Home


அபூ தர்தாஉ (ரழியல்லாஹு அன்ஹு)

        நபி தோழர்களில் ஒருவரான இவர்களின் இயற்பெயர் உவைமிர் என்பதாகும். தந்தையின் பெயர் ஆமிர். கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குத் தர்தாஉ என்னும் மகன் இருந்ததன் காரணமாக இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது. இவர்கள் தம் குடும்பத்தினர் அனைவரும் பத்ரு போருக்கு பிறகு இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்கள் சிறந்த அறிஞராக விளங்கியதால் “ஹகீமுல் உம்மத்” என்று இவர்கள் போற்றப்பட்டார்கள். பத்ருப் போரைத் தவிர்த்து ஏனைய போர்களில் இவர்கள் கலந்து கொண்டனர்.

பகல் இரவு எல்லாம் இபாதத் செய்பவர்களாக

        இவர்கள் பகலெல்லாம் நேன்பு நோற்று இரவெல்லாம் நின்று தொழுபவர்களாக இருந்தனர். ஒரு முறை ஸல்மான் பார்ஸீ (ரழி) அவர்கள் இவர்களின் இல்லத்திற்கு விருந்தினராக வந்த பொழுது இவர்களின் மனைவி சோகமே உருவாய் இருப்பதைக் கண்டு அவர்கள் அதற்கான காரணத்தை வினவ, “தங்களின் சகோதரர் அபூ தர்தாஉ உலகில் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர்” என்றார் அவர். இதன் பின் அபூ தர்தாஉ (ரழி) அவர்களை ஸல்மான் (ரழி) உணவுண்ண அழைத்த பொழுது தாம் நோன்பு நோற்றிருப்பதாகக் கூறினர் அவர்கள். “நீர் உணவு உண்ண வராவிடின் நான் உணவு உண்ணப் போவதில்லை” என்றனர் ஸல்மான் பார்ஸீ (ரழி). அது கேட்ட அபூ தர்தாஉ (ரழி) அவர்கள் நோன்பை முறித்துவிட்டு உணவுண்டனர். இரவில் இவர்கள் தொழத் துவங்கிய பொழுது தூங்குமாறு கூறினர் ஸல்மான் பார்ஸி (ரழி), அவ்விதமே செய்தார்கள்.

ஒவ்வொருவருடைய உரிமையையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்

சற்று நேரம் கழித்து மீண்டும் தொழ எழுந்து நின்றார்கள் அபூ தர்தாஉ (ரழி) அவர்கள், மீண்டும் தூங்குமாறு ஸல்மான் பார்ஸீ (ரழி) அவர்கள் கூற அவ்விதமே செய்தார்கள் இவர்கள். இரவின் மூன்றாவது பகுதி வந்தவுடன் ஸல்மான் (ரழி) அவர்கள், இவர்களைத் துயிலெழுப்பி, தொழுமாறு கூற அவ்விதமே செய்தனர் இவர்கள். தொழுது முடித்த பின் அவர்கள் இவர்களை நோக்கி, “உன் மீது         இறைவனுக்கும், உம் மனைவிக்கும் உரிமையுண்டு, ஆதலின் ஒவ்வொருவருடைய உரிமையையும் நிறைவேற்றுவீராக!” என்றனர். விடிந்ததும் இதனை இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூற, “ஸல்மான் கூறியது முற்றிலும் சரியே” என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

உலக வாழ்க்கை வாழ ஒரு பிரயாணிக்குரிய பொருள்கள் போதும்

        “கிளர்ச்சிப் புயல்கள் வீசும் பொழுது ஈமானின் விளக்கு சிரியாவில் அணையாது ஒளி வீசும்” என்னும் நபி மொழியை அறிவித்தவர்கள் இவர்கள் தாம். எனவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலமான பிறகு உமர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது இவர்கள் சிரியாவில் குடியேறி வாழ்ந்தார்கள். அங்கு இவர்களுக்கு அரசாங்கப் பதவி ஒன்று தர உமர் (ரழி) அவர்கள் முன் வந்த பொழுது அதனை இவர்கள் மறுத்து, “அறிவுப்பணி ஆற்றவே நான் விரும்புகின்றேன்” என்று கூறிவிட்டார்கள். பின்னர் உமர் (ரழி) அவர்கள் ஒரு முறை சிரியா சென்ற சமயம் இவர்கள் விளக்கில்லாத குடிசையில் கம்பளியைப் போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தியவர்களாய், “தாங்கள் ஏன் இத்துணைத் துன்புற வேண்டும்” என்று கேட்ட பொழுது, “உலக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு பிரயாணிக்குரிய பொருள்கள் போதுமானவைதானே?” என்று இவர்கள் இயம்பினார்கள்.

கல்வி பணி மற்றும் சமூகப் பணி

        இவர்கள் திமிஷ்கு நகரில் நடத்திய கல்லூரி புகழ் பெற்றது. அங்கு 1500 மாணவர்கள் இவர்களிடம் ‘கிராஅத்’ கலையைக் கற்றனர். ஒரு முறை இவர்கள் சென்ற பொழுது மாணவர்களின் பெரும் கூட்டமே இவர்களைப் பின் தொடர்ந்து சென்றது. அது கண்டு அரசர் எவரும் பவனி வருகின்றாரோ என்று கூட மக்கள் ஐயுற்றார்கள்.

        சிறந்த பண்பாளராக விளங்கிய இவர்கள் எளிமையின் திருவுருவமாக விளக்கினார்கள். இவர்கள் பள்ளிவாயிலில் மரம் நடுவர்; அவற்றிற்கு நீரும் பாய்ச்சுவர்; பள்ளிவாயிலைப் பெருக்கித் துப்புரவும் செய்வர்; எவரேனும் வந்து தாம் அப்பணியை ஆற்றுவதாகக் கூறின், “இத்தகு பணி எத்தகையது என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்கள்!” என்று கூறிவிடுவார்கள் இவர்கள்.

தீயதை விட்டொழிப்பின், எனது சகோதரனாகவே கருதுவேன்

ஒரு முறை சிலர் தவறு செய்து விட்ட ஒருவனைத் திட்டிக் கொண்டிருப்பதைக் கண்டதும் இவர்கள், “ஒருவன் கிணற்றில் விழுந்து விட்டால் அவனை அதிலிருந்து வெளியேற்ற முயல வேண்டுமேயன்றி அவனைத் திட்டுவதால் என்ன பயன்?” என்று கேட்டார்கள். “என்ன இவ்வாறு கூறுகின்றீர்கள்? அவனை நீங்கள் வெறுக்கவில்லையா?” என்று ஒருவர் வினவிய பொழுது, “இவனின் மீது இயற்கையில் எவ்விதத் தீமையும் இல்லை. இவனின் செயல் தான் தீயது. தீயதை இவன் விட்டொழிப்பின் இவனை நான் என் உடன் பிறந்தவனாகவே கருதுவேன்” என்றார்கள் இவர்கள்.

மக்களுக்கு நபி மொழி படியே தீர்ப்பு வழங்குவார்கள்

        பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்ப்புக் கோரி மக்கள் இவர்களிடம் வருவர். அவற்றிற் கெல்லாம் இவர்கள் நபி மொழிப்படியே தீர்ப்பு வழங்குவார்கள். ஒரு முறை பின் வரும் பிரச்சனை இவர்களின் முன் தீர்ப்புக்கு வந்தது. “ஓர் அன்னை, ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளுமாறு  தம் மகனை வற்புறுத்தினார். முதலில் மகன் இணங்காத போதினும் அன்னையின் வற்புறுத்தலுக்கு இணங்கி அப்பெண்ணை மண முடித்தான். பின்னர் மண மக்கள் இருவரும் மனமொத்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அன்னை அவர்களின் வாழ்வில் குறுக்கிட்டு அப்பெண்ணை மண விடுதலை செய்யுமாறு தம் மகனை வற்புறுத்தத் துவங்கி விட்டார். இந் நிலையில் மகன் என்ன செய்வது?”

        இதற்கு இவர்கள் அளித்த பதில்: “இது பற்றி நான் முடிவாக யாதும் கூறத் தயாராயில்லை. “அன்னையின் காலடியில் சுவனம் இருக்கிறது” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவ்வளவு தான் என்னால் கூற இயலும்.”

தொழுகை நடத்தப்படாத ஊரில்  ஷைத்தான் ஆதிக்கம் அதிகம்

        ஒரு முறை ஸஃதுப்னு அபீதல்ஹா என்பவர் இவர்களைச் சந்தித்த சமயம் தாம் பள்ளிவாயில் கூட இல்லாத குக்கிராமத்தில் வாழ்வதாகக் கூறிய பொழுது, “அண்மையில் இருக்கும் நகருக்குச் சென்று ஐந்து வேளையும் தொழுது வாருங்கள். பாங்கு சொல்லித் தொழுகை நடத்தப்படாத ஊரில் ஷைத்தானின் ஆதிக்கம் அதிகமாய் இருக்கும். தனித்து மேயும் ஆட்டைத்தான் ஓநாய் அடித்து உண்ணும். எனவே எச்சரிக்கை!” என்று இவர்கள் அறிவுரை பகர்ந்தனர்.

அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் என்ற பரிபூரண நம்பிக்கை

 மற்றொரு முறை இவர்களிடம் ஒருவர் வந்து, “தங்களின் வீடு நெருப்புப் பிடித்துக் கொண்டது” என்று கூறினார். “என் வீட்டில் நெருப்புப் பிடிக்காது” என்றார்கள் இவர்கள். பின்னர் இரண்டாமவரும் வந்து இவ்விதமே கூற இவர்கள் முன் கூறிய பதிலையே அவருக்கும் கூறினார்கள். அதன் பின் மூன்றாமவர் வந்து, “நெருப்பு தங்கள் வீடு வரை வந்து, அதன் பின் சடாரென அணைந்து விட்டது” என்றார். அது கேட்ட இவர்கள், “அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் என்னும் நம்பிக்கை எனக்குப் பரிபூரணமாக இருந்தது” என்றார்கள். அதற்கான காரணம் வினவப்பட்ட பொழுது, “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஒரு ’துஆ’வைக் கூறி, ‘ஒருவன் காலையில் எழுந்தவுடன் இதனை ஓதிவந்தால் மாலை வரை அவனை எந்தத் துன்பமும் அணுகாது’ என்று கூறியுள்ளனர். அதனை நான் வழக்கமாக ஓதி வருகிறேன்” என்று கூறிப் பின்வரும் அந்த துஆவையும் ஓதிக் காட்டினார்கள்.

“அல்லாஹும்ம அன்த்தரப்பீ லாஇலாஹ இல்லா அன்த்த அலய்க்க தவக்கல்த்து வ அன்த்த ரப்புல் அர்ஷில் கரீம். மாஷா அல்லாஹு கான வமாலம் யஷஃ லம்யகுன்  வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம். அஃலமு அன்னல்லாஹ அலா குல்லி ஷைஇன் கதீர். வ அன்னல்லாஹ கத் அஹாத்த பிகுல்லி  ஷைஇன் இல்மா. அல்லாஹும்ம இன்னீ  அஊதுபிக்க  மின்ஷர்ரி நஃப்ஸீ வமின் ஷர்ரிகுல்லி தாப்பத்தின் அன்த்த ஆகிதுன் பிநாஸியத்திஹா இன்ன ரப்பீ அலா ஸிராத்திம் முஸ்தகீம்.”

இன்று ஜமாஅத் தொழுகையைத் தவிர மற்ற பணிகளில் நடக்கவில்லையே

        முஸ்லிம்கள் பிற்காலத்தில் நபி வழியினின்றும் தடம் புரண்டு செல்வதைக் கண்டு இவர்கள் பெரிதும் மனம் வருந்தினார்கள். “இன்று ஜமா அத் தொழுகையைத் தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த பணிகளில் யாதொன்றும் நடக்கவில்லையே” என்று ஒரு முறை இவர்கள் மனம் நொந்து கூறினார்கள்.

        முஆவியா (ரழி) சிரியாவின் ஆளுநராகப் பணியாற்றும் பொழுது இவர்களுக்கு அவர்கள் பெருமதிப்பு நல்கினார்கள். தாம் வெளியூர் செல்லும் பொழுது இவர்களேயே திமிஷ்கில் தம் பிரதிநிதியாக அமர்த்தி விட்டுச் செல்வார்கள். சிறிது காலம் இவர்கள் திமிஷ்க் நகர ‘காஜி’யாகவும் பணியாற்றினர்.

மறுமையின் அச்சமும் இவர்களின் மரணமும்

        இவர்களுக்கு அளவற்ற இறையச்சம் இருந்தது. “மறுமையில் நான் இறைவன் முன்னிலையில் எவ்விதம் பதில் உரைப்பேன்?” என்று கூறித் தேம்பித் தேம்பி அழுவார்கள் இவர்கள். இறப்பு வேளையில் அவ்வச்சம் அதிகமாகியது.

        மனைவி ஆறுதல் அளித்த போது, “நான் இறப்பை விரும்புகிறேன். இதோ இறப்பின் தூதர் வந்து விட்டார்” என்று கூறித் தம் கண்களை இறுதியாக இறுக மூடிக் கொண்டார்கள். இது திமிஷ்கில் ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இவர்களுடையவும், இவர்களுடைய மனைவியுடையவும் அடக்கவிடங்கள் திமிஷ்கின் வாயில்கள் ஒன்றின் அருகில் இருக்கின்றன.

 


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.