அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)
பூனைக்குட்டிகளிடம் அதிகப் பிரியமுடையவர்களாக இருந்ததால் பூனைக் குட்டிகளின் தந்தை என்ற சிறப்புப் பெயரில் அபூ ஹுரைரா என்று அழைக்கப் பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையும் செயலையும் அதிகமாகப் பரப்பியவர்களில் ஹல்ரத் அபூஹுரைரா அவர்களைப் பிரதானமாகக் குறிக்கப் படுகிறது. கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களோடு சேர்ந்தார் ஹல்ரத் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள். சுமார் 3500 ஹதீதுகளுக்கு இவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். ஹல்ரத் உமர் (ரழி) அவர்களாலும், மதீனாவின் கவர்னராக இருந்த ஹல்ரத் மர்வான் அவர்களாலும், இவர்களுக்கு பல பதவிகள் கொடுக்கப்பட்டன. இவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஹிஜ்ரி 57ல் தனது 78ம் வயதில் மதீனாவில் காலமானார்கள்.
ஆரம்ப கால வாழ்வு
இவரின் இயற்பெயர் யாது, இவரின் ஊர் எது, இவரின் குலம் என்ன? என்பதற்கு ஆதாரப் பூர்வமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இவர் தவ்ஸ் கிளையைச் சேர்ந்தவர் என்று மட்டும் கூறப்படுகிறது. இவர் ஹிஜ்ரி 7 ஆவது ஆண்டில் கைபர் போருக்குச் சற்று முன் இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாத்தைத் தழுவிய பின் இவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் என்றோ, அப்துர் ரஹ்மான் என்றோ பெயரிட்டார்கள். அதற்கு முன்னர் இவருக்கு அப்துஷ் ஷம்ஸ் என்றோ, அம்ர் என்றோ பெயர் இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. ஆனால் ஹாக்கிம் அபூஹாமித் (ரஹ்) அவர்களோ, “இவருடைய இயற்பெயர் அப்துர்ரஹ்மான் என்பதும், இவரின் தந்தையார் ஸக்ரு என்பதும் ஆதாரப் பூர்வமான செய்தியாகும்” என்று கூறுகின்றனர். ஆனால் இவரின் பெயர் உமைர் இப்னு ஆமிர் என்றும் மற்றொரு வரலாறு உள்ளது.
இளமையில் இவர் ஒரு செல்வச் சீமாட்டியிடம் பணிபுரிந்தார். அவர் வெளியே எங்கேனும் இவர்ந்து செல்லும் பொழுது இவர் வெறும் காலுடன் அவர் பின்னே ஓடிச் செல்வார். பின்னர் சில காலம் காடுகளுக்குச் சென்று ஆடு, மாடு, ஒட்டகங்களை மேய்த்து வந்தார்.
இஸ்லாத்தைத் தழுவியது
இவர் யமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அங்கு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காகச் சென்ற துஃபைல் இப்னு அம்ர் (ரழி) அவர்களின் கரம் பற்றித் தம்முடைய முப்பதாவது வயதில் இஸ்லாத்தைத் தழுவினார் என்றும், அண்ணல் நபி (ஸல்) அவர்களைத் தரிசிப்பதற்காக மதீனா வரும் பொழுது மகிழ்ச்சி மிகுதியால் வழி நெடுகப் பாட்டுப் பாடிக் கொண்டு வந்தார் என்றும், அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கைபர் போர் மீது சென்றிருப்பதை அறிந்து அங்குச் சென்று அண்ணல் நபி (ஸல்) அவர்களைத் தரிசித்து மகிழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது.
மதீனா திரும்பி அங்கேயே தங்கியது
இக்காலை வழியில் காணாமற் போன இவரின் அடிமை இவரை வந்தடைந்த பொழுது, “காணாமற்போன உம்முடைய அடிமை வந்து விட்டான்; மகிழ்ச்சியுறுவீராக!” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை நோக்கி கூறிய சமயம், “நான் அவனைக் கண்ட கணமே அல்லாஹ்வுக்காக வேண்டி அவனுக்கு விடுதலை நல்கிவிட்டேன்” என்றார் இவர். இதன் பின் இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் மதீனா திரும்பி அங்கேயே தங்கி விட்டார்.
இயற்பெயரை மறையச் செய்த பட்டப்பெயர்
இவர் ஒரு சிறு பூனையை வளர்த்து அதன் மீது அளவிறந்த அன்பு செலுத்தி வந்ததன் காரணமாக இவருக்குப் “பூனையின் தந்தை” எனறு பொருள்படும் அபூஹுரைரா என்னும் பெயர் ஏற்பட்டது. இவர் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு காட்டுப்பூனைக் குட்டியைக் கண்டெடுத்து அதனைத் தம் சட்டைக்குள் வைத்து மறைத்துக் கொண்டு வந்ததால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதென்றும் கூறுவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை ‘அபூர்’ என்று அழைத்தனர். அபூஹுரைரா என்னும் இவரின் பட்டப் பெயர் இவரின் இயற்பெயரை மறையச் செய்யும் அளவுக்குப் புகழ் பெற்று விட்டது.
இவரின் அன்னை இஸ்லாத்தை தழுவியது
தம் அன்னை இஸ்லாத்தைத் தழுவாதிருப்பதைக் கண்டு வருந்திய இவர் தம் அன்னை இஸ்லாத்தைத் தழுவ இறைஞ்சுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வேண்ட அவர்களும் அவ்விதமே செய்ய மாலையில் தம் அன்னை இஸ்லாத்தைத் தழுவி இருப்பது கண்டு பெரு மகிழ்வுற்றார் இவர்.
இவர் ‘உளூச்’ செய்யும் பொழுது, “வாயே நீ தீயசொல் பேசாதே!” என்று கூறி வாய் கொப்புளிப்பார். “மூக்கே! நீ உருவத் தொழும்பரின் வாடையையும் முகராதே!” என்று கூறி மூக்கில் தண்ணீர் செலுத்துவார். கைகளைக் கழுவுங்கால், “கையே! எவருக்கும் தீங்கிழைக்காதே!” என்று கூறிக் கைகளைக் கழுவுவார். தலையை ‘மஸஹ்’ செய்யும் பொழுது, “தலையே! உன்னில் தீய எண்ணங்கள் நுழைய அனுமதியாதே!” என்று ‘மஸஹ்’ செய்வார். கால்களைக் கழுவும் பொழுது, “கால்களே! நீங்கள் போகாத இடம் தனிலே போக வேண்டாம்!” என்று கூறிக் கால்களைக் கழுவுவார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திண்ணைத் தோழர்
இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திண்ணைத் தோழர் (அஸ்ஹாபுஸ் ஸுஃபா) களில் ஒருவராய் இருந்தமையால் மற்றவர்களெல்லாம் பிழைப்பின் நிமித்தம் பல இடங்களுக்கும் சென்று விடும் பொழுது இவர் மட்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் எப்பொழுதும் இருந்து வரவும், அவர்கள் வெளியில் செல்லுங்கால் அவர்களுடன் கூடவே செல்லவும் செய்து வந்தார். எனவே இவர் வரவும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்துவதற்குமான நான்காண்டுக் காலத்தில் வேறு எந்த நபிதோழரும் அறிந்திராத அளவு அதிகமான நபி மொழிகளை இவர் அறிந்து மக்களுக்கு எடுத்துரைத்தார். “இவர் மொத்தம் 5374 நபிமொழிகளை அறிவித்துள்ளார்.” என இப்னு ஜவ்ஸீ தம்முடைய ‘தல்கீஹ்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 375 நபிமொழிகள் புகாரி இமாம் அவர்களும் முஸ்லிம் இமாம் அவர்களும் ஒப்பியவையாகும். 79 புகாரியிலும் 93 முஸ்லிமிலும் இருப்பவையாகும்.
நபிமொழிகளை அதிகமாக அறிந்தவர்
ஒரு முறை இவர் கூறிய ஒரு நபி மொழி பற்றி அப்துல்லாஹ் இப்னு உமருக்கு ஐயம் ஏற்பட்ட பொழுது அது உண்மையானது தான் என்று உறுதிப்படுத்தினர் ஆயிஷா (ரழி) அவர்கள். அது கண்ட அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள், “நீர் அல்லாஹ்வின் தூதர் அவர்களை எங்களை விட நெருங்கி இருந்ததால் நபிமொழிகளை எங்களை விட அதிகமாக அறிந்துள்ளீர்” என்று கூறியதாக அஹ்மது இப்னு ஹன்பல் எழுதிய ‘முஸ்னதி’ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் அவ்வாறே கூறியபோதினும் உண்மையில் அவர்களே அபூஹுரைராவை விட அதிகமான நபிமொழிகளைத் தெரிந்திருந்தனர். இதனை இவரே ஒப்புக்கொண்டு, “அப்துல்லாஹ் இப்னு உமர் நபிமொழிகளை எழுதி வைத்து வந்தார் நான் அவ்விதம் செய்யவில்லை” என்று கூறுகின்றார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் துணிவுடன் கேட்பவர்
மற்றொரு முறை ஒருவர் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களிடம், “என்ன! அபூஹுரைரா அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இத்துணை அதிகமான செய்திகளைக் கூறுகின்றார்” என்று சொன்ன பொழுது, “அபூ ஹுரைராவைப் பற்றித் தவறாகக் கருதாதீர். நாங்களெல்லாம் ஒரு விஷயத்தைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்பதற்குத் தயக்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் துணிவுடன் முன் சென்று கேட்பார்” என்று பதில் கூறினர் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள்.
நபிமொழிகளை குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தவர்
இவர் நபிமொழிகளை எழுதி வைத்திருந்தார் என்று மற்றொரு வரலாறு கூறுகிறது. ஒரு முறை ஒருவர் இவரிடம் சென்று ஒரு நபி மொழியைப் பற்றிக் கூறி அதைப் பற்றி வினவிய பொழுது, “எனக்கு அந்த நபி மொழியே தெரியாதே” என்றார் இவர். “தாங்கள் தாமே ஒரு முறை இதனைக் கூறினீர்கள்.” என்று அவர் சொன்ன பொழுது, “அப்படியா! அப்படியாயின் நான் என்னுடைய குறிப்பேட்டைப் பார்க்க வேண்டும்” என்று கூறி அவரைத் தம் இல்லம் அழைத்துச் சென்று தம்முடைய குறிப்பேட்டைப் புரட்டிப் பார்த்து அதில் அந்த நபிமொழி இருப்பதைக் கண்டு அது பற்றி அவர் கேட்ட வினாவுக்குச் சரியான பதிலுரைத்தார் இவர்.
ஒரு முறை இவர் தமக்கு நிணைவாற்றல் குறைவாக இருப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது இவரின் மேல் துண்டைக் கீழே விரிக்குமாறு செய்து அதன் பின் தங்களின் கைகளால் அதில் இரண்டு முறை சமிக்ஞை செய்து அதனை எடுத்து மார்போடு அணைத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் அவ்விதமே தாம் செய்ததாகவும் அதன் பின் தாம் எதனையும் மறக்கவில்லை என்றும் இவரே கூறுகின்றார்.
நபிமொழிகளை மக்களுக்கு எடுத்தோதியதற்கான காரணம்
“நிச்சயமாக, நாம் வேதத்திலேயே மக்களுக்கு விளக்கியவற்றையும் தெளிவாக்கி நாம் இறக்கிய சட்டங்களையும் யார் (பிறருக்குக் கூறாமல்) மறைத்து விடுகிறார்களோ, அவர்களை அல்லாஹ்வும் முனிகின்றான், முனிபவர்களும் முனிகின்றார்கள் என்ற அல் பகரா அத்தியாயத்தின் திருவசனம் இல்லாதிருந்தால் நான் செவியுற்ற நபிமொழிகளைக் கூறியே இருக்க மாட்டேன்” என்று தாம் நபிமொழிகளை மக்களுக்கு எடுத்தோதியதற்கான காரணத்தை இவர் கூறுகின்றார். மேலும் இவர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் குத்பாவுக்கு முன் மக்களுக்கு நபிமொழிகளை எடுத்துப் போதித்தும் வந்தார்.
ஆனால் அதற்காக இவர் தாம் செவியுற்ற நபி மொழிகள் அத்தனையையும் கூறி விடவில்லை. “நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருவாய் மொழிகளை இரு கிண்ணங்களில் பாதுகாத்து வைத்துள்ளேன். ஒரு கிண்ணத்தில் உள்ளவற்றையே மக்களிடம் பரப்பினேன். மற்றொரு கிண்ணத்தில் உள்ளவற்றை மக்களிடையே பரப்பி விடின் என் கழுத்து துண்டிக்கப்படும்” என்று இவர் கூறினார். அவை இறைஞான இரகசியங்கள் என்று சூஃபிகளும், மார்க்கஞான இரகசியங்கள் என்று மார்க்க மேதைகளும், அவை குழப்ப எண்ணத்தை உண்டு பண்ணும் நபிமொழிகளாகும் என்று ஹதீதுக் கலை விற்பன்னர்களும் கருதுகின்றார்கள்.
இவரின் குடும்ப வாழ்வு
துவக்கத்தில் திண்ணையில் தம் வாணாட்களைக் கழித்து வந்த இவர் பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வற்புறுத்தலின் மீது மணமுடித்து ஒரு சிறு குடிலில் வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இவர் ஒரே துணிவுடன் வறுமையில் உழன்று வந்தார். பசிக்கொடுமை தாங்காது பள்ளி வாயிலில் இவர் மயங்கிக் கிடக்கும் பொழுது இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று மக்கள் கருதி இவரின் பிடரியைப் பிடித்து அழுத்தி விட்டுச் செல்வர்.
இவரிடம் ஓராயிரம் முடிச்சுகள் கொண்ட ஒரு சரடு இருந்தது. ‘ஸுப்ஹானல்லாஹ்’ (இறைவன் தூயவன்) என்று கூறி அதனை உருட்டி முடித்த பின்னரே இவர் இரவில் தூங்கச் செல்வார். நாளொன்றுக்குப் பன்னிரண்டாயிரம் தடவை தாம் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்து வந்ததாக இவரே கூறுகின்றார்.
இவர் கலந்து கொண்ட போர்களும், பதவிகளும்
இவர் கைபர் போருக்குப் பின் நடந்த எல்லாப் போர்களிலும் கலந்து கொண்டுள்ளார். மூத்தா போரில் ரோமானியப் பெரும்படையைக் கண்டு இவர் திகிலடைந்து விட்டார். உமர் (ரழி) அவர்கள் இவரைப் பஹ்ரைனின் ஆளுநராக நியமித்தனர். அங்கிருந்து இவர் திரும்பும் பொழுது அங்கு இவருக்கு அன்பளிப்பாகக் கிடைத்த இரண்டு ஒட்டகைகளையும் கொண்டு வந்தார். அவை இவருக்குப் பதவியிலிருந்த போது கிடைத்ததாதலின் அவற்றைப் பைத்துல்மாலில் (பொது நிதியில்) சேர்த்து விடுமாறு உமர் (ரழி) அவர்கள் கூறியபொழுது மறு பேச்சின்றி இவர் அவ்வாறே செய்தார்.
முஆவியா (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது இவர் சிறிதுகாலம் மதீனாவின் ஆளுநராக இருந்தார். அப்பொழுது தம் வீட்டிற்கான விறகுக்கட்டை இவரே தெருவில் சுமந்து செல்வார். வழியில் நெரிசல் அதிகமிருப்பின், “தங்களின் ஊழியனுக்கு வழி விடுங்கள்!” என்று இவர் கூறுவார்.
இவரின் இறுதி கால வாழ்வு
இவர் இறப்புப் படுக்கையில் கிடக்கும் பொழுது பலர் இவரைப் பார்க்க வந்தனர். அப்பொழுது அவர்களில் ஒருவர் இவர் உடல் நலன் பெறுவதற்காக இறைஞ்சிய பொழுது, இவர் குறுக்கிட்டு, “இறைவனே! இனியும் இந்த உலகில் என்னை உயிர் வாழ விட்டு வைக்காதே! என்று இறைஞ்சினார். அதன் பின் தமக்காக இறைஞ்சியவரை நோக்கி, “விரைவில் ஒரு காலம் வரப்போகிறது. அப்பொழுது ஒரு குவியல் தங்கத்தைவிட இறப்பையே மேலாக மனிதன் கருதுவான். அப்பொழுது நீங்கள் உயிரோடிருப்பின் முன்னாலேயே இறந்திருக்கக் கூடாதா என்று எண்ணுவீர்கள்” என்று கூறினார்.
இதன் பின்னர் இவர் ஒரு நாள் கண்ணீர் விட்டு அழுதார். அதற்கான காரணம் வினவப் பட்ட பொழுது, “நான் உலகை விட்டுப் பிரியப் போவதற்காக அழவில்லை. நான் அறியாது யாது பாவம் செய்திருக்கிறேனோ, அல்லாஹ் எனக்கு என்ன தண்டனை அளிப்பானோ என்பதை நினைத்துத்தான் அழுகிறேன்” என்று கூறினார்.
இவரது இறப்பும், துஆவும்
இவர் ஹிஜ்ரி 57-இல் தம்முடைய 78ஆவது வயதில் மதீனாவில் இறப்பெய்தி ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டார். “இறைவனே! என்னை இளைஞனின் ஆட்சியை விட்டும் காத்தருள்!” என்று இவர் இறைஞ்சியதற்கேற்ப யஸீது கிலாஃபத் பதவியை அடையும் முன் இவர் இவ்வுலகு நீத்தார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.