆள் கோரிய போது சலீம் அலி முயற்சித்து அவருக்கு கிடைக்கவில்லை. மும்பையில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் புதிதாக திறக்கப்பட்ட இயற்கை வரலாற்று பிரிவில் வழிகாட்டி விரிவுரையாளராக ஒரு மாதத்திற்கு ரூ. 350 சம்பளமாக 1926 ஆம் ஆண்டில் பணி கிடைத்து பணியாற்றினார். இந்த பணியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சோர்வடைந்து 1928 இல் ஜெர்மனியில் படிப்பதற்காக விடுப்பு எடுத்தார்,
ஜெர்மனியில் பேர்லினின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பேராசிரியர் எர்வின் ஸ்ட்ரெஸ்மேனின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் 1930 இல் இந்தியா திரும்பினார். இங்கு பழைய வழிகாட்டி விரிவுரையாளர் பணியும் கிடைக்கவில்லை. சிறிது காலம் வேலை யில்லாமல் இருந்தார். சலீம் அலி மொகலாய பேரரசர்கள் நல்ல இயற்கை ஆர்வலர்கள் அவர்களின் பாரம்பரியத்திலேயே இயற்கை ஆர்வம் அவர்களுக்கு இருந்தது என்று ஆய்வு செய்து பாராட்டி மூன்று தொடர் பகுதிகளாக எழுதினார். கோத்தகிரியில் ஒரு சில மாதங்கள் ஒரு டாக்டரின் அழைப்பின் பேரில் தங்கினார். அது சமயம் முறையான பறவைகள் கணக்கெடுப்பு செய்யும் வாய்ப்பு தனி மன்னராட்சி நடந்த ஹைதராபாத், கொச்சின், திருவாங்கூர், குவாலியர், இந்தூர், மற்றும் போபால் ஆகிய மாநிலங்களில் அந்த அந்த ஆட்சியாளர்களின் பங்களிப்பு ஆதரவுடன் கிடைத்தது.
பறவைகளின் ஆராய்ச்சி
சலீம் அலி பறவைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். பறவைகளைப் பற்றியும் அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்த பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சலீம் அலியின் வழக்கம். இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கைநூல் (The HandBook on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார். இந்தியப் பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத நூல் இது. இந்நூல் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
சலீம் அலி பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றி, வாழ்க்கையாகவே மேற்கொண்டிருந்தார். மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்தார். அவைகள் 1) பரத்பூர், 2)மேற்குத் தொடர்ச்சி மலைகள், 3) கிழக்குத் தொடர்ச்சி மலைகள், 4) இமாலய மலைகள், 5) கிழக்கு இமாலய மலைகள், 6) இராஜஸ்தானின் பாலைவனங்கள், 7) பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பனிச் சிகரங்கள், 8) மியான்மர், 9) நேபாளம், 10) தக்கான பீடபூமி என தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் மிகப் பெரும் சாதனைகளைப் புரிந்தார்.
மரியாதைகள் மற்றும் விருதுகள்
சலீம் அலி அவர்களுக்கு அங்கீகாரம் தாமதமாக வந்தாலும், அவர் பல கெளரவ டாக்டர் பட்டம் மற்றும் ஏராளமான விருதுகளைப் பெற்றார். முதலில் 1953 இல் "Joy Gobinda Law Gold Medal" என்பதை ஆசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கால் மூலம் வழங்கப்பட்டது. 1970 இல் இந்தியன் நேஷனல் சாயின்ஸ் அகாடமி வாயிலாக ”Sunder Lal Hora memorial Medal ” வழங்கி கெளரவிக்கப் பட்டது. 1958 இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும், 1973 இல் டெல்லி பல்கலைக்கழகமும், 1978 இல் ஆந்திரா பல்கலைக்கழகமும் சலீம் அலிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தனர்.
முதல் முறையாக பிரிட்டிஷ் குடியுரிமை இல்லாத இவருக்கு 1967 இல் பிரிட்டிஷ் பறவையியல் கழகம் (British Ornithologists' Union) தங்க பதக்கம் (Gold Medal) அளித்தது. அதே ஆண்டு 1967 ஜே. பவுல் கெட்டி வனவிலங்கு பாதுகாப்பு பரிசு (J. Paul Getty Wildlife Conservation Prize) ஒரு லட்சம் டாலர் ($1,00,000) வழங்கி கெளரவித்தனர். சலீம் அலி ஒரு லட்சம் டாலரை இயற்கை பாதுகாப்பு நிதியத்திற்கான பயன்படுத்தினார். மேலும் 1969இல் இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature and Natural Resources) John C. Phillips memorial medal ஜான் சி. பிலிப்ஸ் நினைவு பதக்கம் வழங்கி கெளரவித்தது. யு.எஸ்.எஸ்.ஆர் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் 1973 இல் பாவ்லோவ்ஸ்கி நூற்றாண்டு நினைவு பதக்கம் வழங்கியது. அதே ஆண்டு அவர் நெதர்லாந்தின் தளபதியாக நெதர்லாந்தின் இளவரசர் பெர்ன்ஹார்ட் அவர்களால் Order of the Golden Ark என்பது வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டார். நமது இந்திய அரசு அவருக்கு 1958 இல் பத்ம பூஷன் என்ற விருதையும் 1976இல் பத்ம விபூஷன் என்ற விருதும் வழங்கி கெளரவித்தது. 1985 இல் இந்திய பாராளுமன்றத்தில் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டில் இந்திய போஸ்டல் துறை சார்பாக தபால் தலை வெளியிட பட்டது.
மறைவு
பறவையியல் உருவாக்க உதவிய இயற்கை ஆர்வலர் மற்றும் இந்தியாவின் ”பறவை மனிதர்” சலீம் அலி அவர்கள் தமது 90ஆவது வயது வரை நல்ல ஆரோக்கியமாக இருந்தார். இயற்கை சூழ்நிலை காக்க போராடிய இந்தியாவின் இயற்கை விஞ்ஞானி 1987 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாள் புரோஸ்டேட் (prostate) சுரப்பி புற்றுநோயால் இயற்கை எய்தினார்கள். by முதுவை ஹுமாயூன் 18-09-2020
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.