ஹுமாயூன்
முகலாயப் பேரரசர்
ஹுமாயூன் (07 மார்ச் 1508 - 21 ஜனவரி 1556) இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் மூத்தமகனாகிய இவரின் இயற்பெயர் நாஸிருத்தீன் ஹுமாயூன் என்பதாகும். இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை பாபரை போலவே இவரும் தனது ராஜ்ஜியத்தை ஆரம்பத்தில் இழந்தார். பிறகு ஈரான் மன்னர் ஷா தஹ் மாஸ்ப்பின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். 1556 இல் ஹுமாயூனின் இறப்பின்போது முகலாய பேரரசானது கிட்டத்தட்ட 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியிருந்தது. ஹுமாயூன் என்பதன் பொருள் மாண்பாளர் என்பதாகும்.
ஆரம்ப கால வாழ்வு
இவர் கி.பி 1508 மார்ச் 07 ஆம் நாள் காபூலில், இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் மூத்தமகனாக பிறந்தார். அன்னை: மாஹம் பேகம். தந்தை இறந்த பின் இவர் கி.பி.1530 டிசம்பர் 26 ஆம் நாள் தம் 22 ஆம் வயதில் டில்லி அரியணை ஏறினார்.
இவரை கவிழ்க்க இவரின் உடன்பிறந்தவர்களும், ராஜபுத்திரர்களும், ஆப்கானியர்களும் முனைந்து நின்றார்கள். போர்களும், புரட்சிகளும், சதிகளும் தொடர்ந்தன. தம் தந்தையின் இறுதி அறிவுரையான, “உன்னுடைய உடன் பிறந்தவர்களுடன் நன்முறையில் நடந்து கொள்..!” என்பதற்கு இவர் அணுவத்தனையும் மாறாய் நடந்து கொள்ளவில்லை. தம் உடன்பிறந்தான் காம்ரானுக்குக் காபூல், காந்தஹார், பஞ்சாப் ஆகியவற்றின் ஆளுநர் பதவியை வழங்கினார். மற்றோர் உடன்பிறந்தானாகிய அஸ்கரிக்கு சம்பல், ஹிந்தல் ஆகிய மாவட்டங்களை வழங்கினார். எனினும், அவர்கள் இவருக்குத் துரோகம் இழைத்தார்கள்.
அரியணை இழந்து, அக்பரை பெற்றது
கி.பி 1540 மே 14 ஆம் நாள் ஷேர்கானால் கன்னோஜில் வைத்து இரண்டாவது முறை தோற்கடிக்கப்பட்டு, ஹுமாயூன் உயிர் தப்பிச் சில ஊழியர்களுடன் சுற்றித் திரியும் பொழுது தான் இவர் சிந்துவில் வைத்துத் தம் உடன்பிறந்தான் ஹிந்தாவின் ஆசிரியராய் இருந்த ஷைகு அலீ அக்பர் ஜாமியைச் சந்தித்து அவரின் அழகுத் திருமகள் ஹமீதா பானுவை மணமுடித்து அக்பரை ஈன்றெடுத்தார். ஹுமாயூன் சுன்னத் வல்-ஜமாஅத்தை சேர்ந்தவராயும், ஹமீதா பானு ஒரு ஷீஆவாயும் இருந்ததே தொடக்கத்தில் இத்திருமணத்திற்குக் குறுக்கே நின்றது என்றும் கூறப்படுகிறது.
அரியணை மீட்பு
சிந்துவிலிருந்து காந்தஹார் சென்ற இவரை இவரின் சகோதரன் அஸ்கரீ தாக்கி இவரின் சின்னஞ்சிறு மகனையும் கைப்பற்றிக் கொண்டான். இவ்வித நிலையில் இவர் தம் இளைய மனைவியுடன் ஈரான் மன்னர் ஷா தஹ் மாஸ்ப்பிடம் அடைக்கலம் புகுந்தார். இவர் ஒரு ஷீஆவாக மாறினாலன்றி இவருக்கு உதவி செய்ய இயலாதென்று ஷா தஹ்மாஸ்ப் கூற, இவர் ஷீஆவாக ஆகி அவர் அளித்த 14,000 போர் வீரர்களுடன் காந்தஹார் மீது படையெடுத்து அதனை வென்று தம் மகனை மீட்டு, சிறை செய்யப்பட்ட தம் தம்பி அஸ்கரியை மன்னித்தார்.
பின்னர் காபூலின் மீது படையெடுத்துத் தம் தம்பி காம்ரானைத் தோற்கடித்து அதனை வென்றார். பின்னர் தம் உடன்பிறந்தார் ஒன்று சேர்ந்து தம்மை எதிர்க்க அவர்களைத் தோற்கடித்து, மக்காவுக்கு ‘ஹஜ்’ செய்ய அனுப்பி வைத்தார்.
கி.பி. 1555 இல் மீண்டும் இந்தியா திரும்பி ஷேர்ஷாவின் தங்கை மகன் சிக்கந்தர் ஷாவைத் தோற்கடித்து டில்லி அரியனை ஏறினார்.
மரணம்
ஏழு மாதங்களே டில்லி அரியணையில் இருந்த இவர் மாடத்தில் உள்ள நூல் நிலையத்திலிருந்து இறங்கி வரும் பொழுது மாலை நேரத் தொழுகைக்கான ‘பாங்கு’ ஒலி கேட்டதும் அதற்கு மரியாதை செய்யும் முறையில் கீழே அமர முனைந்த பொழுது படிகளில் தடுமாறிக் கீழே விழுந்தார். அதோடு அவரின் உயிரும் பிரிந்தது. இது நிகழ்ந்தது. கி.பி.1556 ஜனவரி 21 ஆம் நாளிலாகும். இவரது அடக்கவிடத்தின் மீது பதினைந்து லட்சம் ரூபாய்ச் செலவில் இவரின் மகன் அக்பர் மணி மண்டபம் எழுப்பினார்.
ஹுமாயூனின் அடக்கஸ்தலம்
ஹுமாயூனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் ஹுமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் ஹுமாயூனின் மனைவியான ஹமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும். இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் ஹுமாயூனின் அடக்கவிடக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான ஹமீதா பேகம், பின்னாட் பேரரசரான ஷாஜகானின் மகன் தாரா ஆகியோரதும்; பேரரசர் சிக்கந்தர்ஷா, ஃபரூக்கியார், ராஃபி உல்-தார்ஷத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் அடக்கவிடங்களும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ இதை உலக பாரம்பரியக் கட்டிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.