திப்பு சுல்தான் (மைசூர் புலி)
இந்திய சுதந்திர போராட்டத்தின் வீர சகாப்தமாக கருதப்படும் மைசூர் புலி திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களின் நெஞ்சை பிளக்கும் கூறிய வாளாக வாழ்ந்து மறைந்தவர். வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்து உள்ளார்கள் என்பதை தொலை நோக்குப் பார்வையுடன் அடையாளம் கண்டு எதிர்த்த முதல் இந்தியர் ஆவார். இளம் வயதிலேயே திறமை பெற்ற போர் வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும். நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலிகளைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியவர். உலக ஏவுகணை வரலாற்றில் திப்பு சுல்தானின் முயற்சிகள் போற்றப்படுகிறது.
(திப்பு சுல்தானின் வரலாற்று சிறப்புகளை இன்னிசையில் கேட்டு மகிழ கீழ் வரும் லிங்கை கிளிக் செய்யவும்) இன்னிசையில் திப்பு சுல்த்தான் வரலாறு
ஆரம்பகால வாழ்வு
ஹைதர் அலீயின் மகனான இவர் கி.பி. 1750 நவம்பர் 21 ஆம் நாள் பெங்களூரின் அண்மையிலுள்ள தேவனாலியில் பிறந்தார். இவரின் அன்னை ஃபஹ்ருன்னிஸா, கடப்பையின் ஆளுநராயிருந்த மீர் முயீனுத்தீனின் மகளாவார். ஆற்காட்டிலுள்ள திப்பு ஷா வலியின் அடக்கவிடத்திற்கு இவரின் பெற்றோர்கள் சென்று பிரார்த்தனை செய்து வந்ததன் பின் இவர் பிறந்ததனால், இவர் திப்பு எனப் பெயரிடப்பட்டனர். இளமையில் அரபி, ஃபார்ஸி, உர்தூ, கன்னடம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்த இவர், காஸிகான் என்பவரிடம் இராணுவப் பயிற்சியும் பெற்றார்.
இளம் வயதில் இராணுவ பதவி மூலம் ஆங்கிலேயரை விரட்டியது
கி.பி. 1767 ஜுன் 19 ஆம் தேதி இவருக்கு முதன் முதலாக ராணுவத்தில் பதவி வழங்கப் பட்டது. தம் தந்தை திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகியவற்றை வென்றதற்கு இவர் அருந்துணையாக நின்றார். மங்களூரை வெற்றி கொண்டு, அங்கிருந்த ஆங்கிலேயப் படையைத் தலைவிரி கோலமாகச் சென்னை நோக்கிப் புறமுதுகிட்டோடச் செய்தார். பின்னர் இவர் கர்னல் பெய்லியை 150 வீரர்களுடன் கைப்பற்றி, அவரின் படையைச் சின்னா பின்னப்படுத்தியதை, “இந்தியாவில் ஆங்கிலேயருக்குக் கிடைத்த மிகப் பெரும் தோல்வி” என்று வர்ணிக்கிறார் ஸர் தாமஸ் மன்ரோ.
தந்தை இறப்பும் - அரியணை ஏறியதும்
இவரது தந்தை சித்தூரில் இறந்த செய்தியை பூர்ணையாவும், கிருஷ்ணராவும் மறைத்து வைத்து, பொன்னானியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இவருக்கு இரகசியமாகத் தகவல் கொடுத்ததும், இவர் நான்கு நாட்களில் சித்தூர் அடைந்து கி.பி.1782 டிசம்பர் 26 ஆம் நாள் தம் 32 ஆவது வயதில் அரியணை ஏறினார். அப்பொழுது இவரின் அரசாங்கத்தின் வடக்கு எல்லையாக கிருஷ்ணா நதியும், மேற்கு எல்லையாக அரபிக் கடலும், கிழக்கு எல்லையாகக் கிழக்குத் தொடர்ச்சி மலையும், தெற்கு எல்லையாக திருவாங்கூரும் இருந்தன.
ஹைதர் அலீ இறந்ததும் பெருமூச்சு விட்ட ஆங்கிலேயருக்கு இவர் அரியணை ஏறியது தலைவலி போய் திருகுவலி வந்தது போல் இருந்தது. எனவே அவர்கள் இவரை நஞ்சென வெறுத்தனர். அந்த வெறுப்பைத் தங்களின் நாய்களுக்கு இவரின் பெயரைச் சூட்டி அழைப்பதன் மூலம் வெளிப்படுத்தினர்.
ஆங்கிலேயர்களுடன் போர்
இவர் 50,000 படை வீரர்களுடன் ஆங்கிலேயர் மீது தாக்குதல் நடத்தி ஆங்கிலேயத் தளபதி மாத்திவ்ஸ் உட்பட ஏராளமானவர்களைக் கைது செய்தார். கி.பி 1784 ஆம் ஆண்டு இவருக்கும் ஆங்கிலேயருக்கும் உடன் பாடு ஏற்பட்டு, சிறை செய்யப்பட்ட ஆங்கிலேய வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கி.பி 1789 இல் இவர் திருவாங்கூர் மீது படையெடுத்த பொழுது இவர் தங்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டை முறித்து விட்டாரெனக் கூறி மராட்டியர்களையும் நிஜாமையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு ஆங்கிலேயர் இவரைத் தாக்கினர். ஆம்பூரில் நடந்த போரில் இவர் தோல்வியுற்றார். சீரங்கப்பட்டணத்திலுள்ள இவரின் அரண்மணையை முற்றுகையிட்டார் கார்ன்வாலிஸ் பிரபு. தம்முடைய பாதி அரசாங்கத்தையும் முப்பது லட்சம் ரூபாய் இழப்புத் தொகையும் தருவதாகக் கூறி அவை கொடுக்கப் பெறும் வரை தம் இரண்டு மக்களான முயிஸ்ஸுத்தீன், அப்துல் காலிக் ஆகியோரை ஆங்கிலேயரிடம் அடைக்கலம் வைத்தார் இவர்.
அந்த இழப்புத் தொகையைக் கட்டி தாம் மக்களை மீட்ட பின் பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் ஆங்கிலேயரைத் தொலைத்துக் கட்ட முயற்சி செய்தார் இவர். அவர்களுடன் தாம் செய்யும் போரை ஜிஹாத் (மார்க்கப் போர்) என்றே இவர் கருதினார். காபூல், அரேபியா, வெர்சேல்ஸ், மொரீஷியஸ், துருக்கி ஆகிய இடங்களுக்கெல்லாம் தம் தூதுவர்களை அனுப்பி இவர் உதவி வேண்டினார்.
ஆங்கிலேயரைத் தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் வரை பஞ்சு மெத்தையில் படுப்பதில்லை என்று சூளுரைத்துக் கூடாரம் தைக்கப் பயன்படுத்தும் முரட்டுத் துணியில் படுத்துறங்கி வந்தார்.
துரோகிகளின் சதி
இவரின் அலுவலர்களான திவான் பூர்ணையா, மீர் சாதிக், மீர்குலாம் அலீ ஆகியோர் இவருக்குத் துரோகமிழைத்தனர். 1799 மே 4 ஆம் நாள் முன்னர்ச் செய்திருந்த சதித்திட்டத்தின் படி மீர் சாதிக் படை வீரர்களுக்குச் சம்பளம் அளிக்க முற்பட்டார். படைவீரர்கள் சம்பளத்தைப் பெற முண்டியடித்துக் கொண்டு சென்ற பொழுது, ஆங்கிலேயப் படை வெகு எளிதாக சீரங்கப்பட்டணக் கோட்டைக்குள் நுழைந்தது. இதைப் பற்றி இக்பால் பாடும் பொழுது “வங்காளத்தில் ஜஃபர், தக்காணத்தில் சாதிக் மனித இனத்துக்கே, மார்க்கத்திற்கே, நாட்டிற்கே இழிவை உண்டு பண்ணியவர்கள்” என்று குறிப்பிடுகிறார்.
போர்களம் புகுந்து வீரமரணம்
உணவருந்திக் கொண்டிருந்த இவர் கோட்டைக்குள் எதிரிகள் நுழைந்து விட்டதை அறிந்து அக்கணமே போர்க்களம் புகுந்து வீரப் போர் செய்து இறப்பைத் தழுவினார். “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலிகளைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று அவர் அடிக்கடிக் கூறி வந்ததற்கேற்ப இவருடைய வாழ்வும் முடிவுற்றது. இவர் அணிந்திருந்த ஆபரணங்களை யெல்லாம் படையினர் களவாடிச் செல்ல, இவர் தம் கையில் கட்டியிருந்த தாயத்தினால் இரவில் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டு, அடுத்த நாள் இவரின் தந்தையின் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அப்பொழுது பன்னிரண்டாயிரம் ரூபாய் ஏழைகளுக்கு அறம் வழங்கப் பட்டது. இவரை அடக்கி முடிந்ததும் விண்ணிலே பயங்கரமான இடிமுழங்கி அவ்வூரையே அதிரச் செய்து இவருடைய இறப்பிற்குப் புனிதத்துவத்தையும், மகத்துவத்தையும் நல்கியது. இவருடைய இறப்புச் செய்தியைக் கேள்வியுற்று, “இன்றிலிருந்து இந்தியா நம்முடையது” என்று ஜெனரல் ஹார்ஸ் மகிழ்ச்சி மொழி பகர்ந்தார்.
திப்பு எழுதிய புத்தகங்கள்
திப்பு தம் தந்தை போன்றில்லாது கற்றோராகவும், கற்றோரை ஆதரிப்பவராகவும் விளங்கினார். கற்றோருடன் இனிய உரையாடல் நிகழ்த்தி ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தம்முடைய கருத்துக்களை வெளியிடுவார். இவர் உணருந்திக் கொண்டிருக்கும் பொழுது, இவரின் ஊழியர் ஒருவர் இவரின் அருகமர்ந்து மார்க்கம் பற்றிய நூல் ஒன்றைச் சப்தமிட்டுப் படித்துக் கொண்டிருப்பார். திருமணப் பரிசாக யாது வேண்டும் என்று வினவிய தந்தையிடம் ஒரு நூல் நிலையத்தைத் தருமாறு கூறிய இவர், பின்னர் 2000 அபூர்வ நூல்கள் அடங்கிய நூல் நிலையம் ஒன்றைத் தமக்கென ஏற்படுத்தி இருந்தார். இவருடைய ஆதரவில் சூஃபி தத்துவம், இசை, வரலாறு, மருத்துவம், இராணுவம், சட்டம், நபிமொழி ஆகியவை பற்றிய 45 நூல்கள் வரை எழுதப்பட்டன. இவர் ’ஃபத்ஹுல் முஜாஹிதீன்’ (புனித வீரர்களின் வெற்றிகள்) என்ற பெயரில் இராணுவம் பற்றிய நூல் ஒன்று எழுதினார். இவருடைய குத்பாப் பேருரைகள் “முஅய்யதுல் முஜாஹிதீன்” என்னும் பெயருடன் வெளிவந்துள்ளன.
நேர்மையான அரசாங்கத்தை நடத்தி காட்டினார்
மதபக்தி மிகுந்த இவர் தொழவும், குர் ஆன் ஓதவும் செய்வார், திக்ரும் செய்வார். கலப்படம் செய்வதும், களா (தாமதித்துத்) தொழுவதும் இவர் அதிகம் வெறுத்தவையாகும். தம்முடைய அரசாங்கத்தை இறைவனின் அரசாங்கம் என்றும், தம்மை இறைவனின் அரசாங்கத்தின் சிங்கம் என்றும் கூறினார். இவர் நாட்டில் மது விலக்கைக் கொண்டு வந்தார். ஜமீன் தாரி ஒழிப்பை முதன் முதலில் ஏற்படுத்தி, உழவர்களிடம் நிலத்தைப் பங்கிட்டார். சாமுண்டி மலையிலுள்ள காளி கோயிலில் நடந்து வந்த நரபலியை நிறுத்தினார், அடிமை வாணிபத்தை அகற்றினார்.
தொழில் துறைகளை வளர்த்து நாட்டை வளமாக்கினார்
வெளிநாடுகளிலிருந்து கைத்தொழிலாளர்களை வரவழைத்துத் துப்பாக்கி, கண்ணாடி, கடிகாரம், வெல்வெட் ஆகியவற்றையெல்லாம் இங்கேயே உற்பத்தி செய்தார். மஸ்கத்திலிருந்து பட்டுப்பூச்சியை வரவழைத்து, இங்கேயே பட்டு உற்பத்தி செய்தார். மங்களூரில் கப்பல் கட்டும் தொழிற்சாலையை ஏற்படுத்தினார். அனைத்துப் பொருள்களும் தம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டுமென்று இவர் விரும்பினார். இந்நாட்டுத் துணிகளையே இவர் அணிந்தார். வெளிநாட்டு உப்பு தம் உணவு விரிப்பில் இருப்பதை இவர் அனுமதிக்கவில்லை. வங்கி, கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை நிறுவி வாணிபத்தை வளப்படுத்தினார். இதன் காரணமாக இவரின் நாட்டில் வளம் கொழித்தது என்று மில் புகழ் மாலை சூட்டுகிறார். இவரை வாணிப மூளையுடன் பிறந்தவர் என்று புக்கானன் புகழ் பாடுகிறார்.
கிருஷ்ணராஜ சாகர் அணையைத் துவக்கியவர் இவரேயாவார். இதனை 1911 இல் தோண்ட நேரிட்ட பொழுது, 1798ஆம் ஆண்டு மே 15ஆம் நாள் பொறிக்கப்பட்ட அடிக்கல் ஒன்று அங்குக் காணப்பட்டு, அது இருந்த இடத்திலேயே பதிக்கப்பட்டது.
அணைவருக்கும் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு
தம் நாட்டில் வாழ்ந்த அனைத்து மதத்தினருக்கும் இவர் மத சுதந்திரம் வழங்கினார். சீரங்கப்பட்டணத்திலுள்ள சீரங்க நாதர் கோயில் தீக்கிரையான பொழுது, அதனைத் திரும்ப நிர்மாணித்துக் கொடுத்தார் இவர். சிரிங்கேரி மடாதிபதிக்கு ஹைதர் அலீ எழுதிய மூன்று கடிதங்களும் திப்பு எழுதிய முப்பது கடிதங்களும் அம்மடத்தில் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. திப்பு எழுதிய கடிதங்களின் தலைப்பில் சிரிங்கேரி மடாதிபதியின் பெயர், அவரின் பட்டங்களுடன் பொறிக்கப்பட்டு, அதற்கு அடுத்தபடியாக இவரின் பெயர் வெறுமனே பட்டங்களின்றிப் பொறிக்கப் பட்டுள்ளது. (1916 ஆம் ஆண்டு மைசூர் புதைபொருள் ஆராய்ச்சிப் பிரிவின் அறிக்கை)
மூன்றாவது மைசூர் போரில் மராட்டியர் சிரிங்கேரி மடத்தைத் தாக்கி அங்கிருந்த ஆபரணங்களையும், தொழு உருவத்தையும் கொள்ளையடித்துச் சென்றதை, அம்மடாதிபதி திப்புவுக்குத் தெரிவித்த பொழுது, 200 பொன் நாணயங்களையும், 200 பொன் நாணயங்களுக்கான தானியங்களையும் அவருக்கு அனுப்பி, மீண்டும் அத்தொழு உருவத்தை அங்கு வைக்க ஏற்பாடு செய்தார் இவர். இவர் செய்த நன்றிக்கு பிரதியாக மடாதிபதி பிரசாதமும் சால்வையும் இவருக்கு அனுப்பி வைக்க இவர் விலையுயர்ந்த உடைகளையும் ஒரு ஜோடி சால்வையையும் ஒரு யானையையும் அம் மடத்திற்கு அன்பளிப்பு வழங்கினார்.
தம் படையினர் சிலர் மலையாளத்திலுள்ள குருவாயூர் கோயிலுக்குத் தீ வைத்து விட்டதை அறிந்த இவர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்ததுடன், அக்கோயிலின் குருக்கள்மார் பயந்து திருவாங்கூருக்கு எடுத்து சென்ற அக்கோயிலின் தொழு உருவத்தைத் திரும்ப அங்குக் கொண்டு வந்து வைக்குமாறு செய்து அக்கோயிலை பழுது பார்த்துக் கொடுத்ததுடன், அதன் பராமரிப்புக்காக அவ்வூரின் நிலவரியையே எக்காலும் இருக்கும் வண்ணம் பட்டயம் எழுதி வைத்தார். இதனை காந்தியடிகள் தம்முடைய ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் புகழ்ந்து எழுதியுள்ளார்.
பின்நாட்களில் நிணைவு கூறப்படும் சிறப்புகள்
இவர் தேவஸ்தானங்களுக்கு 1,93,959 பகோடாக்களும், பிராமண மடங்களுக்கு 20,000 பகோடாக்களும், முஸ்லிம் அறநிலையங்களுக்கு 20,000 பகோடாக்களும் ஆண்டொன்றிற்கு வழங்கி வந்ததாக மைசூர் கெளட்டியர் C.I.E முதலாம் தொகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
இவரைப் பற்றிக் காந்தியடிகள் தம்முடைய ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் எழுதும் பொழுது, “நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும் உயிர் நீத்த தியாகிகளில் இவருக்கு நிகர் ஒருவரும் கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில், (‘Hyder Ali and Tipu Sulthan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) “ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலீயும், திப்பு சுல்த்தானும் அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.