பாபர் (14பிப்ரவரி 1483 – 26 டிசம்பர் 1530) இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசின் முதல்வரான இவரின் இயற்பெயர் ஸாஹிருத்தீன் பாபர் என்பதாகும். மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.விரிவு
ஹுமாயூன் (07 மார்ச் 1508 - 21 ஜனவரி 1556) இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் மூத்தமகனாகிய இவரின் இயற்பெயர் நாஸிருத்தீன் ஹுமாயூன் என்பதாகும். இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை பாபரை போலவே இவரும் தனது ராஜ்ஜியத்தை ஆரம்பத்தில் இழந்தார். பிறகு ஈரான் மன்னர் ஷா தஹ் மாஸ்ப்பின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். 1556 இல் ஹுமாயூனின் இறப்பின்போது முகலாய பேரரசானது கிட்டத்தட்ட 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியிருந்தது. ஹுமாயூன் என்பதன் பொருள் மாண்பாளர் என்பதாகும். விரிவு
அக்பர் (15 அக்டோபர் 1542– 27 அக்டோபர் 1605) ‘மகா’ என்ற அடைமொழிக்கு இலக்காகி இந்தியாவை ஆண்ட பேரரசர்களில் ஒருவர் இவர். இவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை ஹுமாயூனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 14 வயதிலேயே ஆட்சிக்கு வந்த அக்பர் பைரம் கான் என்கிற பிரதிநிதியின் உதவியுடன் ஆட்சி புரிந்தார். இந்தியாவில் முகலாயர் பகுதிகளை விரிவாக்கவும் நிலைநிறுத்தவும் இளம் பேரரசருக்கு பைரம் கான் உதவி புரிந்தார். ஒரு வலிமையான ஆளுமையாகவும் வெற்றிகரமான தளபதியாகவும் திகழ்ந்த அக்பர் படிப்படியாக முகலாயப் பேரரசை விரிவுபடுத்தி பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை முகலாய பேரரசுக்குள் கொண்டுவந்தார். எனினும் அக்பரின் சக்தியும் செல்வாக்கும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. விரிவு
ஜஹாங்கீர் (31 ஆகஸ்ட் 1569 – 28 அக்டோபர் 1627) அவர்கள் முகலாய பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார். இவரது இயற்பெயர் நூருத்தீன் முஹம்மது ஸலீம். இவரது தந்தை முகலாய பேரரசர் அக்பர் இறந்ததும் இவர் கி.பி.1605 அக்டோபர் 21 ஆம் நாள் ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். உல்லாசப் பிரியரான இவர் சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தார். எனவே, இவர் மனைவி நூர்ஜஹானே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்தி வந்தார். விரிவு
ஷாஜஹான் (கி.பி.1593- கி.பி1666) அவர்கள் ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஆவார். முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனான இவர், ஜஹாங்கீருக்கு பின்னர் ஏற்பட்ட அரியணைக்கான போரில் வெற்றி பெற்று அரியணை ஏறினார். இவரது இயற்பெயர் மிர்ஸா குர்ரம். இவர் கி.பி 1628 இல் டில்லியில் முடி சூட்டிக் கொண்டார். இவருடைய ஆட்சியின் போது முகலாயப் பேரரசு உச்ச நிலையை எய்தியது. கட்டடக் கலையில் ஆர்வம் கொண்ட இவர் தாஜ்மஹால், முத்து மசூதி, ஜாமிஆ மஸ்ஜித், செங்கோட்டை, ஷாஜஹான் பாத் ஆகியவற்றை கட்டினார். மயிலாசனத்தை செய்து அதன் மீது வீற்றிருந்து ஆட்சி செய்தார். முகலாய மன்னர்களுள் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மன்னர் இவர். விரிவு
ஹைதர் அலீ (கி.பி. 1720 - கி.பி.1782) அவர்கள் மைசூரைத் தலைநகராகக் கொண்டு மைசூர் அரசை 1760களில் இருந்து 1782 வரை ஆண்டார். ஹைதர் என்றால் சிங்கம் என்று பொருள். சாதாரண குதிரைப்படை போர்வீரராக இருந்து ஒரு அரசை ஆளும் மன்னராக உயர்ந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர். இவர் ஐரோப்பிய ஆய்வாளர்களைக் கொண்டு ஏவுகணை உருவாக்கி போரிட்டார். உலக ஏவுகணை வரலாற்றில் ஹைதர் அலீயின் முயற்சிகள் போற்றப்படுகிறது. இவரது மகனே திப்புசுல்தான். விரிவு
இந்திய சுதந்திர போராட்டத்தின் வீர சகாப்தமாக கருதப்படும் மைசூர் புலி திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களின் நெஞ்சை பிளக்கும் கூறிய வாளாக வாழ்ந்து மறைந்தவர். வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்து உள்ளார்கள் என்பதை தொலை நோக்குப் பார்வையுடன் அடையாளம் கண்டு எதிர்த்த முதல் இந்தியர் ஆவார். இளம் வயதிலேயே திறமை பெற்ற போர் வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும். நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலிகளைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியவர். உலக ஏவுகணை வரலாற்றில் திப்பு சுல்தானின் முயற்சிகள் போற்றப்படுகிறது. விரிவு
ஒளரங்கஜீப் (கி.பி.1618 அக்டோபர் 24 - கி.பி.1707 மார்ச் 4) அவர்கள் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார், இதுவரை இந்திய மண்ணில் தோன்றிய எந்த மன்னரும் ஆளாத மாபெரும் நிலப்பரப்புக்கு இவர் அரசராக இருந்தார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் ஒளரங்கஜீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள். விரிவு
இரண்டாம் பஹதூர் ஷா (24 அக்டோபர் 1775 - 7 நவம்பர் 1862) முகலாயப் பேரரசின் இறுதி மன்னரான இவரின் முழுப் பெயர், அபுல் முஸஃப்பர் சிராஜுத்தீன் முஹம்மது பஹதூர் ஷா என்பதாகும். 1857 ஆம் ஆண்டில் நடந்த சுதந்திரப் போரின் ஆணிவேர் இவரேயாவார். இவருடைய ஆட்சியை இவரின் முன்னோர்களான அக்பர், ஒளரங்கஜீப் போன்ற ஒப்பற்ற அரசர்களின் ஆட்சியுடன் ஒப்பிட முடியாது என்றாலும், 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியன் கம்பெனிக்கு எதிராக போராடி தோல்வி கண்ட முதல் இந்திய எழுச்சியின் தொடக்கப்புள்ளி பஹதூர் ஷா தான். இந்திய எழுச்சி என்று வர்ணிக்கப்படும் அந்த பெரும் போராட்டம் அப்போதைய அகண்ட இந்தியாவின், அதாவது ஆஃப்கனின் சில பகுதிகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த `இந்திய எழுச்சி` தோல்வியை தழுவியதும், பஹதூர் ஷா ராஜ துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அப்போது பிரிட்டிஷ் அரசின் ஆளுகையில் இருந்த பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். விரிவு