ஸல்மான் ஃபார்ஸி (ரழியல்லாஹு அன்ஹு)
பாரசீக நாட்டில் பிறந்த இவர்கள், கிருஸ்துவர்களின் வணக்க முறையால் கவரப்பட்டு கிருஸ்துவராகி பாதிரிகளின் ஊழியத்தில் இருந்தனர். பின்னர் ஒரு பாதிரியின் வழிகாட்டல் படி அண்ணல் நபி (ஸல்) அவர்களை தேடி அலைந்து ஒரு கூட்டத்தரிடம் மாட்டி யாத்ரிபில் (தற்கால மதீனாவில்) ஒரு யூதரிடம் அடிமையாக்கப்பட்டார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் புறப்பட்டு குபா வந்து சேர்ந்து, அங்கு தங்கி இருந்த பொழுது, அவர்களிடம் கிருஸ்துவப் பாதிரியார் கூறிய அடையாளங்களைக் கண்ட இவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு ஸல்மான் என்று பெயரிட்டார்கள். அடிமையான இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முயற்சியால் விடுதலையானார். இவரின் ஆலோசனை படியே அகழ் தோண்டி நபி (ஸல்) அவர்கள் யுத்தம் செய்தார்கள். நீண்ட காலம் வாழ்ந்த நபித் தோழர்களில் ஒருவரான இவர்கள் மதாயினின் ஆளுநராய் இருந்த பொழுதே கி.பி 652இல் ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு காலமானார்கள்.
பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்வு
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுள் ஒருவரான இவர்களின் பெயர் மாபா. தந்தை பெயர் பூஸகஷான் அல்லது திக்கான். பாரசீக நாட்டில் இஸ்ஃபஹான் அண்மையில் உள்ள ஜீ என்ற சிற்றூரில் இவர்கள் கி.பி.568 இல் ரஸ்பே கோஷன் என்ற பெயரில் பிறந்தார்கள். தொடக்கத்தில் தந்தை போன்று அக்கினி வணக்கக்காரராய் இருந்து கிருஸ்துவர்களின் வணக்க முறையால் கவரப்பட்டார்கள். இது தந்தைக்குத் தெரிய வந்ததும் அவர் இவர்களைச் சிறையிலிட்டார். சிறையிலிருந்து தப்பி சிரியா சென்று, கிருஸ்துவ மதத்தைத் தழுவி ஒரு கிருஸ்துவப் பாதிரியின் ஊழியத்தில் இருந்தனர். அவர் இறந்ததும் மூஸலில் இருந்த கிருஸ்துவப் பாதிரியாரிடம் சென்று அவருடன் வாழ்ந்தார்கள். அவருக்கும் இறப்பு அண்மவே அவரது ஆணைப்படி நஸீப்யன் நகர் சென்று அங்கிருந்த கிருஸ்துவப் பாதிரியாருடன் வாழ்ந்தார்கள். அவருக்கும் இறப்பு அண்மவே, “நான் இனி எங்குச் செல்வேன்?” என்று ஏக்கத்துடன் இவர்கள் அவரை வினவ, “பேரீச்ச மரங்கள் அடர்ந்த இடத்தில் ஒரு நபி வருவார். அவரை அடைவீராக!” என்று கூறினார் அவர்.
இறுதி நபியைத் தேடி, இஸ்லாத்தைத் தழுவியது
இறுதி நபியைத் தேடி இவர்கள் வரும் வழியில் கல்பிக் கூட்டத்தினர் வழிகாட்டுவதாய்க் கூறி இவர்களை அழைத்து வந்து யத்ரிபில் வாழ்ந்த யூதன் ஒருவனிடம் விற்று விட்டனர். இச்சமயத்தில் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு குபா வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களிடம் கிருஸ்துவப் பாதிரியார் கூறிய அடையாளங்களைக் கண்ட இவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு ஸல்மான் என்று பெயரிட்டார்கள். இவர் பாரசீக நாட்டைச் சேர்ந்தவர்களாதலின் “ஸல்மான் ஃபார்ஸி” என்று அழைக்கப்பட்டார்கள்.
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
இவர்கள் அடிமையாய் இருந்ததால் பத்ர், உஹத் போர்களில் கலந்து கொள்ளவில்லை. முந்நூறு பேரீச்சம் நாற்றுகளை நடுவதோடு நாற்பது அவுன்ஸ் தங்கம் தரின் இவர்களுக்கு விடுதலை வழங்குவதாய் இவர்கள் எசமான் கூற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் பேரீச்சம் நாற்றுகளை இவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைப்பட அவற்றை நட்டார்கள். நாற்பது அவுன்ஸ் தங்கத்தையும் தங்கள் கையிலிருந்து இவர்களுக்குக் கொடுத்து இவர்களுக்கு விடுதலை தேடித் தந்தார்கள். அதன் பின் இவர்களை அபூதர்தா அன்சாரியுடன் சகோதரராக இணைத்தார்கள்.
அல்அஹ்ஜாப் என்னும் அகழ் போர்
அஹ்ஜாப் என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதத்தில் நடைபெற்றது. ஓராண்டு காலமாக நபியவர்கள் எடுத்த ராணுவ நடவடிக்கைகளால் மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிம்மதியான சூழ்நிலை முழுமையாக நிலவியது. இந்த நடவடிக்கைகளில் பெரிதும் இழிவையும் கேவலத்தையும் அடைந்தவர்கள் யூதர்களே! அதற்குக் காரணம், அவர்கள் செய்த மோசடி, துரோகம், சதித்திட்டம் மற்றும் சூழ்ச்சிகள்தான். இவ்வாறு கேவலப்பட்டும் அவர்கள் படிப்பினை பெறவில்லை. தங்களது விஷமத்தனங்களை விட்டும் முற்றிலும் விலகிக் கொள்ளவுமில்லை. கைபருக்குக் கடத்தப்பட்ட அந்த நழீர் இன யூதர்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும் நடைபெரும் போர்களில் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வெற்றி முஸ்லிம்களுக்குக் கிட்டி முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலை பெற்றிடவே, அதைத் தாங்க இயலாமல் அந்த யூதர்கள் எரிச்சலைடைந்தனர் நெருப்பாய் எரிந்தனர்.
யூதர்களின் சூழ்ச்சி
அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய திட்டம் ஒன்று தீட்டினர். முஸ்லிம்களை முற்றிலும் அழிக்கும் ஒரு போரைத் தூண்டிவிட ஏற்பாடு செய்தனர். தங்களால் முஸ்லிம்களை நேரடியாக தாக்க ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் இதற்காக ஒரு சூழ்ச்சி செய்தனர். அதாவது, நழீர் கோத்திரத்தின் தலைவர்கள் மற்றும் சிறப்புமிக்கவர்களில் 20 யூதர்கள் மக்கா குறைஷிகளிடம் வந்தனர். அவர்களை நபியவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டி, அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். பத்ர் மைதானத்திற்கு அடுத்த ஆண்டு வருகிறோம் என்று உஹுத் போர்க்களத்தில் சொல்லிச் சென்று, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட அந்த குறைஷிகள் தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.
பின்பு இக்குழுவினர் அங்கிருந்து கத்ஃபான் கிளையினரிடம் சென்றனர். அவர்களிடமும் குறைஷிகளிடம் கூறியதுபோல் கூறியதும், உடனே அவர்களும் போருக்கு ஆயத்தமாயினர். மேலும், இக்குழு பல அரபு கோத்திரத்தினரை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டிவிட்டனர். பல சமுதாயத்தவர் இதை ஏற்று போருக்கு ஆயத்தமானார்கள். இறுதியாக இந்த யூத அரசியல் தலைவர்கள், நபியவர்களுக்கு எதிராக அனைத்து அரபுகளையும் ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டனர்.
இந்தப் படையினர் அனைவரும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க குறிப்பிட்ட தவணையில் அனைவரும் மதீனா சென்று ஒன்றுகூடினர். இவர்கள் 10,000 வீரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.
மதீனாவில் உடனடியாக கூடிய ஆலோசனைக் குழு
மதீனாவின் செய்தி சேகரிப்பாளர்கள் பல இடங்களில் தங்கி மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு, அங்குள்ள செய்திகளை மதீனாவுக்கு அனுப்பியபடி இருந்தார்கள். எனவே, எதிரிகளின் இவ்வளவு பெரிய படை புறப்பட்டதும் முஸ்லிம் ஒற்றர்கள் இப்படையைப் பற்றிய விவரங்களைத் தங்களின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். இச்செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தளபதிகளுக்கு மத்தியிலும் ஏற்பட்ட பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சங்கைக்குரிய நபித்தோழராகிய ஸல்மான் ஃபார்ஸி (ரழி) முன் வைத்த கருத்து முடிவாக ஏற்கப்பட்டது.
அகழ் தோண்டி போர் செய்வோம்
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்க வருவதாக இருந்தால் எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்” என ஸல்மான் ஃபார்ஸி (ரழி) கூறினார்கள். இதற்கு முன் இது அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாக இருந்தது.
இத்திட்டத்தை கேட்டவுடன் இதை அங்கீகரித்து, அதை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். “ஒவ்வொரு 10 நபர்கள் கொண்ட குழு 40 முழம் அகழ் தோண்ட வேண்டும்” என்று நபியவர்கள் பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.
அகழ் தோண்டுவதில் ஏற்பட்ட கஷ்டங்கள்
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் அகழ் தோன்றும் இடத்திற்கு வந்தார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடினமான குளிரில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இக்காரியத்தைச் செய்வதற்கு அவர்களுக்குச் சொந்தமான அடிமைகள் இருக்கவில்லை. தங்களின் தோழர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தையும் பசியையும் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே!
அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!”
இதற்கு நபித்தோழர்கள் பதில் கூறும் விதமாக கூறினார்கள்:
“நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம்
வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
அபூ தல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)
மேலும், நபித்துவத்தின் பல அத்தாட்சிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியில் இருப்பதைப் பார்த்த ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஒரு சிறிய ஆட்டை அறுத்தார்கள். அவன் மனைவி ஒரு படி தொலி கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டார்கள். பின்பு ஜாபிர் நபியவர்களைச் சுந்தித்து தங்களின் சில தோழர்களுடன் உணவருந்த வருமாறு கூறினார்கள். ஆனால், நபியவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களுடன் ஜாபிரின் வீட்டுக்கு வருகை தந்தார்கள். அனைவரும் உணவருந்திச் சென்றனர். ஆனால், சமைக்கப்பட்ட சட்டியில் இருந்த ஆணமும் குறையவில்லை, சுட்ட ரொட்டியும் குறையவில்லை. (ஸஹீஹுல் புகாரி)
பரா இப்னு ஆஜிப் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி ஓர் அடி அடித்துவிட்டு “அல்லாஹ் மிகப்பெரியவன்! ஷாம் தேசப் பொக்கிஷங்கள் எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப் பார்க்கிறேன்” என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள். “அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை இப்போது பார்க்கின்றேன்” என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் “அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின் தலைவாயில்களைப் பார்க்கின்றேன்” என்றார்கள். (ஸுனன் நஸாம், முஸ்னது அஹ்மது)
இதுபோன்ற சம்பவம் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஹிஷாம்)
ஸல்மான் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்
அகழ் வெட்டுவதில் இவர்களே ஏனையோரைவிடச் சிறந்து விளங்க, அகதிகளும் ஆதரவாளர்களும், “இவர் எங்களைச் சேர்ந்தவர்” என்று கூறி இவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளப் போட்டியிட்டார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “ஸல்மான் மின்னா அஹ்லல் பைத்” (ஸல்மான் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்) என்று கூறி இவர்களின் பொருட்டு ஏற்பட இருந்த தகராறைத் தீர்த்தார்கள்.
இவர்கள் மீது அளவற்ற அன்பு செலுத்தினார்கள்
இவர்கள் மீது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அளவற்ற அன்பு செலுத்தினார்கள். இரவு முழுவதும் இவ்வாறே பேசிக் கொண்டு இருந்து விடுவார்களோ என்று பிராட்டிமார்கள் எண்ணும் வண்ணம் இரவில் வெகு நேரம் வரை அவர்கள் இவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள்.
ஸல்மானின் எளிமையான வாழ்க்கை
ஹல்ரத் உமர் (ரழி) அவர்களால், இவர்கள் மதாயினின் ஆளுநராய் நியமிக்கப்பட்டார்கள். அப்பொழுது இவர்களுக்கு ஐயாயிரம் பொற்காசுகள் ஊதியமாக அளிக்கப்பட்ட போதினும் அவற்றை இவர்கள் ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, விறகு விற்றும் பாய் முடைந்து விற்றும் வாழ்க்கை நடத்தினார்கள். எளிய உடையுடன் மதாயின் தெருவில் சென்ற பொழுது இவர்களைக் கூலியாள் எனச் சிலர் கருதிச் சுமை சுமந்து வருமாறு செய்த சந்தர்ப்பக்களும் உண்டு.
சிலர் தங்களின் குலப் பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது இவர்கள் தங்களை ‘இஸ்லாத்தின் மைந்தன்’ என்று கூறிப் பெருமையுற்றார்கள். ஈரானியரில் முதல் முஸ்லிமான இவர்களை அறிவில் லுக்மான் ஹக்கீமுக்கு நிகரானவர் என்று கூறுகின்றார்கள் ஹல்ரத் அலீ (ரழி) அவர்கள்.
ஷீயாக்கள் இவர்களுக்கு அளிக்கும் பெரு மதிப்பு
ஹல்ரத் அலீ (ரழி) அவர்களே அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் கலீபாவாக வர வேண்டுமென்று இவர்கள் கூறியதன் காரணமாகவும், “ஸல்மான் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய தன் காரணமாகவும் ஷீயாக்கள் இவர்களுக்கு ஹஸன், ஹுஸைனுக்கு நிகரான பெரு மதிப்பை நல்குகின்றார்கள். சூஃபி தத்துவத்தின் நிருமாண கர்த்தாக்களுள் ஒருவர் என்று கூட இவர்கள் கருதப்படுகிறார்கள். பல தரீக்காக்கள் தங்களின் ஸில்ஸிலாவில் இவர்களையே முன்னோடியாக வைத்துள்ளன. தொழிலாளர் இயக்கத்தின் போஷகராகவும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு முடி இறக்கியதனால் நாவிதர் இயக்கத்தின் போஷகராகவும் இவர்கள் கருதப்படுகிறார்கள்.
இறப்பு மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாக்கு
நீண்ட காலம் வாழ்ந்த இவர்கள் மதாயினின் ஆளுநராய் இருந்த பொழுதே கி.பி 652இல் ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு காலமானார்கள். இவர்களின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
“சுரையா என்ற விண்மீன் மீது ஈமான் (இறைவன் நம்பிக்கை) இருந்த போதினும் இவருடைய மக்கள் அதனை அடைந்து விடுவர்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதற்கேற்ப இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள், இவர்களின் இனமாகிய ஃபார்ஸி இனத்திலேயே பிற்காலத்தில் தோன்றினர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.