முகலாயப் பேரரசின் இறுதி பேரரசர்
இரண்டாம் பஹதூர் ஷா
இரண்டாம் பஹதூர் ஷா (24 அக்டோபர் 1775 - 7 நவம்பர் 1862) முகலாயப் பேரரசின் இறுதி மன்னரான இவரின் முழுப் பெயர், அபுல் முஸஃப்பர் சிராஜுத்தீன் முஹம்மது பஹதூர் ஷா என்பதாகும். 1857 ஆம் ஆண்டில் நடந்த சுதந்திரப் போரின் ஆணிவேர் இவரேயாவார். இவருடைய ஆட்சியை இவரின் முன்னோர்களான அக்பர், ஒளரங்கஜீப் போன்ற ஒப்பற்ற அரசர்களின் ஆட்சியுடன் ஒப்பிட முடியாது என்றாலும், 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியன் கம்பெனிக்கு எதிராக போராடி தோல்வி கண்ட முதல் இந்திய எழுச்சியின் தொடக்கப்புள்ளி பஹதூர் ஷா தான். இந்திய எழுச்சி என்று வர்ணிக்கப்படும் அந்த பெரும் போராட்டம் அப்போதைய அகண்ட இந்தியாவின், அதாவது ஆஃப்கனின் சில பகுதிகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த `இந்திய எழுச்சி` தோல்வியை தழுவியதும், பஹதூர் ஷா ராஜ துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அப்போது பிரிட்டிஷ் அரசின் ஆளுகையில் இருந்த பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
ஆரம்ப கால வாழ்வு மற்றும் அரியணை
இரண்டாம் அக்பர் ஷாவின், இரண்டாம் மகனான இவர், கி.பி.1775 அக்டோபர் 24 செவ்வாய்க் கிழமை பிறந்தார். அன்னையின் பெயர் : லால்பாய். இவரது தந்தை "இரண்டாம் அக்பர் ஷா" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.
இரண்டாம் அக்பர் ஷா, அவரது வாரிசாக பஹதூர் ஷாவை தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாஜ் பேகம் தனது மகன் மிர்சா ஜஹாங்கீரை வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் ஷா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா ஜஹாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனி ஜஹாங்கீரை நாடு கடத்தியது. பின்னர் இவர் கி.பி.1837 இல் அரியணை ஏறினார். மிகவும் சமரச மனப்பான்மையுடைய இவர், முஸ்லிம்களை நோக்கி, “நீங்கள் என்னுடைய ஒரு கண் என்றால், இந்துக்கள் என்னுடைய மற்றொரு கண் போன்றவர்கள்” என்று கூறினார்.
பஹதூர் ஷா அரியணை ஏறியது 1837-ம் ஆண்டு. ஆனால், 1700-ம் ஆண்டு காலக்கட்டத்திலேயே, முகலாய பேரரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களையும், தனது ஆதிக்கத்தையும் இழந்து இருந்தது. பஹதூர் ஷா பொறுப்பேற்றபோது, அவரது ஆளுகையின் கீழ் டெல்லியும், அதன் சுற்றுவட்டார பகுதிகளும் மட்டும்தான் இருந்தன. இருந்தபோதிலும், அவர் பேரரசராக போற்றப்பட்டார்.
பஹதூர் ஷாவின் முகலாயப் பேரரசு
கிழக்கிந்திய கம்பெனி பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆதிக்க அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக மாறியது. பஹதூர் ஷா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, செங்கோட்டையை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரின் கிழக்கிந்திய கம்பெனியே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக விளங்கினர். பிரித்தானிய இந்தியாவுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன.
பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதுடன், சில வரிகளை அளவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பஹதூர் ஷா அவர்கள் அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.
அறிஞர் - கவிஞர் - உருதுப் புலவர்
பஹதூர் ஷா ஒரு குறிப்பிடத்தக்க உருதுப் புலவர். இவர் பெருமளவான உருது கசல்களை இயற்றியுள்ளார். 1857 இந்தியக் கிளர்ச்சியின் போது இவரது எழுத்துக்களில் ஒரு பகுதி அழிந்து போயினும், அவர் எழுதியவற்றுள் பல தப்பி விட்டதுடன், பின்னர் குல்லியத்-இ சஃபார் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. இவரது பலம் இறங்குமுக நிலையில் இருந்தது. இவர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார். எனினும் இவரது தகுதிக்கு அதிகமானதாகவே, இவரது சபையில் பல புகழ் பெற்ற உருதுப் புலவர்கள் காலிப், முமின், தாவுத் போன்ற பலர் இருந்தனர். இவர் ஓர் அறிஞராகவும் கவிஞராகவும் இருந்தார். ஸபர் என்ற புனை பெயருடன் இவர் எழுதிய கவிதைத் தொகுப்புகள் பிரசுரமாகி யுள்ளன. குலிஸ்தானுக்கு இவர் ஒரு விரிவுரை எழுதியுள்ளார். இவரை ஜாஃபர் என்றும் அழைக்கப்பட்டார், ஆனால் ஜாஃபர் என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல. அவருடைய புனை பெயர். அதன் பொருள் `வெற்றி`.
முதல் சுதந்திரப் போர் 1857 சிப்பாய் கலகம்
அப்போதைய அகண்ட இந்தியாவின், அதாவது ஆஃப்கனின் சில பகுதிகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்ட சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர். இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், பஹதூர் ஷா அவர்களே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. அன்னிய ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து அகற்றும் வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக பஹதூர் ஷாவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர். பஹதூர் ஷா எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.
சிப்பாய்க் கிளர்ச்சி தோல்வியடைந்து
1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் சிப்பாய்க் கிளர்ச்சி தோல்வி கண்டு பிரித்தானியரின் வெற்றி உறுதியாகி டில்லி விழ்ந்த பொழுது, தம் முப்பாட்டனார் ஹுமாயூனின் அடக்கவிடத்தில் அடைக்கலம் புகுந்த இவரை மிர்ஷா இலாஹி பக்ஷும், முன்ஷி ரஜப் அலீயும் பிரிட்டிஷாரிடம் காட்டிக் கொடுத்தனர். அங்குத் தாம் ஒளிந்திருந்த இடத்திலிருந்து இவர் வெளியே வந்த பொழுது பிரிட்டிஷ் தளபதி ஹட்ஸனை நோக்கி “ஹட்ஸன் பஹதூர்! முஜே பேஇஸ்ஸத் நஹீ ஹோனா” (ஹட்ஸன் பஹதூர்! எனக்கு மரியாதைக் குறைவு ஏற்பட்டு விடக் கூடாது) என்று கூறியது கல்மனத்தையும் கரைக்க வல்லதாக இருந்தது.
இராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு சிறை
செங்கோட்டையில் சிறைவைக்கப்பட்ட இவர், பசி தாளாது உணவு கேட்ட பொழுது, இவரின் முன் இரண்டு மூடப்பட்ட பாத்திரங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டது. ஆவலோடு உண்பதற்கு அவற்றைத் திறந்து பார்த்த பொழுது, அவற்றில் இவருடைய இரண்டு மக்களுடைய தலைகள் வைக்கப்பட்டிருந்தன. துக்கம் தாளாது கண் கலங்கிய தம் மனைவி ஜீனத் மஹலை நோக்கி, “கலங்காமல் இரு! நடப்பது நடக்கட்டும்” என்று கூறினார் இவர்.
செங்கோட்டையில் நடந்த 42 நாட்கள் விசாரணைக்குப் பின் இவர் குற்றம் சாட்டப் பட்டு ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1858 அக்டோபர் 7 ஆம் நாள் டில்லியிலிருந்து அப்புறப்படுத்தப் பட்ட இவர், மாட்டு வண்டியில் கல்கத்தா கொண்டு வரப்பட்டார். வரும் வழியில் இவர் கேட்ட ஒரு சிறு வேண்டுகோள், படுக்க ஒரு நாற்காலி வேண்டுமென்பது தான். அது கூட மறுக்கப்பட்டு, இவர் தரையில் படுக்குமாறு வற்புறுத்தப் பட்டார். 1858 டிசம்பர் 4 சனிக்கிழமை, இவரும் இவருடைய குடும்பத்தினர் பதினாறு பேர்களும் ஹெச். எம். மெகாரா என்ற கப்பலில் கல்கத்தாவிலிருந்து ரங்கூன் அனுப்பப்பட்டனர்.
ரங்கூனில் மரணம் அங்கு நல்லடக்கம்
ரங்கூனில் இவர்கள் ஒரு சிறு வீட்டில் சிறை வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் நாளொன்றுக்குப் பதினொரு ரூபாயும் ஞாயிற்றுக்கிழமை அதிகப்படியாக ஒரு ரூபாவும் வழங்கப்பட்டது. இதைத் தவிர இவர்களின் சிறு செலவுகளுக்காக ஒவ்வொருவருக்கும் மாதம் இரண்டு ரூபாய் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பஹதூர் ஷா, தன்னுடைய 87-ம் வயதில், 1862 நவம்பர் 7 ஆம் நாள் காலை 5 மணிக்கு ரங்கூனில் இவர் உயிர் நீத்தார். அன்று மாலை 4 மணிக்கு இவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். இவரது உடல் ரங்கூனில் உள்ள சுவேதாகன் பகோடாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மனைவி ஜீனத் மஹல் 1886 ஆம் ஆண்டு காலமானார். மற்ற முகலாய பேரரசர்களை போல, இவரும் மங்கோலிய அரசர்களான செங்கிஸ்கான் மற்றும் தைமூர் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது இறப்பின் மூலமாக, உலகின் பெரிய வம்சாவளியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
பிற்காலத்தில் இவருடைய அடக்கவிடம் கூட அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டது. 1903 ஆம் ஆண்டில் ரங்கூன் சென்ற இந்திய முஸ்லிம்களில் சிலர், அதனைத் தேடிக் கண்டுபிடித்து, அங்கு கட்டடம் எழுப்ப முயன்ற பொழுது, பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இறுதியாக 1934 ஆம் ஆண்டில் தான் அதற்கு அனுமதி வழங்கப்பட்டு அங்குக் கட்டடம் எழுப்பப்பட்டது. இது இப்போது பஹதூர் ஷா தர்கா என அழைக்கப்படுகின்றது.
நேத்தாஜியின் டில்லி சலோ கோஷம்
நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் இந்திய தேசிய விடுதலைப் படையை உருவாக்கிய பின் இவருடைய அடக்கவிடத்தைத் தரிசித்தார். அப்பொழுது அவர், “இந்தியாவின் விடுதலை வீரன் இங்கே புதையுண்டு கிடக்கிறான். அவன் புதையுண்டு கிடக்கும் இம்மண்ணை எடுத்துக் கொண்டு டில்லி சென்று அங்கு ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர்களை விரட்டியடிப்போமாக! வாருங்கள் போவோம் டில்லிக்கு. புறப்படுங்கள், டில்லி சலோ” என்று முழங்கினார்.
தமக்கெனக் கட்டிய அடக்கவிடம்
இவருடைய உடலைத் தோண்டி எடுத்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து நல்லடக்கம் செய்வது பற்றி 1956 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் பேச்சு எழுந்த பொழுது, அது பல பிரச்சனைகளைக் கிளப்பிவிடும் என்று கூறி அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நேரு.
“தாம் நேசிக்கும் நாட்டில் அடக்கப் பெற ஸபருக்கு இரண்டு கெஜ நிலம் கூட இல்லாதது எத்துணை துர் அதிர்ஷ்டமானது” என்று இவர் பாடியதற்கேற்ப, இவர் குத்பு மினாரின் அண்மையில் உள்ள மெஹ்ராலியில் தமக்கெனக் கட்டி வைத்த அடக்கவிடம் இன்றும் காலியாகவே கிடக்கிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.