ஒளரங்கஜீப் - முகலாய பேரரசர்
ஒளரங்கஜீப் (கி.பி.1618 அக்டோபர் 24 - கி.பி.1707 மார்ச் 4) அவர்கள் முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார், இதுவரை இந்திய மண்ணில் தோன்றிய எந்த மன்னரும் ஆளாத மாபெரும் நிலப்பரப்புக்கு இவர் அரசராக இருந்தார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் ஒளரங்கஜீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
இவருடைய காலத்தில் ஆண்டொன்றிற்கு அரசாங்க வருமானமாக எண்பது கோடி ரூபாய் வந்து கொண்டிருந்த போதினும் மக்களின் சேவைக்காகத் தம்மை அர்பணித்துக் கொண்ட ஒரு தியாகி போன்றே இவர் வாழ்ந்தார். இவர் வீரத்திலும், துணிவிலும் எவருக்கும் இளைத்தவராக இருக்கவில்லை. மேலும் குர் ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் ஆகியவற்றை யெல்லாம் இவர் நன்கு கற்றுத் தேர்ந்திருந்தார். அரபி, ஃபார்ஸி, உர்தூ, துருக்கி, ஹிந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். இளமையிலேயே இவர் சூஃபிக் கொள்கையுடையவராக இருந்தார். எனவே ஆடம்பர, உல்லாச சுகபோகங்களை உதறித் தள்ளி எளிய வாழ்வு வாழ்ந்து வந்தார்.
பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்வு
முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் மூன்றாவது மகனும் ஆறாவது பிள்ளையுமான இவர் கி.பி.1618 அக்டோபர் 24 ஆம் நாள் சனிக்கிழமை தோஹாத் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தாய் மும்தாஜ். இவரின் பாட்டனார் ஜஹாங்கீர் தம் மகன் ஷாஜஹானுடன் மாலிக் அம்பரின் புரட்சியை அடக்கி விட்டு குஜராத்திலிருந்து ஆக்ராவுக்குத் திரும்பும் வழியில் இவர் தோஹாத்தில் வைத்துப் பிறந்தார். எனினும் சில நாட்களுக்குப் பின் அவர்கள் உஜ்ஜைன் வந்து சேர்ந்த பொழுது தான் இவரின் பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்பொழுது இவருக்கு முஹ்யித்தீன் முஹம்மது என்று பெயரிடப் பட்டது.
கல்வி பயின்றது
இளமையில் இவருடைய ஆசிரியர்களாக ஷாஜஹானின் அமைச்சர்களில் ஒருவரான ஸஅதுல்லாஹ்கானும், மக்காவிலும் மதீனாவிலும் பன்னிரண்டாண்டு காலம் தங்கிப் படித்து விட்டு இந்தியா வந்திருந்த மீர்முஹம்மது ஹாஷிம் ஜீலானியும், முல்லாஜீவனும், சையித் முஹம்மது கன்னோஜியும், அப்துல் லத்தீஃப் சுல்தான் பூரியும் இருந்தனர். அவர்களிடம் குர் ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் ஆகியவற்றையெல்லாம் இவர் நன்கு கற்றுத் தேர்ந்தார். இவருக்கு அரபி, ஃபார்ஸி, உர்தூ, துருக்கி, ஹிந்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். ஒய்வு நேரங்களில் இவர் நூல் நிலையத்திற்குச் சென்று படித்துக் கொண்டிருப்பார்.
புகழை ஈட்டித் தந்த சாகசச் செயல்கள்
இவர் வீரத்திலும், துணிவிலும் எவருக்கும் இளைத்தவராக இருக்கவில்லை. மதயானைகள் போரிடும் பொழுது அவற்றில் ஒன்றின் தும்பிக்கையைப் பிடித்துப் பின்னால் தள்ளிவிடும் இயல்பினர் அக்பர். அவரின் பேரராகிய ஷாஜ்ஹான் இளவரசாக இருக்கும் பொழுது ஒரு புலியுடன் போர் செய்து அதனைக் கொன்றார். அவரின் மகனாகிய இவர் தம்முடைய பதினான்காவது வயதில் ஆற்றிய சாகசச் செயல் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது. ஷாஜஹான் மாடியில் அமர்ந்து யானைச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தோற்றோடிய யானை ஒன்று குதிரை மீது அமர்ந்து யானைச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த இவரின் குதிரையின் மீது பாய்ந்து அதனை வீழ்த்தியது. அத்துடன் சேர்ந்து கீழே விழுந்த இவர் உடனே எழுந்து வாளை உருவிக் கொண்டு அதனை எதிர்த்து நின்றார். இவரின் சகோதரர்களெல்லாம் ஓடி விட்டனர். உடனே அரசாங்க ஊழியர்கள் ஓடி வந்து வெடி சப்தத்தை முழக்க யானை வெருண்டோடியது.
பதறிக் கொண்டு கீழே இறங்கி ஓடி வந்த ஷாஜஹான் இவரைக் கட்டி தழுவி, “என்ன முட்டாள்தனம் செய்தாய்?” என்று செல்லமாக இவரை கடிந்து கொண்ட பொழுது, “நான் இப் போரில் இறந்திருப்பின் அது எனக்கு இழிவாக இருந்திராதே. என்னுடைய சகோதரர்கள் நடந்து கொண்டதே இழிதன்மையதாகும்” என்று கூறினார் இவர். இதற்கு மூன்று நாட்களுக்கு பின் இவருடைய பதினைந்தாவது பிறந்த நாள் வந்த பொழுது இவரைத் தங்கத்தால் நிறுத்து அந்த தங்கத்தை இவருக்கு அன்பளிப்புச் செய்ததோடு அத்துடன் இரண்டு லட்சம் ரூபாய்கள் பெறுமானமுள்ள பொருள்களையும் இவருக்கு வெகுமதியாக வழங்கி ‘பஹாதுர்’ என்ற பட்டத்தையும் சூட்டினார் தந்தை. இவருடைய உயிர் காக்கப் பெற்றதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் முறையில் ஐயாயிரம் பொற்காசுகளையும் ஏழைகளுக்கு அறம் வழங்கினார் அவர்.
ஆளுநராக - தளபதியாக நியமனம்
இவரது பதினாறாவது வயதிலேயே 10,000 குதிரைப் படை வீரர்களுக்கும் 4,000 காலாட் படையினருக்கும் தளபதியாக நியமிக்கப் பட்டதோடு அரசாங்கக் கெளரவமான சிவப்புக் கூடாரத்தைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப் பெற்றார். பதினெட்டாவது வயதிலேயே தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர் அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார். பின்னர் சிறிது காலம் குஜராத்தின் ஆளுநராக இருந்த இவரை பல்க், படக்ஷான் ஆகியவற்றின் மீது நடத்தப் பெற்ற படையெடுப்புக்கு தளபதியாக நியமித்து அனுப்பினார் ஷாஜஹான். இக்காலை இவர் போர் நடுவிலேயே வைத்துத் தம் யானையிலிருந்து கீழே இறங்கி அமைதியாக இறைவனைத் தொழுததைக் கண்ட பல்க், படக்ஷான் ஆகியவற்றின் மன்னர் அப்துல் அஜீஸ்கான் பெரிதும் வியப்புற்று, “இத்தகு மனிதரோடு போர் செய்வது அழிவைத் தேடிக் கொள்வதேயன்றி வேறில்லை” என்று கூறி அக்கணமே போரை நிறுத்தி இவருடன் சமாதானம் செய்து கொண்டார்.
எளிய வாழ்வு வாழ்ந்து வந்தார்
இளமையுலேயே இவர் சூஃபிக் கொள்கையுடையவராக இருந்தார். எனவே ஆடம்பர, உல்லாச சுகபோகங்களை உதறித் தள்ளி எளிய வாழ்வு வாழ்ந்து வந்தார். எனவே இவரை மக்கள் ‘ஃபக்கீர் இளவரசர்’ என்று அழைத்தனர். இவர் தம்முடைய இருபத்து நான்காவது வயதில் காடுகளுக்குச் சென்று தனித்து தியானத்தில் வீற்றிருக்கும் வழக்கத்தை மேற் கொண்டிருந்தார். தாம் உலகை துறந்து துறவறத்தை மேற்கொள்ளப் போவதாகவும் இவர் கூறினார். எனினும் விதி இவரை உலகின் பக்கலிலேயே இழுத்து வந்து அரியாசனத்தில் அமர்த்தியது. அதற்கு முழுக்க, முழுக்க தகுதியுடையவராகவே இவர் இருந்தார்.
பின்னர் ஒரு சமயம் இவர் வைகறையில் குதிரை மீது இவர்ந்து தனியாகக் காடு சென்று வணக்கம் நிகழ்த்திய பொழுது பக்கத்துப் புதர் ஒன்றில் பதுங்கியிருந்த புலி இவர் மீது பாய இவர் உடனே தம் உடை வாளை உருவி அந்தப் புலியை வெட்டி வீழ்த்திவிட்டு மீண்டும் அமைதி குலையாது தக்பீர் கட்டித் தொழுததை வியந்து, வியந்து பிற்காலத்தில் இக்பால் பண்ணிசைத்துள்ளார்.
அரியணைக்காகப் போராட்டம்
ஷாஜஹான் கடுமையான நோய்வாய்ப்பட்ட பொழுது அவர் பிழைப்பது அரிது என எண்ணிய அவரின் மக்கள் அரியணைக்காகப் போராட முன் வந்த பொழுது தாரா ஷிகோ அரியணையைக் கைப்பற்றினால் அவர் இஸ்லாத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவார் என்று அஞ்சிய இவர் தம் சகோதரர் முராதையும் அழைத்துக் கொண்டு போருக்கெழுந்தார். அப்பொழுது அவர் முராதிடம் போர் முடிந்த பின் தாம் ஹஜ்ஜுக் கடமையை ஆற்றச் செல்லப் போவதாகக் கூறினார். இவ்வாறு இவர் கூறியது ஆசை வார்த்தையல்ல; மனப் பூர்வமாகக் கூறப்பட்டதேயாகும்.
முகலாய அரியணை ஏறியது
சாமுகர் என்னும் இடத்தில் தாராவுடன் இவர் செய்த போரில் தாம் ஏறியிருந்த யானை ஓடி விடா வண்ணம் அதன் கால்களைச் சங்கிலியால் இறுகப் பிணைத்து ‘ஹுதா ஹே’ ‘ஹுதா ஹே’ என்று தம் படை வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் வண்ணம் கூறிக்கொண்டு ஆற்றிய வீரப்போர் இவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. அப் போர்களத்திலேயே வைத்து இவர் இறைவனுக்கு இரண்டு ‘ரக் அத்’ நன்றித் தொழுகை தொழுதார். பின்னர் தம் சகோதரர் முராத் பெரும் குடிகாரராக இருப்பதைக் கண்டு அவரும் அரியணை ஏறுவதற்க்கு தகுதியற்றவர் என்று கருதினார். என்வே தான் கி.பி 1658 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கடைசி நாட்களில் ஒன்றில் டில்லிக்கு வெளியேயுள்ள ஷாலிமார் தோட்டத்தில் வைத்துத் தம்மை முகலாய பேரரசர் என்று பிரகனப் படுத்திக் கொண்டார். ஆனால் உண்மையில் இவர் முகலாய அரியணை ஏறியது கி.பி.1659 மே 26 ஆம் நாள் வியாழக்கிழமையிலாகும். அப்பொழுது இவர் ஒளரங்கஜீப் ஆலம்கீர் என்னும் பட்டத்தைச் சூடிக்கொண்டார். ஒளரங்கஜீப் என்றால் அரியாசனத்தின் அணி என்றும் ஆலம்கீர் என்றால் அகிலத்தை அடக்கி ஆள்பவர் என்றும் பொருள்.
தம் தந்தை அவரின் மூத்தமகன் தாராவின் மீதே அன்பு செலுத்துகின்றார் என்பதையும் அவருக்கு ஆதரவு அளிக்குமாறு இரகசியக் கடிதங்கள் எழுதுகின்றார் என்பதையும் நன்கு விளங்கிக் கொண்ட இவர் தந்தைக்கு மாளிகையுலேயே எல்லாவிதமான வசதிகளும் செய்து கொடுத்து வாழ்ந்து வருமாறு செய்தார். அவர் இவரை பார்க்கத் தம்மிடம் வருமாறு அழைக்க, மிகவும் எச்சரிக்கை இயல்புள்ள இவர், அதில் எதேனும் சூது இருக்குமென்று அஞ்சிச் செல்லவில்லை. எனினும் முக்கியமான அரசியல் விஷயங்கள் பற்றித் தம்முடைய தந்தையிடம் ஆளனுப்பி ஆலோசனை கலந்தே ஆவன செய்து வந்தார் இவர்.
வீண் பகட்டுகள் அகற்றம்
அரியணை ஏறிய பின்னரும் இவர் முன்னர் போல் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார். அரசவையில் நிலவி வந்த வீண் பகட்டுகளை அகற்றினார்; பிரபுக்களுக்குப் பொன்னாலான உடை அன்பளிப்பாக வழங்குவதை நிறுத்தினார்; வெள்ளி மைக்கூட்டை அகற்றிப் பீங்கான் மைக்கூட்டைப் பயன்படுத்துமாறு கட்டளையிட்டார்; அன்பளிப்புகளை வெள்ளித் தட்டில் வைத்துக் கொணர வேண்டாமென்றும் கேடயத்தில் வைத்துக் கொண்டு வந்தால் போதும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு நாளும் அரசர் அரண்மனைச் சாளரத்தின் மீது நின்று மக்களுக்குத் தரிசனம் அளிக்கும் வழக்கத்தை இவர் தம் ஆட்சியின் துவக்கத்தில் தம் முன்னோர்கள் போன்று பின் பற்றிய போதினும் பின்னர் அதனை அடியோடு நிறுத்திவிட்டார். அரசரின் தரிசனத்தைப் பெறுவதை இறை வணக்கம் போன்று இந்துக்கள் கருதி அதுவரை உணவுண்ணாது காத்திருக்கும் இயல்பை இவர் கடிந்து அவ்வாறு செய்தார்.
மக்கள் தங்களின் குறைகளை ஒரு தாளில் எழுதி அதனை ஒரு கயிற்றில் கட்டி மேலே அனுப்பி விட இவர் அனுமதி வழங்கினார். பாரசீகர்களின் சூரிய ஆண்டுக் கணக்கை நீக்கி விட்டு சந்திர ஆண்டுக் கணக்கைப் பின்பற்றுமாறு இவர் கட்டளையிட்டார். அரசவையில் ஒருவருக்கொருவர் ‘ஸலாம்’ கூறிக் கொள்வது ஒழுங்கீனமென்றும் அதற்குப் பதிலாகத் தம் தலையில் கையை வைத்தால் போதுமென்றும் கருதப்பட்டு வந்தது. ஆனால் இவரோ ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்கள் மீது சாந்தி பொழிக!) என்று சொல்லுமாறு பணித்தார்.
’நெளரோஸ்’ விழாவின் போது பிரபுக்கள் அரசருக்குக் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள வெகுமதிகளை அளிப்பது வழக்கமாக இருந்தது. அவ்வழக்கத்தை இவர் அடியோடு அகற்றிவிட்டார்.
அரசவைக் கவிஞர் துறை - இசைத்துறை நீக்கம்
அரசவைக் கவிஞர்கள் பெரும் ஊதியம் பெற்று அரசரைக் கவிதையால் வானளாவப் புகழ்ந்து கொண்டிருப்பதையே தங்களின் நீங்காத வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனை வெறுத்த இவர் அரசவைக் கவிஞர் துறையையே அகற்றி விட்டார்.
அரசவையில் ஒவ்வொரு நாளும் அரசாங்க இசை வல்லுநர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசை நிகழ்ச்சி செய்வர். மக்களிடமிருந்து வரி மூலம் வசூலிக்கப்படும் பணம் இவ்வாறு வீணடிக்கப்படுவதைக் கண்டு வருந்திய இவர் அத்துறையையும் நீக்கிவிட்டார். இது கண்ட இசைவாணர்கள் இசை இறந்து விட்டதென்று ஒரு பிண ஊர்வலம் நடத்த அதனை அறிந்த இவர், “அப்படியா! மிகவும் நல்லதாகப் போய் விட்டது. ஆனால் மீண்டும் அது எழுந்து வர முடியாமல் அதனை நன்கு ஆழமாகப் புதைத்து விடுங்கள்!” என்று கூறினார்.
அரசவைப் பிரதானிகளில் எவரேனும் கஸீதா(புகழ் மாலை) செய்து சமர்ப்பித்தால் அவர் படிக்க இவர் கேட்பார். சிறப்பாக எழுதப்பட்ட அடிகளைச் செவியுற்றுப் பாராட்டவும் செய்வார். எனினும் இனிமேல் இவ்வித அலுவல்களில் நேரத்தை வீணாக்க வேண்டாமென்று கூறுவார்.
அரசாங்க அலுவல்களை தாமே நேரில் கவனித்தார்
”அரசராகாதீர்! அரசராகாதீர்!! அரசராகி விடின் அரசாங்கம் உம்மாலேயே ஆளப்பட வேண்டுமென்று உறுதி கொள்வீராக!” என்று ஷைகு ஸஅதியின் கவிதைக் கண்ணிகளை இவர் தம் வாணாள் முழுவதும் மறக்கவே இல்லை. தம்முடைய முதுமையிலும் கூட இவர் அரசாங்க அலுவல்கள் ஒவ்வொன்றையும் தாமே நேரில் கவனித்தார். அப்பொழுது இவர் வெண்ணாடை புனைந்து கைத்தடியைப் பிடித்துக் கொண்டு பிரபுக்கள், அமீர்கள் ஆகியோருடன் நின்று கொண்டிருப்பார். அப்பொழுது இவரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படின் அதனை மூக்குக் கண்ணாடி யின்றியே படித்து அதில் கையெழுத்திடுவார். தம்முடைய முதிய வயதிலும் இவர் தக்காணத்திற்கு வந்து போர் நடத்தினார்.
ஒரு சிறந்த முஸ்லிமாக விளங்கினார்
வைகறையிலே துயிலெழுந்து, பள்ளி சென்று கூட்டுத் தொழுகையில் இவர் கலந்து கொள்வார். பகலிலும் அப்படியே. வாரத்திற்கு மூன்று நாட்கள் நோன்பு நோற்பார். ஜகாத் கொடுப்பதில் அதிகக் கவனம் செலுத்துவார். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார். தம்முடைய முதுமையிலும் நோன்பு நோற்றதன் காரணமாக இவர் மெலிந்து காணப்பட்டார் என்றும் இவரை அக்காலை சந்தித்த டவர்னீர் என்பவர் கூறுகிறார். ரமலானில் நடுநிசியில் எழுந்து ஆலிம்களுடன் சேர்ந்து இறைத் தியானத்தில் இவர் ஈடுபட்டிருப்பார். ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் இவர் இஃதிகாஃப் இருப்பார். அப்பொழுது அரசாங்க தஸ்தாவேஜுகள் இவரிடம் கொண்டு வரப்படும். அதில் இவர் கையொப்பமிடுவார். ஒவ்வோராண்டும் மக்காவுக்குப் பணம் அனுப்பி வந்தார்.
மார்க்க விற்பன்னர்களை கெளரவித்தார்
ஹஸரத் மஅசூம் என்னும் பெரியாரிடம் இவர் தீட்சை (முரீது) பெற்றிருந்தார். மார்க்க விற்பன்னர்களை இவர் பெரிதும் கெளரவித்தார். சியால் கோட்டில் பெரும் புகழ் பெற்று விளங்கிய முல்லா அப்துல்லாஹ்வுக்குப் பெருதும் மரியாதை செய்து அவருடைய குடும்பத்தினருக்கு உபகாரச் சம்பளம் வழங்கினார். மியான் அப்துல் லத்தீஃப் என்னும் ஞானாசிரியரின் தவ மடத்திற்குச் சென்று அதற்குப் பண உதவி செய்ய அப்பெரியாரிடம் அனுமதி வேண்ட, அப்பெரியார் மறுத்துரைக்க, “நான் அல்லாஹ்வுக்காக வேண்டி அல்லாஹ்வின் நல்லடியார்களுக்குப் பணிபுரிய விரும்புகிறேன்” என்று இவர் வினயமாகக் கூற, “அவ்விதமாயின் குடி மக்கள் மீது விதிக்கப்பட்ட வரியில் பாதியைக் குறையும், துன்புற்றோருக்கு உதவி செய்யும்” என்றார் அச்சான்றோர். ஹிஜ்ரி 1050 முஹர்ரம் 10 ஆம் நாள் இரவு ஷைகு ஸைஃபுத்தீன் ஸர்ஹிந்தி என்னும் ஞானாசிரியரின் தவ மடம் சென்று அவரின் முன் கால் மடித்து அமர்ந்து அறிவுரை கேட்டார் இவர். தமிழ்நாட்டில் பிறந்த ஞான மேதை ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களை இவர் பெரிதும் மதித்து அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
இவர் மியான் அப்துல் லதீஃப் என்னும் மார்க்க மேதைக்குப் பெரிதும் கெளரவம் அளித்தார். அவருக்கு இவர் எழுதிய கடிதம் ஒன்றில் தம்மை ஓர் இறைநேசச் செல்வராக வாழுமாறு செய்து, தம்மை ஓர் இறைநேசச் செல்வராகவே இறக்குமாறு செய்து தம்மை மறுமையில் இறைநேசச் செல்வர்களின் கூட்டத்திலேயே எழுப்புமாறு இறைவனிடம் தாம் ஒவ்வொரு நாளும் இறைஞ்சிக் கொண்டிருப்பதாக எழுதினார்.
ஷைகு நிஜாமுத்தீன் அவ்லியா, காஜா குத்புத்தீன் பக்தியார் காக்கீ, காஜா நஸீருத்தீன் சிராக் தெஹ்லவீ ஆகியோரின் அடக்கவிடங்களுக்குச் சென்று ஃபாத்திஹா ஓதுவதுடன் அங்குள்ள ஊழியர்களுக்கு இவர் பண உதவியும் செய்வார். ஹுமாயூனுடைய அடக்கவிடத்திற்கும் தம் பெற்றோர்களின் அடக்கவிடத்திற்கும் சென்று இவர் ஃபாத்திஹா ஓதி விட்டு வருவார்.
“பதாவா - யெ - ஆலம்கீரி”
இவர் செய்த மாபெரும் செயல்களில் ஒன்று ‘பதாவா - யெ - ஆலம்கீரி’ என்னும் ஹனஃபி மத்ஹபின் சட்ட திட்டங்கள் அடங்கிய மாபெரும் நூலைத் தயாரிக்கச் செய்ததாகும். இதனை அரபு நாட்டிலும் துருக்கியிலும் ‘பதாவா - யெ - ஹிந்தியா’ என்று அழைக்கின்றார்கள். இதற்காக இவர் இரண்டு லட்சம் ரூபாய் செலவிட்டார்.
மிகவும் எளிய இயல்பு உள்ளவர்
ஒரு தடவை இவர் நள்ளிரவில் துயிலெழுந்து ‘தஹஜ்ஜுத்’ தொழத் தண்ணீர் கொண்டு வருமாறு ஊழியனிடம் கூறிய பொழுது அவன் உறக்க வெருட்சியில் இவர் மீது தள்ளாடி விழுந்து இவரையும் கீழே விழச் செய்து விட்டான். இதையறிந்த அவன் நடுக்குற்று சவம் போன்று கீழே சாய்ந்தான். அப்பொழுது இவர் அவன் காதோடு காதாக, “உன்னைப் போல ஒரு மனிதனுக்காக ஏன் இத்துணை அளவு நடுங்குகிறாய்? இத்தகைய அச்சத்தை அல்லாஹ்வின் மீதல்லவோ கொள்ள வேண்டும்? எழுந்திரு!” என்று இதமாகக் கூறினார்.
மற்றொரு நாள் இவர் தொழப் பள்ளிவாயில் சென்ற பொழுது பள்ளிவாயில் விரிப்பில் இருந்த ஒரு துவாரத்தை அங்கிருந்த ஊழியர் ஒருவர் மற்றொரு துணியால் மறைப்பதைக் கண்ட இவர், “இத்தகு மரியாதையெல்லாம் அரண்மனையில் தான். இது அல்லாஹ்வுடைய இல்லம். இங்கு அல்லாஹ்வின் முன்னிலையில் எல்லோரும் சமமானவர்களேயாவர்” என்று கூறினார்.
வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் இயல்பு இவரிடம் இல்லை
எவரிடமும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் இயல்பு இவரிடம் இல்லாதிருந்தது. இவர் பிஜப்பூர், கோல்கொண்டா ஆகிய முஸ்லிம் நாடுகள் மீது படையெடுத்ததை எதிர்த்து தம் பதவியைத் துறந்த காஜி அப்துல் வஹ்ஹாப் மீது இவர் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக அவரைக் காணுந்தோறெல்லாம் அவரின் ஆடை மீது தன் கையால் வாசனையைப் பூசி அவரைக் கெளரவித்தார் இவர்.
இவருக்கும் சிவாஜிக்கும் இடையே நடந்த சண்டைக்குத் தவறான வர்ணம் பூசிவிட்டு, அதனை இந்தியாவைப் பிரித்தாளும் தங்களின் கொள்கைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர். உண்மையில் ஒளரங்கஜீப், அதனைத் தம்முடைய ஆட்சியை எதிர்த்துச் செய்யப் பட்ட புரட்சியாகவே கருதி அடக்க முற்பட்டார். உலகில் எந்த அரசாங்கமும் ஒருவர் தனக்கு எதிராகப் புரட்சிக் கொடி தூக்குவதை அனுமதிப் பதற்கில்லை யல்லவா?
தமக்கு எதிராகப் புரட்சிக் கொடி தூக்கிய சிவாஜியின் வழித்தோன்றல்கள் மீதும் இவர் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவில்லை. சாம்பாஜியும், அவரின் மகன் ஸாஹுவும், மனைவியும் சிறை செய்து கொணரப் பட்ட பொழுது அவர்களுடன் பெரிதும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார் இவர். அப்பொழுது ஏழு அல்லது எட்டு வயதுச் சிறுவராக இருந்த ஸாஹுவுக்கு ஏழாயிரம் மன்ஸப் பதவியும் ராஜா என்னும் பட்டமும் அளித்து அவருக்கு அரசப் பதவியளித்து தீவானும் பக்ஷியும் அவருக்காக நியமித்தார். மேலும் தம்முடைய கூடாரத்திற்கு அண்மையிலேயே அவருக்கும் கூடாரம் அமைக்குமாறு கட்டளையிட்டார். இந்துக்கள் கைதியாக இருந்தால் உணவருந்தாது பழங்களையும் தின் பண்டங்களையுமே அருந்துவது போன்று ஸாஹுவும் செய்து வருகிறார் என்பதை அறிந்ததும் உடனே இவர் ஹமீதுத்தீன் கான் என்பவரை அனுப்பி, “நீர் கைதியில்லை. நீர் உம்முடைய வீட்டில் இருக்கிறீர். ஆகையால் எப்பொழுதும் போல் உண்டு மகிழ்வுடன் இருப்பீராக!” என்று ஸாஹுவிடம் சொல்லி வருமாறு செய்தார். இவர் இறந்த பின் சுதந்திர மன்னரான ஸாஹு இந்நன்றியை மறவாது இவரின் அடக்கவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தி வந்தார் என்று ‘மஆஸிரும் உமரா’ என்னும் நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
உண்மையான அரசர்
ஒருமுறை இவர் தம் தந்தைக்கு எழுதிய கடிதத்தில், “தம் பிரஜைகள் அனைவரையும் எவர் நீதியுடன் பரிபாலிக்கின்றாரோ அவரே உண்மையான அரசர்” என்று குறிப்பிட்டதற்கிணங்க இவர் நெறி நீதி மன்னராகவே விளங்கினார்.
“ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார். இஸ்லாத்தினை நன்றாகக் கடைபிடித்த ஒரே முகலாயமன்னர் இவர் மட்டுமே. எந்த சூழ்நிலையிலும் ஐந்து வேளையும் தொழத் தவறியதில்லை அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பரச் செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை.
அதிகமான இந்துக்கள் இவரது அரசாங்கத்தில் பணி செய்தனர்
இவருடைய ஆட்சியில் அக்பருடைய காலத்தில் இருந்ததை விட அதிகமான இந்துக்கள் அரசாங்கப் பதவிகளிலும், பெரும் பதவிகளிலும் இருந்தனர். முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஆப்கானிஸ்தானை ஆளத் தம்முடைய பிரதிநிதியாகிய ஒரு ராஜ புத்திரரையே இவர் நியமித்தார்.
இந்துக்கள் மீது ஜிஸ்யா வரி வசூலித்தாரென்றால் அதைவிட அதிகமான ‘ஜகாத்’ வரியை முஸ்லிம்களிடமிருந்து வசூலித்தார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஜிஸ்யா வரி என்பது இந்துக்களுக்கான பாதுகாப்பு வரியேயன்றி வேறில்லை. இவ் வரி செலுத்துவோர் நாட்டின் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட வேண்டியதில்லை. அதற்கு மாறாக முஸ்லிம்களே அவர்களுக்காக எதிரிகளுடன் போரிட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பர்.
”இவருடைய ஐம்பது ஆண்டுகால ஆட்சியில் இவர் ஒரு கொடும் செயல் கூட செய்ததில்லை. இந்துக்கள் மீது அநீதியும் இழைக்கவில்லை” என்று ஆங்கில வரலாற்று ஆசிரியர் லேன்பூர் எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.
உடன்கட்டை ஏறும் வழக்கம் நிறுத்தம்
இவர் இந்துக்களிடையே நிலவிவந்த, கணவன் இறப்பின் அவனுடன் சேர்த்து மனைவியும் உயிர் நீக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தையும் தஸராப் பண்டிகையில் நடந்து வந்த சில செயல்களையும் நிறுத்தினார். அதே போன்று முஹர்ரம் மாதத்தில் ஷீயாக்கள் மேற் கொண்ட இஸ்லாத்திற்குப் புறம்பான செயல்களையும் தாபூத் ஊர்வலத்தையும் தடுத்து நிறுத்த இவர் தயங்கவில்லை.
கோயில்களுக்கு மானியம் மற்றும் மத சுதந்திரம்
ஒவ்வொரு மதத்தின் வணக்க ஸ்தலங்களையும் பாதுகாப்பதும் அரசர் என்ற முறையில் தாம் செய்ய வேண்டிய கடமையாக இவர் கருதினார். காசியில் உள்ள இந்துக் கோயில்களின் பராமரிப்புக்க்காகப் பெரிய பண்ணைகளையும் தர்ம சொத்துக்களையும் இவர் அன்பளிப்பாக அளித்ததற்கான ஃபர்மான் (கட்டளைப் பத்திரம்) இப்பொழுதும் அந்தக் கோயில்களின் நிர்வாகிகளிடம் இருக்கிறது. இதே போன்று காஷ்மீரிலுள்ள இந்துக் கோயில்களுக்கு இவர் அளித்த மானியங்கள் இன்றும் அந்தக் கோயில்களின் வசம் இருக்கின்றன.
குஜராத்திலிருந்து சமணக் கோயில்களின் மானியங்களை உறுதிப்படுத்தி அவற்றிற்கு வரி விலக்கு அளித்தார். கிருஸ்தவர்களுக்கு எல்லா விதமான வரிகளிலிருந்தும் விதிவிலக்குச் செய்ததோடு மாதா கோயில்களைக் கட்டிக் கொள்ளவும் மதப் பிரச்சாரம் செய்யவும் அனுமதி வழங்கினார். ஃபார்ஸிகளுக்கும் இவர் மத சுதந்திரம் வழங்கினார். “மதத்தின் காரணமாக இந்துக்கள் துன்புறுத்தப் படவில்லை. அவர்கள் விரும்பிய வண்ணம் தங்களின் கடவுளர்களை வணங்கினர்” என்று அலக்ஸாண்டர் ஹாமில்டன் சான்று பகர்கின்றார்.
சுய வருமானத்தைக் கொண்டு வாழ்ந்தவர்
இதுவரை இந்திய மண்ணில் தோன்றிய எந்த மன்னரும் ஆளாத மாபெரும் நிலப்பரப்புக்கு இவர் அரசராக இருந்த போதினும் இவருடைய காலத்தில் ஆண்டொன்றிற்கு அரசாங்க வருமானமாக எண்பது கோடி ரூபாய் வந்து கொண்டிருந்த போதினும் மக்களின் சேவைக்காகத் தம்மை அர்பணித்துக் கொண்ட ஒரு தியாகி போன்றே இவர் வாழ்ந்தார். இவர் அணிந்திருந்த மேலங்கியின் விலை பத்து ரூபாய்களுக்கு மேல் போகாது. வாரத்திற்கு ஒரு முறை வெள்ளி அன்று மட்டுமே இறைச்சி உண்பார்.
தம் சொந்தச் செலவுக்கு அரசாங்கக் கருவூலத்திலிருந்து ஒரு பைசாவேனும் செலவழிக்காது தொப்பிகள் தைத்து விற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே இவர் வாழ்ந்து வந்தார். 52 ஆண்டு 2 மாதம் 27 நாட்கள் ஆட்சி செய்த பின் இவர் விட்டுச் சென்ற சொத்து தொப்பி தைத்து விற்று வந்த பணம் நான்கு ரூபாய் இரண்டு அணாக்களும், குர் ஆன் எழுதி விற்று வந்த பணம் முந்நூற்று ஐந்து ரூபாய்களுமேயாகும். இவற்றில் தொப்பி விற்று வந்த பணத்தைத் தம் அடக்கச் செலவிற்குப் பயன் படுத்துமாறும், குர் ஆன் எழுதி விற்று வந்த பணத்தைத் தாம் இறந்த நாள் அன்று ஏழை எளியவர்களுக்கு அறம் செய்து விடுமாறு இவர் ‘உயில்’ எழுதி வைத்திருந்தார்.
சூஃபி மனோநிலையில் பாவி என அழைத்து கொண்டது
இவர் தம் கடிதங்களில் தம்மைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘பாவி’ என்று எழுதியிருப்பதைக் கண்டு இவர் பெரும் பாவங்களைச் செய்தார் என்றும், அதனைப் பிற்காலத்தில் தான் இவர் உணர்ந்து இவ்வாறு தம்மைத் தாமே அழைத்துக் கொண்டாரென்றும் சிலர் தவறாகப் பொருள் கொள்கின்றனர்.
இவர் சூஃபி மனோநிலையைக் கொண்டிருந்ததால் இவ்வாறு தம்மை அழைத்துக் கொண்டாரேயன்றி வேறில்லை. மாபெரும் சூஃபியும் மெய்ஞ்ஞானியுமான குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்கள் தம்முடைய திருப்பாடல்களில் தம்மைப் பாவி என்று கூறி, அலறித்துடித்து,
“ஐயோ எனைப்போலும் மாபெரும் பாவி
இவ்வகிலத்தில் எங்கு மிலையே
அநியாயம், அநியாயம் என்பெரும் பாதகத்
தார்பால் எடுத் தோதுவேன்”
என்று பாடுவது போன்று தான் இவர் தம்மைப் பற்றிக் கூறினார் என்பதில் ஐயமில்லை.
மரணம் மற்றும் நல்லடக்கம்
பதின்மூன்று நாட்கள் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த இவர் கி.பி. 1707 மார்ச் 4 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வைகறைத் தொழுகை தொழுத பின் ‘கலிமா’ சொல்லிய வண்ணம் உயிர் நீத்தார். இவருடைய இறுதி விருப்பப் படி எவ்வித ஆடம்பரமுமின்றி தெளலதாபாதின் அண்மையில் ஷைகு புர்ஹானுத்தீன்கான், ஷாஹ் ஜர்தி ஜர்பக்ஷ் என்னும் இறை நேசச் செல்வர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் இவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
” உம்முடைய மிக எளிமையான அடக்கவிடம் - அலங்காரம் செய்து கட்டடம் எழுப்பப்படாத சமாதி - உலகப் பேரரசர்களில் நீரே உயர்ந்தவர் என்பதற்க்கு சான்று பகர்கிறது.” என்று இக்பால் இவரைப் பற்றிப் பாடியிருப்பது இவருக்கு அவர் சூட்டிய இறவா வரம் பெற்ற புகழாரமாகும்.
குறிப்பு :
உண்மையை உலகறிய செய்வோம்.
இந்தியாவில் உண்மையான வரலாறுகளை மாற்றி எழுதி வரும் இந்த காலத்தில் வாசகர்களாகிய தாங்கள், www.historybiography.com இல் வெளிவரும் உண்மையான வரலாறுகளை நமது தொப்புள் கொடி உறவுகளிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கொண்டு செல்லும் பணியை செய்ய, இத்துடன் உள்ள Share Button களை Click கிளிக் செய்து Share (பகிர) செய்யவும். நன்றி.
English Overview: Here we have a sixth Mughal Emperor Aurangzeb biography in Tamil. Aurangzeb is a great Mughal Emperor who ruled in India. Above we have Mughal Emperor Aurangzeb's history in Tamil. We can also say it as Aurangzeb varalaru in Tamil or Aurangzeb essay in Tamil or Aurangzeb Katturai in Tamil.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.