Home


கைருத்தாபியீன் (தாபியீன்களில் சிறந்தவர்)

உவைஸுல் கரனீ

 (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)

        இமாமுல் ஆரிபின் சையதினா ஹல்ரத் உவைஸுல் கரனீ (ரஹ்) அவர்கள் யமன் தேசத்தில் வாழ்ந்து வந்தார்கள். பகல் முழுவதும் ஒட்டகை மேய்த்து, மாலையில் கிடைக்கும் கூலியைப் பெற்று தமது வயது முதிர்ந்த - பார்வையிழந்து விட்ட தாயைப் பராமரித்து வந்தார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘உஹது’ போரில் ஒரு பல் ஷஹீதாகி விட்ட செய்தி கேட்ட உவைஸுல் கரனீ அவர்கள் தமது பற்கள் முழுவதையுமே உடைத்தெறிந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்தும், பெருமானாரவர்களை நேரில் காணாமலேயே தணியாத அன்பும், குறையாத பாசமும் கொண்டு சன்மார்க்கப் பிரச்சாரம் புரிந்து வந்தார்கள்.  வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் ‘கூபா’ நகரில் சிறியதொரு குடிசையில் வந்து தங்கினார்கள். என்னேரமும் இறைவணக்கத்திலேயே ஈடுபட்டிருப்பார்கள். அன்றாடம் கூலி வேலை செய்து கிடைக்கும் வருவாயில் தமது உணவுக்குப் போக எஞ்சியவை அனைத்தையும்  ஏழை எளியவர்க்கும், எத்தீம்களுக்கும் அளித்துதவுவார்கள். ஆண்டவனின் நல்லடியாராக - அவ்லியாவாக, தூற்றிய மக்களால் போற்றிப் புகழப்பட்ட நிலையில் வபாத்தானார்கள்.

ஆரம்ப கால வாழ்வு

        உவைஸுல் கரனீ அவர்கள் யமன் நாட்டிலுள்ள கரன் என்னும் ஊரில் முராத் என்னும் கிளையில் பிறந்தனர். தந்தையின் பெயர் ஆமிர் என்பதாகும். கரன் என்னும் ஊரில் பிறந்ததனால் கரனீ என்னும் சிறப்புப் பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது. இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சம காலத்தவர். எனினும் அவர்களைக் காணும் பேறு பெறவில்லை. எனவே இவர்கள் ஸஹாபாக்களைச் சேர்ந்தவர்களல்லர். தம் அன்னைக்கு ஊழியம் செய்து வந்ததன் காரணமாக இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காண மதீனா வரவில்லை.

        அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காண இவர்கள் மதீனா வந்தனர் என்றும் “அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கண்டு வா!” என்று தம் அன்னை கூறியதற்கேற்ப இவர்கள் அவர்களின் இல்லம் வந்த பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆங்கில்லாததால் காணாது திரும்பி விட்டார்கள் என்றும் மற்றொரு வரலாறு கூறுகிறது.

கைருத்தாபியீன் (தாபியீன்களில் சிறந்தவர்)க்கு அன்பளிப்பு

        இவர்கள் நபிதோழர்களைச் சந்தித்திருப்பதால் தாபியீனே ஆவார். இவர்களைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கைருத்தாபியீன் (தாபியீன்களில் சிறந்தவர்) என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் தம்முடைய உம்மத்துகளில் ரபீஆ, முளர் ஆகிய இரண்டு அரபிக் கிளையினருடைய ஆடுகளின் உரோமங்களின் எண்ணிக்கை அளவு மக்கள் மறுமையில் இவர்களின் பரிவுரையால் சுவனம் புகுவர் என்றும் இவர்களின் வலதுத் தோளின் கீழ்ப்பாகத்திலும் உள்ளங்கையிலும் வெள்ளை வடு இருக்கும் என்றும் உமர் (ரழி) அவர்களும், அலீ (ரழி) அவர்களும் இவர்களைச் சந்திப்பர் என்றும் கூறினர். மேலும் தம்முடைய ஸலாத்தை இவர்களுக்குக் கூறுமாறும் தம்முடைய உம்மத்துக்களுக்காகப் பரிந்துரைக்குமாறு இவர்களிடம் கூறுமாறும் தம்முடைய மேலங்கியை இவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்குமாறும் அறிவித்தார்கள்.

உமர் (ரழி) அவர்களும், அலீ (ரழி) அவர்களும் தேடி கண்டனர்

        அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அபூபக்ர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போதோ இவர்கள் கண்டுபிடிக்கப் பெறவில்லை. உமர் (ரழி) அவர்களின் காலத்தில் தான் யமனிலிருந்து ஹஜ்ஜுச் செய்ய வந்த ஒருவர் மூலமாக இவர்களைப் பற்றி அறிந்து உமர் (ரழி) அவர்களும், அலீ (ரழி) அவர்களும் இவர்களைத் தேடிச் சென்று இவர்களை ஒட்டகத்தை மேயவிட்டுத் தொழுது கொண்டிருந்த நிலையில் கண்டனர். இவர்களின் அங்க அடையாளங்கள் அனைத்தும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கேற்ப இருக்கவே அவர்களின் ஸலாத்தை இவர்களுக்குத் தெரியப் படுத்தி அவர்களின் மேலங்கியை இவர்களுக்கு வழங்கி அவர்களின் உம்மத்துக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுமாறு அவர்கள் கூறிய செய்தியையும் இவர்களிடம் கூறினர்.

இவர்களின் மகத்துவத்தை நன்கு உணர்ந்தனர்

        அவர் தாமாக இல்லாது வேறு உவைஸாக இருக்கும் என்று முதலில் கூறிய இவர்கள் பின்னர் அவ்வங்கியைப் பெற்று சற்றுத் தொலை சென்று “இறைவனே! நீ எல்லா முஸ்லிம்களையும் மன்னிக்காத வரை நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இந்த அங்கியை அணிந்து கொள்ளப் போவதில்லை” என்று நெடு நேரம் மன்றாடி இறைஞ்சிக் கொண்டிருந்தனர். நெடு நேரம் ஆனதால் உமர் (ரழி) அவர்களும், அலீ (ரழி) அவர்களும் இவர்களை நோக்கி வரவே இவர்களின் இறைஞ்சுதல் கலைந்தது. “சற்றுப் பொறுமையுடன் அங்கேயே இருந்திருக்கக் கூடாதா? இறைவன் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரில் ரபீஆ, முளர் ஆகிய கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமத்தின் அளவு எண்ணிக்கையாளரை மன்னித்து விட்டான். நீங்கள் வராதிருப்பின் அனைவருக்கும் மன்னிப்புப் பெற்றிருப்பேன்” என்று இவர்கள் கூறினர். அப்பொழுது தான் அவ்விருவரும் இவர்களின் மகத்துவத்தை நன்கு உணர்ந்தனர்.

இவர்களின் புதுமையை கேட்டறிந்து வியப்பில் ஆழ்ந்தனர்

        அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு உஹதுப் போரில் ஒரு பல் முறிந்து விட்டதைக் கேட்டு அது எந்தப் பல் என்று சரியாகத் தெரியாததால் அவர்களுக்குப் பல் இல்லாத போது தமக்குப் பல் தேவையில்லை எனக் கூறி தம் பற்கள் அனைத்தையும் பிடுங்கிவிட்ட புதுமையையும் இவர்கள் வாயிலாகக் கேட்டறிந்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

மக்களின் கண்ணில் படாவண்ணம் வாழ்ந்தது

        இதன் பின் இவர்களின் மகத்துவம் மக்களுக்குத் தெரிய வரவே இவர்கள் தாம் மேய்த்துக் கொண்டிருந்த ஒட்டகைகளை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு கூஃபாவிற்குச் சென்று மக்கள் கண்ணில் படாவண்ணம் பாழடைந்த குடிசை ஒன்றில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்தனர். அப்பொழுது ஹரம் பின் ஹயான் என்பவர் ஒருவரே இவர்களை ஒரு தடவைச் சந்தித்தார். வேறு எவரும் இவர்களைச் சந்திக்கவில்லை.

மக்கள் தம்மைக் காண வருவதையே இவர்கள் வெறுத்தனர்.

        ஒரு தடவை மக்கள் இவர்களிடம் வந்த பொழுது, “இறைவனைத் தேடுகீன்றீர்களா? அவ்விதமாயின் என்னிடம் ஏன் வந்தீர்கள்?” என்று கேள்வியைப் போட்டு அவர்களைத் திணறடித்தார்கள் இவர்கள். அவர்கள் யாது கூறுவதென அறியாது விழித்த பொழுது “நீங்கள் இறைவனைத் தேடவில்லையா? அவ்விதமாயின் என்னிடம் உங்களுக்கு என்ன வேலை?” என்று மீண்டும் அவர்களைக் கேட்டு அவர்களைத் திணறடித்தனர் இவர்கள்.

இறை வணக்கத்தில் இவர்கள்

        சில பொழுது இரவு முழுவதும் கைகட்டிய நிலையிலேயே இவர்கள் வணக்கம் செய்வர். சில பொழுது குனிந்த (ருகூஉ) நிலையிலேயே இரவு முழுவதையும் வணக்கத்தில் கழிப்பர்; மற்றும் சில பொழுது நெற்றியைத் தரையில் வைத்து (சுஜுது) நிலையிலேயே இரவு முழுவதும் வணங்குவர். சில பொழுது வைகறைத் தொழுகை தொழுதுவிட்டு இறைவனைத் துதிக்க துவங்கிய இவர்கள் அடுத்த நாள் வைகறைத் தொழுகை தொழுது இறைவனைத் துதித்து விட்டு அவ்விடத்தை விட்டு அகல்வர்.

        ஒவ்வொரு நாளும் இவர்கள் தம்மிடம் எஞ்சியிருப்பதை தர்மம் செய்துவிட்டு “இறைவனே! இன்று எவரேனும் உணவின்றியோ உடையின்றியோ இறப்பின் அதற்காக என்னைத் தண்டித்து விடாதே” என்றும் இறைஞ்சுவர்.

இறப்பு மற்றும் இருதிகால வாழ்வு

        இவர்கள்  அலீ (ரழி) அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்கும் இடையே நடந்த ஸிஃப்பீன் போரில் அலீ (ரழி) அவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டு வீர மரணம் எய்தினர் என்று கூறப்படுகிறது. இவரது அடக்கவிடம் சிரியாவில் உள்ள அர்-ரக்கா என்ற நகரில் உள்ளது

        ஹல்ரத் உவைஸுல் கரனீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள், ஆண்டவனின் நல்லடியாராக - இறைநேசராக - அவ்லியாவாக, தூற்றிய மக்களால் போற்றிப் புகழப்பட்ட நிலையில், கூபாவுக்கு அருகில் ஹிஜ்ரி 37, ரபீஉல் அவ்வல் பிறை 17-ல் வபாத்தானார்கள்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.