அபூ மூஸா அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு
அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அஷ்அரீ என்பது இவர்களின் முழுப்பெயராகும். இவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே யமனிலிருந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராவார். மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களோடு அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் இவரும் ஒருவர். கைபர் வெற்றிக்குப் பின்னரே இவர்கள் அபிஸீனியாவிலிருந்து மக்காவுக்கு திரும்பினார்கள். இதன் பின் ஒரு மாகாணத்தின் கவர்னராகப் பெருமானார் (ஸல்) அவர்களால் அல் அஷ்அரீ நியமிக்கப்பட்டார். பின்னர் இரண்டாவது கலிபாவான உமர் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 17 இல் பஸ்ராவுக்கும், ஹிஜ்ரி 22 இல் கூபாவுக்கும், ஹிஜ்ரி 23 இல் மீண்டும் பஸ்ராவுக்கும் அல் அஷ்அரீ அவர்களை கவர்னராக நியமித்தார். ஹல்ரத் உதுமான் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த போது ஹிஜ்ரி 34 இல் கூபாவுக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். பின்னர் ஹல்ரத் அலீ (ரழி) அவர்களுக்கும் அமீர் முஆவியாவுக்கு மிடையே நடந்த ஸிஃப்ஃபீன் போரில் இருதரப்பினருக்கும் மத்தியஸ்தம் செய்து வைப்பதற்காக நியமிக்கப்பட்ட இரு மத்தியஸ்தர்களில் அல் அஷ் அரீ அவர்களும் ஒருவராகும். ஹிஜ்ரி 42 இல் கூபாவில் தங்களின் 52 வது வயதில் இவர்கள் காலமானார்கள்.
ஆரம்ப கால வாழ்வு
யமன் நாட்டில், பிரபல நிலக்கிழார்களான அஷ்அரீ கோத்திரத்தில் இவர் கி.பி. 614 இல் பிறந்தார். இவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயெ யமனிலிருந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராவார். பின்னர் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து பலரை இஸ்லாத்தைத் தழுவுமாறு செய்தார்.
இவர் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்த கூட்டத்தினருடன் அபிசீனியாவுக்குச் சென்று கைபர் வெற்றியின் போது தான் மதீனா வந்தார் என்று ஒரு வரலாறு கூறுகிறது. ஆனால் மற்றொரு வரலாறு இவர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் நடந்த தபூக் போரில் முதன்முதலாகப் பங்கு பெற்றார் என்றும் பிறகு ஹிஜ்ரி பத்தாவது ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறுதியாக ஹஜ்ஜுச் செய்த போது அதில் கலந்து கொண்டு பின்னர் யமன் நாடு திரும்பி விட்டார் என்றும் கூறுகிறது.
கலந்து கொண்ட போர்களும், அதன் வெற்றிகளும்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மாவட்டத்தின் ஆளுநராக இருந்த இவர் ஹல்ரத் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் அப்பதவி துறந்து படை நடத்திச் சென்று திஜ்லா - புராத் நதிகளுக்கு இடையேயுள்ள பகுதியை வென்றார். இதன் பின் பஸராவின் ஆளுநராக நியமிக்கப் பட்டார். இக்காலை இவர் அஹ்வாஸ் என்னும் இடத்தில் பாரசீகப் படை யொன்றைத் தோற்கடித்தார். பின்னர் ஷுஸ்தர் மீது படையெடுத்து ரகசியப் பாதை வழியாக இருநூறு வீரர்களை அனுப்பி அந் நகரின் கதவுகளைத் திறக்கச் செய்து வெற்றி முழக்கத்துடன் அந் நகருக்குள் பிரவேசித்தார். நிஹாவந்த் போரிலும் இவர் வாகை சூடினார். பின்னர் இஸ்ஃபஹான் மீது படையெடுத்துச் சென்ற இவர் போரணியில் புகுந்து பாரசீகர்களின் தளபதியையே வெட்டி வீழ்த்தினார். பல்லாயிரக்கணக்கான பாரசீகர்கள் இப் போரில் மாண்டனர். வெற்றி, முஸ்லிம்களை ஆரத்தழுவியது.
எளிய வாழ்வே வாழ்ந்து வந்தார்
வெற்றி பல பெற்று பஸரா திரும்பிய இவர் அவ்வூர் மக்கள் குடிதண்ணீர் போதிய அளவு கிடைக்காது துன்புறுவதைக் கண்டு திஜ்லா நதியிலிருந்து ஒரு கால்வாய் வெட்டி, குடிதண்ணீர் வசதி செய்தார்.
இவர் தம் சொத்து முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு அறம் செய்து விட்டு எளிய வாழ்வே வாழ்ந்து வந்தார். பகல் முழுவதும் கடினமாக உழைக்கும் இவர் இரவில் சற்று நேரமே தூங்கிப் பின்னர் விழித்தெழுந்து நெடு நேரம் தஹஜ்ஜுத் தொழுது கொண்டிருப்பார்.
மக்கள் நலப் பணியில் அபூ மூஸா அஷ் அரீ (ரழி)
ஹல்ரத் உமர் (ரழி) அவர்களின் கிலாபத் காலத்தில் முதன் முதலாக முஸ்லிம்களின் நிரந்தரப் படை அமைக்கப் பட்டதற்கு மூல காரணமே இவர்தாம்.
இவர் பின்னர் கூஃபாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் பாலங்கள், பள்ளி வாயில்கள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள் ஆகிய வற்றைக் கட்டினார். பைத்துல் மாலிலிருந்து உதவிப் பணம் பெறுபவர்கள் நேரில் வந்து அதனை வாங்கிச் செல்ல இயலாத பலவீனர்களாகவோ, வயோதிகர்களாகவோ இருந்தால் அவர்களுக்குத் தாமே நேரில் சென்று கொடுத்து வருவார்; அவர்களுக்குத் தாமே கடை வீதிக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொண்டு வந்தும் கொடுப்பார்; போர் வீரர்களின் கடிதங்களைத் தாமே விநியோகிப்பார்; எழுத்தறிவில்லாதவர்களுக்கு வரும் கடிதங்களை அவர்களுக்கு படித்துக் காட்டுவார்; ஏழை பெண்களுக்குத் தம் செலவிலேயே திருமணம் செய்து வைப்பார்; விதைவைகளுக்குப் பொருள் கொடுத்து உதவி செய்வார்.
ஸிஃப்ஃபீன் போரின் தகராறை தீர்க்கும் நடுவர்
உதுமான் (ரழி) அவர்களின் கிலாபத்தின் போது கூஃபாவின் ஆளுநராக இருந்த இவர் உதுமான் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டதும் அங்கிருந்தும் வெருண்டோடினார்.
ஸிஃப்ஃபீன் போருக்குப் பின் அலீ (ரழி) அவர்களுக்கும், முஆவியா (ரழி) அவர்களுக்கும் தங்களின் தகராறை நடுவரின் தீர்ப்புக்கு விட இணங்கிய பொழுது இவரை - தம் மீது நல்லபிமானம் இல்லாத இவரை - அலீ (ரழி) அவர்கள் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க, முஆவியா (ரழி) அவர்களோ அம்ரு இப்னு ஆஸைத் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு கட்சியிலும் நானூறு சாட்சிகள் இருக்க, இரு நடுவர்களும் கி.பி. 659 ஜனவரியில் மதீனா - திமிஷ்க் பாதையிலுள்ள் அத்ருஹ் என்னும் இடத்தில் சந்தித்து வாதித்தனர். இறுதியாக, அலி, முஆவியா ஆகிய இருவரையும் கலீபா பதவிக்குத் தகுதியற்றவர்கள் என்று நீக்கி விட்டு மூன்றாமவரைக் கலீபாவாகத் தேர்ந்தெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இவர் அம்ரு இப்னு ஆஸால் ஏமாற்றப்பட்டார்
இத்தீர்மானத்தின் படி இவர் முதலில் எழுந்து அலீ (ரழி) அவர்கள் கிலாஃபத்திற்குத் தகுதியற்றவர் என்று கூற, அம்ரு இப்னு ஆஸ் உடனே எழுந்து, “ஆம்; நான் அதனை முழுக்க முழுக்க ஆமோதிக்கின்றேன். எனவே முஆவியா (ரழி) அவர்களையே கலீபாவாக இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.” என்று கூறிப் பேச்சை முடித்து விட்டார். இவ்வாறு இவர் அம்ரு இப்னு ஆஸால் ஏமாற்றப்பட்டார்.
வரலாற்றாசிரியர்கள் கருத்து
இவர் அலீ, முஆவியா ஆகிய இருவரும் கலீபாப் பதவிக்குத் தகுதியற்றவர் என்ற முடிவை ஏற்றுக் கொண்டதே தவறு என்றும் ஏனெனில் இதன் காரணமாக, கலீபாவாக இருந்த அலீ (ரழி) அவர்களைப் பட்டத்திலிருந்து இறக்கி, கலீபாப் பதவிக்குப் போட்டியிட்ட முஆவியா (ரழி) அவர்களுடன் சரிசமமாக ஆக்கி விட்டார் என்றும் இதன் காரணமாக அலீ (ரழி) அவர்களுக்குப் பதவி போன பேரிழப்பையும், முஆவியா (ரழி) அவர்களுக்கு யாதொரு இழப்பும் இல்லா நிலையையும் ஏற்படுத்தி விட்டார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
கடைசி கால வாழ்வு மற்றும் மரணம்
இதன் பின் இவர் அலீ (ரழி) அவர்களின் கண்களில் விழிக்க நாணி, உயிர் தப்பி மக்கா சென்றார். அங்கும் இவருக்கு அமைதி ஏற்படாத பொழுது கூஃபா சென்று அங்கு கி.பி. 662 (ஹிஜ்ரி 42) இல் இறப்பெய்தினார்.
இவர் ஒரு சிறந்த காரீ
இவர் சிறந்த ‘காரீ’களில் ஒருவரென்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனை மனனம் செய்து ஓதினாரென்றும் இவர் இனிய குரலில் குர் ஆன் ஓதுவதைக் கேட்டுப் பரவசமுற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தாவூது (அலை) அவர்களின் குரல் இவருக்கு அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர் என்றும் சொல்லப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.