காலித் இப்னு வலீத் (ரழியல்லாஹு அன்ஹு)
அண்ணல் நபி (ஸல்) அவர்களை மக்காவில் அதிகமாக எதிர்த்த குறைஷி குலம் மக்சூம் கிளையில், ஹிஜ்ரத்திற்கு இருபது ஆண்டுகள் முன் மக்காவில் பிறந்தார். தொடக்கத்தில் இவர்கள் இஸ்லாத்திற்கும் இறுதி நபி அவர்களுக்கும் விரோதமானவராய் இருந்தனர். ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் நிகழ்ந்த உஹத் போரில் இவர்கள் குறைஷிப் படையணியில் சேர்ந்து முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிற்கச் சொன்ன இடத்தை விட்டு முஸ்லிம் வீரருள் சிலர் இடம் பெயர்ந்ததைப் பயன்படுத்தி அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெறாமல் செய்தவர்கள் இவர்கள்தாம். பின்னர் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிம்களில் மிகப் பெரும் தளபதியருள் ஒருவரானார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அதன் பின் அபூபக்ர் (ரழி) மற்றும் உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலங்களில் நடைபெற்ற போர்களில் முஸ்லிம்களைத் தோற்கடிக்க, கிருஸ்தவ உலகமே திரண்டெழுந்த பொழுது எதிரிப்படைகள் வியப்புறும் வண்ணம் போர் செய்து வெற்றிக்கு வழிகோலியவர்.
தம் பாவங்களைப் பொறுத்தருளுமாறு இறைவனிடம் இறைஞ்ச வேண்டி
ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் இவர்கள் மதீனா சென்று அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை ஏற்று, தம் பாவங்களைப் பொறுத்தருளுமாறு இறைவனிடம் இறைஞ்சுமாறு கூற, “நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதே உம்முடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறது” என்றார்கள் அவர்கள். எனினும் அதனால் திருப்தியுறாது மீண்டும் தம் பாவம் பொறுக்குமாறு இறைவனிடம் இறைஞ்சுமாறு வேண்ட, அவ்விதமே அண்ணல் நபி (ஸல்) அவர்களும், “இறைவனே! காலிதுடைய இஸ்லாத்தை ஏற்று அவர் பாவம் பொறுத்தருள்வாயாக!” என்று இறைஞ்சினார்கள்.
தோல்வியை வெற்றியாக மாற்றிய சாகசம், அல்லாஹ்வின் வாள் என்ற பட்டம்
மூத்தா போரில் ஜைத், ஜஃபர், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஆகியோர் ஒருவர் பின் ஒருவராய் இறந்த பொழுது, இவர்கள் இஸ்லாமியப் படையில் தளபதிப் பதவியைத் தாங்கி ஆற்றிய சாகச் செயல் தோல்வியை வெற்றியாக மாற்றியது. மூவாயிரம் முஸ்லிம் வீரர்களில் எஞ்சியிருந்த நானூறு பேர்களுடன் இவர்கள் எழுபதாயிரம் ரோமானியர்களை எதிர்த்து நின்று வாகை சூடியது, இவர்கள் ஸைஃபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என்ற பட்டத்தை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருவாயிலிருந்து ஈட்டித் தந்தது. அன்று மட்டும் இவர்களின் கையிலிருந்து எட்டு வாள்கள் ஒடிந்து வீழ்ந்தன. இவர்களின் கையில் இறுதியாய் இருந்த ஒரு வாளும் கைப்பிடி இல்லாதிருந்தது.
காலித் போன்ற ஒரு மகனை எந்த அன்னையும் பெறமாட்டாள்
பின்னர் இவர்கள் ஹுனைன் போரிலும் கலந்து கொண்டனர். இராக்கை வெற்றி கொள்வதற்காக நிகழ்த்தப்பட்ட போர்களிலும் இவர்கள் கலந்து கொண்டனர். தஜ்லா போரில் பாரசீகரை எதிர்த்து இவர்கள் அடைந்த மாபெரும் வெற்றியைப் பற்றிக் கேள்வியுற்ற கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள், “காலித் போன்ற ஒரு மகனை எந்த அன்னையும் பெறமாட்டாள்” என்று பாராட்டுரை பகர்ந்தார்கள்.
நஞ்சால் இவருக்கு யாதொரு இன்னலும் இழைக்க இயலவில்லை
ஹீரா போரின் போது இவர்களுடன் சமாதானம் பேச வந்த தூதுக் குழுவின் தலைவர் தாம் பேச வந்த தூதுக் குழுவின் தலைவர் தாம் இப்பேச்சுவார்த்தையில் தோற்று விட்டால் உண்பதற்காகத் தம் கையில் வைத்திருந்த நஞ்சினை வாங்கி, தாம் சார்ந்துள்ள மார்க்கம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிப்பதற்காக, “பிஸ்மில்லாஹ் வபில்லாஹி, ரப்பில் அர்ளி வஸ்ஸமாயில்லதி, லாயலுர்ரு மஅ இஸ்மிஹி, ஷைஉன் ஃபில்அர்ளி, வலா ஃபிஸ்ஸமாஇ,வஹுவஸ் ஸமீவுல் பஸீர்.” என்று கூறி நஞ்சை அருந்தினார். அந்த நஞ்சால் இவர் யாதொரு இன்னலும் இழைக்க இயலவில்லை.
பெயரைக் கேட்டதும் பின்வாங்கிய ரோமானியப் படை
மூத்தா போரில் தாம் பெற்ற தோல்வியை மறந்து விடாது அதற்கு பழி வாங்கும் எண்ணத்துடன் ரோமானியப் பேரரசர் ஓரிலட்சம் பேர்கள் அடங்கிய பெரும் படையை அனுப்பி வைக்க, இவர் முப்பதாயிரம் முஸ்லிம்களுடன் அப் பெரும் படையை “முஸ்லிம்களை மதீனாவரை விரட்டிச் செல்வோம்” என்று கூறிய அப் பெரும் படையை - புறமுதுகிட்டோடச் செய்தார்.
இதன் பின் சிரியா செல்லுமாறு கலீபா அபூபக்ர் (ரழி) அவர்களிடமிருந்து ஆணை வர இவர்கள் படை நடாத்தி சிரியா நோக்கிச் சென்றனர். இவர்களின் பெயரைக் கேட்டதும் புஸ்ராவிலிருந்து ரோமானியர் பின் வாங்கத் தொடங்கினர். அக்காலை இவர்கள் சிரியாவிலிருந்த முஸ்லிம் படைகளின் தளபதியாய் இருந்த அபூ உபைதா (ரழி) அவர்களுக்கு எழுதிய மடலில், “நான் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்களின் ஆணையின்படி இங்கு மகாதளபதியாய் அனுப்பப்பட்டுள்ளேன். இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். தாங்கள் முன்னர் போன்றே தங்களைச் சேனாதிபதியாக நினைத்துக் கொள்ள வேண்டும். என்னைத் தங்கள் அற்பப் பணியாளனாகவும் சிறிய போர் வீரனாகவும் கருதுங்கள்! தாங்களோ தொடக்கத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்; அண்ணல் நபி (ஸல்) அவர்களால் ‘அமீனுல்மில்லத்’ என்று பட்டம் வழங்கப் பெற்றவர்கள்” என்று குறிப்பிட்டது இவர்களின் நற்பண்பையும் பணிவையும் எடுத்துக் காட்டுகிறது.
வாட்போரில் மட்டுமின்றி சொற்போரிலும் வல்லவர்கள்
சிரியாவில் இவர்கள் ரோமானியத் தளபதி பாஹானுடன் ஆற்றிய சொற்போர், இவர்கள் வாட்போரில் மட்டுமின்றி சொற்போரிலும் வல்லவர்கள் என்பதற்கான நிரூபணமாகும். யர்மூக் என்ற இடத்தில் இவர்கள் அடைந்த மாபெரும் வெற்றி ரோமானியர்களின் முதுகெலும்பை ஒடித்தது என்றே கூற வேண்டும்.
பதவியிலிருந்து நீக்கியும் இவர்களின் தன்னலம் கருதாப் பெருந்தன்மை
யர்மூக் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள் காலமானார்கள். அவர்களுக்குப் பின் கலீபாவாக வந்த உமர் (ரழி) அவர்கள், அபூ உபைதா (ரழி) அவர்களை மகாதளபதியாய் நியமித்து இவர்களை அப்பதவியிலிருந்து நீக்கினார்கள். போரின் நடுவே இக் கடிதம் இவர்களிடம் காட்டப்பட்ட பொழுது அதைப் பற்றிச் சிறிதேனும் கவலைப்படாது வீரப் போர் செய்து இஸ்லாத்திற்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது இவர்களின் தன்னலம் கருதாப் பெருந்தகைமையை நன்கு எடுத்துரைக்கிறது.
பின்னர் அபூ உபைதா (ரழி) அவர்கள் தலைமையின் கீழ் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய இவர்கள் திமிஷ்க், பைத்துல் முகத்தஸ் ஆகியவற்றின் மீது நடத்திய போர்களிலும் கலந்து கொண்டு இஸ்லாத்திற்கு வெற்றி தேடித் தந்தார்.
ஆளுநராய் பதவி நியமனமும் - பதவி நீக்கமும்
இதன் பின் ரோமானியப் பேரரசின் எல்லையில் இருந்த கன்ஸரீன் மாவட்டத்தின் ஆளுநராய் இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இப்பொழுது முஸ்லிம்களைத் தோற்கடிக்க, கிருஸ்தவ உலகமே திரண்டெழுந்த பொழுது முஸ்லிம் அணியின் மகாதளபதி அபூஉபைதா (ரழி) அவர்கள் கலீபா உமர் (ரழி) அவர்கள் உதவிக்கு வரும் வரை ஹிம்ஸ் கோட்டையின் கதவுகளைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே இருந்த பொழுது இவர்கள் உள்ளே செல்ல மறுத்து, “இவர் மனிதரா, வானவரா?” என்று எதிரிப்படைகள் வியப்புறும் வண்ணம் போர் செய்து அவர்களைப் புறமுதுக்கிட்டோடச் செய்தனர். இப்போரில் தலைமை தாங்க கலீபா உமர் (ரழி) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு ஜாபிலா என்னும் இடத்தை அடைந்த பொழுது வெற்றிச் செய்தி அவர்களை எட்டியதும் இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு மதீனா திரும்பி விட்டார்கள். அடுத்த கணமே இவர்களைப் பதவியிலிருந்து நீக்கிய ஆணை மதீனாவிலிருந்து ஹிம்ஸுக்குப் பறந்து சென்றது.
இஸ்லாமிய வெற்றிகளுக்கெல்லாம் நீரே காரணம் என்று மக்கள் கருதுவது ஷிர்க்
காரணம் யாதென அறியாது திகைப்புற்று இவர்கள் மதீனா சென்று கலீபா அவர்களைச் சந்தித்துக் காரணம் வினவ, “நான் உம்மை முன்னர் பதவியிலிருந்து நீக்கியதற்கு என்ன காரணமோ அதுவே இப்பொழுது உம்மைப் பதவியிலிருந்து நீக்குவதற்கும் காரணமாகும். உம் வெற்றிப் பிரதாபங்களைக் கண்டு நான் மகிழ்கிறேன். இறைவன் மீது ஆணையாக நான் உம்மைப் பெரிதும் நேசிக்கிறேன். ஆனால், இஸ்லாமிய வெற்றிகளுக்கெல்லாம் நீரே காரணம் என்று மக்கள் கருதி இறைவனின் பேரருளை மறந்து விடுகிறார்கள். இது ஒரு வகை ஷிர்க் (இறைவனுக்கு இணை வைத்தல்) ஆகும். இதன் அபாயத்தை உணர்கிறேன். இதனால், இஸ்லாத்திற்கு ஊறு ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன். எனவே உம்மைப் பதவியிலிருந்து நீக்கினேன்” என்றனர் கலீபா.
சிரியா சென்று அங்கேயே கடைசி கால வாழ்வு
அதைக் கேட்டு மகிழ்ந்த இவர்கள் பின்னர் சிரியா சென்று அங்கேயே வாழ்ந்து வந்தனர். ஹிஜ்ரி 21 இல் ஹிம்ஸ் நகரில் காலமான இவர்கள் அக்கோட்டை மதிளின் அண்மையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களின் அடக்கவிடத்தைச் சூழ பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் அடக்கவிடத்தில் இவர்களால் வெற்றி கொள்ளப் பட்ட கோட்டையில் கிடைத்த கல்தூண்களும், கல்சிங்கமும் காட்சிப் பொருள்களாய் வைக்கப்பட்டுள்ளன. இவர்களது அடக்கவிடத்தின் முகப்பில், “நான் நூற்றுக்கணக்கான போர்களில் ஈடுபட்ட போது உடலில் ஈட்டியோ, வாளோ படாத இடமே கிடையாது. எனினும், போர்களத்தில் வீரமரணம் எய்தாது கோழை போன்று இறக்க நேரிட்டது. இது போன்ற கோழைத்தனமான இறப்பு வேறு எவருக்கும் வராமலிருக்கட்டும்” என்று இவர்கள் கூறிய இறுதி வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.