Home


அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி)

ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி) (கி.பி.605- கி.பி.665)அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவர்.  இஸ்லாத்தின் அடிப்படையில் “உம்முஹாத்துல் முஃமினீன்” (இறை நம்பிக்கையாளர்களின் அன்னையர்) என்றும் அழைக்கப்படுபவர். இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா ஆட்சித் தலைவரான உமர் பின் கத்தாப் (ரழி)அவர்களின் மகள் தான் அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி) அவர்கள். அன்னையவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை மிகவும் பேணுதலுடன் பின்பற்றும் பெண்மணியும், இன்னும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதிலும், நோன்பு நோற்பதிலும் அன்னையவர்கள் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் இளமைக் காலத்தின் பொழுது, இன்னும் அவர்களுக்கு நபிப்பட்டம் வழங்காதிருந்த பொழுது, கஃபாவை புனர்நிர்மாணம் செய்தவற்காக குறைஷிகள் திட்டமிட்டனர். இந்த திட்டமிடலில் யார் கஃபாவின் கருப்புக்கல்லை எடுத்துவைப்பது என்ற சர்ச்சையில், பல காலங்கள் அவர்களுக்குள் போர்களும் நடந்தன. பல உயிர்கள் குடிக்கப்பட்டன. இந்த சர்ச்சையை நபி (ஸல்)அவர்கள் எளிதாகத் தீர்த்து வைத்த கி.பி.605ஆண்டில் மக்கா நகரில் குறைஷிகளில் மிக முக்கியமான உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களுக்கும் அவரது இரண்டாவது மனைவி ஜைனப் பின் மாஸியுன்(ரழி) அவர்களுக்கும் மகளாகப் பிறந்தார்கள். மேலும் இவர்களுக்கு அப்துல்லா என்ற மகனும் பிறந்தார்கள். அப்துல்லா பின் உமர் (ரழி) அவர்களை, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த நற்பண்புள்ளவர் என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மிகச் சிறந்த தோழரான உமர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வியான படியால், இளமையிலேயே இறையச்சமிக்க நற்குணமுள்ள பெண்மணியாக வார்த்தெடுக்கப்பட்டார்கள். அன்னையவர்கள் சற்று பருவம் எய்திய காலத்தில் இஸ்லாத்தில் வெளிச்சப் புள்ளிகள் மக்காவை ஒரு சேர தழுவிக் கொண்டிருந்த காரணத்தினால், அன்னையவர்கள் இளமைச் சூழல் முழுக்க முழுக்க இஸ்லாமியச் சூழலில் வார்த்தெடுக்கப் பட்டிருந்தது. இந்த கால கட்டத்தில் உமர் (ரழி) அவர்களும், அன்னையவர்களின் தாயும், இன்னும் சிறிய தந்தையர்கள், மாமன்மார்கள் என அனைவரும் இஸ்லாத்தினை வாழ்வியல் நெறியாக ஏற்றிவிட்டிருந்ததும், இந்த இஸ்லாமியச் சூழல் உருவாகக் காரணமாக இருந்தது. இன்னும் அன்னையவர்கள் பருவமெய்திய பின், ஹானீஸ் பின் ஹஸஃபா ஸெஹ்மி (ரழி)என்ற நபித்தோழருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள். இவர் அபுபக்கர் (ரழி) அவர்களின் அழைப்பின் தாக்கத்தின் காரணமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராவார்.

அன்னையவர்களின் கணவர் ஹானீஸ் பின் ஹஸஃபா ஸெஹ்மி(ரழி) அவர்கள் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டதை அறிந்த மக்கத்துக் குறைஷிகள் மற்ற நபித்தோழர்களுக்கு எந்தளவு தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்தார்களோ, அது போலவே பல கொடுமைகளை இவர் மீதும் கட்டவிழ்த்து விட்டார்கள். எனவே, அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற குழுவினரில் இவரும் ஒருவராக இணைந்து கொண்டார். அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற ஹானீஸ் பின் ஹஸஃபா ஸெஹ்மி (ரழி) அவர்களுக்கு வீட்டு ஞாபகம் அதிகம் வந்ததன் காரணமாக, மீண்டும் தான் பிறந்து வளர்ந்து வாலிபமாகிய மக்காவிற்கே திரும்பி வந்து விட்டார்கள். மிக நீண்ட காலம் மக்காவை விட்டு அபீசீனியாவில் தங்கியிருந்து, அதன் பின் மக்காவிற்குத் திரும்பி வந்த போதிலும், முஹம்மது (ஸல்) அவர்களது தூதுத்துவத்திற்கு எதிரான குறைஷிகளின் தாக்குதல்கள் குறைந்த பாடில்லை. இந்த கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்து செல்லும்படி அறிவுறுத்தவே, அவ்வாறு ஹிஜ்ரத் செய்து செல்பவர்களின் குழுவில் ஹானீஸ் பின் ஹஸஃபா ஸெஹ்மி (ரழி) அவர்களும் ஒருவராகக் கலந்து கொண்டு, மதீனாவை நோக்கி தனது மனைவியுடனேயே ஹிஜ்ரத் செய்தார்.

இவரை அப்துல் மன்ஸர் (ரழி) அவர்கள் வரவேற்று தனது இல்லத்தில் தங்க வைத்துக் கொண்டார்கள். இன்னும் இதற்குப் பின் நபி(ஸல்) அவர்களும், மக்காவில் நிறைவேற்ற வேண்டிய சில பொறுப்புக்களுக்கு அலி (ரழி) அவர்களை நியமித்து, தானும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்து விட்டார்கள். மதீனாவை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் தனது முதல் பணியாக மக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்த முஹாஜிர்களையும், சொந்த பூமியின் மைந்தர்களும் உதவியாளர்களுமாகிய அன்ஸார்களையும் ஒரு குடும்பத்து மக்களாக இணைத்து வைத்து, சகோதர பாசத்தை விதைத்தார்கள். அவ்வாறு சகோதரர்களாக்கப் பட்டவர்கள் தான் நமது ஹானீஸ் பின் ஹஸஃபா ஸெஹ்மி (ரழி) அவர்களும், அபூ அப்பாஸ் பின் ஜாபர் அன்சாய் (ரழி) அவர்களும். இருவரும் மிகச் சிறந்த குதிரை ஏற்ற வீரர்கள். இன்னும் இருவரும் மிகச் சிறந்த படைவீரர்களுமாவார்கள்.

மதீனாவின் சூழல் புதிதாக இருந்தாலும், அடக்குமுறை, ஒடுக்குமுறை, இன்னும் அச்சுறுத்தல்கள் ஆகிய அனைத்தும் நீங்கி, நிம்மதிப் பெருமூச்சு விட்டவாழ்க்கையை, புதியதொரு வாழ்வை ஹானீஸ் (ரழி) அவர்களும், இன்னும் ஹஃப்ஸா (ரழி) அவர்களும் அனுபவித்தார்கள். ஹஃப்ஸா (ரழி) அவர்கள் அவ்வப் பொழுது இறங்கக் கூடிய இறைவசனங்களை மனனமிடக் கூடியவர்களாகவும், இன்னும் அதன் அர்த்தம் அதன் விரிவுரை ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

பத்ரு போரில் ஹஃப்ஸா (ரழி) அவர்களின் கணவர் ஹானீஸ் (ரழி) அவர்கள், தந்தையாரான உமர் (ரழி) அவர்கள், மற்றும் தாய் வழி மற்றும் தந்தை வழிச் சொந்தங்களும் முஸ்லிம்களின் அணியில் பத்ருக் களம் நோக்கி வந்திருந்தார்கள். எதிரிகளைக் களம் கண்ட முஸ்லிம்கள், பத்ருப் போரில் தங்களது வீரத்தைக் காட்டினார்கள். அந்த வகையில் நமது ஹானீஸ் (ரழி) அவர்கள் எதிரிகளின் படைகளை ஊடறுத்துச் சென்று தனது வீரத்தைக் காட்டினார். இதன் காரணமாக அவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. எதிரிகளின் பல தலைவர்கள் கொல்லப் பட்டார்கள். போரின் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குக் கிடைத்தது. உலக வரலாற்றில் ஆள் பலமற்ற, ஆயுத பலமற்றதொரு கூட்டம், முழு அளவு தயாரிப்புடன் வந்திருந்த படையை வெற்றி கொண்டதென்பது இந்தப் போரில் தான் என்பது வரலாற்றில் மாற்ற முடியாததொரு நிகழ்ச்சியாகும்.

தனது கணவரின் வீர தீரச் செயல்களைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரழி) அவர்கள் உளம் மகிழ்ந்தார்கள். இன்னும் காயம்பட்ட இந்த நேரத்தில் தனது கணவருக்குப் பணிவிடை செய்து ஒத்தாசையாக இருப்பது அவசியம் எனப்பட்ட பொழுது, பத்ர் யுத்தத்தைப் பற்றி இறங்கிய இந்தக் கீழ்க்கண்ட வசனத்தை ஓதிக் கொண்டார்கள்,

உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (8:10)

அல்லாஹ் வாக்களித்த வெற்றியைக் கண்டு அகமகிழ்ந்த ஹஃப்ஸா (ரழி) அவர்கள், தனது கணவருக்குப் பணிவிடை செய்வதில் அக மகிழ்ந்தார்கள். ஆனாலும் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காயங்கள் ஏற்படுத்திய ரணங்களின் வடுக்கள், அவருக்கு இந்த உலக வாழ்வைக் குறுக்கி வைத்து, மறுமை வாழ்வை நெருக்கி வைத்தது. மிக விரைவிலேயே அவர் மரணித்து, சொர்க்கத்தை நன்மாரயமாகப் பெற்றுக் கொண்டவர்களின் கூட்டத்தில் இணைந்து கொண்டார். ஹஃப்ஸா (ரழி) அவர்களின் கணவர் இறந்த செய்தியைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் மிக கவலை அடைந்தவர்களாக, அவர்களை ஜன்னத்துல் பக்கீயில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்ததுடன், தானே முன்னின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தனது கணவரை இழந்த ஹஃப்ஸா (ரழி) அவர்கள், கவலை தோய்ந்திருந்தாலும் இறைவனின் வல்லமையை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அமைதி காத்தார்கள். முன்னைக்காட்டிலும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தனது நேரத்தை வணக்கத்திலும் இன்னும் இறைவனைப் புகழ்வதிலும் கழித்தார்கள். இந்த நிலையில் ஹஃப்ஸா (ரழி) அவர்களுக்கு 21 வயதே தான் ஆகியிருந்தது.

தனது மகளின் இந்த நிலையைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் வலியின் வேதனையால் துடித்தார்கள். ஹஃப்ஸா (ரழி) அவர்கள் தனக்கேற்பட்ட இந்த சூழ்நிலையின் இறுக்கத்தைத் தணிப்பதற்காக குர்ஆனை ஓதிவதிலும், தொழுவதிலும் கழித்து, தன்னைப் படைத்தவனின் பெருமைகளை நினைவு கூர்வதில் அமைதியைக் கண்ட போதிலும், அந்த அமைதியே அந்த வீட்டில் உள்ளோருக்கு வேதனையைத் தந்து கொண்டிருந்தது. இதுவே ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வாழ்க்கையின் அங்கமாகவும் ஆகி விட்டிருந்தது.

இந்த சமயத்தில் தான் நபி (ஸல்) அவர்களின் மருமகனாரான உஸ்மான் பின்அஃப்பான் (ரழி) அவர்கள் தனது மனைவியும், நபி(ஸல்) அவர்களின் மகளுமான ருக்கையா (ரழி) அவர்களை இழந்திருந்தார்கள். எனவே, ருக்கையா (ரழி) அவர்களின் இடத்தை தனது மகளால் நிரப்ப இயலும், அதற்கு தனது மகள் முற்றிலும் தகுதி வாய்ந்தவர் தானே என எண்ணிய உமர் (ரழி) அவர்கள் உதுமான் (ரழி) அவர்களை அணுகி, தனது மகளை மணந்து கொள்ளும்படி கோரினார்கள். சோகத்தின் இறுக்கத்தில் இருந்த உஸ்மான் (ரழி) அவர்களோ, உமர் (ரழி) அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு, சற்று அமைதி காத்து விட்டு பின்பு கூறினார்கள், உமர் (ரழி)அவர்களே, இது பற்றி சிந்திப்பதற்கு எனக்கு சற்று அவகாசம்தேவைப்படுகின்றது.

         மீண்டும் சில நாட்கள் கழித்து, தனது கோரிக்கையைப் பற்றி சிந்தித்தீர்களா உஸ்மான் (ரழி) அவர்களே, என்று உமர் (ரழி) அவர்கள் கேட்ட பொழுது, நான்இப்பொழுது மணமுடிக்கும் நிலையில் இல்லை என்று கூறி விட்டார்கள்.

பின் அபுபக்ர் (ரழி) அவர்களிடம் சென்ற உமர்(ரழி) அவர்கள், அபுபக்ர் (ரழி) அவர்களே, எனது மகளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள் என்றார்கள். அதனைக் கேட்ட அபுபக்ர் (ரழி) அவர்கள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டவர்களாக எந்தப் பதிலையும் கூற மறுத்து விட்டார்கள். இந்த முழு சம்பவத்தையும் இமாம்புகாரீ அவர்கள் தனது ஹதீஸ் நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

இரண்டு பேரிடமும் கிடைத்த பதில்கள் யாவும், தனது மகளை மணம் செய்து கொள்வதற்கு அவர்கள் மறுக்கவும் இல்லை, முடியாது என்றும் சொல்லவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்த போன உமர் (ரழி) அவர்கள் நேரே தனது ஆருயிர்த்தோழர் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து நடந்த விபரங்களைக் கூறுகின்றார்கள்.

உமரே..! நீங்கள் வருத்தப்படவும் வேண்டாம், கவலைப் படவும் வேண்டாம். உஸ்மான் (ரழி) அவர்களை விடச் சிறந்த துணையை உங்களது மகளுக்கு அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுப்பான். அதுபோல உங்களது மகளை விடச் சிறந்த துணையை அல்லாஹ் உஸ்மான் (ரழி) அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பான் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் திருவதனங்களிலிருந்து நன்மாரயத்தைப் பெற்றுக் கொண்ட உமர் (ரழி) அவர்களுக்கு இப்பொழுது புதுக் கவலை ஒன்று தொற்றிக்கொண்டது, உஸ்மான் (ரழி) அவர்களை விட மிகச் சிறந்த நபர் யாராக இருக்கும்? என்ற கவலை தான்.

சில நாட்கள் கழித்து, தனது மகளான உம்மு குல்தூம் (ரழி) அவர்களை உஸ்மான் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னறிவித்த சம்பவங்களில் ஒன்று இப்பொழுது நடந்து விட்டது, இன்னுமொரு பகுதி தனது மகளைப் பொறுத்து நிறைவேறாமல் இருக்கின்றதே, என்ற வினா இப்பொழுது தொற்றிக் கொண்டு, யார் அந்தப் பெருமகன்? என்ற சிந்தனை உமர் (ரழி) அவர்களைத் தொற்றிக் கொண்டது. உஸ்மான் (ரழி)அவர்களை விடச் சிறந்த அந்த மனிதர் யாராக இருக்கும்?

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரழி) அவர்களைத் தான் மணக்க விரும்புவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்த பொழுது, உமர் (ரழி) அவர்களால் தனது காதையே நம்ப முடியவில்லை, இன்னும் தனது மகள் இறை நம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில் சேர்வதற்காக தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மிகவும் சந்தோசப்பட்டார்கள். ஏற்கனவே ஆயிஷா (ரழி) மற்றும் சௌதா(ரழி) ஆகிய அன்னையர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடிக்கப் பட்டிருந்தார்கள்.

உஹதுப் போருக்கு முன்பாக, கி.பி.625 ஷஃபான் மாதம் ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு நபி(ஸல்) அவர்களுக்கும் அன்னை ஹஃப்ஸா (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இப்பொழுது அன்னையவர்களுக்கு 22 வயது நிரம்பியிருந்தது. தனது மகளை நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பார்க்கும் பொழுதெல்லாம், ஹஃப்ஸாவே..! நீங்கள் ஆயிஷா (ரழி) அவர்களுடன் போட்டி போடாதீர்கள், அவர்கள் உங்களைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தவர்கள் என்று தனது மகளுக்கு அறிவுரை கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் அவர்களுடன் அன்பாகவும், மரியாதையாகவும், பண்பாடாகவும் நடந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

                    அன்னையவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை மிகவும் பேணுதலுடன் பின்பற்றும் பெண்மணியும், இன்னும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதிலும், நோன்பு நோற்பதிலும் அன்னையவர்கள் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்னையவர்கள் மிகச் சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர்களாகவும், இறைவேதமான குர்ஆனை அழகிய தொணியில் ஓதக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

                    குலாபாயே ராஷிதீன் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களின் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட பணியின் போது அதை எழுதி பிரதிகள் உருவாக்கும் பணியில் எழுதக் கூடியவர்களாக அன்னை ஹஃப்ஸா(ரழி) அவர்கள் இருந்துள்ளார்கள்.  திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.

                    நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை நமக்கு அன்னை ஹஃப்ஸா(ரழி) அவர்கள் மூலம் அறுபது  நபிமொழிகள் (ஹதீஸ்கள்) கிடைத்துள்ளது.

                    அன்னை ஹஃப்ஸா (ரழி) அவர்கள் கி.பி.665 ஹிஜ்ரி 45ல் மதீனாவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மதீனாவில் ஜன்னத்துல் பகீஃ என்ற நல்லடக்க பூமியில்  அன்னையவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...

Umar RA

அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Kathija

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuSalama

உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ali RA

அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sawdha

உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

UmmuHabiba

உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sabiya

உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

zuvairiya

உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.