உஸாமா இப்னு ஜைத் ரழியல்லாஹு அன்ஹு
உஸாமா இப்னு ஜைத் (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமை ஜைத் பின் ஹாரிதாவின் மகனாவார். இவரின் அன்னை உம்மு ஐமனாவார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தாயார் ஆமினாவின் நீக்ரோ அடிமைப் பெண்ணாகிய இவர் அன்னை ஆமினா அவர்கள் அப்வா என்ற இடத்தில் இறந்த பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவர்களின் பாட்டனாரிடம் கொண்டு வந்து சேர்த்தார். இவரைத் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “என் அன்னைக்குப் பின் நீர் தான் என் அன்னை” என்று கூறினர். இத்தம்பதிகளுக்கு பிறந்த மகனாகிய இவர் தம் தாய் போன்று கறுப்பாகவும் சப்பை மூக்குடனும் இருந்தார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களால் நேசிக்கப்பட்டவர்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உஸாமா மீது அளவற்ற அன்பு செலுத்தினர். இளமையில் இவரைத் தம் மடி மீது வைத்துக் கொஞ்சி விளையாடிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை பார்த்து “உஸாமா நீ மட்டும் பெண்ணாய்ப் பிறந்திருப்பின் நான் உனக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவித்து மகிழ்ந்திருப்பேனே” என்று கூறினர்.
ஒரு நாள் அவர்கள் முஸ்லிம்களை நோக்கி, “நான் உஸாமாவை மற்ற எவரையும் விட அதிகமாக நேசிக்கின்றேன். அவர் பெரியவரான பொழுது மேலான மனிதராக விளங்குவார். அது போன்று நீங்களும் விளங்க வேண்டும்.” என்று கூறினர். எனவே மக்கள் உஸாமாவை அண்ணல் நபி (ஸல்) அவர்களால் நேசிக்கப்பட்டவர் என்று அழைத்தனர்.
நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்ய மக்களால் தேர்வு செய்யபட்டவர்
ஒரு முறை மக்ஸும் கிளையில் பிறந்த ஒரு பெண் திருடி விட்ட பொழுது அவரைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரைக்க அவர்களின் அன்பிற்கு மிகவும் உரியவரான இவரைத் தான் மக்கள் தேர்ந்தெடுத்தனர். அப்பொழுது தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் “என் மகள் பாத்திமா திருடியிருந்த போதினும் நான் அவருடைய கையை வெட்டுவேன். செல்வர்களுக்கு ஒரு நீதி ஏழைகளுக்கு ஒரு நீதி என்று பாரபட்சம் காட்டியதாலேயே முன்னுள்ள சமுதாயங்கள் அழிந்தொழிந்தன” என்று கூறினார்.
உண்மையாளரா பொய்யரா என்பதை அவரின் இதயத்தை பிளந்தா பார்த்தீர்?
ஒரு படையெடுப்பின் மீது மிர்தாஸ் இப்னு நுஹைக் என்பவர் தம் வாயினால் உரத்துக் ‘கலீமா’ சொன்ன போதினும் அவரை வெட்டி விட்டார் உஸாமா. இது பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வந்ததும் அதுபற்றி இவரிடம் விசாரித்தனர். அவர் வாளுக்கு அஞ்சி வாயினால் ‘கலீமா’ சொன்னார் என்றும் உளப் பூர்வமாகச் சொல்லவில்லை என்றும் இவர் கூற, “அவர் உண்மையாளரா பொய்யரா என்பதை அவரின் இதயத்தைப் பிளந்தா பார்த்தீர்?” என்று கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் “மறுமையில் உம்மிடம் ‘கலீமா’ வந்து இது பற்றி வினவின் நீர் யாது பதிலுரைப்பீர்?” என்று மடக்கி மடக்கி வினவினர். தம் பிழை பொறுத்தருளுமாறு இவர் பன்முறை வேண்ட மிர்தாஸிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆடுகளை அவரின் வாரிசுகளிடம் ஒப்படைத்து விடுமாறும் ஒர் அடிமையை விடுதலை செய்து விடுமாறும் இவருக்குப் பணித்தனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
பாஸ்ட்ராவின் மன்னர் படையெடுப்பை எதிர்க்க தளபதியாக நியமனம்
பாஸ்ட்ராவின் மன்னர் மதீனாவின் மீது படையெடுக்கத் தயாராகிக் கொண்டிருப்பதை அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதனை எதிர்க்க அனுப்பிய படைக்கு அப்பொழுது இருபது வயதுகூட நிரம்பப் பெறாத இவரையே தலைவராக ஆக்கி இவரின் கீழ் அபூபக்ர் (ரழி) உமர் (ரழி) ஆகியோரையெல்லாம் செல்லுமாறு பனித்தனர். இது கண்டு சிலர் முணுமுணுத்ததை அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “முன்பு இவரின் தந்தையை இத்தகு பதவியில் நான் நியமித்த பொழுது நீங்கள் இவ்வாறே தான் செய்தீர்கள். இறைவன் மீது ஆணையாக அப்பதவிக்குத் தகுதியானர் இவரின் தந்தையேயாவார். அதே போன்று அவரின் மகனும் இப்பதவிக்குத் தகுதியானவரேயாவார். மனிதர்களில் எனக்கு மிகவும் பிரியமானவர் இவரின் தந்தை. அதே போன்று தான் உஸாமாவுமாவார். எனவே இவரை உங்களில் மேலானவராகக் கருதுங்கள்” என்று கூறினர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நோயுற்றதன் காரணமாக இவருடைய படையெடுப்பு தாமதமாகியது. அப்பொழுது இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வந்த பொழுது அவர்கள் மயக்கமுற்றிருந்தனர். அவர்களின் நெற்றியில் இவர் முத்தமிடவே இவரை இலக்கு கண்டு கொண்டு தம் கையால் இவருடைய முகத்தைத் தடவி ஆசீர்வதித்தனர் அவர்கள்.
வேறொருவரைத் தளபதியாக நியமிக்க கோரிக்கை
இவர் படையை நடத்தி சில மைல் தூரம் சென்ற போது நபிகளாரின் மரண செய்தி கிடைக்க பெற்றதால், பின்னர் அபூபக்ர் (ரழி) அவர்கள் கலீபாவான பின்னரே இப்படையெடுப்பு நிகழ்ந்தது. அக்காலை இவரை நீக்கி விட்டு வேறொருவரைத் தளபதியாக நியமிக்குமாறு முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் கூறினர். இதனை அறிந்த இவர், தாம் அப்பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் வேறொருவரை அப்பதவியில் நியமித்துக் கொள்ளுமாறும் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் கூற “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் செய்ததை நான் அணுவத்தனையும் மாற்றியமைக்க மாட்டேன்” என்று கூறி விட்டார்கள் அவர்கள்.
இவர்களிடம் அனுமதி வேண்டிய கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள்
அப்படையணியில் காலித் அவர்கள் கூட ஒரு சாதாரண போர் வீரராகவே பங்கு பெற்றிருந்தனர். உமர் (ரழி) அவர்களும் அதில் இவரின் தலைமையின் கீழ் ஒரு சாதாணப் போர் வீரராகவே கலந்து கொள்ள வேண்டியிருந்தது. “அவருடைய ஆலோசனை எனக்கு இங்கு தேவைப்படுகிறது. எனவே அவரை இங்கேயே என்னுடன் இருக்க அனுமதிக்கின்றீரா” என்று இவரிடம் வேண்டினர் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள். அதற்கு இவரும் “நல்லது” என்று இணங்கினார்.
பெரியவர்களுக்கு காட்டிய மரியாதை
இவர் வாகனத்தில் இருக்க கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள் சற்றுத் தொலைவு வரை இவரருகே நடந்து வருவதைக் கண்ட இவர் அவர்களையும் வாகனத்தில் ஏறிக் கொள்ளுமாறும் இல்லையேல் தாம் இறங்கி விடுவதாகவும் கூற, “இல்லை இல்லை, நீர் வாகனத்தின் மீதே இரும்! நான் அல்லாஹ்வின் பாதையில் நடந்து என் பாதத்தில் புழுதிபடச் செய்து கொள்கிறேன். நீர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் உம் தகுதி எழுநூறு மடங்கு உயர்கின்றது. உம்முடைய எழுநூறு பாவங்கள் அழிக்கப்படுகின்றன” என்றனர் அபூபக்ர் (ரழி) அவர்கள்.
இப்படையெடுப்பின் போது சண்டை நிகழாத போதினும் ரோமானியப் படையினருக்கு ஓர் அச்சத்தை உண்டு பண்ணி விட்டு மதீனா திரும்பினார் இவர். இதன் பின் மற்றொரு படையெடுப்புக்கும் தலைமை தாங்கிச் சென்றார் இவர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேசத்தை பெற்றவர்
உமர் (ரழி) அவர்கள் கலீபாவான பொழுது இவருக்கு ஆண்டொன்றிற்கு 3500 வெள்ளி நாணயங்களை அன்பளிப்பாக வழங்கி வந்தனர். தம்மை விட அவருக்கு 500 வெள்ளி நாணயங்கள் அதிகமாகக் கொடுக்கப் படுவதைப் பற்றித் தம் தந்தையிடம் இப்னு உமர் முறையிட்ட பொழுது, “மகனே! இவரின் தந்தை உம் தந்தையை விட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு உவப்பானவராக இருந்தார். இவர் உம்மை விட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு உவப்பானவராக இருந்தார். எனவே நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேசத்தை என்னுடைய நேசத்தை விட முற்படுத்தினேன்.” என்று கூறினர் உமர் (ரழி) அவர்கள்.
இவர்களின் மன உறுதி மற்றும் மரணம்
அலீ (ரழி) அவர்கள் ஜமல் போரில் கலந்து கொள்ளுமாறு இவரிடம் கூறியபொழுது, “பாம்பின் வாயில் நுழையக் கூறினும் நுழையத் தயார். ஆனால் நான் இப்போரில் கலந்து கொள்ளத் தயாராயில்லை, நான் ஒரு முஸ்லிமைக் கொன்று விட்ட பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னைக் கண்டித்ததைக் தாங்கள் அறிவீர்கள். மீண்டும் அத்தகைய தவற்றைச் செய்ய நான் தயாராயில்லை” என்று கூறிவிட்டார் இவர்.
இவர் தம் 65ஆவது வயதில் முஆவியா (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது இறப்பெய்தினார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.