ஹைதர் அலீ (மைசூர் அரசர் )
ஹைதர் அலீ (கி.பி. 1720 - கி.பி.1782) அவர்கள் மைசூரைத் தலைநகராகக் கொண்டு மைசூர் அரசை 1760களில் இருந்து 1782 வரை ஆண்டார். ஹைதர் என்றால் சிங்கம் என்று பொருள். சாதாரண குதிரைப்படை போர்வீரராக இருந்து ஒரு அரசை ஆளும் மன்னராக உயர்ந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர். இவர் ஐரோப்பிய ஆய்வாளர்களைக் கொண்டு ஏவுகணை உருவாக்கி போரிட்டார். உலக ஏவுகணை வரலாற்றில் ஹைதர் அலீயின் முயற்சிகள் போற்றப்படுகிறது. இவரது மகனே திப்புசுல்தான்.
ஆரம்ப கால வாழ்க்கை
இவர் தம் மூதாதையர் ஹஸன் பக்தாதிலிருந்து இந்தியா வந்தவர். இவரின் தந்தை ஃபதஹ் முஹம்மது பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பல ஊர்களில் குடியமர்ந்து, இறுதியாக கோலார் பகுதியில் குடியேறினார்கள். அதன்பின், ஆற்காடு நவாபின் படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார். தஞ்சாவூரில் செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர் தான் ஹைதர் அலீ. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு, 1720ல் கோலார் தற்பொழுதய கர்நாடகாவில் பிறந்தார். இவர் தந்தை ஆற்காட்டு நவாபுடன் நடந்த போரில் இறந்தார்.
அரசியல் சூழல்
ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால், முகலாயப் பேரரசு, அவரது வாரிசுகளின் திறமையின்மையால், அரசியல் குழப்பத்திற்கு உள்ளாகி, பலவீனம் அடைந்தது. அதனால், ஒளரங்கசீபால் நியமிக்கப்பட்ட நவாபுகளும், நிஜாம்களும், தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் தான், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் ஆளுமைக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
படைவீரனாதல்
இச்சூழலில், மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு மைசூர் அரசை, விஜயநகரப் பேரரசின் கீழும், பாமினி சுல்தான்களின் ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கிருஷ்ணராஜ உடையார் என்ற 20 வயது இளைய அரசனிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர். 1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.
பதவி உயர்வு - திண்டுக்கலில் ஹைதர் அலீ
தேவனஹள்ளிப் போருக்கு பரிசாக, குதிரைப் படைக்குத் தளபதி ஆனார். 1750-ல் ஆங்கிலேயர்களுக்கும், பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் கர்நாடகப் போர் நடைபெற்றது. மைசூர் அரசு, பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போரில், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார். ஐரோப்பியர்களின் ராணுவ நுட்பங்களையும், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது. இவர் மைசூர் மன்னரால் மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கலின் ஆளுநராய் நியமிக்கப்பட்டுச் சில காலம் பணியாற்றினார். அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கி, ஆங்கிலேயப் படையை சமாளிக்கும் வகையில் பீரங்கி படையையும் அமைத்தார். அப்பொழுது இவர் நிர்மாணித்த கோட்டையே இன்றும் திண்டுக்கல் மலை மீது இருக்கிறது.
அரசரும், அரசுப்படையும்
மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. சம்பள உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் 1758ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, ஹைதர் அலீயிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர்.
1759ம் வருடம், வலுவான மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. அத்தருணத்தில், ஹைதர் அலீதான் தலைமையேற்று களமாடி, வெற்றிவாகைச் சூட்டினார். இளவயது அரசர் கிருஷ்ணராஜ உடையாரும் மகிழ்ச்சியடைந்தார். மேலும், ஹைதரைப் போற்றும் வகையில் தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம் (“ஃபதஹ் ஹைதர் பகதூர்”) என்ற பட்டம் மைசூர் மன்னரால் வழங்கப்பட்டது. இளவயது மன்னரை ஆட்டிப் படைத்த அமைச்சர்கள் தேவராசும், நஞ்சராசும், தங்களது சொகுசு வாழ்க்கையிலேயே கவனமாக இருந்தனர். ஹைதர் அலீயோ மக்கள் மன்றத்தில் ஒரு “பேரரசராக” வளர்ந்து கொண்டிருந்தார்.
ஹைதர் அலீயை அடக்குவதற்கு ஆங்கிலேயப் படையினர் ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கினர். அதில் மராட்டியர்களும், ஹைதராபாத் நிஜாமும் இணைந்தனர்.
அரசப்பதவி
மராட்டியரும், நிஜாமும் தனக்கு எதிராக கூட்டணி அமைத்ததை அறிந்த அலீ, பாண்டிச்சேரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டணி கொண்டார். ஏராளமான பிரெஞ்சு வீரர்களை தனது படையில் சேர்த்துக் கொண்டு, அவர்களது போர் நுட்பங்களை இந்திய வீரர்களுக்கும் பயிற்சி அளித்தார். அலீயை ஒடுக்குவது குறித்து பொம்மை மன்னர் கிருஷ்ணராஜ உடையருடன் ஆலோசித்தனர். அவரை ஆட்டிப்படைத்த தேவராசும், நஞ்சராசும் ஆலோசித்தனர். ஓரிரு நிகழ்வுகளின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்துகளை புரிந்து கொண்ட அலீ, அவ்விரு அமைச்சர்களை சிறைப்படுத்தி, பொம்மை மன்னர் கிருஷ்ணராஜ உடையாரை ஓரங்கட்டி,1760ல் மைசூர் அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
ஆட்சிக்கு வந்ததும் முதலில் இராணுவத்தை சீரமைத்தார். 200-க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களைப் பணியமர்த்தி, இந்தியாவில் முதன் முதலில் நவீன இராணுவத்தை உருவாக்கினார். அவருடைய படையில் இருந்த 1,80,000 இராணுவ வீரர்களுக்கும், 40 நாட்களுக்கு ஒருமுறை, மாத சம்பளத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது நாட்டின் பணமானது "பகோடா” என்றழைக்கப்பட்டது.
போர்கள்
கி.பி.1760 ஆம் ஆண்டில் இவர் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு அண்மையிலிருந்த சிற்றரசர்களையெல்லாம் வென்றார். கண்ணனூரை ஆண்டு வந்த அலிராஜாக்களின் வேண்டுகோளின் பேரில் இவர் மலையாளத்தின் மீது படையெடுத்து அதனை வென்றார். இக்காலை இவர் நாடு நகரங்களையெல்லாம் அழித்துக் கொண்டு தலைச்சேரி மீது படை நடத்தி வரும் பொழுது முஸ்லிம்கள் புகாரித் தங்ஙள் என்ற இறைநேசச் செல்வரிடம் போய் முறையிட உடனே அவர்கள் “எந்தா முஹ்யித்தீன் உறங்குன்னா” ( என்ன! முஹ்யித்தீனே உறங்குகிறீர்களா?) என்று கூறித் தம் கால்களைத் தரையில் உதைக்க, உடனே இவரின் படைகள் ஆங்காங்கே அசைய முடியாது நின்றுவிட்டனவென்றும் பின்னர் இவர் உண்மையை உணர்ந்து அம் மேதகையிடம் வந்து மன்னிப்புக் கேட்ட பின் இவரின் படைகள் நகரத்துவங்கின என்றும் இவருக்கு வெற்றி கிட்டியது என்றும் புகாரித் தங்ஙள் மெளலிதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக நிஜாமும், மராட்டியரும் பிரிட்டிஷாருடன் ஒன்று சேர்ந்தனர். எனினும் அவர்களுடன் வீரப்போர் செய்து வெற்றி மாலை சூடினார் இவர்.
அலீயின் ஏவுகணைகள்
அட்டைக்கு பதிலாக உலோகக் குழாய்களைக் கொண்டு, 10அடி உயரமுள்ள மூங்கில்களை பயன்படுத்தி ஏறத்தாழ 6 கிலோ எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார். இதன் செயலாக்கத்தைக் கண்டு, ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது.
முதலாம் மைசூர் போர்
1767-1769 என இரண்டுஆண்டுகள், ஹைதர் அலீக்கும் ஆங்கிலேய மேற்கு தளபதி யோசப் சுமித்துக்கும் முதலாம் மைசூர் போர் நடந்தது. ஈரோட்டில் ஆங்கிலப்படையை, ஹைதர் அலீயின் படை வென்றது. இப்போரில், தனது தோல்வியை, தளபதி நிக்சன் ஒப்புக்கொண்டார். மேற்கே மராட்டியரை வென்று மங்களூரை வென்றார். கிழக்கே வெள்ளையரை தனியே எதிர்த்தார். இப்போரினைக் கண்ட ஹைதராபாத்தின் நிஜாம் அச்சத்தால், 23.2.1768-இல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆங்கிலேயரோ, ஹைதர்அலியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, அவரவர் பிடித்த நிலப்பகுதிகளை, அவரவரிடமே விட்டுக் கொடுத்தனர். மேலும், மைசூருக்கு ஆபத்தெனில், ஆங்கிலப்படை உதவிக்கு வருமென்றும் ஒப்பந்தத்தில் எழுதி கையொப்பமிட்டனர். இப்போரை, முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் என சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
சென்னையின் ஆளுநரும், அவரின் ஆலோசகர்களும் இவர் முன் முழங்காலில் நிற்பது போன்று ஒரு கேலிப்படம் வரையச் செய்து அதனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவொன்றில் ஒட்டுமாறு இவர் செய்தார் என பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். பின்னர் இவர் குடகின் மீது படையெடுத்து அதனை வென்றார்.
இரண்டாம் மைசூர் போர்
முன்பு தோற்ற மராத்தியர், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். முதலாம் மைசூர் போரின் ஒப்பந்தப்படி, ஆங்கிலப்படை உதவிக்கு வரவில்லை. இதனால் வெகுண்ட ஹைதர் அலீ, இரண்டாம் மைசூர் போரில் ஈடுபட்டார். 1780 முதல் 1784 வரை இரண்டாம் கர்நாடகப் போர் நடந்தது. 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் அதீதத் தாக்குதலை அலி நடத்தினார். ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் போர் தீவிரமாக நடந்தது. பேரம்பாக்கம் என்னுமிடத்தில் இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு, இரண்டாயிரம் ஆங்கில வீரர்கள் கைது செய்யப் பட்டனர்.
நான்கு ஆண்டுகள் நடந்த, இந்த நெடும் போரில், தனது படையினரையும் உற்சாகம் குறையாமல் தனது மேலாண்மைத் திறனால் பார்த்துக் கொண்டார். மேலும், ஜனவரி, 1782 ஆம் ஆண்டு ஹைதர் அலீ தன் படையினரிடம், வரலாற்று புகழ் வாய்ந்த வீர உரையை பின்வருமாறு ஆற்றினார்.
ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (ஆப்கான்) மற்றும் பாரசீக(ஈரான்) மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். பிரெஞ்சுகாரர்களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக இராணுவ நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.
சிறந்த வீரர் மற்றும் திறமையாளர்
இவர் பிறவியிலே ஒரு வீரர், திறமையாளர். இவருக்கு எழுதப் படிக்கத் தெரியாத போதிலும் அபார நினைவாற்றல் இருந்தது. இவர் ஒரே பொழுதில் இவர் கடிதங்கள் படிக்கப் படுவதைக் கேட்கவும், உத்தரவுகளிடவும் களியாட்டங்களைக் கண்டு களிக்கவும், இன்னும் பல்வேறு அலுவல்களைக் கவனிக்கவும் செய்வார்.
தாம் சொல்ல மற்றொரு எழுத்தர் எழுதும் கடிதத்தை வேறோர் எழுத்தரைக் கொண்டு படிக்கச் செய்து கேட்ட பின்னரே அதில் இவர் கையெழுத்திடுவார். இவருடைய கையேழுத்து அரபி எழுத்தாகிய ‘ஹே’ என்பதனை இரு முறை கிருக்குவதாகவே இருந்தது. அரசாங்கத்தின் ஒவ்வோர் அலுவலும் இவரது மேற்பார்வையில் நடைபெற்றது. முக்கியமான விழாக்களில் இவர் வெள்ளையானை மீது பவனி வருவார்.
இவர் இளமையில் பாகம்மாள் என்ற பிராமணப் பெண்ணிடம் ஊழியம் புரிந்ததாகவும் பின்னர் அரசரான பொழுது அவளின் இல்லம் சென்று அவளுக்கு அன்பளிப்புச் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இறப்பு
இரண்டாம் மைசூர் போரில் வெற்றி செய்திகள், வந்த வண்ணம் இருந்தபோது, ஹைதரின் உடல்நிலை, முதுகுத் தண்டுவடப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அவரது உடல், இயங்க முடியாமல் முடங்கியது. அப்போது அவருக்கு வயது 60. கண்களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, புரட்சியாளரின் உடல் 1782 திசம்பர் 6-இல் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அவரது உயிர் பிரிந்தது. மகன் திப்பு சுல்தானின் வேண்டுகோளை ஏற்று, ஹைதர் அலீயின் உடல், ஸ்ரீரங்கப்பட்டினம் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.