Home


முஆவியா இப்னு அபூஸுஃப்யான்

ரழியல்லாஹு அன்ஹு

        அபூஸுஃப்யானுக்கும், ஹிந்தாவுக்கும் முதல் மகனாக இவர்கள் ஹிஜ்ரத்துக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பிறந்தார்கள். உமையா குலத்தின் தோன்றலான இவர்கள், ஆரம்பகால முஸ்லிம் வரலாற்றாசிரியர்களான அல்-பலாதுரி மற்றும் இப்னு ஹஜர் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்ட கணக்குகளின்படி, ஹுதைபிய்யா உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளின் போது முஆவியா இரகசியமாக முஸ்லிமாக மாறினார். இஸ்லாத்தைத் தழுவும் பொழுது இவர்களுக்கு வயது 23. பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் தமக்கு வரும் வஹியை (வேத வெளிப்பாடுகளை) எழுதும் எழுத்தாளராக நியமிக்கப்பட்ட இவர்கள், அபூபக்ர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது தங்கள் சகோதரர் யஜீதுக்கு உதவியாக ஒரு படைக்குத் தலைமை தாங்கிச் சென்று சிரியாவில் சில இடங்களை வென்றார்கள். தங்கள் சகோதரர் யஜீத் இறந்ததும் அவர் வகித்து வந்த சிரியாவின் தலைநகர் (Damascus) திமிஷ்கின் ஆளுநர் பதவியில் இவர்கள் நியமிக்கப் பட்டார்கள்.

உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது

உமர் (ரழி) அவர்கள் சிரியாவுக்குச் சென்ற போது அலங்கரிக்கப்பட்ட ஒட்டகமொன்றில் சில படை வீரர்கள் புடை சூழ, முஆவியா (ரழி) அவர்கள் வருவதைக் கண்டார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் முஆவியாவைப் பார்த்து “ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகத்தில் வருகிறீர் போகிறீர் ஆனால் வறியவர்கள் உன் கதவடியில் காத்துக்கிடப்பதாக செய்தி கிடைத்துள்ளதே’ என்று கேட்டார்கள்.” அதற்கு முஆவியா (ரழி) அவர்கள், “முஃமின்களின் தலைவரே எதிரிகள் நமக்கருகில் உள்ளனர். அவர்களின் ஒற்றர்களும், உளவாளிகளும் நம்மை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்துக்கென்று ஒரு கௌவரம் இருக்கின்றது, முஸ்லிம்கள் இப்படியெல்லாம் உயர்தரமானவர்கள் என்று அவர்களுக்குக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்கின்றேன்.” எனக் கூறினார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள் “இது சிந்தனை மிக்க ஒருவர் செய்யும் சதியாகும் அல்லது விவேகியொருவரின் தந்திரமாகும்” என்று கூறினார்கள். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் “முஃமின்களின் தலைவரே நீங்கள் எதை ஏவினாலும் அதைச் செய்ய நான் தயாராகவுள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள் “நான் எதை உமக்கு குறையாய் கண்டாலும் தர்க்கித்து என்னை மிகைத்து விடுகின்றீர் அதனால் உமக்கு எதை ஏவுவது? எதைத் தடுப்பது? என்பது பற்றி எனக்கும் ஒன்றும் புரியவில்லை” எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ முஹம்மத் அல் உமவீ      

ஆதாரம் : தாரீஹுத் தபரீ (3 – 265)

உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது

        உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது இவர்கள் சிரியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். இவரின் ஆளுகையின் கீழ் பலம் வாய்ந்த சிரிய இராணுவம் உருவாக்கப் பட்டது. சிரியா மாகாணத்தின் சக்திவாய்ந்த பனு கல்ப் பழங்குடியினருடன் கூட்டுச் சேர்ந்தார், அதன் கடலோர நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்தினார் மற்றும் பைசாந்திய பேரரசுக்கு எதிரான போர் முயற்சிகளை இயக்கினார், இக்காலை இவர்களும் அப்துல்லாஹ் இப்னு ஸஅத்தும் ஒருங்கு சேர்ந்து முதன் முதலாகக் கடற்படையை நிருமாணித்தார்கள். கி.பி 649 இல் இவர்கள் கடற்படை உதவியுடன் சைப்ரஸை வெற்றி கொண்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் கடற்படை வெற்றி இதுவாகும்.

நான்காம் கலீபா அலீ (ரழி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்

        கி.பி 656ல் நடைபெற்ற மூன்றாம் கலீபா உஸ்மான்(ரழி) அவர்களின் படுகொலையை தொடர்ந்து, நான்காம் கலீபா அலீ (ரழி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார். அலீ (ரழி) அவர்கள், இவர்களை சிரியாவின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்க இவர்கள் புரட்சிக்கொடி தூக்கினார்கள். இருதரப்பினருக்கும் ஸிஃப்பீன் என்ற இடத்தில் போர் நடந்தது பின்னர் உடன்பாடு ஏற்பட்டது. இராக் மக்கள் அலீ (ரழி) அவர்களையும், சிரியா மக்கள் இவர்களையும் கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் திமிஷ்கிலிருந்து அரசாண்டார்கள்.

எல்லா முஸ்லிம்களுக்கும் முஆவியா(ரழி) அவர்களே கலீபாவானார்கள்

        அலீ (ரழி) அவர்களின் இறப்பிற்குப் பின் இராக் மக்கள் ஹஸன் (ரழி) அவர்களைக் கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள். இருதரப்பினருக்கும் போர் நிகழவே இராக் படை தோல்வியுற்றது. இருவரும் வீணே முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பாது சமாதானம் செய்து கொண்டனர்.  அதன்படி ஹஸன் (ரழி) அவர்கள் தங்கள் கலீபாப் பதவியைத் துறந்தார்கள். ஹிஜ்ரி 41 ஆம் ஆண்டு ரபீயுல் அவ்வல் 25 ஆம் நாள் எல்லா முஸ்லிம்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களே கலீபாவானார்கள்.

இவர்களைப் பற்றி வரலாற்றாசிரியர்களின் கருத்து

        இவர்கள் மென்மையான இயல்பும் அமைதியான தன்னடக்கமும் வாய்க்கப் பெற்றவர்கள் என்றும், தவிர்க்க முடியாத நிலையிலன்றி இவர்கள் வாளை எடுக்கவில்லை என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். “என்னுடைய சவுக்குப் போதுமான பொழுது நான் வாளை எடுப்பதில்லை. என்னுடைய நாவு போதுமானபொழுது நான் சவுக்கை எடுப்பதில்லை. என்னையும் என் நாட்டு மக்களையும் ஒரு மயிரே இணைத்துப் பிடித்திருந்த போதினும் நான் அதனை அறுத்தெறிந்து விட மாட்டேன். அவர்கள் இழுப்பின் நான் இளக்கி விடுகிறேன். அவர்கள் இளக்கி விடும்பொழுது நான் இழுக்கிறேன். அபூபக்ர் (ரழி) அவர்கள் உலகைத் தேடித் திரியவில்லை. உலகமும் அவர்களைத் தேடித் திரியவில்லை. உமர் (ரழி) அவர்களை உலகம் தேடித் திரிந்தது. ஆனால் அவர்களோ உலகைத் தேடித் திரியவில்லை. நாமோ அதில் பாதியளவு மூழ்கியுள்ளோம்” என்று இவர்கள் கூறினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாக நிலையான இராணுவத்தை ஏற்படுத்தியவர்

        வீரர் என்ற முறையில் இவர்கள் அலீ (ரழி) அவர்களுக்கு இளைத்தவராயிருந்த போதினும் அரசியல் நிருவாகி, இராணுவ நிருமாணகர்த்தர் என்ற முறையில் இவர்கள் எவருக்கும் இளைத்தவர்களல்லர் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு நிலையான, பயிற்சி பெற்ற இராணுவத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்களேயாவார்கள். இவர்களுடைய ஆட்சியின் போதுதான் உக்பா இப்னு நாஃபிஃ வட ஆப்பிரிக்காவை வென்று அங்கு ஹிஜ்ரி 55 இல் கைரவான் நகரத்தை நிருமாணித்தார். இவர்கள் காலத்தில் தான் கான்ஸ்டாண்டி நோப்பிள் மீது படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. இப்போரிலேயே அபூ ஐயூப் அன்ஸாரி (ரழி) அவர்கள் வீர மரணம் எய்தினார்கள்.

இஸ்லாத்தில் தோன்றிய முதலாம் அரசர் - அமீர் முஆவியா

        இவர்கள் தங்கள் வாழ்வில் தோல்வியையே கண்டறியாதவர்கள். திறம்பட நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாக உமர் (ரழி) அவர்களுக்குப் பின் கிலாஃபத்தின் இரண்டாவது ஸ்தாபகர் என்று இவர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு தங்களுக்குப் பின் தங்கள் மகன் யஜீதைக் கலீபாவாகத் தேர்ந்தெடுத்தது தான். இவ்வாறு செய்து இவர்கள் குடியரசை ஒழித்து முடியரசைத் தோற்றுவித்தார்கள். எனவே, வரலாற்றாசிரியர்கள் இவர்களை இஸ்லாத்தில் தோன்றிய முதலாம் அரசர் என்று கூறுகின்றார்கள். எனவே தான் இவர்கள் அமீர் முஆவியா என்றும் வழங்கப்படுகின்றார்கள்.

இவர்கள் ஆட்சியில் ஏற்பட்ட பலன்களும் பாதிப்புகளும்

 இவர்கள்தாம் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக தபால் போக்குவரவுக்கு வசதி செய்தவர்கள். இவர்கள்தாம் அரசாங்கக் கடிதங்களில் முத்திரை (முஹ்ர்) குத்தும் பழக்கத்தை முதன் முதலாக ஏற்படுத்தியவர்கள். இவர்கள் தாம் பள்ளிவாசலில் கலீபா அமர்வதற்கு அக்சூரா என்ற தனி அறையை ஏற்படுத்தியவர்கள். இவர்கள் தாம் முதன்முதலாக ஒரு சிம்மாசனத்தைத் தமக்கு அமைத்துக் கொண்டவர்கள். இவர்கள் தாம் முதன் முதலாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பாவை வழக்கத்திற்கு மாறாக மேடை மீது அமர்ந்து ஓதியவர்கள். மேலும் ஜும்ஆ குத்பாக்களில் அலீ (ரழி) அவர்கள் மீது பகிரங்கமாக வசை மாரி பொழியும் வழக்கத்தை ஏற்படுத்தியவர்கள். இவர்கள் திமிஷ்கில் ‘அல்கத்ரா’ (பசுமை மன்றம்) என்ற பெயருடன் ஓர் அரண்மனையை நிர்மாணித்து அதில் வாழ்ந்தார்கள். மேலும், எடிஸ்ஸா நகரத்தில் கிறிஸ்துவர்களுக்கு ஒரு மாதா கோயிலையும் கட்டிக் கொடுத்தார்கள்.

முஆவியா (ரழி) அவர்களின் இறப்பு மற்றும் அடக்கம்

        நாளொன்றுக்கு குர் ஆனில் மூன்றில் ஒரு பகுதியை ஓதும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த இவர்கள், தாம் இறக்குமுன் தாம் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நகங்களைக் கொண்டு வந்து அவற்றைப் பொடி செய்து தாம் இறந்ததும் அதனைத் தம் வாயிலும் கண்களிலும் தூவுமாறும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமக்கு நல்கிய துணியால் தம் வெற்றுடலை மூடி அடக்குமாறும் கூறினார்கள். இவர்கள் ஹிஜ்ரி 60 ரஜப் முதல் தேதி திமிஷ்கில் இறப்பெய்தி பாபுஸ் ஸகீர் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.