அக்பர் முகலாயப் பேரரசர்
அக்பர் (15 அக்டோபர் 1542– 27 அக்டோபர் 1605) ‘மகா’ என்ற அடைமொழிக்கு இலக்காகி இந்தியாவை ஆண்ட பேரரசர்களில் ஒருவர் இவர். இவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். அக்பர் தனது தந்தை ஹுமாயூனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். 14 வயதிலேயே ஆட்சிக்கு வந்த அக்பர் பைரம் கான் என்கிற பிரதிநிதியின் உதவியுடன் ஆட்சி புரிந்தார். இந்தியாவில் முகலாயர் பகுதிகளை விரிவாக்கவும் நிலைநிறுத்தவும் இளம் பேரரசருக்கு பைரம் கான் உதவி புரிந்தார்.
ஒரு வலிமையான ஆளுமையாகவும் வெற்றிகரமான தளபதியாகவும் திகழ்ந்த அக்பர் படிப்படியாக முகலாயப் பேரரசை விரிவுபடுத்தி பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை முகலாய பேரரசுக்குள் கொண்டுவந்தார். எனினும் அக்பரின் சக்தியும் செல்வாக்கும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது.
ஆரம்ப கால வாழ்வு
இவருடைய தந்தை முகலாயப் பேரரசர் ஹுமாயூன் ஆவார். அன்னை, ஷைகு அலீ அக்பர் ஜாமி என்பவரின் மகளான ஹமீதா பானு ஆவார். ஹுமாயூன் அரசிழந்து கீழ்சிந்துவில் சுற்றித் திரியும் பொழுது அங்குள்ள அமர்கோட் என்ற சிற்றூரில் கி.பி 1542 அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை இவர் பிறந்தார்.
அப்பொழுது ஹுமாயூனுடன் சென்றிருந்த நிமித்திகர் (சோதிடர்)ஆன மெளலானா சாந்த் என்பவர் குழந்தை கன்னிலக்கனத்தில் பிறந்திருப்பதாக கூறினார். பிறகு இவருடைய ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து, சந்திரன் சிம்மலக்கனத்தில் இருப்பதால் இவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், நீண்ட ஆயுளுடன் வாழ்பவராகவும் இருப்பார் என்று கூறினர்.
இவர் ஷஃபான் மாதம் 14 ஆம் நாள் பிறந்ததால் மார்க்கத்தின் முழு நிலா என்று பொருள்படும் பத்ருத்தீன் என்று பெயரிடப்பட்டது. அத்துடன் இவரின் தாய் வழிப் பாட்டனின் பெயராகிய அக்பர் என்பதும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பின்னர் இவருக்கு கி.பி 1546-இல் விருத்த சேதனம் செய்யப்பட்ட பொழுதுதான் இவருடைய பெயர் ஜலாலுத்தீன் என்று மாற்றியமைக்கப் பட்டது. இவரது பெயரைக் கொண்டு இவரது பிறந்த தேதியை அறிந்து விரோதிகள் இவருக்கு சூனியம் செய்துவிடுவார்களோ என்று இவரின் பெற்றோர் அஞ்சி இவர் ரஜப் பிறை ஐந்தில் பிறந்ததாக வெளியில் கூறி இவ்வாறு செய்தார்கள்.
அக்பர் முடி சூட்டியது
தம்முடைய உதவியைப் பெறுமுன் ஹுமாயூன் ஷீயாவாக மாற வேண்டும் என்று அடைக்கலம் கொடுத்த ஈரானிய மன்னர் ஷா வற்புறுத்தியதின் பேரில் அவ்விதமே செய்து, அவரின் உதவியைப் பெற்று காபூலைக் கைப்பற்றி, பின்னர் தாம் இழந்த இந்திய அரசை ஹுமாயூன் மீட்டுக் கொண்ட போதினும், அவர் இறந்த பொழுது அவருடைய அரசு கலகலத்து விட்டது.
எனவே பைராம்கான் அக்பரைக் குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள கலானூர் என்னும் சிற்றூரில் ஒரு மேடை மீது வைத்துத்தான் முடி சூட்டினார்.
பானிபட் போர்
முதன் முதலாக அக்பரும், பைராம் கானும் ஆதில் ஷா சூர் என்பவருடனும் அவருடைய தளபதி ஹேமுவுடனும் கி.பி 1556 நவம்பர் 5-ஆம் நாள் பானிபட் என்ற இடத்தில் சண்டை செய்து அவர்களைத் தோற்க்கடித்தனர். இவரின் வெற்றிக்கு காரணம் இவர் பயன் படுத்திய பீரங்கிகள்தாம். அவற்றின் சப்தத்தை கேட்டு ஹேமுவின் யானைகள் பிளிறிக் கொண்டு பாய்ந்து ஹேமுவின் படைகளை நாசப்படுத்தின. குற்றுயிராய்க் கண்ணில் அம்பு பாயப்பட்ட நிலையில் யானை மீது வந்து கொண்டிருந்த ஹேமுவைக் கொன்றொழிக்குமாறு பைராம் கான் அக்பரிடம் கூற, “அவன் தான் சாகும் நிலையில் உள்ளானே, நான் வேறா அவனைக் குத்திக் கொல்ல வேண்டும்” என்று கூறி விட்டார் இவர். பின்னர் பைராம் கானே ஹேமுவைத் தம் ஈட்டியால் குத்தி கொன்றொழித்தார்.
அக்பரின் ஆர்வம்
இளமையில் புத்தகப் படிப்பே அக்பருக்கு வேம்பாக இருந்தது. மீர் அப்துல் லத்தீஃப் என்ற பார்ஸி அறிஞரை பைராம் கான் இவருக்கு ஆசிரியராக நியமித்த போதினும் இவர் படிப்பில் அக்கறை செலுத்தவில்லை. அதற்கு மாறாக, இவர் குதிரைச் சவாரி செய்வதிலும், அம்பெய்வதிலும், வேட்டையாடுவதிலும் அதிக ஆர்வம் செலுத்தினார். இவருக்கு இயற்கையிலேயே நல்ல அறிவுக் கூர்மையும் நினைவாற்றலும் இருந்தன.
கி.பி 1560-க்குள் இவர் குவாலியர், அஜ்மீர், ஜான்பூர் ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டார். இதன் பின் ஹிந்தால் என்னும் சிற்றரசரின் மகளை மண முடித்துக் கொண்டார்.
முழு ஆட்சி பொறுப்பும் எடுத்தது
துவக்கத்தில் ஆட்சி பொறுப்பு முழுவதும் பைராம்கானிடமே இருந்தது. அக்பர், தமக்கு பதினெட்டு வயது ஆனதும் ஆட்சிப் பொறுப்பைத் தம் கையில் எடுத்துக் கொள்ள விரும்பி பைராம்கானுக்கு ஓய்வு தேவை என்றும் எனவே அவர் ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொள்ளலா மென்றும் ஆலோசனை கூறிக் கடிதம் எழுதினார். மேலும் அவரை மக்காவுக்கு அனுப்பிவைக்க அழைத்துச் செல்லும் பொறுப்பை பைராம்கானின் விரோதியான பீர் முகம்மது என்பவரிடம் ஒப்படைத்தார். இது பைராம்கானுக்குப் பெரிய அவமானமாகத் தோன்றவே அவர் கலகம் செய்தார். அக் கலகத்தை எளிதில் அடக்கிவிட்டார் அக்பர். எனினும் பைராம்கானை மன்னித்து மக்கா அனுப்பி வைத்தார். வழியில் ஆப்கானியன் ஒருவனால் அவர் கொல்லப்பட்டார். இதன் பின் ஆட்சியில் முழுப் பொறுப்பும் அக்பரின் கையில் வந்தது.
ஆட்சியை பலப்படுத்துதல்
தம் அரசாங்கத்தின் அடிக்காலை வலுவாகப் போட விரும்பிய இவர் இராஜபுத்திரர்களுடன் மென்மையாக நடந்து கொண்டார். இந்துக்களை விரோதப் படுத்திக் கொள்ளாது அவர்களை அரவணைக்கவும் செய்தார். 1562-இல் ஜெய்ப்பூர் அரசர், ராஜா பிஹாரிமல் அக்பருக்கு பணிந்தார். அவரின் மகளை அக்பர் மணந்து கொண்டார். பிறகு பிகானீர், ஜெயஸல்மேர் ஆகியவற்றை வெண்று அந்நாட்டு இராஜபுத்திர மன்னர்களின் புதல்விகளை அக்பர் திருமணம் செய்து கொண்டார். இவ்விதம் இவர் இராஜபுத்திர மன்னர்களுடன் திருமண உறவு கொண்டு தம் அரசாங்கத்தைப் பலப்படுத்தினார். பின்னர் மற்ற இராஜபுத்திர அரசாங்கங்களும் அக்பருக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பணியலாயின.
பிறகு குஜராத்தை வென்ற இவர் 1567-இல் வங்காளத்தை வெற்றிகொண்டார். 1581-இல் காபூல் இவருடைய அரசுடன் இணைக்கப்பட்டது. அஹமத் நகர் வெற்றி கொள்ளப் பட்டது. காந்தேஷைத் தாமே படை நடத்திச் சென்று வென்றார் அக்பர். இதுவே இவருடைய கடைசிப் படையெடுப்பாக இருந்தது. அக்பர் மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர். இவருடைய ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும் சமமான உரிமை பெற்று வாழ்ந்து வந்தார்கள். இவரிடம் ராஜா தோடர்மல் போன்ற இந்துக்கள் பெரும் பதவிகளில் இருந்தனர்.
கலை மற்றும் இலக்கிய ஆர்வம்
இவர் கலைகளையும் இலக்கியங்களையும் வளர்த்தார். கவிதை, இலக்கியம், வரலாறு, தத்துவம், மதம் ஆகியவற்றில் இவர் சுவை காண்பவராக இருந்தார். இவருடைய அரண்மனை (விகடகவி) விதூஷகராக பீர்பல் என்பவரேயாவார். அவருடைய விகடங்களைக் கேட்டு அக்பர் சிரிப்பார். இவர் கவிஞர்களை ஆதரித்தார். மர்வி என்ற கவிஞருக்கு அவர் இயற்றிய ஒரு கவிதைக்காகப் பதினாயிரம் ரூபாய் அன்பளிப்பு செய்தார். காஹி என்ற கவிஞருக்கு, ஒவ்வொரு அடியிலும் யானை என்று பொருள் படும் ‘ஃபீல்’ என்ற சொல்லை அமைத்து பாடிய எட்டு அடிகள் கொண்ட கவிதை ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் அன்பளிப்பு நல்கினார். இவரிடமும் கவித்துவம் இருந்தது. சில பொழுது இவரின் பேச்சே கவிதை வடிவில் வெளிவந்தது.
இவர் ஒவ்வொரு நாளும் மகாபாரதத்தைப் படிக்கக் கேட்டு முடிந்ததும் அந் நூலை வாங்கி அதில் அடையாளமிட்டு வைப்பார் என்று கூறப்படுகிறது. இவர் அபுல் ஃபஸலைக் கொண்டு மகாபாரதம், பகவத்கீதை ஆகியவற்றைப் பார்ஸியில் மொழிபெயர்க்கச் செய்தார். மேலும் இவர் முஸ்தபா ஹாலிக்தார் என்பவரைக் கொண்டு சமஸ்கிருதத்திலிருந்த பஞ்ச தந்திரக் கதைகளை பார்ஸியில் ‘பஞ்சகியானா’ என்ற பெயருடன் மொழிபெயர்க்கச் செய்தார்.
அவரின் அன்றாட பழக்க வழக்கம்
இவரும் மற்ற முகலாய மன்னர்களும் கங்கை நீரையே அருந்தி வந்தனர். அது கங்கையிலிருந்து பாத்திரங்களில் முத்திரையிடப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. அதனை இவருக்கு அருந்தக் கொடுக்கும் முன் சோதித்துப் பார்க்கப் பட்டது.
இவர் இறைச்சியை அதிகமாக விரும்பி உண்பதில்லை. வாரத்திற்கு இருமுறை தான் உண்பார். “மனிதன் தன் வயிற்றை மற்றைய உயிர்ப்பிராணிகளின் புதை குழியாகவல்லவோ ஆக்கிக் கொண்டுள்ளான்” என்று இவர் கூறுவார்.
இவர் நறுமணத்தைப் பெரிதும் விரும்பினார். அதனைத் தயாரிப்பதற்கு ஒரு தனி இலாகாவையே ஏற்படுத்தி இருந்தார். அதற்கு ‘ஹுஷ்போகானா’ என்று பெயர். அதனைத் தயாரிப்பதில் இவர் மிகவும் அக்கறை செலுத்தினார்.
இவர் ஜாதகங்களை நம்பினார். தம்முடைய தலைநகருக்குள் நல்ல வேளையில் புகுவதற்க்காக அண்மையில் உள்ள ஒரு சிற்றூரில் இவர் மூன்று நாட்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சகுனமும் பார்ப்பார். ஒவ்வொரு நாளும் அந்தந்த நாளின் தன்மைக்கேற்ப விதம் விதமான வண்ண ஆடைகளை அணிவார்.
புறா விடுவதில் இவருக்குத் தனிப் பிரியம் இருந்து வந்தது. இதற்கென இவரிடம் இருபதாயிரம் புறாக்கள் இருந்தன என்கின்றனர். இந்த விளையாட்டிற்கு இவர் ‘இஷ்க்பாஸி’ என்று பெயரிட்டார்.
புதுமையை இவர் விரும்பினார். புதுமையை அது புதுமை என்பதற்காக வெறுக்கும் இயல்பு இவரிடம் இல்லை. “ஒவ்வொன்றும் துவக்கத்தில் ஒரு புதுமையாகத்தானே இருந்திருக்கும்” என்று இவர் கூறுவார்.
எல்லா மத அறிஞர்களிடமும் ஆலோசனை
பதஹ்பூர் ஸிக்ரியிலுள்ள தம் அரண்மனையில் ‘இபாதத் கானா’ (தொழுமிடம்) ஒன்றை அமைத்திருந்தார். இங்கு முஸ்லிம் மகான்களையும், பிராமண, ஜைனப் பெரியார்களையும், கிருஸ்தவ அறிஞர்களையும் கூட்டி உரையாடச் செய்து அதனை இவர் கவனித்துக் கொண்டிருப்பார்.
இவருடைய ஆரம்ப கால ஆசிரியர்கள் கூறிய சூஃபிக் கருத்துக்கள் இவருடைய இதயத்தைக் கவர்ந்து அதில் இடம் பெற்றிருந்தன. அத்துடன் இவருடைய இந்து மனைவியரும் இவருடைய கருத்துக்களை உருவாக்குவதில் பங்கு பெற்றிருந்தனர். மேலும் ஃபெய்ஸி, அபுல் ஃபஸல் ஆகியவர்களையும் இவருடைய கருத்துக்களை உருவாக்குவதில் உதவியவர்கள் என்று கூறலாம்.
’தீனெ இலாஹி’ என்ற புதிய மதம்
இந்தியாவில் உள்ள எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஒரு மதத்தை உண்டு பண்ண விரும்பி இவர் “தீனெ இலாஹி” என்னும் பெயருடன் ஒரு மதத்தை ஏற்படுத்தினார். ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரை வெறுப்பதை விட்டொழித்து ஒவ்வொரு மதத்திலும் உள்ள நல்ல தன்மைகளைப் பாராட்ட வேண்டும் என்று இவர் விரும்பினார்.
இந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாட்டை அவர்களையும் அணைத்துக் கொண்டு ஆள்வதற்காகவே இவர் ‘தீனெ இலாஹி’யைத் தோற்றுவித்தார் என்றும் சிலர் நம்புகின்றனர். மேலும் இவர் தீனெ இலாஹியை ஏற்றுக் கொள்ளுமாறு எவரையும் வற்புறுத்தவுமில்லை. இவர் ஏற்படுத்திய தீனெ இலாஹி இவருடைய காலத்திலேயே செத்து விட்டது.
இவர் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடை செய்து, இந்து விதவைகள் மறுமணம் செய்து கொள்வதைச் சட்டபூர்வமாக்கினார்.
அவரது இறையச்சம்
இவரின் சில பழக்க வழக்கங்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு மாறானவையாக இருந்த போதிலும் இவர் இறைவனை மறுக்கவில்லை. இரவில் நாலரை மணி நேரமே துயிலும் வழக்கம் கொண்ட இவர் வைகறைக்கு முன்பே எழுந்து இரண்டு மணி நேரம் வணக்கத்திலும், தியானத்திலும் இருப்பார். ஒரு நாளைக்கு ஒரே வேலை உணவுண்ணும் இவர் உணவுண்டு முடித்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் உதாரண குணத்தைப் பெற்றிருந்தார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது இவருக்கு அளவற்ற மதிப்பும், மரியாதையும் இருந்தன. இவருடைய ஆட்சியின் இறுதி காலத்தில் அபூதுராப் என்பவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாதம் பதிந்த கல்லை கொண்டு வந்த பொழுது, அந்த கல் உண்மையானது தானா என்பதை இவர் அவ்வளவாக நம்பாதவராக இருந்த போதினும் அதனைப் பெறுவதற்காகப் பல மைல்கள் நடந்து சென்றார். தம் ஆட்சியின் இருபத்தொன்றாவது ஆண்டில் இவர் மக்காவுக்குச் சென்று ‘ஹஜ்’ஜுச் செய்து வரவும் எண்ணினார்.
இவர் இஸ்லாமிய வட்டத்திற்குச் சற்று அப்பால் சென்ற நிலையிலும், அதற்காக உலமாக்களின் கடும் தாக்குதலுக்கு ஆளான போதிலும் அஜ்மீரிலுள்ள காஜா முயீனுத்தீன் சிஷ்தி தர்காவுக்கும், டில்லியிலுள்ள நிஜாமுத்தீன் அவ்லியாவின் தர்காவிற்கும் கால்நடையாகவே நடந்து சென்று வந்தார். பதஹ்பூர் ஸிக்ரியில் அடங்கப் பெற்றுள்ள ஸலீம் சிஷ்தியின் மீது இவருக்கு அளவிறந்த பக்தி இருந்தது. அப்பெரியாரின் பெயரையே தம் மகனுக்குச் சூட்டி மகிழ்ந்தார் இவர்.
குத்பாப் பேருரை
இவர் கி.பி. 1580 ஆம் ஆண்டில் ஒரு வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் உள்ள மேடையில் ஏறி குத்பாப் பேருரையும் நிகழ்த்தினார். அதில் ஃபெய்ஸி தமக்காக இயற்றித் தந்த பின்வரும் கவிதையையும் படித்தார்.
”இறைவன் இந்த அரசாங்கத்தை எனக்குத் தந்தான். என்னை அவன் அறிவாளியாகவும் பலவானாகவும் தைரியசாலியாகவும் ஆக்கினான். அவன் என்னை நேர்மையைக் கொண்டும் உண்மையைக் கொண்டும் வழி நடத்தினான். உண்மை மீது அன்பு கொள்ளும் எண்ணத்தை அவன் என் உள்ளத்தில் நிரப்பினான். மனிதனுடைய நாவால் அவனுடைய சிறப்பினை எடுத்துரைக்க இயலாது. அல்லாஹு அக்பர், அல்லாஹ் மிகப் பெரியவன்.”
இவ்வளவுதான் இவரால் படிக்க இயன்றது. அதற்கு மேல் உணர்ச்சி மிகுதியால் இவருடைய தொண்டை அடைத்தது: கண்களில் நீர் பெருகியது. என்வே அத்துடன் இவர் ‘குத்பா’ வை முடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார். அதன் பின் இமாமே தொழுகையை நடத்தினார்.
இறுதி வாழ்வு மற்றும் மரணம்
இவர் இயற்கையிலேயே சூஃபி மனோ நிலையைப் பெற்றிருந்ததனால் இவர் ஒரு முறை பதவி துறக்கக்கூட எண்ணினார் என்று கூறப்படுகிறது.
ஒரு யானைச் சண்டையின் போது இவருடைய குடும்பத்தினரிடையே ஏற்பட்ட சண்டையைக் கண்டு அளவிடமுடியா ஆத்திரத்தால் அவர்கள் மீது சீறி விழுந்தார் இவர். அதன் காரணமாக ஏற்பட்ட இரத்தக் கொதிப்பால் படுக்கையில் வீழ்ந்த இவர் பின்னர் அதிலிருந்து எழுந்திருக்கவே இல்லை.
இவர் இறப்பு படுக்கையில் இருக்கும் போது குர்ஆனை ஓதச் செய்து அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சந்திர ஆண்டு கணக்குப்படி 51 ஆண்டு 9 மாதங்கள் ஆண்ட பின் இவர் கி.பி 1605 அக்டோபர் 16 புதன்கிழமை வயிற்றோட்டத்தால் இறந்தார். இவருடைய அடக்கத்தலம் ஆக்ராவிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள சிக்கந்தரா என்னும் இடத்தில் இருக்கிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.