ஜஹாங்கீர் முகலாய பேரரசர்
ஜஹாங்கீர் (31 ஆகஸ்ட் 1569 – 28 அக்டோபர் 1627) அவர்கள் முகலாய பேரரசின் நான்காவது பேரரசர் ஆவார். இவரது இயற்பெயர் நூருத்தீன் முஹம்மது ஸலீம். இவரது தந்தை முகலாய பேரரசர் அக்பர் இறந்ததும் இவர் கி.பி.1605 அக்டோபர் 21 ஆம் நாள் ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். உல்லாசப் பிரியரான இவர் சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தார். எனவே, இவர் மனைவி நூர்ஜஹானே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்தி வந்தார்.
பிறப்பு
இவர் ஃபதஹ்பூர் சிக்ரியில் வாழ்ந்து வந்த இறைநேசச் செல்வர் ஸலீம் சிஷ்தியின் இறைஞ்சுதலினால் கி.பி.1569 ஆகஸ்ட் 30 ஆம் நாள் புதன்கிழமை ஃபதஹ்பூர் சிக்ரியில் பிறந்தார். இவரது அன்னை ராஜபுத்திர மங்கையான மர்யம் ஸம்மாம். இவருக்கு ஸலீம் என பெயரிட்டார் தந்தை அக்பர். தமக்கு மகன் பிறந்தால் அஜ்மீருக்குக் கால்நடையாகச் சென்று காஜாமுயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவர்களின் அடக்கவிடத்தைத் தரிசித்து வருவதாய்ச் செய்திருந்த நேர்ச்சையையும் நிறைவேற்றினார் அக்பர்.
தந்தையை எதிர்த்து இருமுறை கலகம் செய்த இவர் அபுல் ஃபஸலின் இறப்பிற்கும் காரணமாயிருந்தார்.
அரியணை ஏறியதும் அதிரடி மாற்றங்கள்
இவரின் தந்தை அக்பர் இறந்ததும், இவர் கி.பி 1605 அக்டோபர் 21 ஆம் நாள் வியாழக்கிழமை ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். அரியணை ஏறியதும் “தஸ்தூருல் அமல்” என்னும் பன்னிரண்டு கட்டளைகளை நிருணயித்து அவற்றின் படி அரசாளப் போவதாகப் பிரகடனப் படுத்தியதோடு அவற்றைக் கல் தூண்களிலும் பொறித்து வைக்க ஏற்பாடு செய்தார்.
ஆக்ரா அரண்மனையில் ஷாஹ்புர்ஜ் என்னும் மணிமண்டபத்திலிருந்து யமுனை நதிக்கரையில் ஒரு தூண் வரை முப்பது கெஜ நீளமும் முப்பது மணிகள் உள்ளதுமான பொன்னாலான நீதிச் சங்கிலியைக் கட்டி, நீதி வேண்டுவோர் அதனை இழுத்து நீதி பெற வழி செய்தார்.
இத்ரே ஜஹாங்கீரி
இவர் தயாரித்த ஒரு வகை நறுமணப் பொருளுக்கு ‘இத்ரே ஜஹாங்கீரி’ என்பது பெயர். அதில் சிறிதளவு எடுத்துத் தெளித்தால் அரசவை முழுவதும் மணம் கமழும். அதைப் பற்றி இவர் பெரிதும் பெருமிதமுற்றார்.
வெற்றியும் இழப்பும்
இவருடைய ஆட்சியில் கங்க்ரா கோட்டை வெற்றி கொள்ளப்பட்டது. எனினும், கந்தஹாரை இழக்க நேரிட்டது. இவர் ஆணையை ஏற்று இவர் மகன் குர்ரம் அங்கு செல்லாததால் இவ்விழப்பு ஏற்பட்டது.
இவரின் மூத்த மகன் குஸ்ரூ இவரை எதிர்த்து கலகம் செய்த பொழுது அவரைத் தோற்கடித்தார் இவர். இவர் தம் இரண்டாவது மகன் குர்ரமும் இவரை எதிர்த்து கலகம் செய்தார்.
அரசவைக்கு ஆங்கிலேயர்கள் வருகை
உல்லாசப் பிரியரான இவர் சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தார். எனவே, இவர் மனைவி நூர்ஜஹானே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்தி வந்தார். இவரது அரசவைக்கு ஆங்கிலேயர்களான ஜான் ஹாப்கின்ஸும், சர் தாமஸ்ரோவும் வந்தனர். இவர் தம் வரலாற்றை ஃபார்ஸியில் எழுதி இருக்கிறார். அது ஆங்கிலத்திலும் வெளி வந்துள்ளது.
நூர்ஜஹான்
இவர் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் ஷீயா மனைவியாவார். உண்மையில் ஜஹாங்கீருக்குப் பதிலாக ஆட்சி செய்தவர் இவர் தாம்.
நூர்ஜஹானின் ஆரம்ப கால வாழ்வு
இவருடைய தந்தை கியாஸுத்தீன் தம் மனைவி அஸ்மத் பேகத்துடனும், தம் மூன்று மக்களுடனும் தெஹ்ரானி லிருந்து தம் சொத்துக்களை இழந்து வறிய நிலையில் டில்லிக்கு கிளம்பி வரும் பொழுது காண்டஹார் அருகில் இவர் பிறக்க, இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மெஹ்ருன்னிஸா என்பதாகும்.
ஒரு நாள் இளவரசர் ஸலீம், மெஹ்ருன்னிஸாவிடம் இரு புறாக்களைக் கொடுத்து வைத்திருக்குமாறு கூற, அவற்றில் ஒன்று பறந்து சென்று விட்டது. ஸலீம் திரும்பி வந்த பொழுது இவர் ஒன்றை மட்டும் கையில் வைத்திருப்பதைக் கண்டு, “எங்கே மற்றொன்று?” என்று கேட்க, “பறந்து போய்விட்டது” என்று இவர் பதில் கூற “எப்படிப் பறந்தது?” என்று ஸலீம் வினவ, “இப்படித்தான் பறந்தது” என்று கூறி மற்றொரு புறாவையும் விட்டு விட்டார் இப் பேதைப் பெண்.
இவரின் முதல் திருமணம்
இவரை ஷேர் ஆப்கன் என்பவருக்கு மண முடித்து வைத்த அக்பர், ஷேர் ஆப்கனை பர்துவான் மாநில ஆளுனராக நியமித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு இவர்கள் ‘லாட்லி’ (செல்லக் குழந்தை) என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். கி.பி.1607இல் சேர் ஆப்கன் ஒரு கலகத்தை அடக்கச் சென்ற இடத்தில் குத்துண்டு இறந்தார்.
மெஹ்ருன்னிஸா மீது காதல் கொண்ட ஸலீம் அவரைக் கொலை செய்யச் சூது செய்தார் என்பது பிற்காலத்தில் கட்டி விடப் பட்ட கதையேயாகும். உண்மையில் அவர் அவ்விதம் செய்திருப்பின் அவர் உடனே மெஹ்ருன்னிஸாவை மணந்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஸலீம் அதவது ஜஹாங்கீர் மெஹ்ருன்னிஸாவை கி.பி 1611 இல் தான் மண முடித்தார். அதுவரையில், நான்கு ஆண்டுக் காலமாக மெஹ்ருன்னிஸா, டில்லி அரண்மனையில் தையல் வேலை செய்தும், ஓவியம் வரைந்தும் ஊதியம் பெற்று வந்தார் என்று வரலாறு கூறுகிறது.
ஜஹாங்கீர் இவரை மணந்தது
ஜஹாங்கீர், இவரை மணந்ததும் இவருக்கு ‘நூர் மஹல்’ என்று பெயரிட்டார். அதன் பொருள் ‘அரண்மனையின் ஒளி’ என்பதாகும். பின்னர் தம் பெயருக்கேற்ப இவருடைய பெயரையும் ‘நூர் ஜஹான்’ (உலகத்தின் ஒளி) என்று மாற்றியமைத்தார். இவரின் தந்தைக்கு ‘இஃதிமாதுத் தெளலா’ என்னும் பட்டம் நல்கப் பட்டுக் கெளரவிக்கப் பட்டார். இவரின் சகோதரர் அஸஃப்கானுக்கு அரண்மனையில் பெரும் பதவி வழங்கப்பட்டது. இதிலிருந்து இவரின் செல்வாக்கு விண்மீன் உயர உச்சநிலையை நோக்கி சென்றது.
ஆட்சி பொறுப்பைத் தம் கையில் எடுத்தது
ஜஹாங்கீர் நோய்வாய்ப் பட்டு உடல் தளர்ச்சியும், உள்ளத் தளர்ச்சியும் அடைந்த பொழுது இவரே ஆட்சிப் பொறுப்பைத் தம் கையில் எடுத்துக் கொண்டு திறம்பட ஆட்சி செய்தார். நாணயத்தில் ஜஹாங்கீரின் உருவத்துடன் இவருடைய உருவமும் பொறிக்கப் பட்டது. இஃது இஸ்லாமிய நாணய வரலாற்றில் ஒரு புதுமையான நிகழ்ச்சி என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அறிவும் வீரமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்
இவர் அறிவும், வீரமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்தார். ஒரு தடவை ஜஹாங்கீரும் இவரும் வேட்டைக்குச் சென்ற பொழுது, ஜஹாங்கீரின் அனுமதி பெற்று யானை மீதிருந்த பெட்டியில் அமர்ந்த வண்ணமே ஒரே சூட்டில் இரண்டு புலிகளையும் சுட்டுக் கொன்றார் இவர். இமை மூடி திறப்பதற்குள் இது நிகழ்ந்தது. அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஜஹாங்கீர், இவருக்கு ஒரிரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த பொன்னாபரணத்தை அன்பளிப்பு செய்தார்.
இவர் ஆட்சி பொறுப்பை மேற்கொண்டிருக்கும் சமயத்தில் இளவரசர் குர்ரம் கலகம் செய்த பொழுது, அப் புரட்சியை மஹபத்கானை அனுப்பித் தோற்கடித்தார் இவர். ஒரு தடவை இவரும் ஜஹாங்கீரும் பஞ்சாபில் ஜீலம் நதிக் கரையில் தங்கியிருந்த பொழுது மஹபத்கான் ஒரு பெரும் படையுடன் வந்து ஜஹாங்கீரைச் சிறை செய்த பொழுது தந்திரமாகத் தப்பிய இவர், அடுத்த நாள் யானை மீதேறித் தம் படையினருடன் மஹபத்கானை எதிர்த்து நின்றார். போர்களத்தில் இவர் ஏறியிருந்த யானை படுகாயமுறவே, அது மருண்டோடலாயிற்று. இல்லையெனில் இவர் மஹபத்கானை வென்றே இருப்பார். பின்னர் பெஷாவரில் போய் ஜஹாங்கீரைச் சந்தித்த இவர் தந்திரமாக வேலை செய்து சக்கரவர்த்திக்கு விசுவாச மானவர்களைச் சேர்த்துக் கொண்டு சக்கரவர்த்தியை விடுவிக்குமாறு மஹபத்கானைச் செய்தார்.
அடுத்து பட்டத்திற்கு வர ஏற்பட்ட குழப்பமும் கலகமும்
பின்னர் மீண்டும் இளவரசர் குர்ரம் கலகம் செய்ய, அதனை அடக்க மஹபத்கானை இவர் அனுப்பி வைக்க, அவரோ இளவரசர் குர்ரத்துடன் சேர்ந்து கொண்டார். ஜஹாங்கீருக்குப் பிறகு தம் மகள் லாட்லியை மணந்த ஷஹ்ரியரே (இவர் ஜஹாங்கீரின் இளைய மகன்) பட்டத்துக்கு வர வேண்டுமென்று விரும்பினார் இவர். ஆனால் முதல் அமைச்சர் பதவி தாங்கிய இவரின் சகோதரர், ஆஸஃப் கானோ தம் மகளை மணமுடித்த இளவரசர் குர்ரமே அரியணை ஏற வேண்டுமென்று விரும்பினார்.
ஜஹாங்கீரின் இறப்பு
இவர் கி.பி.1627 அக்டோபர் 28 ஞாயிறு அன்று காலமானார். லாகூரில் ராவி நதி தீரத்தில் இவரது உடல் அடக்கப்பட்டது. ஜஹாங்கீர் இறந்ததும் ஏற்பட்ட அரியணைக்கான போரில் ஷஹ்ரியர் தோற்கடிக்கப்பட்டு, அவரின் கண்கள் பிடுங்கப்பட்டன.
இளவரசர் குர்ரம், ஷாஜஹான் என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். இத்துடன் நூர்ஜஹான் அரசியல் வாழ்வு முடிவுற்றது.
நூர்ஜஹானின் இறப்பு
இதன் பின் ஷாஜஹான், இவருக்கு ஆண்டு தோறும் இரண்டு லட்சம் ரூபாய் உதவிப் பணம் அளித்து வந்தார். இவர் தம் கணவர் இறந்த பின், பதினெட்டு ஆண்டுக் காலம் இவ்வுலகில் வாழ்ந்து கி.பி.1645 இல் தம் 72 ஆவது வயதில் இறப்பெய்தி லாகூரில் இவரின் கணவரின் அடக்கவிடத்தின் அண்மையில் அடக்கம் செய்யப்பட்டார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.