Home


ஹுஸைன் இப்னு அலீ (ரழியல்லாஹு அன்ஹு)

        ஹுஸைன் இப்னு அலீ (10 ஜனவரி 626 - 10 அக்டோபர் 680 கி.பி.) அவர்கள்  அலீ (ரழி) அவர்களுக்கும் பாத்திமா (ரழி) அவர்களுக்கும் இரண்டாம் மகனான  ஹிஜ்ரி 4 ஷஅபான் 5 ஆம் நாள் மதீனாவில் பிறந்தார்கள். ஹஸன் (ரழி) பிறந்த ஐம்பதாவது நாளில் இவர்கள் தங்கள் அன்னையின் வயிற்றில் கருவுற்றிருக்கலாம் என்று வாக்கிதி கூறுகிறார். இடுப்புக்கு மேல் அண்ணல் நபி (ஸல்) அவர்களை உருவத்தில் ஹஸன் (ரழி) ஒத்திருந்தார்கள் எனவும் இடுப்புக்கு கீழே அண்ணல் நபி (ஸல்) அவர்களை உருவத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஒத்திருந்தார்கள் எனவும் கூறுவர்.

யஸீது கலீபா - முஆவியா (ரழி) மரணம்

        தங்கள் சகோதரர் ஹஸன் (ரழி) அவர்கள் இறந்த பின் மதீனாவிலேயே தங்கி முஆவியா (ரழி) அவர்கள் அளித்து வந்த உதவிப் பணத்தைப் பெற்று வாழ்ந்து வந்தார்கள் இவர்கள். தங்களுக்குப் பின் தங்கள் மகன் யஸீதைக் கலீபாவாக நியமித்து விட்டு முஆவியா (ரழி) இறந்ததும், தந்தை முஆவியா இருந்த போது தன்னிடம் பைஅத் செய்யாதவர்களிடம் பைஅத் பெறுவதற்காக யஸீது முனைப்புக் காட்டினார். பைஅத் பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தின் சர்வாதிகார முயற்சியே முஸ்லிம்களிடையே சீர்குலைவு தோன்றுவதற்கான முதல் காரணமாகியது.

இமாம் ஹுஸைன் ரழி அவர்களின் மீது நெருக்கடி

மதினாவின் ஆளுநர் வலீத் இப்னு உத்பா இப்னு அபூ சுபியானுக்கு யஜீத் கடிதம் எழுதினார் அதில் தன்னுடைய பிரதிநிதியாக இருந்து இமாம் ஹுசைன் (ரழி) அவர்களிடம் பைஅத் பெறவேண்டும் என்று கட்டளையிட்டார்.

இதன் விவகாரமாக இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களிடம் தனியாக சந்தித்து பைஅத் செய்து தர கேட்டுக் கொண்டார் ஆனால் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை அப்போது அருகில் இருந்த மர்வான் கடுமை காட்ட சொன்னார் இந்த சூழ்நிலையில் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மதீனாவை விட்டு வெளியேறி மக்காவிற்கு சென்றார்கள்.

கூஃபா மக்களின் வஞ்சக கடிதங்கள்

மக்காவில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டது அந்த சூழ்நிலையில் கூஃபாவிலிருந்து மக்கள் ஏராளமான கடிதங்களை அனுப்பி எங்களுக்கு நீங்கள் தான் கலீபாவாக இருக்க வேண்டும் என்று பைஅத் செய்து கிட்டத்தட்ட 12000 கடிதங்கள் அனுப்பினார்கள்.

யஸீதோ குடிகாரர், கலீபாவாக இருக்கத் தகுதியற்றவர். எனவே கூஃபா மக்கள் இவர்களைத் தங்கள் ஊர் வருமாறும், இவர்களைக் கலீபாவாக்க தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதினார்கள்.

இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூஃபாவை நோக்கி பயணம் 

அநீதியை எதிர்த்து அறப்போர் செய்வதும் தங்கள் புனித கடமை என்று கருதிய இவர்கள் தங்கள் குடும்பத்தினர் நூறு பேர்களுடன் கூஃபாவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் பயணம் செல்வதற்காக ஆயத்தமான போது நீங்கள் எங்கே செல்கிறீர்கள் உங்கள் தந்தையை கொன்ற உங்கள் சகோதரரை கொன்ற அந்த மக்களிடமா? வேண்டாம் செல்ல வேண்டாம் என்று தடுத்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஈராக் புறபட்டு செல்லும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் உடனே புறப்பட்டு இரண்டு நாட்கள் பயணத்துக்கு பிறகு இமாமவர்களை சந்தித்தார்கள். எங்கே போகின்றீர்கள்? என்று கேட்டதற்கு ஈராக்கிற்கு அங்கிருந்து ஏராளமான கடிதங்கள் வந்திருக்கின்றன என்று சொன்னார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் சொன்னார்கள் “அங்கே போகாதீர்கள் உங்களுக்கு கடிதம் எழுதியவர்களை வாள் முனையில் நிறுத்தப்படும் அதன் காரணமாக நாங்கள் கடிதம் எழுதவில்லை என்று மறுத்து விடுவார்கள்.” இருந்தும் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் திரும்பி வருவதற்கு மறுத்து விட்டார்கள் அப்போது அவர்களை ஆரத்தழுவி அழுதவாறே வழி அனுப்பினார்கள்.

மேலும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் இன்னும் சில சஹாபாக்களும் பயணத்தை தடுத்தார்கள். இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் பயணம் செய்ய உறுதியாக இருந்தார்கள். தனது குடும்பத்தினர் நண்பர்கள் என்று நெடிய பயணக்குழுவுடன் சுட்டெரிக்கும் கோடையில் கூஃபா நகரை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்கள்.

தூதுவர் ஒருவரை அனுப்புதல்

        இவர்கள் தனது உறவினரான முஸ்லிம் இப்னு அகீல் அவர்களை முன்னதாக கூஃபா நகருக்குசென்று மக்கள் மற்றும் அனைத்து சூழ்நிலைகளையும் தெரிந்துகொள்ள தூது அனுப்பினார்கள். கூஃபா நகரத்து மக்கள் முஸ்லிம் இப்னு அகீல் அவர்களை மிகுந்த மரியாதையோடு வரவேற்றார்கள். இதை சாதகமாக இருக்கும் சூழ்நிலை என்று நினைத்து இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்கள்.

கூஃபா மக்கள் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களை வரவேற்க மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகவும் அவருடைய தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கடிதம் வந்திருந்தது. இந்தக் கடிதத்தின் காரணமாக கூஃபா நகரத்திற்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டார்கள்.

யஸீதின் படைகள்  வழியை மறைத்து தடுத்தனர்

        ஈராக்கை நோக்கிய பயணத்தில் ஸறூத் என்னும் இடத்தை அடைந்த போது ஒரு தகவல் கிடைத்தது. முஸ்லிம் இப்னு அகீல் மற்றும் அவருக்கு அடைக்கலம் அளித்த நண்பரான ஹானி இப்னு உர்வா ஆகிய இருவரும் உபைதுல்லா இப்னு ஜியாதினால் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப் பட்டன என்பதே அது.!

இதைக்கேட்டு இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் அதிர்ச்சி அடையவில்லை மாறாக இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறி பொறுமை காத்தார்கள்.

இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் தங்களது நெருங்கிய தோழர்கள் மற்றும் குடும்பத்தினருடன் யஜீத் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹூர் அல்- ரியாஹியின் தலைமையில் 1000 குதிரை வீரர்களை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் வரை தொடர்ந்தார்கள். எதிரிப் படையினர் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் குழுவை முன்னேறுவதில் இருந்து வழியை மறைத்து தடுத்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே சினம் ஏற்பட்டது.

                இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் மக்களின் அழைப்பின் பேரில் தான் தன்னுடைய இந்த கூஃபாவை நோக்கிய பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறினார்கள். மேலும் கூஃபாவிலிருந்து தனக்கு வந்திருந்த ஒரு பை நிறைய கடிதங்களையும் காண்பித்தார்கள்.

நாங்கள் இந்த கடிதங்களை எழுதியவர்கள் அல்ல என ஹூர் கூறினார். கடிதங்கள் அனுப்பிய மக்களில் சிலர் படை வீரர்களாக இருந்தார்கள் அவர்களும் ஏமாற்றி விட்டார்கள். அப்போது மக்களின் ஆதரவு இல்லாததை புரிந்துகொண்ட இமாமவர்கள் அவர்களிடம் ஒருவேளை நாங்கள் இப் பயணத்தை தொடர உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நாங்கள் ஹிஜாஸிற்க்கு திரும்பச் செல்ல தயாராக இருப்பதாக கூறினார்கள்.

தங்களை ஆளுநர் உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் இடம் கொண்டு செல்லும் வரை உங்களை பின்தொடர கட்டளையிடப் பட்டிருப்பதாக எதிரிப்படை தளபதி ஹூர் பதிலளித்தார்.

ஆளுநர் உபைதுல்லாஹ்வின் புதிய உத்தரவு

        இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு இந்த காரியம் நியாயமாகவே தங்களது பயணக் குழுவை கூஃபாவிலிருந்து விலகச் செய்தார்கள். ஹூரும் அவருடைய ராணுவமும் இமாம் அவர்களுக்கு பக்கவாட்டில் வந்த வண்ணம் இருந்தனர். இரு குழுவினரும் நைனவா என்னும் கிராமத்தை வந்தடைந்தனர். அங்கு உபைதுல்லாஹ் இப்னு ஸியாதின் தூதுவர் ஹூரிடம் ஒரு செய்தியை கொடுத்தார். அந்த செய்தி “இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களை நிறுத்தி வையுங்கள் அத்தோடு அவரை உணவு மற்றும் தண்ணீர் இல்லாத ஒரு திறந்த வெளியில் நிறுத்துங்கள்.” என்பது. இவ் விஷயத்தை இமாம் அவர்களுக்கு ஹூர் அறிவித்த போது இமாமவர்கள் பொருட்படுத்தாமல் தனது பயணத்தை தொடர்ந்து வேறொரு எதிரிப்படை அவர்களுடைய பயணத்தை தடுத்து நிறுத்திய இடம் வரை தொடர்ந்தார்கள்.

எதிரி படைகள் இமாம் அவர்களை தடுத்து நிறுத்திய இடம் தான் கர்பலா

        பக்தாதிற்கு தென் மேற்கே 60 மைல் தொலைவில் உள்ள ஒரு ஊர். இதற்கு கர்பலா என்று பெயர் இது ஒரு அரேபியச் சொல். இப் பெயரைக் கேட்டதும் இதனை கர்ப் (துன்பம்), பலா (சோதனை) என்றும் பிரித்து ஹுஸைன் (ரழி) அவர்கள் பொருள் விரித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் இவர்கள் இராக்கின் ஆளுநர் உபைதுல்லாஹ்வின் படையினரால் சூழப்பட்டார்கள். இமாம் ஹூஸைன் (ரழி) அவர்கள் இங்கு கூடாரம் அமைக்குமாறு கட்டளையிட்டார்கள் அன்று ஹிஜ்ரி 61 முஹர்ரம் இரண்டாம் நாள் ஆகும். இமாம் ஹூஸைன் (ரழி) அவர்களின் முகாமை ராணுவம் முற்றுகை விட்டதை அறிந்ததும் யஸீதின் ஆளுநர் உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் கர்பலா விற்கு கூடுதல் படையை அனுப்பி வைத்தார். அதற்கு உமர் இப்னு ஸஅத் இப்னு அபீவக்காஸ் என்பவரை பொறுப்பாளராக நியமித்தார்.

ஹுஸைன் (ரழி) அவர்களின் சமாதான கோரிக்கை மறுப்பு 

        இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் உமர் இப்னு ஸஅத்திடம் முற்றுகையை அகற்றி தன்னையும் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் உடன் ஈராக்கை விட்டு வெளியேற அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டார்கள். இந்தக் கோரிக்கை உமர் இப்னு ஸஅதிற்க்கு பிடித்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஆளுநர் உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் இடம் கொண்டு சென்றார்.

உபைதுல்லாஹ் இப்னு ஜியாத் இந்தக் கோரிக்கையை ஏற்பதற்கு முன் ஷிம்ர் பின் தில்- ஜவ்ஷின் ஆலோசனையை கேட்டபோது அவர் கடுமையாக ஆட்சேபித்தார். இதன் காரணமாக உபைதுல்லா இப்னு ஜியாத் உமர் இப்னு ஸஅதை இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களோடு போர் புரிய வேண்டும் அல்லது தான் வகித்து வரும் ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கடிதம் அனுப்பினார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஷிம்ர் என்பவர் போர் புரியாவிட்டால் உமர் இப்னு ஸஅதின் தலையை துண்டித்து கூஃபாவிற்கு அனுப்ப உத்தரவிட்டார். பின் விளைவுகளை உணர்ந்த அவர் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களோடு போர் செய்ய முடிவு செய்தார்.

யூப்ரடிஸ் நதி நீரை தடை செய்து சரண் அடைய நிர்பந்தித்தது

முஹர்ரம் ஏழாம் நாள் தனது படையை இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் முகாமிற்கு நெருக்கமாக நகர்த்தி சுற்றி வளைத்தனர் அவர்களுக்கு அருகில் இருக்கும் யூப்ரடிஸ் நதியின் நீர் அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்து சரண் அடைவதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தினர்.

இரண்டு நாட்கள் கழிந்தது முஹர்ரம் ஒன்பதாம் நாள் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் முகாமை எதிரிகள் மேலும் நெருங்கினார்கள். அப்போது இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் சகோதரர் அப்பாஸ் ஒரு இரவு தாக்குதலை தள்ளிப் போடுவதற்கு உமர் இப்னு ஸஅதிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்தக் கோரிக்கை ஏற்று அடுத்த நாள் காலை வரை தாக்குதலை தள்ளிப்போட உத்தரவிட்டார். அன்று இரவு இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களும் அவரின் தோழர்களும் தொழுகையில் ஈடுபட்டார்கள்.

கர்பலாவின் மண்ணில் ஆஷூரா தினம் முஹர்ரம் பத்தாம் நாள்

காலை பொழுது புலரும் நேரம் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் முகாமிற்கு வெளியே சென்று பார்வையிட்டார்கள் அங்கு உமர் இப்னு ஸஅத் அச்சுறுத்தும் விதமாக படைகளை ஒருங்கிணைப்பதை பார்த்தார்கள். இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் அல்லாஹ்வை நோக்கி தன் கரங்களை உயர்த்தினார்கள். பிறகு அஹ்லுல் பைத் அனைவரையும் ஒன்று திரட்டுமாறு ஜைனப் அவர்களிடம் சொன்னார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்த பிறகு சொன்னார்கள்

ஒருவேளை நான் கொல்லப்பட்டு விட்டால் யாரும் ஆடைகளை கிழித்துக் கொள்ளவோ மாரடித்து கொள்வவோ முகத்தில் அறைந்து கொள்ளவோ கூடாது என உபதேசிக்கிறேன் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை சொன்னார்கள்.

போர் எதிரி படைகளுக்கு பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

        உமர் இப்னு ஸஅத் போர் துவங்குவதை குறிப்பிட வானத்தை நோக்கி அம்பு ஒன்றை எய்தினார். இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் ஆதரவாளர்கள் முதலில் எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முன்வந்து போரிட்டார்கள். சிறிது நேரத்திலேயே பல எதிரிப் படையினரை வெட்டி வீழ்த்தினார்கள். இதன் காரணமாக எதிரிகளுக்கு பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் எதிரிப்படைகள் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களை சார்ந்த 72 நபர்களுக்கு எதிராக 5000 படைவீரர்களை களத்தில் இறங்கினார்கள். இந்த எதிரிகள் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் குடும்ப பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கியிருந்த கூடாரத்தை தீ வைத்து கொளுத்தினார்கள்.

மதியவேளை தொழுகைக்காக இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் போரை நிறுத்தினார்கள். அச்சமயம் மிகக்குறைந்த ஆதரவாளர்களும் இவர்களது குடும்பத்தினர்கள் மட்டுமே மீதம் இருந்தனர் அனைவரும் கூட்டாக ஜமாஅத்தாக தொழுகையை நடத்தினார்கள். இரண்டு நபர்களை தொழக்கூடிய நேரத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தார்கள். தொழுகை முடிவதற்குள் ஒரு பாதுகாவலர் அவர் மீது மட்டும் 17 அம்புகள் பாய்ந்து இருந்தது இதன் காரணமாக அவர் ஷஹீதானார்.

ஹுஸைன் (ரழி) அவர்களின் சகோதரர்கள் களத்தில் இறங்கினர்

        அப்பாஸ் மற்றும் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் ஐந்து சகோதரர்களும் அடுத்த கட்டமாக சண்டையிட சென்றார்கள். தீவிரமான சண்டையிட்ட போது அப்பாஸ் அவர்கள் தாகத்தில் இருந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொண்டுவர நதியை நோக்கி முன்னேறி சென்று தண்ணீரை எடுத்துக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது எதிரிகளின் பெரும்படை ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார் பெருமுயற்சி மேற்கொண்ட அப்பாஸ் அவர்களால் தண்ணீரை கொண்டு வர முடியாமல் குதிரையிலிருந்து கீழே விழுந்து ஷஹீதானார். போர்க்களத்தில் காஸிம் இப்னு ஹஸன் அவர்களும் ஷஹீதானார்கள்.

ஹுஸைன் (ரழி) மகன் அலீ அக்பர் (ரஹ்) அவர்களின் தீரச்செயல்

        ஹுஸைன் (ரழி) அவர்களின் சகோதரர் அப்பாஸ் (ரழி) அவர்கள் கர்பலாக் களத்தில் இறந்த பின், ஹுஸைன் (ரழி) அவர்களின் இரண்டாம் மகன் அலீ அக்பர், தம் தந்தையுடையவும், அன்னையுடையவும் அனுமதி பெற்றுப் போர்க்களத்திற்குப் புறப்பட்டார். அப்பொழுது இவரின் மாமி ஸைனப் இவரைத் தடுத்து, “உம்மைக் காப்பதற்காகத் தானே என் இரு மக்களையும் போர்க்களத்தில் பலி கொடுத்தேன். போகாதீர்! என் சொல்லை மீறிப்போயின், என் இரு மக்களையும் என்னிடம் திரும்ப ஒப்படைத்து விட்டுப் போ” என்று கூறிக் கதறினார். ஹுஸைன் (ரழி) அவர்கள் தம் சகோதரிக்கு ஆறுதல் கூறித் தம் மகனைக் கூடாரத்திலிருந்து வெளியே அழைத்து வந்து குதிரை மீது ஏற்றி, இறைஞ்சி அனுப்பி வைத்தனர்.

        “நான் அலீயின் மகனான ஹுஸைனின் மகன் அலீயாவேன்” என்று உரத்துச் சப்தமிட்டுக் கொண்டு எதிரி அணியில் புகுந்து இருபது பேர்களுக்கு மேல் வெட்டி வீழ்த்திய இவர் தாகமேலிட்டால் தம் தந்தையை அணுகித் தம் துன்பத்தை எடுத்துரைத்த பொழுது, தம் ஆற்றாமையை எண்ணிக் கண்ணீர் வடித்த அவர்கள் தம் நாவை தம் மகனின் வாயிலிட்டுச் சுவைக்குமாறு செய்தார்கள். இதுவே அவர்களால் அப்பொழுது அளிக்கக்கூடிய தண்ணீராக இருந்தது. இதன் பின் போர்க்களத்தில் புகுந்து வீரப் போர் செய்த இவரின் மீது பின்னே வந்து ஈட்டியால் குத்தினான் ஸினான் இப்னு அனஸ். மற்றவர்களின் ஈட்டிகளும் இவரின் மீது பாய குதிரையிலிருந்து கீழே வீழ்ந்தார் அலீ அக்பர். குதிரை வெருண்டோடி ஹுஸைன் (ரழி) அவர்களை அடைந்து அவர்களை அலீ அக்பர் கிடந்த இடத்திற்கு அழைத்து வந்தது.

        குற்றுயிராகக் கிடந்த அலீ அக்பர் தம் கண்களைத் திறந்து, “அப்பா! என் பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்கள் சுவனத்துப் பானத்தை வைத்துக் கொண்டு என்னை இதோ அழைக்கிறார்கள்!” என்று கூறிய பின் கண்களை இறுக மூடிக்கொண்டார். அப்பொழுது இவருக்கு வயது பதினெட்டு. தம் மகனின் வெற்றுடலைத் தம் கூடாரத்திற்கு எடுத்து வந்த ஹுஸைன் (ரழி) அவர்கள் இறைவனின் முன் மண்டியிட்டு, “என்னிடம் ஒரே ஒர் அலி அக்பர் தாம் இருந்தார். அவரையும் நான் உன் பாதையில் தியாகம் செய்து விட்டேன். இன்னும் நூறு அலீ அக்பர்கள் எனக்கு மக்களாக இருப்பினும் நான் அவர்கள் அனைவரையும் உன் பாதையில் தியாகம் செய்யத் தயாராயுள்ளேன்.” என்று நீர் மல்கும் கண்களுடன் கூறினர்.

ஆறு மாத குழந்தை அலீ அஸ்கரை அம்பு எய்து கொன்ற அரக்கர்கள்

        ஹுஸைன் (ரழி) அவர்கள் தனது ஆறு மாதக் குழவியாக இருந்த அலீ அஸ்கர் கர்பலாக் களத்தில் தாகத்தால் இறக்கும் நிலையில் இருந்தது. அதனை ஒரு துண்டால் போர்த்திக் கையில் எடுத்துக் கொண்டு தம் பகைவர் முன் சென்றார் ஹுஸைன் (ரழி) அவர்கள். தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள திருக்குர்ஆனைத் தூக்கிக் கொண்டு ஹுஸைன் வருகிறார் என்று பகைவர்கள் எண்ணினார்கள். ஆனால் ஹுஸைன் (ரழி) அவர்கள் தன் சின்னஞ்சிறு மகனை அவர்களிடம் திறந்து காட்டி, “இப்பாலகன் உங்களுக்கு என்ன தீமை செய்தான்? அன்னையின் மார்பில் பால் இல்லாததால் தாகவிடாயால்  இவன் உயிர் நீக்கும் நிலையில் இருக்கிறான். இவனுக்குச் சிறிது தண்ணீர் நல்கி இவனுடைய உயிரைக் காப்பாற்றுங்கள்! இதனைக் காட்டி நான் தண்ணீர் பெற்று என்னுடைய தாகவிடாயைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறேனோ என்று நீங்கள் ஐயுறின் குழந்தையை எடுத்துச் சென்று நீங்களே அதற்குத் தண்ணீர் புகட்டி வாருங்கள்!” என்று கூறினர்.

அவர்களின் இச்சொல் பகைவர்களின் கல்நெஞ்சையும் கரையச் செய்தது. யாது செய்வதன் அறியாது அவர்கள் திகைப்புற்று நின்று கொண்டிருந்தனர். அதைக் கண்ட உமர் இப்னு ஸஅத் என்பவன் ஹுர்முலா என்னும் கொடியவனை நோக்கி ஹுஸைனுக்குப் பதில் கூறுமாறு சொல்ல அவன் நஞ்சில் தோய்க்கப்பட்ட அம்பை எடுத்து குழவி அலீ அஸ்கரின் மீது எய்தான். அதனை ஹுஸைன் (ரழி) அவர்கள் தம் கையால் தடுக்க அது அவர்களின் கையைத் துளைத்துக் கொண்டு குழந்தையின் கழுத்தில் தைத்தது. உடனே அந்த அம்பைக் குழந்தையின் கழுத்திலிருந்து ஹுஸைன் (ரழி) அவர்கள் பிடுங்கிய பொழுது குழந்தை தன் தந்தையைப் பார்த்துப் புன்முறுவல் பூத்த வண்ணம் உயிர் நீத்தது.

குழந்தையின் காயத்திலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய அதனைப் பிடித்து ஹுஸைன் (ரழி) அவர்கள் தம் முகத்தில் தேய்த்துக் கொண்டார்கள். அப்பொழுது எதிரிக் கும்பல் ஹுஸைன் (ரழி) அவர்களை நோக்கி, “ஹுஸைனே! என்ன இவ்வாறு செய்கிறீர்? உமக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?” என்று வினவ, “இல்லை; உங்களுடைய கைகளில் நான் எத்தகைய கொடுமைகளுக்கு ஆளானேன் என்பதை என்னுடைய பாட்டனார் அவர்களிடம் காட்டுவதற்காக நான் இதனை என்னுடன் எடுத்துச் செல்கின்றேன்” என்று மறுமொழி பகர்ந்தனர். பின்னர் குழந்தையின் வெற்றுடலை அதன் அன்னையிடம் கொண்டு செல்ல விரும்பாது ஹுஸைன் (ரழி) அவர்கள் அங்கேயே ஜனாஸா தொழுகை தொழுது அதனை நல்லடக்கம் செய்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு இனி என்ன நேருமோ?  

        அடுத்து போர்க்களத்திற்கு இமாம் ஹஸன் (ரழி) அவர்களின் மகன்களும் ஜைனப் (ரழி) அவர்களும் மற்றும் அவருடைய உறவினர்கள் என மொத்தம் 17 பேர் களத்தில் சென்றார்கள் அனைவரும் தங்களுடைய வாலிபப் பருவத்தில் இருந்தார்கள் அனைவரும் எதிரிகளை தைரியமாக எதிர்த்து நின்றார்கள்.

        மாலை வரை 70 பேர் தங்களது இன்னுயிரை கர்பலாவில் தியாகம் செய்து இருந்தனர் அனைவரும் மிகவும் மோசமான சூழ்நிலையில் கடுமையாகப் போரிட்டனர் கடுமையான தாக்குதலாலும் உடல் வறட்சி சோர்வு மற்றும் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தாருக்கு இனி என்ன நேருமோ என்று சொன்னால் துயரம் கொண்டார்கள்.

இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் அன்பிற்குரியவர்கள் மற்றும் குழந்தைகள் அநியாயமாக வெட்டப்படுவதை தன் கண்முன் நிகழ்வதை அதை சகித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்போது எதிரிகளை எதிர் கொள்ள இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் மட்டுமே இறுதியாக இருந்தார்.

தனிநபராக ஆயிரம் நபர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்

இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் தனிநபராக ஆயிரம் நபர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் இதன் விளைவாக பலத்த காயம் அவர்களுக்கு ஏற்பட்டது ஆயிரம் எதிரிப் படையினர் சூழ்ந்து இருந்த போதிலும் எவரும் இமாம் அவர்களை நோக்கி நெருங்கி வர தைரியம் இருக்கவில்லை. ஷிம்ர் கூச்சலிட்டதின் விளைவாக அனைவரும் கூட்டாக சேர்ந்து தாக்கினார்கள். அப்போது ஒரு வாளால் இமாம் அவர்களின் இடது மணிக்கட்டில் பாய்ந்து ஆழமாக இடது கரத்தை வெட்டியது.

இன்னொரு வாள் அவர்களின் பின் முதுகின் மேல்புறத்தில் பாய்ந்து தாக்கியது. இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களது உடலில் இருந்து வெளியேறிய இரத்தத்தின் காரணமாக உணர்வற்று தரையில் வாளால் ஊன்றி அமர்ந்தார்கள் மீண்டும் எழுந்து நிற்பார்களோ என்று எதிரிகள் பயப்படும் நிலையில் அவர்களது உயிர் பிரிந்தது.

இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் உடலில் 33 குத்துக்களும் 34 வாள்வெட்டுக்களும் காணப்பட்டன அனைத்தும் அவர்களின் முன்பகுதியிலேயே குறிப்பாக நெஞ்சிலேயே காணப்பட்டன . இது அவர்களது வீர தீரச்செயலையே காட்டுகிறது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இவர்களின் குடும்பத்தினர் 72 பேர்கள் இப்போரில் கொல்லப்பட்டார்கள். களத்திலே கிடந்த இவர்களின் உடலின் மீது இவர்களின் எதிரிகள் குதிரைகளைச் செலுத்திச் சென்றார்கள். அது நிகழ்ந்தது ஹிஜ்ரி 61 முஹர்ரம் 10 (கி.பி. 680 அக்டோபர் 10) ஆம் நாளிலாகும். அன்றிருந்தே இஸ்லாமிய உலகில் ஷீஆ பிரிவு தோன்றியது என்று கூறினார்கள்.

ஹுஸைன் (ரழி) அவர்களின் தலையை வெட்டி எடுத்து சென்றது

        அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவித்தார்.

அலீ(ரழி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரழி) – (அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்ட பின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் இப்னு ஸியாதிடம் கொண்டு வரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுஸைன்(ரழி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.

அப்போது அனஸ்(ரழி) கூறினார்: அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத்தாரிலேயே ஹுஸைன்(ரலி) தாம் தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதரவர்களுக்கு அதிக ஒப்பானவர்களாய் இருந்தார்கள். ‘வஸ்மா’ என்னும் ஒரு வகை மூலிகையால் தம் (தாடிக்கும் முடிக்கும்) சாயாமிட்டிருந்தார்கள்.  (ஸஹீஹ் புகாரி : 3748.)

ஹுஸைன் (ரழி) அவர்களின் உடல் நல்லடக்கம்

        இவர்களின் தலை மதீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இவர்கள் அன்னையின் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் வேறு சிலரோ அது திமிஷ்கிலிருந்த யஸீதுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டதென்றும். பின்னர் அங்கிருந்து அஸ்கலான் எடுத்துச் செல்லப்பட்டு அதன் பின் கெய்ரோவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர். கெய்ரோவில் இன்றும் இவர்களது தலை அடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ‘தர்கா’ உள்ளது. அங்கு உண்மையில் இவர்களது தலை அடக்கப்படவில்லை என்றும். பாத்திமியக் கலீபாக்கள் தாங்கள் பாத்திமா (ரழி) அவர்களின் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்ட பொய்மையை உறுதிப்படுத்தவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சியே அது என்றும் கூறப்படுகிறது. இவர்களின் தலையில்லா உடல் கர்பலாவில் அடக்கப்படுள்ளது. அவ்விடம் ‘மஷ்ஹத் ஹுஸைன்’ என்று அழைக்கப்படுகிறது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.