Home


அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு

        அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.611 - கி.பி.712) இவர்கள் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் சிறப்பு பெயர் அபூ ஹம்ஸா என்பதாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீதுகளைத் திரட்டிய முக்கியஸ்தர்களில் ஒருவர். இவருக்கு பத்து வயதாக இருக்கும் போது இவரது அன்னையார் நபி (ஸல்) அவர்களிடம், அவர்களின் பணியாளராக இவரை ஒப்படைத்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அந்திய காலம் வரையிலும், இவர்கள் பெருமானாரின் சிறந்த பணியாளராகச் சேவையாற்றி யுள்ளார்கள். எனவே இவர்களுகு “ஹாதிம் ரசூலுல்லாஹ்” என்னும் சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இஸ்லாத்திற்காக நடைபெற்ற யுத்தங்களிலெல்லாம் நேரடியாக இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆரம்ப கால வாழ்வு

        இவர்களின் அன்னை பெயர் உம்மு சுலைம்; தந்தையின் பெயர் மாலிக். இவர்கள் யத்ரிப் (மதீனா)வில் கி.பி 611 அல்லது 612இல் பிறந்த பொழுது வாணிபத்தின் பொருட்டு வெளியூர் சென்றிருந்த இவர்களின் தந்தை இறந்து விட்டார். எனவே இவரை வளர்க்கும் முழுப் பொறுப்பும் இவர்களின் அன்னையையே சேர்ந்தது. தம் மகனை நன் முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர் நீண்ட காலம் மறுமணம் செய்து கொள்ள வில்லை.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் இவர்

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த பொழுது, தம் மகனை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் விட்டார் உம்மு சுலைம். அப்பொழுது அனஸ் (ரழி) அவர்களுக்கு வய்து பத்து. அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், உம்மு சுலைமின் வேண்டுகோளுக்கு இணங்கி, “இறைவனே! இவருக்கு நல்ல வளவாழ்வை நல்கு! அதிகமான மக்கட் பேற்றினை வழங்கு! இவரைச் சுவனம் புகவை! என்று இறைஞ்சினர். இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை, பத்தாண்டுகள் இருந்தனர். எனவே இவர்களுக்கு ‘ஹாதிம் ரசூலுல்லாஹ்’ என்னும் சிறப்புப் பெயரும் ஏற்பட்டது.

சாந்த நபி (ஸல்) அவர்களை பற்றி இவர்

        தாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்த பத்தாண்டுக் காலத்தில் அண்ணல் (ஸல்) அவர்கள் தம் மீது ஒரு முறையேனும் சினமுறவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். தாம் ஏதாவதொன்றைக் கை தவறிக் கீழே போட்டு உடைத்து விடின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் சினக்கும் பொழுது, “ஏன் அவர் மீது சினக்கின்றீர்கள்? நடக்க வேண்டியது நடந்து விட்டது” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுவர் என்றும் இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

        அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் தாம் இருக்கும் பொழுது தமக்கு எப்பொழுதும் நீங்காக் குறை ஒன்று இருந்ததென்றும் அது என்னவென்றால், “அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நாம் முதலில் “ஸலாம்” கூற இயலவில்லையே, ‘ஸலாம்’ கூறுவதில் அவர்களல்லவோ நம்மை முந்திக் கொண்டு விடுகிறார்கள் என்பதேயாகும்” என்றும் இவர்கள் இயம்புகின்றனர்.

போர்களில் இவர்களின் பங்கு

        பத்ரு போர் நடந்த காலத்தில் இவர்கள் சிறுவராயிருந்ததால் போர்க்களத்திற்கு இவர்கள் வந்திருந்த போதினும் வாளேந்தி சண்டை செய்யவில்லை. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நடத்திய மற்ற போர்களிலெல்லாம் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

        உமர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது மக்களுக்கு மார்க்கக் கல்வி போதிக்கும் நிபுணராக இவர்கள் பஸராவில் நியமிக்கப் பட்டனர். பின்னர் இவர்களை அங்குள்ள பள்ளியில் தொழுகையை முன்நின்று நடாத்தும் இமாமாக நியமித்தனர் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள்.

ஒரு படையணிக்குத் தளபதியாக சென்று போர் புரிந்தது

        ஒரு முறை இவர்கள் ஒரு படையணிக்குத் தலைமை தாங்கிச் சென்றனர். எதிரிகளுடன் கடுமையான போர் நிகழ்ந்தது. அதன் காரணமாக  ‘அஸர்’ (சாயுங்காலத்) தொழுகை தொழ இயலாது போய் விட்டது. பொழுதடையும் நேரத்தில் எதிரிகள் தோற்றோடினர். கோட்டை வீழ்ந்தது. அது கண்டு முஸ்லீம் படை வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் தளபதியாகிய இவர்களோ கண்ணீர் வடித்து அழுத வண்ணம் இருந்தார்கள். அதற்கான காரணம் வினப்பட்ட பொழுது, “நீங்களெல்லாம் இக்கோட்டையை வெற்றி கொண்டதற்காக மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறீர்கள். ஆனால் நானோ அஸர் தொழுகையை உரிய நேரத்தில் தொழ இயலாது போய் விட்டதே. அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அஸர் தொழுகையை உரிய நேரத்தில் தொழுபவர்களுக்கு சுவனத்தில் அழகான மாளிகையொன்று அளிக்கப்படும்” என்று கூறியுள்ளனரே. இம்மையின் கோட்டையைப் பெரிது கண்டு மறுமையின் மாளிகையைக் கோட்டை விட்டு விட்டோமே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.” என்று பதிலிறுத்தார்கள்.

காலையில் ஓதினால் மாலை வரை எந்த தீங்கும் ஏற்படாது

        ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் இவர்கள் மீது வஞ்சம் கொண்டு இவர்களின் கழுத்தில் தம் முத்திரை பதித்த கயிற்றைப் பிணைத்துக் கொடுமை செய்தார். அப்பொழுது அவர் இவர்களை நோக்கி, “நான் உம்மைக் கொல்ல விரும்புகிறேன்” என்று கூறிய பொழுது, “உம்மால் நான் கொல்லப்படுவேன் என்பதை நான் அறிந்திருப்பின் நான் அல்லாஹ்வையன்றி உம்மையல்லவா வணங்கி இருப்பேன்” என்றனர் இவர்கள். அதற்கு ஹஜ்ஜாஜ், “ஏன்?” என்று வினவியபொழுது, “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒரு  ‘இஸ்’மை எனக்குக் கற்றுக் கொடுத்து அதனைத் தினமும் காலையில் ஓதுபவருக்கு மாலை வரையிலும் மாலையில் ஒதுபவருக்கு மறுநாள் காலை வரையிலும் எவராலும், எத்தீங்கும் ஏற்படாது என்று கூறியுள்ளனர். அதனை நான் வழக்கமாக ஓதி வருகிறேன். இன்று காலையிலும் அதனை ஓதினேன்” என்று கூறினர்.

அதனைத் தமக்குக் கற்றுத் தருமாறு ஹஜ்ஜாஜ் வேண்ட இவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் ஹஜ்ஜாஜ் இவர்களை விட்டு விட்டார். அதற்கான காரணத்தை அவரிடம் பின்னர் விசாரித்த பொழுது, “அனஸின் இரு தோள்களின் மீதும் இரு புலிகள் வாயைத் திறந்து கொண்டு நிற்பதைக் கண்டேன்” என்று கூறுனார் அவர்.

ஹஜ்ஜாஜின் செயலுக்காக மன்னிப்பு கேட்ட கலீபா

        ஹஜ்ஜாஜ், அனஸ் (ரழி) அவர்களுக்குச் செய்த கொடுமையை அறிந்த கலீபா அப்துல் மலிக் இப்னு மர்வான் துடித்து விழுந்து ஹஜ்ஜாஜின் செயலுக்காக இவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு ஹஜ்ஜாஜையும் கடுமையாகக் கண்டித்தார்.

அந்த ‘இஸ்’மைத் தம் ஊழியருக்கு கற்றுக் கொடுத்த அனஸ் (ரழி)

        தம் இறப்புப் படுக்கையில் அனஸ் (ரழி) அவர்கள் அந்த  ‘இஸ்’மைத் தம் ஊழியருக்குக் கற்றுக் கொடுத்தனர் என்று கூறப்படுகின்றது.

        “பிஸ்மில்லாஹி கைரில் அஸ்மாஇ பிஸ்மில்லாஹில்லதீ லா யலுர்ரு  ம அஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்லி வலாஃபிஸ் ஸமாஇ”  (பெயர்களில் நல்லதான அல்லாஹ் என்னும் பெயரைக் கொண்டு அவனது பெயருடன் விண்ணிலோ, மண்ணிலோ தீமை செய்யாத அத்தகு அல்லாஹ் என்னும் திருப்பெயரைக் கொண்டு துவக்குகின்றேன்) என்பதாகும் அது.

இவர்கள் வாயிலாக தெரிய வந்த ஹதீதுகள்

        இவர்கள் உயிரோடிருக்கும் பொழுது இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் இவர்களைத் தரிசித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் இவர்களின் வாயிலாக வந்த ஹதீதுகளை அத்துணை ஆதாரமாகக் கருதாததனால் அவர்கள் அவற்றைத் தம் ஃபிக்ஹை நிர்ணயிப்பதில் பயன் படுத்தவில்லை. ஆனால் இவர்கள் வாயிலாக வந்த ஹதீதுகள் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் எழுதிய முஸ்னதில் அதிகமாகக் காணப்படுகின்றன. மொத்தம் 2286 ஹதீதுகள் இவர்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறைஞ்சுதலின் காரணமாக

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்காகச் செய்த இறைஞ்சுதலின் காரணமாக இவர்கள் பிற்காலத்தில் பெரும் செல்வராய் விளங்கினர். இவர்களின் ஈச்ச மரங்கள் ஆண்டிற்கு இரு முறை பயன் ஈந்தன. இவர்களுக்கு நூறு மக்கள் வரை பிறந்தனர். இவர்களில் இருவர் பெண்கள் என்றும் மற்றவர்கள் ஆண்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களைத் தவிர இவர்களுக்கு ஏராளமான பேரன், பேர்த்திகளும் இருந்தனர். இவர்களின் கண் முன்னே இவர்களின் மக்கள், பேரன், பேர்த்திகள் ஆகியோர் 120 பேர்களுக்கு மேல் இறந்திருக்கின்றனர். இவர்கள்  ஹிஜ்ரி 93 இல் (சந்திர கணக்குப்படி) தம் 103 ஆவது வயதில் பஸராவில் வைத்து இறப்பெய்தினர். இவர்களது அடக்கவிடம் ஈராக்கில் உள்ள பஸராவில் உள்ளது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.