அபூ ஸுஃப்யான் இப்னு ஹர்ஃப்
ரழியல்லாஹு அன்ஹு
பனூ ஹாஷிம்களுக்கு விரோதமான பனூ உமையாக் கிளையில் தோன்றிய இவருடைய இயற்பெயர் ஷக்ர் என்பதாகும். இவருக்கு ஸுஃப்யான் என்ற மகன் இருந்ததனால் ஸுஃப்யானின் தந்தை என்று பொருள்படும் அபூ ஸுஃப்யான் என்று இவர் அழைக்கப்பட்டார். இதுவே இவருடைய இயற்பெயரை விடப் பிரபல்யம் பெற்று விட்டது. இவருடைய தந்தை பெயர் ஹர்ஃப் என்பதாகும். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களைவிடப் பத்து வயது மூத்தவர். குறைஷிகளுக்கும் ஹவாஸின்களுக்கும் இடையே நடந்த போரில் இருதரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்ட பொழுது குறைஷிகள் தாங்கள் தரவேண்டிய இழப்புத் தொகையைத் தரும் வரை இவரையே பிணை வைத்தனர்.
பிற்காலத்தில் இவர் பெரிய வணிகரானார். இவருடைய மனைவி ஹிந்தாவும் சிரியாவிலுள்ள கல்பிகளிடம் வாணிபம் செய்து வந்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏழை, எளியவர்களின் குடிசையின் வாயிலைத் தட்டி அவர்களுக்கு வேண்டிய பொருள்களைக் கேட்டறிந்து கடைத் தெருவிலிருந்து வாங்கி வந்து கொடுத்ததை அபூ ஸுஃப்யானும் அவருடைய நண்பர் குழாமும் கேலி செய்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்ப மதிப்பைக் குலைத்து வருவதாகக் கூறினர். எனினும் அண்ணல் நபி (ஸல்) அவர்களை மக்கா குறைஷிகள் தெருக்களில் கல்லாலெறிந்த பொழுது இவருடைய இல்லத்தில் அபயம் புகுந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இவர் அபயம் நல்கினார் என்று ஒரு வரலாறு கூறுகிறது.
அபூஜஹ்லின் பொல்லாத விதி அழிவையும் இழிவையும் தேடி தந்தது
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகப் போர் செய்து அவர்களை அழித்தொழிப்பதற்காகப் பணம் திரட்டுவதற்காக 50,000 தீனார் மூலதனமிட்டு சிரியா நாட்டுக்குச் சென்ற வாணிபக் குழுவுக்கு இவரே தலைமை தாங்கிச் சென்றார். இவர் திரும்பி வருங்கால் இவர் ஈட்டிக் கொணர்ந்த பெரும் பொருள் குறைஷிகளின் கைவசம் சேரின் தமக்குப் பேரபாயம் ஏற்படும் என்பதை உணர்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை அடக்க முயன்றனர். அப்பொழுது இவருக்கு உதவி அளிக்கக் குறைஷிகள் கிளர்ந்தெழுந்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிடியிலிருந்து தப்பிய அபூஸுஃப்யான் இனிமேல் மதீனாவின் மீது படையெடுக்கத் தேவையில்லை என்று அபூஜஹ்லுக்குச் சொல்லி அனுப்பியும் அவனுடைய பொல்லா விதி அவனை இவருடைய சொல்லுக்குச் செவி சாய்க்காது செய்து விட்டது. அது கேட்ட அபூஸுஃப்யான், “எல்லாம் அம்ர் இப்னு ஹிஷாமினால் (அபூஜஹ்லினால்) ஆன வினை! அவர் மக்களை ஆட்டிப் படைக்கிறார். குறைஷிகள் முஹம்மதைச் சந்திப்பின் அவர்களை அவர் மண்ணைக் கெளவச் செய்து விடுவார்” என்று கூறினார்.
போரில் தலைமை தாங்கும் பொறுப்பு அபூஸுஃப்யானுடையதாகவே இருந்தது, எனினும் இவர் மக்காவில் இல்லாததைப் பயன்படுத்திச் சண்டையைத் துவக்கித் தனக்கும் குறைஷிகளுக்கும் பத்ருப் போரில் அழிவையும் இழிவையும் தேடிக்கொண்டான் அபூஜஹ்ல்.
அபூஸுஃப்யானின் ‘மாவுப் படையெடுப்பு’ மற்றும் ‘கஞ்சிப்படை’
பத்ருப் பொருக்குப் பின் குறைஷிகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு அபூஸுஃப்யானின் தோள் மீது வீழ்ந்தது. மனைவியின் உந்துதல் தாங்க இயலாது இருநூறு வீரர்களுடன் இவர் மதீனா வந்தார். நயவஞ்சகர்களில் எவரும் இவருக்கு உதவி நல்காததால் இவர் மதீனாவின் சூழலிலுள்ள சில குடிசைகளை எரித்துத் தம் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார். இதனை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிந்து இவரை விரட்டிச் செல்லவே, தம்முடைய ஒட்டகத்தைத் துரிதப்படுத்தித் தாம் கொண்டு வந்த மாவு முடிச்சுகளைக் கீழே நழுவ விட்டு ஓடினார் அபூஸுஃப்யான். எனவே இப்படையெடுப்புக்கு ‘கஸ்வா அல் ஸவீக்’ அதாவது ‘மாவுப் படையெடுப்பு’ என்ற பெயர் வந்தது.
இதன்பின் உஹத் போருக்கு தலைமை தாங்கிய இவர் போரின் முடிவு தமக்கு வெற்றியா, தோல்வியா என்பதை அறியாது விழித்தார். அடுத்த ஆண்டு அதே இடத்தில் சந்திப்பதாகக் கூறிய இவர் ‘மர்ருல் லஹ்ரான்’ என்ற இடம் வரை ஒரு படையணியுடன் வந்து அவ்வாண்டு பஞ்ச ஆண்டாக இருப்பதால் போர் செய்யாது திரும்பி விடுவோம் எனக் கூறித் தம் படையினரை அழைத்துச் சென்று விட்டார். பஞ்சத்தைக் காரணமாகக் கொண்டு அப்படை திரும்பிவிட்டதால் இவருடைய படையணிக்கு ‘கஞ்சி படை’ என்று முஸ்லிம்கள் கேலியாகப் பெயரிட்டனர்.
அகழ்ப்போரின் போது இஸ்லாத்தின் எதிரிப்படையணிகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்த இவர் பின்னர்த் தம் குதிரையின், பிணைக்கப் பட்டிருந்த கால்களைக்கூட அவிழ்த்து விடாது அதன் மீது பாய்ந்தேறினார் தலை தப்பிச் செல்வதற்கு.
பொய் கூறின் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் உண்மையை கூறினார்
ஒரு தடவை இவரைக் கொன்றொழிப்பதற்காக மக்காவிற்கு ஒருவரை அனுப்பி வைத்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பின்னர் இவரை எவ்வாற்றாலும் கவர்வதற்காக இவருடைய வாணிபம் நொடித்தகாலை மதீனாவின் உயர்தரமான பேரீச்சம்பழங்களை இவருக்கு அனுப்பி அதற்குப் பகரமாகத் தாயிஃபின் தோல்களைத் தமக்கு அனுப்பி வைக்குமாறு எழுதினார்.
இதன் பின் அபூஸுஃப்யான் வாணிபத்தின் பொருட்டுப் பலஸ்தீன் சென்றிருந்த பொழுது உரோமானியப் பேரரசர் ஹெர்குலிஸ் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இவரிடம் விசாரித்தகாலை, பொய் கூறின் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தினால் இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி உண்மையையே கூறினார்.
இது தொடர்பாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் நீண்ட அறிவிப்பை இங்கு பார்ப்போம்:
அது, அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதை பிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம். அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹெர்குலிஸ் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)
அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹெர்குலிஸ் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.
மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?
அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.
மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.
(தனது மொழிபெயர்ப்பாளரிடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.
அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.
மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?
அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.
மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: “இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?”.
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?
அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.
மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.
மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)
மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?
அபூஸுஃப்யான்: ஆம்!
மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?
அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.
மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?
அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.
ஹுதைபியா உடன்பாட்டை இவர் புதிப்பித்தது பற்றி
ஹுதைபியா உடன்பாட்டைப் புதுப்பிப்பதற்காக இவர் குறைஷிகளின் தூதுவராக மதீனா வந்தார். அப்பொழுது இவர் தம் மகளும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான உம்முஹபீபா வீட்டிற்குச் சென்று ஆங்குக் கிடந்த பாயொன்றில் அமர முனைந்த பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அமரும் பாயில் இவர் அமரலாகாது என அதனைச் சுருட்டி மடித்து வைத்துவிட்டார் அம்மாதரசி. இவருக்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரைக்க எவரும் முன் வராததால் அலீ (ரழி) அவர்களின் ஆலோசனைப்படி ஹுதைபியா உடன்பாட்டைத் தாம் புதுப்பித்துக் கொண்டதாகப் பள்ளிவாயிலின் முன் நின்று கத்திவிட்டு இவர் மக்கா திரும்பிவிட்டார். திரும்பி வந்த இவரை ஐயக்கண்களுடன் நோக்கினர் குறைஷிகள்.
நபி (ஸல்) அவர்களின் மக்கா படையெடுப்பு - இவர் இஸ்லாத்தை தழுவியது
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மக்காப் படையெடுப்பின் போது குன்றின் மீதுள்ள அடுப்புகளின் வெளிச்சத்தை அறிந்து வருவதற்காக வந்த இவர் அப்பாஸ் (ரழி) அவர்களினால் அபயம் அளிக்கப்பட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன் வந்து இஸ்லாத்தைத் தழுவினார். இவரைக் கெளரவிப்பதற்காக அப்பாஸ் (ரழி) அவர்களின் ஆலோசனைப் படியும் தமக்குத் துவக்கத்தில் தம் வீட்டில் அபயம் அளித்ததற்கு நன்றிக்கடனாற்றும் முறையிலும், “எவரெவர் அபூஸுஃப்யானின் வீட்டில் புகுந்து கொள்கிறார்களோ அவர்களுக்கும் அபயம்” என்று கூறினர் அண்ணல். அது கேட்டு மகிழ்ந்த இவர் குறைஷிகளிடம் சென்று, “அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் இணங்கிப் போவதே அறிவுடைமை” என்று கூறிய பொழுது, “இத்தடியனைக் கொல்லுங்கள்! இவனுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டது” என்று இவருடைய தாடியைப் பிடித்து உலுக்கிக் கொண்டு கத்தினார் இவரின் மனைவி ஹிந்த்.
எனினும் இவர் அதனைப் பொருட்படுத்தாது, தம்முடைய வீட்டில் புகுந்தோருக்கு அபயம் நல்கப்பட்டுள்ளது என்பதையே பெருமிதத்துடன் முதலில் கூறினார். அது கேட்ட குறைஷிகள், “எங்கள் அனைவருக்கும் உம் வீடு போதுமா?” என்று இவரை மடக்கிய பொழுது தான், “கஅபாவில் புகுந்தோரும், வெளியே வராது தம் தம் இல்லங்களில் அமர்ந்து கொண்டோரும் அபயம் பெறுவர்” என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆணையை எடுத்துரைத்தார்.
அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: “எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன் கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு ‘அபூ கபிஷா’வின் பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது” என்று அபூஸுஃப்யான் கூறினார்.
அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கடிதம் கைஸர் மன்னரிடம் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை ஏற்படுத்தியது என்பதை அபூஸுஃப்யான் நேரில் பார்த்து புரிந்து கொண்டதையே இவ்வாறு கூறினார்.
இஸ்லாத்தை தழுவிய பின்னர் இவர் கலந்து கொண்ட படையெடுப்புக்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹுனைன் படையெடுப்பிலும் இவர் கலந்து கொண்டார். போரின் நடுவில் முஸ்லிம்கள் பின்வாங்கிய பொழுது தம்முடன் மறைவாக வைத்திருந்த அம்பினால் குறி பார்த்து, “நேற்றைய வெற்றியாளர்கள் இன்று கடலை அடையும் வரை ஓட்டத்தை நிறுத்த மாட்டார்கள் போலிருக்கிறதே” என்று நையாண்டியாக கூறினார் இவர்.
தாயிஃப் படையெடுப்பின் போது இவர் ஒரு கண்ணை இழந்தார். அப்போரின் மூலம் கிடைத்த கொள்ளைப் பொருள்களில் இவர் கேட்டுக் கொண்ட வண்ணம் இவருக்கு நூறு ஒட்டகங்களும், இவருடைய மகன் யஜீதுக்கு நூறு ஒட்டகங்களும், இவருடைய மற்றொரு மகன் முஆவியாவிற்கு நூறு ஒட்டகங்களும் அன்பளிப்புச் செய்தனர் அண்ணல். அம்மட்டுமல்லாது இவர் கேட்டதற்கெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சரி என்று கூறும் வழக்கமுடையவர்களாயிருந்தனர் என்று ஸஹீஹ் முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநராக அபூஸுஃப்யான் (ரழி) அவர்கள்
ஹவாஸின் படையெடுப்பிலிருந்து மக்கா மீண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இவரை யமனிலுள்ள பஹ்ரைன் என்ற ஊரின் ஆளுநராக ஏற்படுத்தி இவருக்கு உதவியாளராக கதீர் இப்னு அப்துல்லாஹ் என்பவரை நியமித்தனர். தகீஃப்கள் இஸ்லாத்தைத் தழுவிய பொழுது தாயிஃபில் இருந்த தொழு உருவை உடைக்க அனுப்பப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
அபூபக்ர் (ரழி) அவர்கள் கலீபாவான பொழுது இவரை நஜ்ரானுடையவும் ஹிஜாஸுடையவும் ஆளுநராக நியமித்தனர். உமர் (ரழி) அவர்களின் காலத்தில் யர்மூக் சண்டையில் கலந்து கொண்டு இவர் மற்றொரு கண்ணையும் இழந்தார் எனக் கூறப்படுகிறது.
இங்கேயே நமக்கு இவ்வித நிலையெனில் இறைவனின் திருமுன் எவ்வாறாகுமோ?
ஒரு தடவை கலீபா உமர் (ரழி) அவர்களைக் காணப் பிலால், அபூஸுஃப்யான், ஸுஹைல், ஸுஹைப் ஆகியோர் அவர்களின் வீட்டின் முன் வந்து காத்து நின்ற பொழுது பிலாலுக்கும், ஸுஹைபுக்குமே உள்ளே வர அனுமதி வழங்கப்பட்ட பொழுது அபூஸுஃப்யான், ஸுஹைலை நோக்கி, “இஸ்லாத்தின் பால் நாம் காலம் தாழ்த்திச் சேர்ந்ததே இதற்குக் காரணமாகும். இங்கேயே நமக்கு இவ்வித நிலையெனில் இறைவனின் திருமுன் எவ்வாறாகுமோ? என்று கூறினார்.
இவரின் இறப்பு மற்றும் நல்லடக்கம்
இவர் இறப்புப் படுக்கையில் கிடக்கும் பொழுது அருகிலிருந்தவர்களை நோக்கி, “நீங்கள் என் பிரிவிற்காக அழ வேண்டாம். நான் இஸ்லாத்தைத் தழுவிய பின் யாதொரு பாவமும் செய்ததில்லை” என்று கூறினார்.
இவர் உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது தம்முடைய 88 வது வயதில் மதீனாவில் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். உமையாக் கலீபாக்கள் இவருடைய வழித்தோன்றல்களேயாவர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.