குபைப் இப்னு அதீ (ரழியல்லாஹு அன்ஹு)
குபைப் இப்னு அதீ அல் அன்சாரி என்பது இவரது முழுப் பெயராகும். ஆரம்ப காலத்தில் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தவர்களில் இவரும் ஒருவர். அண்ணல் நபி (ஸல்) அவர்களால் மக்காவுக்கு அனுப்பப் பட்ட தூதர்களில் இவர்களும் அனுப்பப் பட்டார்கள். பத்ரு போரில் கலந்து கொண்ட இவர்கள் அங்கு எதிரியும் மக்காவாசியுமான ஹாரித் என்பரைப் பத்ருப் போரில் கொன்றவராதலின் இவரை ஒரு நயவஞ்சக கும்பல் கடத்தி எதிரிகளிடம் விற்று விடுகின்றனர். இதன் பின்னர் “இஸ்லாத்தைத் துறக்க வேண்டும் அல்லது இறக்க வேண்டும்” என்று குபைப்பை வற்புறுத்தினர் எதிரிகள். இந்த உலகிலிருந்து இறக்கத் தயார்; உயிர் வாழ்வதற்காக இஸ்லாத்தைத் துறக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார்கள் ஹல்ரத் குபைப் (ரழி) அவர்கள்.
இஸ்லாத்தை போதிக்க சென்ற குழு
ஆதல், அல் காரா என்ற இரு சிறு கூட்டத்தினர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை அணுகி இஸ்லாத்தைப் போதிக்க தங்களுடன் சில முஸ்லிம்களை அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொண்டனர். அவ்வாறே அண்ணல் நபி (ஸல்) அவர்களும் செய்தனர். ஆனால், அம்முஸ்லிம்கள் அர்ராஜ் என்ற இடத்தை அடைந்ததும் இரண்டாயிரம் பேர் அவர்களை நயவஞ்சகமாக வளைத்தனர். சென்ற ஆறு முஸ்லிம்களுள் மூவர் இறந்தனர். மூவர் சிறை செய்யப்பட்டனர். அவர்களுள் ஒருவரே ஹல்ரத் குபைப்.
சிரச்சேதம் செய்ய ஆயத்தம்
குபைப், மக்காவாசியான ஹாரித் என்பவரைப் பத்ரு போரில் கொன்றவராதலின் அவருடைய மக்கள் இவரைச் சிரச் சேதம் செய்வதற்காக மக்காவின் சூழலிலுள்ள வெளிக்கு இவரை அழைத்துச் சென்றனர். சிரச்சேதம் செய்யப்படு முன் தொழ அனுமதி வேண்டி இவருக்கு அது வழங்கப்பட்டது. இவர் தொழுகையை விரைவில் முடித்துக் கொண்டு குழுமி நின்ற கூட்டத்தினரை நோக்கி, “நான் நெடு நேரம் தொழ விரும்பினேன். எனினும், நான் இறப்பிற்கு அஞ்சி அவ்விதம் செய்வதாக நீங்கள் எண்ணிக் கொள்ளக் கூடாது என்பதற்காக நான் அதனைச் சுருக்கிக் கொண்டேன்” என்று கூறி விட்டு, “நான் அல்லாஹ்வின் பாதையில் என் உயிரைத் தியாகம் செய்யும் பொழுது நான் எவ்விதம் இருக்கிறேன் என்பது சாதாரண விஷயம். நான் இறப்பைக் கண்டு அஞ்சவில்லை. இறைவன் நாடினால் அவன் என்னுடைய ஒவ்வோர் உறுப்பையும் ஆசிர்வதிப்பான்” என்று பொருள் பொதிந்த கவியொன்றைப் பாடினார்.
அதன் பின் இரு கரம் ஏந்தி, “இறைவனே! நான் இறை தூதரின் செய்தியை எடுத்துரைத்து விட்டேன்! இவர்களை எண்ணிக் கணக்கிட்டு இவர்களை ஒவ்வொருவராகக் கொல்! உன் நியாயமான தண்டனையிலிருந்து இவர்களுள் ஒருவரும் தப்ப வேண்டாம்.” என்று இறைஞ்சினார்.
இவரது இவ்விறைஞ்சுதலைக் கேட்டு அஞ்சிய அவர்கள் அதனின் வன்மையைக் குறைக்க கீழே நெடுக வீழ்ந்தார்கள். பின்னர் எழுந்து, கொல்லப்பட்ட ஹாரிதின் குழந்தைகளின் கையில் வாளைக் கொடுத்து அவரைச் சிரச் சேதம் செய்தார்கள்.
ஹாரிதின் இல்லத்தில் சிறையில் இருந்த போது
குபைப், ஹாரிதின் இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பொழுது முடி இறக்கிக் கொள்ள கத்தி வேண்டினார் என்றும் தம் சிறு மகன் கையில் அதனைக் கொடுத்து அனுப்பிய ஹாரிதின் மனைவி பின்னர் அதற்காக வருந்தினார் என்றும் குபைப் அக்கத்தியால் தன் மகனைக் குத்திக் கொன்று விடலாமென்று அவர் அஞ்சியதாகவும், ஆனால், அதனை உணர்ந்து கொண்ட குபைப் தமக்கு செய்யும் எத்தீங்குக்கும் அவர் மகன் பழிவாங்கப் படமாட்டான் என்றும், துரோகச் செயல் புரிய முஸ்லிம்கள் ஒரு போதும் முன் வர மாட்டார்கள் என்றும் கூறியதாகவும் ஒரு வரலாறு உள்ளது.
இறுதியாக தொழுது கொள்ளும் வழக்கம்
ஹாரிதின் மனைவி, தாம் குபைபை விடக் கண்ணியம் வாய்ந்த ஒரு கைதியை என்றுமே காணவில்லை என்று பின்னர் கூறினார். சிரச் சேதம் செய்யப்படுவோர் இறுதியாகத் தொழுது கொள்ளும் வழக்கம் இவரிலிருந்து தான் ஏற்பட்டது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.