ஷாஜஹான் முகலாயப் பேரரசர்
ஷாஜஹான் (கி.பி.1593- கி.பி1666) அவர்கள் ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஆவார். முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனான இவர், ஜஹாங்கீருக்கு பின்னர் ஏற்பட்ட அரியணைக்கான போரில் வெற்றி பெற்று அரியணை ஏறினார். இவரது இயற்பெயர் மிர்ஸா குர்ரம். இவர் கி.பி 1628 இல் டில்லியில் முடி சூட்டிக் கொண்டார். இவருடைய ஆட்சியின் போது முகலாயப் பேரரசு உச்ச நிலையை எய்தியது. கட்டடக் கலையில் ஆர்வம் கொண்ட இவர் தாஜ்மஹால், முத்து மசூதி, ஜாமிஆ மஸ்ஜித், செங்கோட்டை, ஷாஜஹான் பாத் ஆகியவற்றை கட்டினார். மயிலாசனத்தை செய்து அதன் மீது வீற்றிருந்து ஆட்சி செய்தார். முகலாய மன்னர்களுள் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மன்னர் இவர்.
ஆரம்ப கால வாழ்வு
முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் மூன்றாம் மகனான இவர் கி.பி.1593 ஜனவரி 5 ஆம் நாள் லாகூரில் பிறந்தார். இவரது தாயார் பெயர் பல்மதி, இவர் ராஜா உதைசிங்கின் மகள். தம் பேரக் குழந்தைகளில் குர்ரம் தாம் தம் போன்று இருப்பதாக அக்பர் கூறுவாராம்.
இவரது இயற்பெயர் மிர்ஸா குர்ரம். இளமையில் இவர் மீது ஜஹாங்கீர் அளவற்ற அன்பு செலுத்தியதோடு இவரை திருப்தி படுத்த எதுவானாலும் செய்தார்.
ஷாஜஹான் என்ற பட்டம்
இவருக்குத் தொட்ட தெல்லாம் வெற்றியாயே இருந்தது. “ஷாஜஹான்” என்ற பட்டத்தை சூட்டி இவரைத் தக்காணத்திற்கு அனுப்பி வைத்தார் தந்தை. தக்காணத்தை வெற்றி கொண்டு இவர் திரும்பிய பொழுது தம் அரியணையில் இருந்து எழுந்து இவரைக் கட்டித் தழுவித் தம் அரியணை அருகில் அமரச் செய்த அவர் இவருக்கு அன்பளிப்பாய் குஜராத் மாநிலத்தையும் வழங்கினார்.
மீண்டும் தக்காணத்தில் குழப்பம் ஏற்பட்ட பொழுது அதனை அடக்க இவரை அனுப்பி வைத்தார் தந்தை. படை வீரர்களின் மனதைக் கவர்வதற்காக மதுவை இனிமேல் தொடுவதில்லை எனச் சூளுரைத்து அதனைச் சம்பல் நதியில் கொட்டி விடுமாறும் பொன், வெள்ளியிலான மதுக்கின்னங்களை உடைத்து ஏழைகளுக்கு அறம் செய்து விடுமாறும் பணித்தார் இவர்.
தம்முடைய தக்காண வெற்றியைத் தந்தைக்கு எழுதிய பொழுது அவர் குஜராத்தில் அக்பர் அடைந்த வெற்றிக்கு அது நிகராகுமென்றும் ஏன் - அதைவிட மேலாகுமென்றும் குறிப்பிட்டார்.
அரச கட்டிலில் ஏறியது.
நூர்ஜஹான் தன் மருமகன் ஷஹர்யார், ஜஹாங்கீருக்கு பின் அரசு கட்டிலில் ஏற வேண்டும்மென்று விரும்பினார். அவரின் சகோதரர் ஆஸிஃப் கானோ தம் மருமகன் ஷாஜஹானே அரசராக வேண்டுமென்று விரும்பினார். ஜஹாங்கீர் இறந்ததும் ஆஸிஃப்கான் தம் சகோதரி நூர்ஜஹானைக் காவலில் வைத்து விட்டு இவருக்குத் தகவல் தெரிவித்தார். உடனே டில்லி நோக்கி வந்த இவர் அஜ்மீருக்குத் தம் தந்தை போன்றும் பாட்டனார் போன்றும் கால் நடையாய்ச் சென்று அங்கு அடங்கப் பெற்றுள்ள காஜா முயீனுத்தீன் ஷிஸ்தி (ரஹ்) அவர்களின் தர்காவை ஜியாரத் செய்தார்.
ஆக்ராவுக்கு 1628 ஜனவரி 28 ஆம் நாள் வந்த இவர் நல்வேளையில் டில்லிக்குள் நுழைவதற்காகச் சில நாள்கள் தஹாரா தோட்டத்தில் தங்கியிருந்து விட்டுப் பிப்ரவரி 4 ஆம் நாள் திங்கட்கிழமை டில்லிக்குள் நுழைந்து முடி சூடிக்கொண்டார்.
பொற்கால ஆட்சி
இவருடைய ஆட்சியின் போது முகலாயப் பேரரசு உச்ச நிலையை அடைந்திருந்தது. பீஜப்பூர் கோல்கொண்டா ஆகியவை இவரது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டன. இவர் மூன்று தடவை கந்தஹார் மீது படையெடுத்துச் சென்றார். இவருடைய தளபதிகளுள் பெரும் பாலோர் இந்துக்களாகவே இருந்தனர். முகலாய மன்னர்களுள் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட இவரைப் பற்றி டெவர்னியர் குறிப்பிடும் பொழுது, “நாட்டு மக்கள் அனைவருக்கும் தந்தை போன்று விளங்கினார் இவர்” என்று கூறுகிறார்.
பழக்க வழக்கங்கள்
இவருடைய மூக்கின் இடது பக்கத்தில் ஒரு மறு இருந்ததும் இவரது வலக் கையின் நான்கு விரல்களிலும் மச்சங்கள் இருந்ததும் அதிர்ஷ்டமானவையாய்க் கருதப்பட்டன. மார்க்கக் கடமைகளை வழுவறப் பின்பற்றி வந்த இவர், பொழுது கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே விழித்தெழுந்து உளூ செய்து தியானத்தில் வீற்றிருப்பார். பின்னர் வைகறைத் தொழுகை தொழுது விட்டு பொழுது புலரும் வரை ‘தஸ்பீஹ்’ செய்து கொண்டிருப்பார்.
இரவில் பத்து மணிக்கே படுக்கைக்குச் செல்வார். அப்பொழுது திரைக்கு அப்பாலிருந்து ஒருவர் பிரயாண நூல், மகான்கள் வரலாறு, சரித்திரம் ஆகியவற்றைப் படிப்பதைக் கேட்டுக் கொண்டே உறங்கிவிடுவார். பாபரின் சுய வரலாறு இவருக்கு பிடித்தமான நூலாகும். தைமூரும், பாபரும் இவரது இலட்சியப் புருடர்களாய் இருந்தார்கள்.
ஷரீஅத் சட்டப்படி ஆட்சி
ஷரீஅத் சட்டப்படி இவர் நீதி வழங்கினார். அக்பர் காலத்தில் ஏற்படுத்தப் பட்ட சஜ்தா முறையை நீக்கினார். சற்று வளைந்து நெற்றியையும் கண்களையும் கைகளையும் தொட்டுத் தமக்கு ஸலாம் செய்தால் போதும் என்றும், அறிஞர்கள் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினால் போதும் என்றும் ஏற்பாடு செய்தார். மிகவும் பண்பாளரான இவர் தம் சின்னஞ் சிறு ஊழியனைக் கூட ‘நீ’ என்று கூறியது கிடையாது.
கட்டடக் கலையில் ஆர்வம்
கட்டடக் கலையில் பெரிதும் ஆர்வம் செலுத்திய இவர் தாஜ்மஹால், முத்து மசூதி, ஜாமிஆ மஸ்ஜித், செங்கோட்டை, ஷாஜஹான் பாத் ஆகியவற்றை நிருமாணித்தார். மயிலாசனத்தை ஏழு ஆண்டுகளில் செய்து முடித்து அதன் மீது வீற்றிருந்து அரசு செலுத்தினார்.
கவிஞர்களை ஆதரித்தார். குத்ஸி என்ற கவிஞரின் வாயில் மூன்று முறை தங்கக் காசுகளை நிரப்பிக் கெளரவித்தார். இந்திய கவிஞர்களான சுந்தர்தாஸ், சிந்தாமணி, கவீந்த்ரா ஆச்சார்யா ஆகியோரை ஆதரித்தார். இசை வல்லுநர் ஜகன்னாத் என்பவருக்கு அன்பளிப்பு நல்கியதுடன் அவருக்கு மகா கவிராய் என்ற பட்டத்தையும் அளித்துக் கெளரவித்தார். ஆண்டு தோறும் மக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு ஏராளமான பணம் அறமாக அனுப்பிவைத்தார்.
சகல வசதியுடன் ஒய்வு
இவர் தம் மூத்த மகன் தாராவின் மீது அதிக அன்பு செலுத்துவதைக் கண்ட இவரின் மற்றொரு மகன் ஒளரங்கசீப், தாரா ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய அறநெறிக்கு மாறாகச் செயலாற்றுவார் என அஞ்சித் தாமே ஆட்சியைக் கைப்பற்றி, இவரை ஆக்ரா கோட்டையில் எல்லாவிதமான வசதிகளுடன் ஒய்வு கொள்ளச் செய்தார்.
ஷாஜஹானின் மரணம்
1666 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் இவர் தைலம் தேய்த்துக் குளித்ததனால் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்கு முன் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரிவிட்டுத் தாஜ்மஹாலைப் பார்த்த வண்ணம் உயிர் நீத்தார். இவரது உடல் தாஜ்மஹாலில் இவரது மனைவியின் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப் பட்டது..
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.