உஸ்மான் இப்னு மள்வூன்
(ரழியல்லாஹு அன்ஹு)
குறைஷிகளில் ஜுமாப் பிரிவைச் சேர்ந்த இவர் இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பதின்மூன்றாவது நபராவார். மக்காவில் ஆரம்ப கால குறைஷி காபிர்களின் துன்புறுத்தல்கள் கொடுமைகள் அதிகமாக இருந்தபொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி இவருடைய தலைமையின் கீழ் தான் முதன் முதலாகப் பதினோர் ஆண்களும் நான்கு பெண்களும் அபிஸீனியாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்தனர்.
அல்லாஹ்வுடைய பாதுகாவல் ஒன்றே போதும்
அபிஸீனியாவில் பாதுகாப்புடன் வாழ்ந்து வரும் பொழுது, உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பின் முஸ்லிம்களுக்கும் குறைஷிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு விட்டது எனக் கிளப்பி விடப்பட்ட வதந்தியை நம்பி இவர் மக்கா திரும்பினார். இவருக்கு துவக்கத்தில் வலீத் பாதுகாப்பு வழங்கினார். பின்னர் இவர் ஏனைய முஸ்லிம்கள் எல்லாம் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாதிருக்கும் பொழுது தமக்கு மட்டும் அது தேவையில்லை எனக் கூறி அதனை உதறித் தள்ளினார். வலீத் எவ்வளவோ கூறியும் கேளாது தமக்கு இனி அல்லாஹ்வுடைய பாதுகாவல் போதும் என்றும் நாம் இனி எவருடைய பாதுகாவலையும் தேடி அலைய போவதில்லை என்றும் இவர் கூறிவிட்டார்.
அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறேன்
பின்னர் ஸபீத் என்ற கவிஞர் “எல்லா வனப்புகளுக்கும் ஒரு முடிவு உண்டு” என்று பாடிய பொழுது “சுவனத்தின் வனப்பைத் தவிர” என்று இவர் மறுத்துரைத்ததன் காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இவருக்கு ஒரு கண்ணில் பலத்த அடிபட்டது. அப்பொழுது வலீத் இவருக்குப் பாதுகாவல் வழங்க முன்வந்த பொழுது “வேண்டேன், நான் உம்மை விட மிக மிக வலுவாய்ந்தவனின் பாதுகாப்பில் இருக்கிறேன். ஒரு கண் போய்விட்டதே என்று நான் வருந்தவில்லை. மற்றொரு கண்ணையும் அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறேன்” என்று கூறினார் இவர்.
இரண்டாவது ஹிஜ்ரத் மதீனாவிற்கு
மதீனாவுக்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரத் (குடிபெயர்ந்து) சென்றபோது இவர் அங்கு உம்முல் அஃலாவின் இல்லத்தில் தங்கியிருந்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை அபுல் ஹாரித் அல் தையிஹானுடன் இஸ்லாமிய சகோதரராக இணைத்து விட்டனர். இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டார்.
குடும்ப வாழ்க்கையை விட்டு விலக அனுமதி மறுப்பு
மதுவிலக்கு ஏற்படுவதற்கு முன்பேயே இவர் மது அருந்துவதை விட்டு விட்டார். இவர் இஸ்லாத்தை தழுவும் பொழுது, இவரது மனைவி குவைலா பின்த் ஹக்கீமும் இவருடன் இணைந்து இஸ்லாத்தை தழுவியிருந்தார். தம் மனைவியுடன் வீடு கூடுவதையும் விட்டு விட்ட பொழுது இவரின் மனைவி, ஆயிஷா (ரழி) அவர்களிடம் குறைகூற அதனை அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் வழிமுறையைப் பின்பற்றுமாறு இவருக்கு அறிவுரை பகர்ந்தனர். தம்மை மலடாக்கிக் கொள்ள இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரிய பொழுது அவர்கள் அதற்கு அனுமதி வழங்க அடியோடு மறுத்து விட்டனர்.
மற்றொரு வரலாற்றின் படி இவர் பகலெல்லாம் நோன்பு நோற்கவும் இரவெல்லாம் தொழவும் செய்வதைக் கேள்வியுற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “நீர் என் வழிமுறைக்கு மாற்றம் செய்கிறீர்” என்று கூறினர். “இல்லையே” என்று இவர் பதிலுரைத்த பொழுது “நானும் நோன்பு நோற்கிறேன், இரவில் தொழவும் செய்கிறேன். உறங்கவும் செய்கிறேன். மணமுடித்து இல்வாழ்க்கையும் நடத்துகிறேன். ஆதலின் இறைவனைப் பயந்து கொள்வீராக உம்மீது உம் நஃப்ஸிற்கும், உம் மனைவிக்கும், உம் இல்லம் வரும் விருந்தினருக்கும் உரிமை உண்டு. ஆதலின் நீர் நோன்பு நோற்றுக் கொள்ளும். நோன்பைத் திறந்து கொள்ளும், நித்திரை செய்து கொள்ளும்” என்று அவர்கள் அறிவுரை பகர்ந்தனர்.
இவர்கள் சுவர்க்கவாசிகளில் ஒருவர்
ஹிஜ்ரி 3ஆம் ஆண்டில் உஸ்மான் இப்னு மள்வூன் (ரழி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். இவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜன்னத்துல் பகீஃயில் அடக்கம் செய்யப்பட்ட முதல் முஸ்லிம் இவரேயாவார். இவர் சுவர்க்கவாசிகளில் ஒருவரென இவர் இறந்தபின் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரின் மனைவி குவைலாவிடம் கூறினர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.