Home


அஸ்அது இப்னு ஜுராரா (ரழியல்லாஹு அன்ஹு)

        மதீனாவின் ஆதரவாளர்களில் ஒருவரான இவரின் முழுப் பெயர் அஸ்அது இப்னு ஜுராரா இப்னு அதஸ் இப்னு உபைதுல் அன்ஸாரி அல் நஜ்ஜாரி அல் கஸ்ரஜ் என்பதாகும். யத்ரிபின் (மதினாவின்) பழங்குடிகளான அவ்ஸ்களுக்கும், கஸ்ரஜ்களுக்கும் இடையே நடந்து வந்த சண்டையில் தோற்கடிக்கப் பட்ட கஸ்ரஜ்கள், குறைஷிகளின் உதவியை நாடி, இவர்கள், தக்வான் என்பவரையும் அழைத்துக் கொண்டு மக்கா வந்தனர்.

அங்கு வந்த இவர்கள் அங்கு தங்களுக்கு அறிமுகமானவரான உத்பா இப்னு ரபீஆ என்பவரின் மூலமாகக் குறைஷிகளின் உதவியை நாடிய பொழுது, குறைஷிகள், “உங்களுடைய ஊரோ வெகுதொலைவில் உள்ளது. எங்களிடையே ஒரு மனிதர் தோன்றி, தம்மை நபியென்று கூறி, எங்களின் மூதாதையரும், நாங்கள் தொழுதுவரும் தொழு உருவங்களையெல்லாம் வெறும் கல்லுருவங்களெனக் கூறி எங்களையெல்லாம் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார். அவரைச் சமாளிப்பதே எங்களுக்குப் போதும் போதும் என்றிருக்கிறது” என்று கூறிக் கையை விரித்து விட்டனர். ஏமாற்றத்துடன் வெளியே வந்த தக்வான், அஸ்அது அவர்களை நோக்கி, “குறைஷிகள் கூறுவதைப் பார்த்தால், யத்ரிபில் நீரும், உம்முடைய நண்பரும் பேசிக் கொண்ட மார்க்கம் போன்றல்லவோ இருக்கிறது இது?” என்று சொன்னார். “ஆம்” என்று பதில் கூறினார் அஸ்அது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் குறைஷிகளுக்கு எதிரான இராணுவக் கூட்டாளிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். மேலும் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்ளும் எந்த பழங்குடியினருடனும் சேர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஆறு மேன்மக்கள்

        நபித்துவத்தின் பதினோறாவது ஆண்டு கி.பி. 620 ஜூலை ஹஜ்ஜுடைய காலத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி சில புதிய நல்ல இளஞ்செடிகளைக் கண்டது. அந்த இளஞ்செடிகள் வெகு விரைவில் நிழல் தரும் அடர்த்தியான மரங்களாக மாறின. அதன் நிழல்களின் கீழ் முஸ்லிம்கள் அநியாயம் மற்றும் கொடுமைகளின் அனலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களை பொய்ப்பித்து வந்ததாலும் அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுத்து வந்ததாலும் நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பகலில் சந்திக்காமல் இரவில் சந்தித்து வந்தார்கள்.

ஓர் இரவு அபூபக்ர், அலீ (ரழி) ஆகியோருடன் மக்களை சந்திப்பதற்காக வெளியே சென்ற நபி (ஸல்) அவர்கள் துஹல், ஷைபான் ஆகியோர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களிடத்தில் இஸ்லாமைப் பற்றி பேசினார்கள். அப்போது அபூபக்ருக்கும் துஹல் கிளையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் மிக அழகிய உரையாடலும், அற்புதமான கேள்வி பதில்களும் நடைபெற்றன. ஷைபான் கிளையினர் நல்ல ஆதரவான பதில்களை கூறியபோதும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. (ஸீரத்துர் ரஸூல்)

அடுத்து நபி (ஸல்) மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.

அவர்கள்,

1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)

2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)

3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)

4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)

5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)

6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபர்களிடம் சென்று “நீங்கள் யார்?” என்று வினவ அவர்கள் “நாங்கள் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “யூதர்களின் நண்பர்களா?” என்று கேட்க, அவர்கள் “ஆம்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “என்னுடன் சற்று அமரமாட்டீர்களா? நான் உங்களிடம் பேச வேண்டும்” என்று கூற அவர்கள் “சரி! பேசலாம்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாமின் உண்மையையும் அதன் அழைப்பையும் விரிவாக எடுத்துக் கூறி, அல்லாஹ்வின் பக்கம் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த நபியை வைத்தே யூதர்கள் உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களுக்கு முன்னதாக இவன் அழைப்பை ஏற்று நீங்கள் முஸ்லிமாகி விடுங்கள்” என்று கூறினார்கள்.

        இஸ்லாமைத் தழுவிய இந்த வாலிபர்கள் மதீனாவின் அறிஞர்களாக விளங்கினர். பொதுவாக மதீனாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மதீனாவாசிகள் மிகவும் நலிந்து போயிருந்தனர். நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று மனங்கள் ஒன்றிணைந்தால் ஒருக்கால் இப்போர் முடிவுக்கு வரலாம் என்று அவர்கள் ஆசைப்பட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் “எங்களது கூட்டங்களில் இருக்கும் பகைமை மற்றும் தீமையைப் போன்று வேறு எந்தக் கூட்டத்திலும் இருக்காது. அல்லாஹ் உங்கள் மூலமாக அவர்களை ஒன்று சேர்ப்பான். நாங்கள் அவர்களிடம் சென்று உங்கள் மார்க்கத்திற்கு அவர்களை அழைப்போம். நாங்கள் ஏற்றுக் கொண்ட உங்கள் மார்க்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். அல்லாஹ் உங்கள் முன்னிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விட்டால் அவர்களிடம் உங்களைவிட கண்ணியத்திற்குரியவர் எவரும் இருக்க முடியாது” என்றனர்.

இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

(இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகளை அன்சாரிகள் (உதவியாளர்கள், ஆதரவாளர்கள்) என்று குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்படுகிறது.)

அகபாவில் முதல் ஒப்பந்தம்

        மதீனாவைச் சேர்ந்த ஆறு நபர்கள் நபித்துவத்தின் பதினொறாவது ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தில் நபி (ஸல்) அவர்களின் கையில் இஸ்லாமைத் தழுவி, நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை தங்கள் கூட்டத்தாருக்கும் தெரிவிப்போம் என்று வாக்குக் கொடுத்திருந்தனர்

        இதை அடுத்து நபித்துவத்தின் பனிரெண்டாம் ஆண்டு ஹஜ் காலத்தில் (கி.பி. 621 ஜூலையில்) மதீனாவிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்காக 15 நபர்கள் வந்திருந்தனர். முந்தைய ஆண்டு வந்த ஆறு நபர்களில் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆபைத் தவிர மற்ற ஐந்து பேர்களும், அவர்களுடன் புதிதாக ஏழு நபர்களும் இச்சமயம் வந்திருந்தனர். அந்த ஏழு நபர்களில் முந்திய ஐந்து பேர் கஸ்ரஜ் கிளையையும் பிந்திய இருவர் அவ்ஸ் கிளையையும் சேர்ந்தவர்கள்.

1) முஆத் இப்னு ஹாரிஸ் (ரழி) - நஜ்ஜார் குடும்பம்.

2) தக்வான் இப்னு அப்துல் கைஸ் (ரழி) - ஜுரைக் குடும்பம்.

3) உபாதா இப்னு ஸாமித் (ரழி) - கன்ம் குடும்பம்.

4) யஜீது இப்னு ஸஃலபா (ரழி) -கன்ம் குடும்ப நண்பர்களில் ஒருவர்.

5) அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) - ஸாலிம் குடும்பம்.

6) அபுல் ஹைஸம் இப்னு தய்ம்ஹான் (ரழி) -அப்துல் அஷ்ஹல் குடும்பம்.

7) உவைம் இப்னு ஸாம்தா (ரழி) - அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம்.

இவர்கள் அனைவரும் மினாவில் ‘அகபா’ என்ற இடத்திற்கு அருகில் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்)

மதீனாவில் அழைப்பாளர்

மேற்கூறப்பட்ட ஒப்பந்தம் நல்லமுறையில் முடிந்தது. ஹஜ்ஜுடைய காலங்கள் கழிந்தப் பின் ஒப்பந்தம் செய்து கொடுத்தவர்களுடன் அண்ணல் நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் அல் அப்த (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள்.

மகிழ்ச்சி தரும் வெற்றி

        முஸ்அப் இப்னு உமைர், அஸ்அது இப்னு ஜுராரவின் வீட்டில் தங்கினார். ‘அல்முக்ரி’ (குர்ஆனின் ஞானமுடையவர்) என்று முஸ்அப் முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார். முஸ்அபும் அஸ்அதும் சேர்ந்து மதீனாவாசிகளிடையே மிக உற்சாகத்துடன் இஸ்லாமைப் பரப்பினார்கள்.

        அஸ்அத் இப்னு ஜுராரா இதற்கு முன்பு ஸஅத் இப்னு முஆதைப் பற்றி முஸ்அபிடம் கூறியிருந்தார். அதாவது முஸ்அபே! நம்மிடம் வருகிற இவர் தனது கூட்டத்தின் தலைவர். இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் இவரது சமூகத்தினர் அனைவரும் ஒருவர் கூட பின்வாங்காமல் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார். முஸ்அப் (ரழி) அவர்கள் அமைதியாக “ஸஅதே! அமர்ந்து நான் கூறுவதைக் கேட்க மாட்டீர்களா? உங்களுக்கு நாங்கள் கூறுவது பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் கூறுவது வெறுப்பாக இருந்தால் உங்களுக்கு விருப்பமற்றதிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று கூறினார். சரி! என்று கூறி தனது ஈட்டியை நட்டுவைத்து ஸஅத் அமர்ந்துகொண்டார். முஸ்அப் (ரழி) அவருக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்திக் குர்ஆனை ஓதிக் காட்டினார். அடுத்து ஸஅத் பேசத் துவங்கும் முன்பே அவரது முகத்தில் இஸ்லாம் பிரகாசிப்பதை அனைவரும் கண்டனர்.

        பிறகு ஸஅது, இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்று வினவினார். குளித்து, தூய்மையான ஆடை அணிந்து, ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ எனக் கூறி இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று கூறினார்கள். உடனே அவரும் அவ்வாறே செய்தார். பிறகு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு தனது சமூகத்தினர் அமர்ந்திருந்த சபைக்கு வந்தார். அவரைப் பார்த்த அவன் சமூகத்தினர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரது முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று பேசிக்கொண்டனர்.

        அஸ்அத் இப்னு ஜுராராவின் வீட்டில் தங்கி முஸ்அப் (ரழி) இஸ்லாமின் அழைப்புப் பணியை செய்து கொண்டிருந்தார். மதீனாவாசிகளில் பெரும்பாலானவர்களின் இல்லங்களில் இஸ்லாம் நுழைந்திருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும் பெண்களுமாக பலர் இஸ்லாமைத் தழுவியிருந்தனர். ஆனால், உமைய்யா இப்னு ஜைத், கத்மா, வாயில் ஆகிய குடும்பத்தினர் மட்டும் இஸ்லாமை ஏற்கவில்லை. இவர்கள் அவர்களது இனத்தைச் சேர்ந்த ‘கைஸ் இப்னு அல் அஸ்வத்’ என்ற பிரபல கவிஞன் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர் அம்மக்களை இஸ்லாமை ஏற்கவிடாமல் தடுத்திருந்தார். ஆனால், அவர்களும் பிற்காலத்தில் கந்தக் யுத்தம் (அகழ் போர்) நடைபெற்ற ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு இஸ்லாமைத் தழுவினர்.

நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ஹஜ்ஜுடைய காலம் தொடங்கும் முன்பே மாபெரும் சாதனை! வெற்றி!! என்ற நற்செய்தியை எடுத்துக்கொண்டு முஸ்அப் (ரழி) மக்கா திரும்பினார். நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவாசிகளின் செய்திகள், அவர்களின் சிறந்த பண்புகள், அவர்களுக்கு இருக்கும் ஆற்றல்கள், மன உறுதி ஆகியவற்றை விவரமாக எடுத்துக் கூறினார். (இப்னு ஹிஷாம்)

வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையை முதன் முதலில் துவக்கினார்

        இவரே முஸ்அப் இப்னு உமைர், அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க மக்கா சென்றிருந்த பொழுது யூதர்களைப் பின்பற்றி வெள்ளிக்கிழமை  “ஜும்ஆ” தொழுகை தொழுவதை முதன் முதலாகத் துவக்கினார் என்று கூறப்படுகிறது.

அகபாவில் இரண்டாவது ஒப்பந்தம்

        நபித்துவத்தின் 13 ஆம் ஆண்டு (கி.பி. 622 ஜூன் திங்கள்) ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ்ஜுக்காக மதீனாவாசிகளில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் கலந்து, எழுபதுக்கும் அதிகமானோர் மக்கா வந்தனர். மதீனாவில் இருக்கும்போது அல்லது மக்காவிற்கு வரும் வழியில் இந்த முஸ்லிம்கள் இவ்வாறு பேசிக் கொண்டனர். “மக்காவின் மலைப்பாதைகளில் சுற்றித் திரிந்து கொண்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டு மக்களை அஞ்சிய நிலையில் வாழ்ந்து வர நபி (ஸல்) அவர்களை நாம் எதுவரை விட்டு வைத்திருப்பது?” மதீனாவாசிகளின் இந்த உணர்ச்சிமிக்க பேச்சிலிருந்து நபி (ஸல்) அவர்களை மதீனாவிற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை அவர்களது உள்ளத்தில் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

        இவர்கள் அனைவரும் மக்கா வந்து சேர்ந்தனர். பிறகு அதிலிருந்த முஸ்லிம்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் இரகசியமான முறையில் சந்திப்புகள் பல நடந்து கொண்டிருந்தன. இறுதியாக, ஹஜ்ஜுக் கடமைகளை முடித்து மினாவில் முதல் ஜம்ராவுக்கு அருகிலுள்ள அகபாவில் பிறை 12ம் நாள் நள்ளிரவில் சந்திப்போமென்று நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முடிவு செய்தனர். சிலை வழிபாட்டிற்கும் இஸ்லாமிற்கும் நடந்த போராட்டத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்த வரலாற்று பிரசித்திமிக்க இந்த சந்திப்பைப் பற்றி அன்சாரிகளின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கஅப் இப்னு மாலிக் (ரழி) விவப்பதை நாம் பார்ப்போம்:

        “நாங்கள் ஹஜ் செய்ய மக்காவிற்கு வந்திருந்தோம். ஹஜ் முடிந்த இரண்டாவது தினத்தில் அகபாவில் சந்திக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி முடிவு செய்தோம். அதன்படி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க நாங்கள் தயாரானோம். அப்போது எங்களுடன் எங்களின் தலைவர்களில் சிறப்புமிக்க ஒருவரான ‘அபூஜாபிர்’ எனப்படும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஹராம் என்பவரையும் உடன் அழைத்துக் கொண்டோம். எங்களுடன் வந்தவர்களில், அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இருந்தவர்களுக்கு நாங்கள் இதைப் பற்றி எதையும் கூறவில்லை. அபூஜாபிருக்கு நாங்கள் இஸ்லாமைப் பற்றி விளக்கம் கொடுத்தோம். “அபூஜாபிரே! நீங்கள் எங்களின் தலைவர்களில் ஒருத்தர் எங்களில் மிகவும் மதிப்புமிக்கவர்களில் நீங்களும் ஒருத்தர். நீங்கள் நாளை நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறி இஸ்லாமை ஏற்க அழைப்பு கொடுத்தோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களை அகபாவில் சந்திக்க இருக்கிறோம் என்பதையும் கூறினோம். அவர் எங்களின் அழைப்பை ஏற்று இஸ்லாமைத் தழுவி எங்களுடன் அகபா ஒப்பந்தத்திலும் கலந்து கொண்டார். பிறகு நியமிக்கப்பட்ட 12 தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

        நாங்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்து அக்கணவாயில் கூடினோம். நபி (ஸல்) அவர்களுடன் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபும் வந்தார்கள். அந்நேரத்தில் அவர் முஸ்லிமாக இல்லை. எனினும், தனது அண்ணன் மகனுடைய செயல்பாடு மற்றும் நடைமுறைகளை சரிவரத் தெரிந்து கொள்வதற்காகவும் அவருக்காக அன்சாரிகளிடம் உறுதிமொழி வாங்குவதற்காகவும் அங்கு வந்திருந்தார். அவரே குழுமியிருந்தவர்களில் முதலாவதாகப் பேசத் தொடங்கினார்.” (இப்னு ஹிஷாம்)

ஒப்பந்தத்தின் அம்சங்கள்

        ஜாபிர் (ரழி) இதைப்பற்றி மிக விரிவாக அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எந்த விஷயங்களுக்காக நாங்கள் உங்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்ய வேண்டு”ம் என்று கேட்க அதற்கு விளக்கமாக நபி (ஸல்) கூறினார்கள்

“இன்பத்திலும் துன்பத்திலும் (கட்டளைக்கு) செவிசாய்க்க வேண்டும் கட்டுப்பட வேண்டும்

வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்ய வேண்டும்

நன்மையை ஏவ வேண்டும் தீமையைத் தடுக்க வேண்டும்

அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராக வேண்டும் அல்லாஹ்வின் விஷயத்தில்

பழிப்பவர்களின் பழிப்பு உங்களைப் பாதித்து விடக்கூடாது

ஆட்சி, அதிகாரத்தைப் பெறுவதற்காக சண்டையிடக்கூடாது

நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் உங்களையும் உங்களது மனைவியரையும் பிள்ளைகளையும் பாதுகாப்பதைப் போல் நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டும் இதனை நீங்கள் பைஆ (இஸ்லாமிய ஒப்பந்தம்) செய்து கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சொர்க்கத்தைத் தருவான்.” இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (முஸ்னது அஹ்மது, பைஹகீ, முஸ்தத்ரகுல் ஹாகிம், இப்னு ஹிஷாம்)

12 தலைவர்கள்

        மேற்கூறப்பட்ட முறைப்படி ஒப்பந்தம் நிறைவு பெற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் 12 தலைவர்களை தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள். தங்களது கூட்டத்தினரை கண்காணிப்பதும், ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றத் தூண்டுவதும் அந்தத் தலைவர்களின் பணியாக இருந்தது.

        மதீனாவாசிகள் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒன்பது நபர்களையும், அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த மூன்று நபர்களையும் தங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தனர். அதில் முதலாவது நபர் அஸ்அது இப்னு ஜுராரா (ரழி) அவர்கள். இந்தத் தலைவர்களிடம் அவர்கள் தலைவர்கள் என்ற அடிப்படையில் மற்ற சில உடன்படிக்கையையும் நபி (ஸல்) வாங்கினார்கள். அதாவது, ஈஸா இப்னு மர்யமுக்கு அவரது உற்றத் தோழர்கள் பொறுப்பாளிகளாக இருந்தது போன்று நீங்கள் உங்களது கூட்டத்தினரின் காரியங்களுக்கு பொறுப்பாளிகளாவீர்கள். நான் முழு முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் பொறுப்பாளி ஆவேன் என்று நபி (ஸல்) கூற இதை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். (இப்னு ஹிஷாம்)

        அல்லாஹ்வின் அருளால் இரண்டாவது உடன்படிக்கை முடிந்தது. அறியாமையும், இறைநிராகரிப்பும் சூழ்ந்த பாலைவனங்களுக்கு நடுவில் இஸ்லாம் தனக்கொரு தனி நாட்டை நிறுவுவதில் வெற்றி பெற்றது. இது இஸ்லாமிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கு அந்த நாட்டை நோக்கி ஹிஜ்ரா செய்ய அனுமதி அளித்தார்கள்.

இவரது மரணம்

        மதீனாவில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் தொழுக “மஸ்ஜிதுந் நபவீ” என்னும் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டு வேலைகள் சென்று கொண்டிருக்கும் சமயம் இவர் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவருடைய  உடல் தான் முதன்முதலாக ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.