அபூ குஹாஃபா
ரழியல்லாஹு அன்ஹு
அபூபக்ர் (ரழி) அவர்களின் தந்தையாகிய இவரின் இயற்பெயர் உஸ்மான் இப்னு ஆமிர். பெரிய தலையைப் பெற்றிருந்ததால், ‘மண்டை ஓட்டின் தந்தை’ என்று பொருள்படும் அபூ குஹாஃபா என்று அழைக்கப்பட்டார். இவர் மக்காவில் ஒரு பணக்கார குடும்பத்தில் கி.பி.538 ஆம் ஆண்டில் ஜுலை மாதம் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆமிர் இப்னு அம்ர் தைம், இவரது தாய் பனூ ஆதி குலத்தைச் சேர்ந்த கியாலா பின்த் அதாத் கஅப் என்பவராவார்.
மக்காவில் பிறந்த அபு குஹாஃபா குறைஷிகளின் முக்கிய உறுப்பினராக இருந்தார். மேலும் குறைஷிகளின் குலமான பனூ தைமின் தலைவராக இருந்தவர். இவர் உம்மு கைர் என்றழைக்கப்படும் சல்மா பின்த் சகர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன அதில் இருவர் குழந்தை பருவத்திலேயே இறந்து விட்டதால் மூன்றாவது கி.பி 573இல் பிறந்த அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு அதீக் (“இறப்பில் இருந்து விலக்கு”) என பெயரிட்டு அழைத்தனர். இஸ்லாமை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய பிறகு, இவரது குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர், ஆனால் இவர் அதை ஏற்கவில்லை மேலும் முஸ்லிமல்லாதவராகவே இருந்தார். பின்னர் மக்கா வெற்றியின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தினை தழுவி, சிறந்த நபி தோழர்களில் ஒருவரானார்.
துவக்க காலத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வேண்டுகோள்
தம் மகன் அபூபக்ர் (ரழி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் நட்பு கொண்டிருந்தது இவருக்குத் துவக்கத்தில் பிடிக்காதிருந்தது. ஒரு தடவை இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஏசிய பொழுது அபூபக்ர் (ரழி) அவர்கள் இவரை அடித்து விட்டனர். இதனை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் விசாரித்த பொழுது, “அப்பொழுது என் கையில் வாள் இருப்பின் நான் அவரைக் கொன்றிருப்பேன்” என்றனர் அவர்கள். அது கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இனி மேல் அவ்விதம் இவருடன் நடந்து கொள்ள வேண்டாமென்று அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு பணித்தனர்.
அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு இவர்களின் ஆலோசனை
பின்னர் அபூபக்ர் (ரழி) அவர்கள் பல ஏழை அடிமைகளை விலைக்கு வாங்கி அவர்களுக்கு விடுதலை நல்கியதைக் கண்ட அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, “பலஹீனர்களையே நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்கிறாய். வலுவானவர்களை வாங்கி விடுதலை செய்யின் அவர்களால் நமக்குக் குறைஷிகளின் கொடுமையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்குமே” என்று கூறிய பொழுது, “நான் இவர்களையெல்லாம் அல்லாஹ்வுக்காகவேயன்றி வேறு எதற்காகவும் விடுதலை செய்யவில்லை” என்று கூறினர்.
தம் மகன் குடும்பச் செலவிற்காக ஏதாவது வைத்து விட்டுச் சென்றுள்ளாரா?
பிற்காலத்தில் குருடராகிவிட்ட இவர் தம் மகன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்காவை விட்டுக் கிளம்பி விட்டதை அறிந்ததும் அவர்களின் இல்லம் வந்து தம் மகன் குடும்பச் செலவிற்காக ஏதாவது வைத்து விட்டுச் சென்றுள்ளாரா என்று தம் பேர்த்தி அஸ்மாவிடம் வினவினார். அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒன்றும் வைத்து விட்டுச் செல்லாத போதினும் ஒரு சிறு பெட்டியில் கூழாங்கற்களை நிரப்பி அதனை ஒரு துணியால் மூடித் தம் பாட்டனாரின் கையில் கொடுத்தார் அஸ்மா. அதனை வாங்கித் தம் கையால் தடவி அதன் கனத்தைப் பார்த்து அதனைப் பணப்பெட்டி எனக் கருதித் திருப்தியுடன் இல்லம் திரும்பினார் இவர்.
இஸ்லாமிய படை மக்காவை நெருங்கி விட்டதை கேட்டறிந்து உணர்ந்தவர்
மக்கா வெற்றி நாள் அன்று இவர் தம் சிறு மகளின் கையைப் பிடித்துக் கொண்டு அபூ குபைஸ் மலை மீதேறி, “தொலைவில் ஏதாவது தெரிகின்றதா?” என்று தம் மகளைக் கேட்டார். “ஆம்; கருப்பாக ஏதோ தெரிகிறது. அதன் முன்னாள் ஒருவர் அங்குமிங்கும் அசைவது போல் உள்ளது. இப்பொழுது அக்கருப்பு நிறம் கலைகிறது” என்று அச்சிறுமி கூறியதும், இஸ்லாமியப் படை மக்காவை நெருங்கி விட்டது என்பதை உணர்ந்து தம் இல்லத்திற்குத் தட்டுத்தடுமாறி வந்தார். வரும் வழியில் ஏற்பட்ட நெரிசலில் இவரின் மகளின் கழுத்திலிருந்த வெள்ளி நகை காணாமல் போய் விட்டது.
மக்கா வந்தடைந்த தம் மகனிடம் அபூ குஹாஃபா இச்செய்தியைக் கூறிய பொழுது அவர்கள் இதுபற்றிப் படைவீரர்களிடம் விசாரித்த சமயம் ஒருவரும் எடுத்ததாகக் கூறவில்லை. அப்பொழுது அபூபக்ர் (ரழி) அவர்கள் தம் தங்கையை நோக்கி, “அதைப் பற்றிக் கவலைப் படாதே! காலம் மாறி விட்டது. இப்பொழுது எதையும் கீழே கண்டெடுத்தவர்கள் எங்கே தரப்போகிறார்கள்?” என்று கூறினர்.
அபூ குஹாஃபா இஸ்லாத்தை தழுவ, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெருமகிழ்ச்சி
மக்காவை வெற்றி அடைந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் முன் வீற்றிருக்குங்கால் அபூபக்ர் (ரழி) தம் தந்தையை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்த பொழுது அவர் தட்டுத் தடுமாறிக் கொண்டு வந்ததைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “ஏன் அவர்களை என்னிடம் அழைத்து வருகிறீர்கள்? நானே அவர்களை வந்து பார்த்திருப்பேனே” என்று கூறிய பொழுது, “அவர்கள் தங்களை வந்து பார்ப்பதுதான் சிறப்பு” என்றனர் அபூபக்ர் (ரழி).
இதன் பின் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரைத் தம் முன் அமரச் செய்து இவரின் நெஞ்சில் தம் கையை வைத்துக் கலிமா சொல்லிக் கொடுக்க இவர் அதனைக் கூறி இஸ்லாத்தைத் தழுவினார். அது கண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெருமகிழ்ச்சியுற்றதைக் கவனித்த அபூபக்ர் (ரழி), “தங்களின் பெரிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தைத் தழுவி இருப்பின் நான் தாங்கள் இப்பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியுற்றிருப்பேன். காரணம், அதனால் தாங்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்றிருப்பீர்கள்” என்றனர். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அபூ குஹாஃபாவை நோக்கி அவருடைய வெண் தாடிக்கு மருதாணிச் சாயமிடுமாறும் கறுப்புச் சாயத்தைத் தவிர்த்து கொள்ளுமாறும் கூறினர்.
அவர்களது மறைவு
அபூபக்ர் (ரழி) அவர்கள் 23 ஆகஸ்ட் 634 அன்று 22, ஜமாதுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை அன்று மக்ரிப்க்கு பின் தனது 60 வது வயதில் மரணமடைந்தார்கள். அந்த நெருக்கடியான சூழ்நிலையில் அபூ குஹாஃபாவிற்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் அடுத்த கலீபா யார்? என வினவியதும், உமர் (ரழி) அவர்கள் என தெரிவிக்க பட்டதும், அவர் நெருங்கிய தோழர், என ஒப்புதல் அளித்தார். சில மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 635 இல் (முஹர்ரம் மாதம் ஹிஜ்ரி14ல்), இவர் தம் 97 வயதில் இறந்தார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.