ஹஸன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹு
ஹஸன் இப்னு அலீ (ரழி) (2 மார்ச் 625 - 2 ஏப்ரல் 670 கிபி ) அவர்கள், அலீ (ரழி) அவர்களுக்கும் பாத்திமா (ரழி) அவர்களுக்கும் முதல் மகனாக ஹிஜ்ரி 3, ரமலான் பிறை 15 வியாழக்கிழமை (2 மார்ச் 625) மதீனாவில் பிறந்தார்கள். இவர்கள் பிறந்ததும் இவர்களுடைய காதுகளில் பாங்கு சொல்லி, தங்கள் வாயில் வைத்து சுவைத்த பேரீத்தம் பழத்தை இவர்களுக்கு தீத்தியவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மேலும் உருவில் தம்மை ஒத்திருந்த இவர்களுக்கு, இவர்களின் பெற்றோர்கள் இட்ட ‘குஹாப்’ என்ற பெயரை மாற்றி ஹஸன் (அழகர்) என்ற பெயரைச் தன் பேரனுக்கு சூட்டியவர்களும் அவர்களே. இவர்களுக்கு அபூ முஹம்மது என்ற ‘குன்யத்’ பெயரும் மற்றும் சில சிறப்புப் பெயர்களும் உண்டு. “ஹஸனும் ஹுஸைனும் சுவர்க்கத்தின் இரு மலர்கள்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மற்றும் பிரார்த்தனை
இவர்கள் பிறந்த ஏழாம் நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆணைப்படி இவர்களது தலை முடி இறக்கப்பட்டு அதன் எடை வெள்ளி அகீகாவாக ஏழைகளுக்கு வழங்கப் பட்டது. இவர்களுக்காக ஓர் ஆட்டை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். தங்கள் பேரன் மீது அளவற்ற அன்பு செலுத்திய அவர்கள் இவர்களைத் தோள் மீது சுமந்து, “இறைவனே! இவர் மீது நான் அன்புடையேன். நீயும் இவர் மீது அன்பு செலுத்து!” என்று இறைஞ்சினார்கள்.
ஒரு நாள் அவர்கள் இவர்களை மிம்பரின் அருகே அமர வைத்து, மிம்பர் மீதேறி, “என் மகன் ஸையிதாகும். இவரைக் கொண்டு முஸ்லிம்களுக்கிடையேயுள்ள இரு கட்சிகளையும் இறைவன் ஒன்றுபடுத்தலாம்” என்று கூறியதாக ஒரு ஹதீது உள்ளது.
தங்கள் தந்தையாரின் காலத்தில் அரசியலில் பங்கெடுக்கவில்லை
நீதியும், அமைதியும், பொறுமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்த இவர்கள் தங்கள் செல்வம் அனைத்தையும் இரு முறை அறநெறியில் செலவழித்தார்கள். இருபது தடவை நடந்து சென்று ‘ஹஜ்’ஜுச் செய்தார்கள். கலீபா உஸ்மான் (ரழி) அவர்களைப் பகைவர்கள் கொல்ல நாடிய பொழுது, உஸ்மான் (ரழி) அவர்களின் இல்லத்தில் புகாவண்ணம் அஞ்சா நெஞ்சத்துடன் காவல் காத்து நின்றவர்கள் இவர்களும், இவர்களின் இளவலுமேயாவார்கள். இவர்கள் ஸிஃப்ஃபீன் போர்களத்திற்கு வந்திருந்த போதினும் அப்போரில் ஈடுபடவில்லை. தங்கள் தந்தையாரின் காலத்தில் அரசியலிலும் அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
சிறிது காலம் கலீபா பதவியில் இவர்கள்
தங்கள் தந்தையருக்குப் பின் கலீபா பதவி ஏற்ற இவர்களை முஆவியா (ரழி) எதிர்த்தார். ஹஸன் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி முஆவியாவுக்கு எட்டியவுடன், கலீபாவுக்காக அலீ (ரழி) உடன் போராடிக்கொண்டிருந்த முஆவியா, ஹஸன் (ரழி) அவர்களின் தேர்வைக் கண்டித்து, அவரை அங்கீகரிக்கப் போவதில்லை என்ற தனது முடிவை அறிவித்தார். ஹஸனுக்கும் முஆவியாவுக்கும் இடையில் அவர்களது படைகள் ஒருவரையொருவர் எதிர்கொள்வதற்குள் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் பலனளிக்கவில்லை. பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின், நாற்பதாயிரம் பேர் இவர்களுக்காகத் தங்கள் இன்னுயிரை நீக்கத் தயாராய் இருந்தும் இவர்கள் முஆவியா (ரழி) அவர்களுடன் உடன் பாடு செய்து கொண்டது அபூ ஆமிர் சுப்யான் இப்னு லைலா என்ற முதியவருக்குக் கூட வெறுப்பை அளித்தது, அவர் இவர்களை நோக்கி, “அஸ்ஸலாமு அலைக்க யா முதில்லல் முஃமினீன் (முஃமின்களை அவமானப் படுத்துபவரே! உமக்கு ஸலாம்)” என்று கூறிய பொழுது, இவர்கள் அவரை நோக்கி, “அவ்வாறு என்னை அழைக்க வேண்டாம், நான் முஃமின்களை அவமானப்படுத்துபவனல்லன். அரசு வேண்டி முஃமின்களைப் போருக்கிரையாக்க விரும்பாதே உடன்பாடு செய்து கொண்டேன்” என்று பதிலிறுத்தார்கள்.
வஞ்சகமாக நஞ்சூட்டப்பட்டு இறப்பெய்தினார்
இவர்களின் மனைவி ஜஃதாவை, இவர்களது இறப்பிற்கு பின் தாம் மணந்து கொள்வதாக கூறி இவர்களுக்கு நஞ்சையூட்ட யஜீத் ஏற்பாடு செய்தாரென்றும் அவ்விதமே அவள் செய்தாளென்றும் பின்னர் அவளை யஜீத் மணமுடிக்காது ஏமாற்றி விட்டார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இறந்ததும் இவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃயில் இவர்களின் அன்னையின் அடக்கவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர்கள் இறக்கும் பொழுது இவர்களுக்கு வயது 46. இவர்கள் இறந்தது ஹிஜ்ரி 49 ஸஃபர் பிறை 7 இரவில் ஆகும்.
மார்க்கத்திற்காக உயிர் நீத்த ஸையிதுகளின் முதல்வர்
நஞ்சூட்டப்பட்டு இறந்ததன் காரணமாக இவர்கள் மார்க்கத்திற்காக உயிர் நீத்த ஸையிதுகளின் முதல்வர் என்று கூறப்படுகிறார்கள். இவர்கள் பல திருமணங்களும் பல மண விடுதலைகளும் செய்துள்ளதன் காரணமாக இவர்களுக்கு ‘மித்லாக்’ (மண விடுதலை செய்பவர்) என்ற பட்டப் பெயரும் ஏற்பட்டது. இவர்களது மண விடுதலை சில பொழுது அலீ (ரழி) அவர்களுக்குச் சில சிரமங்களை ஏற்படுத்தின. ஹஸன் (ரழி) அவர்கள் அனைத்து ஷியா பிரிவினராலும் இரண்டாவது இமாமாக கருதப்படுகிறார்.
இவர்களுக்குப் பன்னிரண்டு ஆண்மக்களும் ஐந்து பெண்மக்களும் பிறந்தார்கள். ஆனால் இப்பொழுது இவர்களின் மக்களில் ஸைத், ஹஸன் ஆகிய இருவருடைய வழித் தோன்றல்களே உலகில் வாழ்ந்து வருகின்றனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.