பாபர்
முகலாயப் பேரரசர்
பாபர் (14பிப்ரவரி 1483 – 26 டிசம்பர் 1530) இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசின் முதல்வரான இவரின் இயற்பெயர் ஸாஹிருத்தீன் பாபர் என்பதாகும். மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.
ஆரம்ப கால வாழ்வு
இவரின் தந்தை உமர் ஷைகு மிர்ஸா, தைமூர் வழியிலும் , அன்னை குல்த்தூக் நிகார்கானம் செங்கிஸ்கான் வழியிலும் தோன்றியவர்கள். பாபர் மத்திய ஆசியாவில் உள்ள பர்கானாவில் கி.பி. 1483 பிபிரவரி 14 ஆம் நாள் பிறந்தார். இவர் பன்னிரண்டு வயதினராயிருக்கும் பொழுதே தந்தை இறக்க, அதன் காரணமாகக் கலகம் ஏற்பட, இவர் ஊரை விட்டே ஓடினார். மூன்றாண்டுகளுக்குப் பின் இவர் திரும்பி வந்து சமர்க்கந்தை வென்றார். அங்கிருந்தும் இவர் விரட்டப்பட, கி.பி. 1500இல் இவர் மீண்டும் சமர்க்கந்தை வெற்றி கொண்டார். அடுத்த ஆண்டு உஸ்பெக் அரசர் ஷாஹிபெக் இவரை அங்கிருந்தும் விரட்டியடிக்க, இவர் நான்கு ஆண்டுகள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து விட்டு, கி.பி.1504இல் காபூலை வெற்றி கொண்டார். கி.பி 1512இல் இவர் மீண்டும் சமர்க்கந்தைக் கைப்பற்றினார். ஆனால், அங்கு இவரின் ஆட்சி எட்டு மாதங்களே நீடித்தது.
பானிபட் போர்
இதன் பின் இந்தியாவின் மீது இவர் தம் கவனத்தைத் திருப்பினார். டில்லி சுல்தான் இப்ராஹீம் லோடியின் சிறிய தந்தை ஆலம் கானே காபூலுக்கு வந்து, இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு இவரை வேண்டினார். லாகூரின் ஆளுனர் தெளலத்கானும், மேவாரின் அரசர் ராணா சங்காவும் இவரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விடுத்தனர். கி.பி.1526 ஏப்ரல் 21ஆம் நாள் பானிபட் என்ற இடத்தில் , இவருக்கும், இப்ராஹீம் லோடியின் பெரும் படைக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது. இவரின் படையை விட இப்ராஹீம் லோடி, பத்து மடங்கு அதிகமான படையைப் பெற்றிருந்த போதிலும், அக்காலத்தில் இந்தியர்களுக்குத் தெரியாதிருந்த பீரங்கிகளை இவர் பயன் படுத்தியதன் காரணமாக, இப்ராஹீம் லோடியின் யானைப் படைகள் பிளிறிக் கொண்டு பாய்ந்து அவரின் படையினரையே மிதித்துக் கொன்றன. இப்ராஹீம் லோடியும் அவரின் படையினர் 20,000 பேர்களும் போர்க்களத்தில் மாண்டனர். பாபர், டில்லி சுல்தானானார்.
ராஜபுத்திரர்களுடன் போர்
இதன் பின் ராஜபுத்திரர்கள் ராணாசங்காவின் தலைமையின் கீழ் இவர் மீது போர் புரிய வர, கி.பி1527 மார்ச் 16 ஆம் நாள் ஆக்ராவுக்கு மேற்கே உள்ள கெளனா என்ற இடத்தில் கடும் போர் நிகழ்ந்தது.
மாபெரும் ராஜபுத்திரப் படையணியைக் கண்டு, இவரின் படை வீரர்கள் மனம் கலங்க, இவர் முன் பாய்ந்து, தமக்கு இப்போரில் இறைவன் வெற்றியளிப்பின் இனி ஒரு போதும் மதுவைத் தொடுவதில்லை என்று இறைவன் மீது ஆணையிட்டு சூளுரை பகர்ந்தார். அதன் பின் தம் வீரர்களை நோக்கி, “எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். இழிவோடு வாழ்வதை விடக் கெளரவத்தோடு சாவோம். இப்போரில் நாம் இறப்பின் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த வீரத் தியாகிகளாவோம். வெற்றி பொற்றாலோ, அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக உயிர் வாழ்பவர்களாவோம்.” என்று வீர உரை பகர்ந்தார்.
இவரின் வீர உரையும், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு இவர் இனிமேல் மதுவைத் தொடுவதில்லை எனச் சூழுரை பகர்ந்ததும், வெற்றி தங்களுக்கு நிச்சயம் என இவரின் படையினரை எண்ணச் செய்து, இவருக்கு இறுதி வரை உறுதுணையாக நின்று வீரப் போர் செய்வதாகக் குர் ஆனைக் கையிலெடுத்து ஆணையிடுமாறு செய்தது. எனவே அவர்கள் பன்மடங்கு வீரத்துடன் போர் செய்தனர். அதன் காரணமாக ராஜபுத்திர அணி சிதறுண்டு சின்னாபின்னமாகியது. பாபர் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டு இவர் சந்தேரியையும், பீஹாரையும், வங்காளத்தையும் வெற்றி கொண்டார். இவருடைய அரசாங்கம் காபூலிலிருந்து வங்காளம் வரை பரவிக் கிடந்தது.
நீண்ட நாள் ஆளும் பாக்கியம் இல்லை
தம்முடைய ஆற்றலினாலும், வல்லமையினாலும் ஈட்டிய இந்தப் பேரரசை இவர் நீண்ட நாள் ஆளும் பேறு பெறவில்லை. இவரின் அன்பு மகன் ஹுமாயூன் கடுமையான நோய்வாய்ப்பட்டு இறப்புப் படுக்கையில் கிடந்த பொழுது, இவருடைய வாணானில் இன்னும் இரண்டு நாட்களே பாக்கியுள்ளன என்றும், அதற்குள் இவர் தமக்கு மிகவும் விருப்பமான ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் அறம் வழங்கின் அவர் நலம் பெறலாம் என்றும், நக்ஷபந்தியா தரீக்காவைச் சேர்ந்த ஒரு தர்வேஷ் கூறினார்.
அப்பொழுது ஒருவர் இப்ராஹீம் லோடியுடன் செய்த போரில் இவருக்குக் கிடைத்த கொள்ளைப் பொருள்களில் ஒன்றான கோஹினூர் வைரத்தை அறவழியில் செலவழிக்கலா மென்று ஆலோசனை கூற, “என் உயிரை விட எனக்கு இனிமையானது யாதொன்றுமில்லை. அதனையே நான் என் மகனுக்காக அர்ப்பணம் செய்கிறேன்” என்று கூறி எழுந்து ‘உளூ’ச் செய்து வந்து, படுத்த படுக்கையாய்க் கிடந்த ஹுமாயூனை மூன்று முறை சுற்றி வந்து, “அல்லாஹ்வே! பாபராகிய என் உயிரை வாங்கிக் கொண்டு, என் மகன் ஹுமாயூனுக்கு உயிர்ப்பிச்சை நல்கு” என்று இறைஞ்சினார். அதன் பின் சற்று நேரம் மெளனமாக இருந்த இவர், “நான் கொடுத்து விட்டேன், நான் கொடுத்து விட்டேன்” என்று கத்தினார். இதற்குப் பின் ஹுமாயூனின் காய்ச்சல் விறு விறுவென இறங்கியது. பாபர் திடீரென நோயுற்று இறப்பெய்தினார். இது ஆக்ராவில் வைத்துக் கி.பி.1530 டிசம்பர் 26 ஆம் நாள் நிகழ்ந்தது. இவரின் உடல், இவர் பெரிதும் நேசித்த காபூலுக்கு ஆறு மாதங்களுக்குப் பின் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் அடக்கவிடத்தில் ஒரு மணிமண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.
ஒருவரின் உயிரை வாங்குவதை விட ஒருவருக்கு உயிர் நல்குவது மேல்
அசாதாரணத் துணிவும் ஆற்றலும் வாய்க்கப் பெற்றிருந்த இவர், 48 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து, 36 ஆண்டுகள் சிறிது இடைவிட்டு இடைவிட்டு அரசு கட்டிலில் வீற்றிருந்து, 4 ஆண்டுகளே டில்லி சிம்மாசனத்தில் வீற்றிருந்த போதினும், இவர் தம் மாண்பினை உலக வரலாற்றில் பதித்துவிட்டார்.
ஒரு நாள் இவர் டில்லி நகரத் தெருக்களில் மாறுவேடம் பூண்டு செல்லும் பொழுது, ஒரு மத யானை ஒரு குழந்தையைக் கொல்ல முற்பட்ட காலை, உடனே பாய்ந்து அக்குழந்தையை எடுத்துக் கொண்டு மறு வழியே ஓடினார். ஓடிய அவசரத்தில் இவரது தலைப்பாகை கீழே விழ அதிலிருந்தே மக்கள் இவரை எவரென அறிந்தனர். அப்பொழுது ஒரு ராஜபுத்திர வீரன் இவரின் முன் வந்து, “ நான் இன்று வரை தங்களைக் கொல்வதற்காகத் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று தான் ஒருவரின் உயிரை வாங்குவதை விட ஒருவனுக்கு உயிர் நல்குவது மேலானது என்பதை அறியலானேன்” என்று நீர் மல்கும் கண்களுடன் கூற, “ஆம்; தம்பி! ஒருவரின் உயிரை வாங்குவதை விட ஒருவருக்கு உயிர் நல்குவது மேல்” என்று இவரும் கூறி அவனை அரவணைத்துத் தம்முடைய மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவனாக அவனை ஆக்கினார்.
அசாதாரண உடல் வலிமை
அசாதாரண உடல் வலிமை வாய்க்கப் பெற்றிருந்த இவர், இருவரை தம் கட்கங்களில் இடுக்கிக் கொண்டு கோட்டைச் சுவர்கள் மீது பாய்ந்தோடுவார். இவர் கங்கையின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்திச் சென்ற தோடல்லாது, அடுத்தகணமே அக்கரையிலிருந்து இக்கரைக்கு நீந்தி வந்தார். இவர் சிறந்த போலோ விளையாட்டுக்காரர். குறி தப்பாது அம்பெய்வதில் நிபுணர். அடிக்கடி நாளொன்றுக்கு எண்பது மைல் குதிரை சவாரி செய்வார்.
இவர் எழுதிய நூல்கள்
இவர் தம் வரலாற்றை ‘பாபர் நாமா’ என்ற் பெயரில் துருக்கி மொழியில் எழுதியுள்ளார். இவர் ஃபார்ஸியிலும், துருக்கியிலும் போர் பற்றியும், காதல் பற்றியும், மது பற்றியும் கவி இயற்றியுள்ளார்.
இவர் ஹனஃபி மத்ஹப் ஃபிக்ஹ் (மார்க்க சட்ட திட்டங்கள்) பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.