Home


ஆஸிம் இப்னு ஸாபித்  அல் அன்சாரி

(ரழியல்லாஹு அன்ஹு)

        மதீனாவில் பனூ அவ்ஸ் கிளையைச் சேர்ந்த ஸாபித் இப்னு அபீ அல்-அஃப்லா மற்றும் அல்-ஷாமுஸ் பின்த் அபீ ஆமிர் என்பவர்களின் மகனாக மதீனாவில் பிறந்தவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு குடிபெயர்ந்த பொழுது உதவிய, துவக்கத்திலேயே இஸ்லாத்தைத்  தழுவியவர்களில் ஒருவரான இவர் மாபெரும் வீரராக இருந்து, பத்ருப் போர் மற்றும் உஹத் போர்களில் முஸ்லிம்களின் வெற்றிக்கு மிகப் பெரும் பங்காற்றிய நபித் தோழர்களில் இவரும் ஒருவர்.

பத்ருப் போரில் இவரின் ஆலோசனை

        பத்ருப் போருக்கு முந்திய இரவு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, அடுத்த நாள் நடக்கவிருக்கும் போரில் கையாள வேண்டிய போர் முறைகளைப் பற்றி வினவிய பொழுது இவர் ஒரு வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு, “எதிரி இருநூறு முழத் தொலைவில் இருந்தால் அம்பைப் பயன்படுத்த வேண்டும். அவன் அருகே வந்து விடின் ஈட்டியைப் பயன் படுத்த வேண்டும். அவன் நம்மை நெருங்கி விடின் வாளைப் பயன் படுத்த வேண்டும்.” என்று கூறினார். இவர் கூறியதை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டு இவர் கூறிய வண்ணமே போரிடுமாறு தம் தோழர்களுக்குப் பணித்தனர். இறைவனின் மாபெரும் கிருபையால் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.

கைதிகளில் இருவரைத் தவிர வேறு எவரையும் நபி(ஸல்) கொலை செய்யவில்லை.

        பொருட்களை பத்ர் மைதானத்திலேயே பங்கு வைக்கவில்லை. மாறாக, அனைத்து பொருட்களையும் ஒன்றுசேர்த்து அதற்கு அப்துல்லாஹ் இப்னு கஅபை பொறுப்பாக நியமித்தார்கள். பிறகு பொருட்களுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். செல்லும் வழியில் ‘மழீக்’ மற்றும் ‘நாஜியா’ என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள மணல் மேட்டுக்கருகில் தங்கினார்கள். அங்குதான் போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிட்டார்கள். ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக ஒதுக்கினார்கள். மீதமிருந்த அனைத்தையும் போரில் கலந்த அனைத்து வீரர்களுக்கும் சட்டப்படி பங்கு வைத்தார்கள்.

பிறகு புறப்பட்டு ‘ஸஃப்ரா’ என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கு நழ்ர் இப்னு ஹாஸைக் கொன்றுவிடுமாறு அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். காரணம், இவன் பத்ர் போரில் எதிரிகளின் கொடியை ஏந்தியவன். இவன் குறைஷி குற்றவாளிகளில் ஒரு பெரும் குற்றவாளி! இஸ்லாமுக்கு எதிராகப் பெரும் சூழ்ச்சிகள் செய்தவன். நபி (ஸல்) அவர்களுக்கு கடும் நோவினை செய்தவன்.

பிறகு ‘இர்க்குல் ளுபியா’ என்ற இடத்தை அடைந்த போது உக்பா இப்னு அபூ முயீத்தையும் கொன்றுவிட ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரி (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். சிலர் அலீ (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு உக்பா செய்த தீங்கு மிகக்கொடுமையானது. இவன்தான் நபி (ஸல்) தொழுகையில் இருந்த சமயம் அவர்களின் முதுகில் ஒட்டகத்தின் குடலைப் போட்டவன். நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக அவர்களின் கழுத்தைப் போர்வையால் இறுக்கியவன். அது சமயம் அபூபக்ர் (ரழி) அவர்கள் குறுக்கிட்டு நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்கள். அவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளையிட்ட பின்பு அவன் நபியவர்களிடம் “முஹம்மதே! எனது பிள்ளைகள் என்ன ஆவார்கள்?” என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) “அவர்களுக்கு நெருப்புதான்” என்றார்கள். (ஸுனன் அபூதாவூது)

இவ்விருவரும் இதற்குமுன் செய்த குற்றங்கள் மிக மோசமானவை மறக்க முடியாதவை. அதுமட்டுமல்ல இவர்கள் தங்களின் குற்றங்களுக்காக வருந்தவுமில்லை. இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் இஸ்லாமிற்குக் கெடுதிகள் பல செய்வர். எனவே, இவர்களைக் கொல்வது அவசியமான ஒன்றே! கைதிகளில் இவ்விருவரைத் தவிர வேறு எவரையும் நபி (ஸல்) கொலை செய்யவில்லை.

உஹத் போரில் ஆஸிம் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள்

        பத்ருப் போரில் ஏற்பட்ட படுதோல்வியும் தம் பெருந்தலைவர்களது உயிரிழப்பும் மக்கத்துக் குரைஷிகளை அளவற்ற ஆத்திரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியிருந்தன. பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்பதே மூச்சாகிப் போயிருந்தது அவர்களுக்கு. ஹிஜ்ரீ 3 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் பெரும்படையொன்று திரட்டப்பட்டு, அது மதீனாவை நோக்கி முன்னேறியது.

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தலைமையில் அப்போதைய மதீனா நகருக்கு வெளியே 8 கி.மீ. தொலைவில் உள்ள உஹது மலையடிவாரத்தில் எதிரிகளை எதிர்கொள்ள முஸ்லிம்களின் படை தயாரானது. அங்குப் போர் தொடங்கியது. மூர்க்கமான போர். குரைஷிப் பெண்கள் படைகளின் பின்னால் நின்று கொண்டு ஆவேசமாக மேளம் கொட்டியும் கூக்குரலிட்டும் பாட்டுப் பாடியும் தங்கள் வீரர்களை உசுப்பேத்திக் கொண்டிருந்தார்கள். அது குரைஷிக் கூட்ட ஆண்களுக்கு மந்திரமாய் வேலை செய்தது. அவர்களுக்குப் பெரும்பாலும் சாதகமாய்ப் போர் நடந்தது. முஸ்லிம்கள் தரப்பில் எழுபது உயிரழப்புகள். அதிலும் முஸ்லிம்களுள் முக்கியமான  ஹம்ஸா (ரழி) அவர்கள் உட்பட பல சிறப்பான தோழர்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்த வெற்றி, குரைஷிப் பெண்களை மதிமயக்கி வெறியாட்டம் போட வைத்தது. குலவையிட்டும் நாட்டியமாடியும் போர்க்களத்தில் பேரழிவு நிகழ்த்தினார்கள் அவர்கள். மரணித்துக் கிடந்த முஸ்லிம் வீரர்களின் சடலங்கள், அப்பெண்களால் சின்னா பின்னமாக்கப் பட்டன. ஆனால், ஸஅதின் மகள் ஸுலாஃபா உடைய அனுபவம் எதிர்மாறாய் அமைந்துவிட்டது. போர்க்களத்திலிருந்து கணவனும் திரும்பவில்லை; மகன்களையும் காணவில்லை. சீக்கிரம் வந்து சேர்ந்தால் நடந்தேறிக் கொண்டிருக்கும் கூத்தில் சேர்ந்து கும்மியடிக்க ஆர்வமாயிருந்தவளுக்குக் கவலை அதிகரித்தது.

ஆஸிம் இப்னு ஸாபித் (ரழி)யின் தலைக்கு பரிசு நூறு ஒட்டகங்கள்

மன உளைச்சலுடன் கிடந்த சடலங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு, முதலில் கணவன் தல்ஹாவின் சடலம் இரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு பெருங்குரலெடுத்துக் கத்தினாள். வெறிபிடித்தாற்போல் மகன்களைத் தேட, இரு மகன்கள் உஹது மலையடியில் இறந்து கிடந்தனர். குற்றுயிராய்க் கிடந்தான் அல்-ஹாரிஸ் எனும் அல் ஜுலாஸ். பாய்ந்தோடி மடியில் கிடத்தி, அழுது, அரற்றி ஒப்பாரி வைத்து, “யார் அவன்? உங்களை வெட்டியவன் யார்?” என்று கேட்டவளுக்கு, மரணம் தொண்டையை அடைக்க, “ஆஸிம் இப்னு ஸாபித்! அவன்தான் என்னை, முஸாஃபியை, மற்றும் …” என்று சொல்லி இறந்து விட்டான்.

ஆஸிம் இப்னு ஸாபித் (ரழி) என்பவரால் கணவன் மற்றும் மூன்று மகன்கள் என மொத்தக் குடும்பமும் அழிந்திருந்தது கேட்டு ஆத்திரத்தில் ஊளையிட்டுக் கத்தி சூளுரைத்தாள் ஸுலாஃபா, “கடவுளர்கள் அல்-லாத், அல்-உஸ்ஸா மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், யார் ஆஸிம் இப்னு ஸாபித்தின் மண்டையோட்டைக் கொண்டு வந்து தருகிறீர்களோ, அவர்கள் கேட்கும் தொகையோ, நூறு ஒட்டகங்களோ  பரிசாய் அளிக்கப்படும்.” இது கேட்டு எப்படியும் அந்த ஆஸிமைப் பிடித்துக் கொடுத்துப் பெருந்தொகை கறந்துவிடத் துடித்தது இளைஞர் கூட்டம்.

ரஜீஃவு சென்ற பிரச்சாரக் குழு

        சூழ்ச்சி உருவானது. தங்களின் நம்பிக்கைக்குரிய அழல் மற்றும் காரா கோத்திரங்களிலிருந்து சிலரைப் பிரதிநிதியாக அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். குழுவினர் சிலர் அவ்வப்போது நபிகளாரை வந்து சந்திப்பது வழக்கமாக நடப்பதாகும். உண்மையிலேயே இஸ்லாத்தின் செய்தியினாலும் அதன் உண்மையினாலும் கவரப்பட்டவர்கள் நபிகளாரைச் சந்தித்து, தங்கியிருந்து பேசி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் ஊர் திரும்பி, அங்குள்ள மக்களும் ஏற்றுக்கொள்ள, மெதுவாக இஸ்லாம் படர ஆரம்பித்திருந்தது. ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் அழல் மற்றும் காரா வமிசத்தை சேர்ந்த ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களை சந்தித்து தங்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமையும் குர்ஆனையும் கற்றுத் தர தங்களுடன் சிலரை அனுப்புமாறு கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 6 நபர்களை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்களுக்கு மர்ஸத் இப்னு அபூமர்ஸத் கனவி (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இது இப்னு இஸ்ஹாக்கின் கூற்றாகும். “அனுப்பப்பட்டவர்கள் 10 நபர்கள்; அவர்களுக்குத் தலைவாரக ஆஸிம் இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்கள்” என்பது இமாம் புகாரியின் கூற்றாகும்.

இறை மறுப்பவர்களாகிய உங்களிடம் நாங்கள் அபயத்தை விரும்பவில்லை

        இவர்களை அழைத்துக் கொண்டு ரஜீஃவு என்ற இடத்தை அம்மக்கள் அடைந்தனர். இவ்விடம் ராபிக் மற்றும் ஜித்தாவிற்கு மத்தியில் ஹிஜாஸு பகுதிக்கு அருகில் ஹுதைல் வமிசத்திற்கு சொந்தமான நீர் நிலையாகும். இங்கு வந்தவுடன் லஹ்யான் கிளையினரை இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினர். லஹ்யான் கிளையைச் சோந்த 100 அம்பெறியும் வீரர்கள் காலடி  அடையாளங்களை வைத்து இவர்கள் இருக்குமிடம் வந்தடைந்தனர். தங்களுக்கு மோசடி நடந்துவிட்டது என்று தெரிந்து கொண்ட நபித்தோழர்கள் ஃபத்ஃபத் என்ற மலைக்குன்றின் மீது ஏறிக்கொண்டனர்.

        முன் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின் படி 100 அம்பெறி வீரர்களும் அவர்களைச் சூழ்ந்து வளைத்து “கீழே, இறங்கி வந்து விடுங்கள்; வீணே இறப்பைத் தேடிக் கொள்ளாதீர்கள்; நாங்கள் உங்களுக்கு அபயம் அளிக்கிறோம்” என்று கூற, “இறை மறுப்பவர்களாகிய உங்களிடம் நாங்கள் அபயத்தை விரும்பவில்லை. இஸ்லாம் வாழ வேண்டுமென்பதற்காக நாங்கள் இறக்கத் தயாராய் இருக்கிறோம்” என்று ஆங்கிருந்த முஸ்லிம்களின் சார்பாக பதிலிறுத்தார் இவர்.

காலையிலிருந்து மார்க்கத்திற்காக போர் செய்து இறந்தார்

        எதிரிகளின் மீது அம்பை எய்தார் இவர். அம்புகள் தீர்ந்து விட்ட பின் ஈட்டியால் போர் செய்தார். ஈட்டியும் உடைந்து விட்டதும்  வாளை உருவி, கஅபாவின் பக்கம் முகத்தைத் திருப்பி, “மாபெரிய இறைவனே! நான் காலையிலிருந்து உன்னுடைய மார்க்கத்திற்காகப் போர் செய்து மாலையில் உன்னுடைய மார்க்கத்திற்காக உயிர் நீக்கப் போகிறேன். என்னை விரோதிகளின் கொடுமைகளிலிருந்தும் காத்தருள் புரிவாயாக!” என்று இறைஞ்சிவிட்டு வீரப் போர் செய்து இறந்தார்.

இறந்த உடலை எதிரிகளின் கைக்கு கிடைக்காமல் செய்த இறைவன்

        இறந்த உடனே இவருடைய தலையை வெட்டி எடுத்து ஸுலாஃபாவிடம் கொண்டு செல்வதற்காக எதிரிகள் முன் பாய்ந்த பொழுது எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான குளவிகள் வந்து இவருடைய வெற்றுடலை மொய்த்துக் கொண்டதுடன் அதனை நெருங்க முனைந்த அவர்களையும் கொட்டி விரட்டியது. இரவு ஆனால் குளவிகள் சென்றுவிடும் என்று காத்திருந்த எதிரிகளுக்கு, அன்றிரவு கடும் மழை பெய்து தண்ணீர் ஆறாக பெருகி இவருடைய உடலை எங்கேயோ கண்காணா இடத்திற்கு அடித்தும் சென்று விட்டது. தம்முடைய உடல் இறை மறுப்பவர்களின் தூய்மையற்ற கரங்களால் தொடப்படக் கூடாது என்று இவர் காலமெல்லாம் இறைஞ்சிக் கொண்டிருந்த இறைஞ்சுதலை இறைவன் ஏற்று இவ்வாறு செய்தான்.

இதைப் பற்றி பிற்காலத்தில் உமர் (ரழி) அவர்கள் பெரிதும் வியப்போடு கூறுவார்கள்

        கொல்லப்பட்ட ஆஸிமுடைய உடலின் ஒரு சில பகுதியையாவது எடுத்து வர குறைஷிகள் சிலரை அனுப்பினர். ஆஸிம் குறைஷிகளின் மிக மதிக்கத்தக்க ஒருவரை உஹத் போரில் கொன்றிந்தார். ஆஸிமை பாதுகாப்பதற்கு அல்லாஹ் தேனியைப் போன்ற சில வண்டுகளை அனுப்பி, வந்தவர்களை விரண்டோடச் செய்தான். “தான் எந்த இணைவைப்பவனையும் தொடமாட்டேன்; எந்த இணைவைப்பவனும் என்னை தொட்டுவிடக் கூடாது” என்று ஆஸிம் அல்லாஹ்விடம் வேண்டி இருந்தார். அவரின் இந்த வேண்டுதலையும் உறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றினான். இச்செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) “அல்லாஹ் முஃமினான (அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட) அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.