கஃப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
கஸ்ரஜ் கோத்ரத்தைச் சேர்ந்த இவர்களது முழுப் பெயர் கஃப் இப்னு மாலிக் அபூ அப்துல்லாஹ் என்பதாகும். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் முன்பே, இரண்டாவது அகபா உடன்படிக்கையின் போது இஸ்லாத்தின் சிறப்பையுணர்ந்து இஸ்லாத்தை தழுவினார். இஸ்லாமியக் கவிஞர்களான ஹஸ்ஸான் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஆகியவர்களுடன் இவர் மூன்றாமவராய்க் கருதப்பட்டார். இஸ்லாத்தின் விரோதிகள் மீது இவர் கண்டனக் கவிதைகள் பாடியுள்ளார். இஸ்லாமிய எதிரிகள் எழுப்பிய வினாக்களுக் கெல்லாம், அவர்களது சக்தியே சிதறும்படி இவர் பல பாடல்கள் மூலமே பதில் அளித்திருக்கிறார். இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டாரா, இல்லையா என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. பத்ருப் போரைத் தவிர பிற எல்லா போரிலும் கஃப் இப்னு மாலிக் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார். உஹது போரில் நபி (ஸல்) அவர்களுக்குக் காயமேற்பட்டதை அறிந்ததும், அவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக முன் வந்து அதனால் படுகாயமடைந்தார். உஹதுப் போரில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை இலக்குக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கு அறிவித்தவர் இவர்தாம்.
தபூக் படையெடுப்பில் கலந்து கொள்ளவில்லை
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஏனைய போர்களிலெல்லாம் கலந்து கொண்ட இவர் தபூக் படையெடுப்பில் தந்நலத்தின் காரணமாகக் கலந்து கொள்ளவில்லை. எனவே, இவரையும் அதில் கலந்து கொள்ளாத மற்ற இருவரையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகப் பிரஷ்டம் செய்தார்கள். முஸ்லிம்களில் எவரும் இவருடன் உரையாடவோ, உறவாடவோ செய்யவில்லை. தம் மனைவியையும் தாம் விடுதலை செய்ய வேண்டுமோ என்று இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, “அவர் தம் மனைவியை விட்டும் ஒதுங்கி இருந்து கொள்ளட்டும்” என்று செய்தி அனுப்பினார்கள் அவர்கள். எனவே இவர் தம் மனைவியை அவரின் பெற்றோர்களின் இல்லத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்.
உலகமே சுருங்கிவிட்டது போன்றிருந்தது
முஸ்லிம்கள் அனைவரும் இவருக்கு விரோதிகள் போன்று தென்பட்டார்கள். அவர்களுள் எவரும் இவரின் ஸலாத்திற்குப் பதில் உரைக்கவில்லை. உலகமே இவருக்குச் சுருங்கி விட்டது போன்றிருந்தது. இவருடைய கண்கள் கண்ணீர் மழையைப் பொழிந்து கொண்டிருந்தது. தம் தவற்றினை நினைத்து இவர் வருந்திக் கொண்டிருந்தார்.
மன்னித்து விட்டதாக இறைவனிடமிருந்து செய்தி வந்தது
இப்பொழுது கஸ்ஸானிய அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்று முன்னர்ப் பெருமை பாராட்டிக் கொண்டிருந்த இவருக்குத் தம் நாட்டில் அடைக்கலம் நல்கி கஸ்ஸானிய அரசரிடமிருந்து ஒரு மடல் வந்தது. அதனைப் பெற்ற அடுத்த கணமே அதனைத் தீயிட்டுப் பொசுக்கி இறைவனுடையவும், இறைதூதருடையவும் மன்னிப்பை எதிர் பார்த்துக் காத்திருந்தார் இவர். ஐம்பது நாள்களுக்குப் பின் இவரையும் ஏனைய இருவரையும் மன்னித்து விட்டதாக இறைவனிடமிருந்து செய்தி வந்தது.
திருமறையில் இறைவன் மன்னித்துவிட்ட செய்தி
9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
9:118. (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:119. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
மகிழ்ச்சியில் கஃப் இப்னு மாலிக்
இறைவனிடமிருந்து செய்தி வந்ததும் அதனை உடனே ஆள் மூலம் இவருக்குச் சொல்லி அனுப்பினார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அப்பொழுது தான் இவருக்கு உயிர் வந்தது போன்றிருந்தது. ‘சஜ்தா’வில் வீழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்திய இவர் மகிழ்ச்சி மிகுதியினால் தம்மிடமிருந்த இரண்டே இரண்டு ஆடைகளை அச்செய்தியைக் கொணர்ந்தவருக்கு அன்பளிப்புச் செய்தார்.
அதன் பின் வேறு இரண்டு ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு இவர் பள்ளிவாயிலுக்கு வந்த பொழுது அங்குக் குழுமி இருந்த மக்கள் இவரைக் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். முதன் முதலாக, அபூதல்ஹா ஓடி வந்து இவருடன் கை குலுக்கித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
செய்த தவற்றினுக்கு ஈடாகத் தர்மம்
பின்னர் இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருமுன் வந்து அவர்களுக்கு ஸலாம் உரைத்தார். அதற்கு முக மலர்ச்சியுடன் பதிலுரைத்தார்கள் அவர்கள். அதன் பின் தாம் செய்த தவற்றிற்குப் பிராயச்சித்தமாகத் தம் சொத்து முழுவதையும் தர்மம் செய்து விடுவதாகக் கூறினார் இவர். அது கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யின் நீர் வறுமைக்கு ஆளாகி விடுவீர். எனவே, உம் சொத்தில் ஒரு பகுதியைத் தருமம் செய்யும்” என்று கூற, கைபரில் தமக்குக் கிடைத்த நிலத்தை மட்டும் தமக்கு வைத்துக் கொண்டு, ஏனையவற்றைத் தாம் செய்த தவற்றினுக்கு ஈடாகத் தர்மம் செய்து விட்டார் இவர்.
இறுதி காலம்
உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது இவர் உஸ்மான் (ரழி) அவர்களை ஆதரித்து நின்றார். அவர்கள் கொல்லப்பட்ட பொழுது அவர்கள் மீது இரங்கற்பா பாடினார். இவர் அலீ (ரழி) அவர்களைக் கலீபாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஹிஸ்ரி 50இல் தம் 77ஆம் வயதில் இவர் உலகு நீத்தார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.