அபூ ஐயூப் அன்ஸாரி
ரழியல்லாஹு அன்ஹு
இறுதி நபியின் வரவை எதிர்பார்த்து வாழ்ந்தவர்கள்
கஅபாவுக்கு முதன் முதலாகத் திரை போர்த்திய யமன் மன்னர் துப்பவு அஸதுடன் யத்ரிப் வந்த யூத ரப்பி ஒருவரின் வழி வந்தவர் இவர்கள் என்று கூறுவர். அம்மன்னர் இறுதி நபியின் வரவைப் பற்றியும், அவர்களின் இருப்பிடத்தைப் பற்றியும் யூத ரப்பிகளிடமிருந்து விளங்கி அவர்களைச் சந்திக்கப் பெரிதும் விருப்பமுடன் யத்ரிபில் (மதீனாவில்) நீண்ட நாட்கள் வந்து தங்கி இருந்ததாகவும், பின்னர் ஊர் திரும்பிவிட்டதாகவும் ஆனால் அந்த யூத ரப்பிகள் அங்கு தங்கி இறுதி நபியின் வரவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்களில் ஒருவர் தம் மக்களை நோக்கி இறுதி நபி வரின் அவர்களுக்குத் தம் ஸலாத்தை உரைக்கும்மாறு ஒரு ‘வஸியத் நாமா’ வழங்கி விட்டு இறந்தார் என்றும் அந்த ’வஸியத் நாமா’ வழி வழியாக வந்து இறுதியாக அவர்களின் வழித்தோன்றலான அபூஐயூப் அன்ஸாரியிடம் இருந்ததென்றும் கூறுவர். இவர்கள் கஸ்ரஜ் கோத்திரத்தின் ஒரு பிரிவான பனூ நஜ்ஜார் கிளையைச் சேர்ந்தவர்கள். அபூஐயூப் அன்ஸாரி (ரழி) அவர்களின் முழுப் பெயர் அபூ ஐயூப் காலித் இப்னு ஸைத் என்பதாகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூரத்து உறவினர்
அபூ ஐயூப் அன்ஸாரி அவர்கள் அகபா உடன் படிக்கையில் பங்கு கொண்டவர்களாவர். அப்துல் முத்தலிபின் அன்னை ஸல்மா, பனூ நஜ்ஜார் குலத்தில் தோன்றியமையின் இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குத் தூரத்து உறவினராவார்கள்.
அல் கஸ்வா என்னும் ஒட்டகம் இவர்கள் வீட்டின் முன்னே நின்றது
மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களை எதிர் கொண்டு வரவேற்ற யத்ரிப் மக்கள் (அன்ஸாரிகள்) ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டும் என ஆர்வம் கொண்டு அழைப்பு விடுத்தனர். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் யத்ரிப் மக்கள் (அன்ஸாரிகள்) அனைவரும் ஏற்றும் கொள்ளும் வகையில், அதாவது நான் பயணம் செய்து வந்த அல் கஸ்வா என்ற ஒட்டகத்தை அவிழ்த்து விடுகிறேன். அது யார் வீட்டின் முன் போய் நிற்கிறதோ அந்த வீட்டில் தங்கி கொள்கிறேன் என அறிவித்து, ஒட்டகத்தை அவிழ்த்து விட்டனர்,
அபூஐயூப் அன்ஸாரி (ரழி) அவர்களின், இல்லத்தின் முன் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சுமந்து வந்த அல் கஸ்வா என்னும் ஒட்டகம் நின்றது. பின்னர் அது சற்றுத் தொலை சென்று மீண்டும் அவ்விடத்திலேயே வந்து படுத்துக் கொண்டது. எனவே இவர்களின் வீட்டையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தற்காலிகத் தங்குமிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அது கண்டு அபூ ஐயூப் அன்ஸாரிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சுமைகளை எடுத்துக் கொண்டு வந்து தங்களின் வீட்டிற்குள் வைத்தார்கள் அவர்கள்.
மாடியில் தங்கியிருக்குமாறு வேண்டிய அபூ ஐயூப் அன்ஸாரி
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரபீயுல் அவ்வலிலிருந்து ஸஃபர் வரை அவ்வீட்டில் தங்கி இருந்தனர். மாடியில் தங்கியிருக்குமாறு அபூ ஐயூப் அன்ஸாரியும், அவர்களின் மனைவியாரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களை எவ்வளவோ வேண்டியும் தம்மைச் சந்திக்க வரும் பொதுமக்களின் வசதியை முன்னிட்டுக் கீழேயே தங்கியிருந்து கொள்வதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டனர்.
ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை மேலே இருந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு வரும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உண்டு மீதம் வைப்பதை எடுத்துச் சென்று அதில் எந்த இடத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பதிந்திருக்கின்றனவோ அந்த இடத்திலிருந்து அபூ ஐயூப் அன்ஸாரியும் அவர்களின் துணைவியாரும் உண்பார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாததை நாங்களும் உண்ணோம்
ஒரு முறை வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் சேர்ந்த ஒருவித உணவு வந்த பொழுது அதன் வாடை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காததனால் அதனை உண்ணாது திருப்பி அனுப்பி வைத்து விட்டனர் அவர்கள். அது கண்டு யாதோ, என்னவோ என்று எண்ணிக் கீழே ஓடோடி வந்த அபூ ஐயூப் தம்பதிகள், “அவை விலக்கப் பட்ட உணவா?” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஏக்கத்துடன் வினவினர். “அல்ல; நான் பலருடன் இரகசியமாகப் பேச வேண்டியுள்ளது எனவே நான் அதனை உண்ணவில்லை. தாங்கள் எடுத்துச் சென்று உண்ணுங்கள்” என்று கூறினர். “அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாததை நாங்களும் உண்ணோம்” என்று கூறிவிட்டார்கள் அத்தம்பதிகள்.
ஒரு தடவை மேலே இருந்த தண்ணிர்க் குடம் ஒன்று உடைந்து விட்டது. தண்ணீர் கீழேயும் இறங்கி அண்ணல் நபி (ஸல்) அவர்களை நனைத்து விடுமோ என்று அஞ்சிய இவர்கள் தக்களிடமிருந்த ஒரே துணியை அதன் மேல் போட்டுத் தண்ணீரை உறிஞ்சி எடுக்கச் செய்தனர். இந்நிகழ்ச்சியை இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறி அவர்களை மேலே குடியிருக்கச் செய்து மகிழ்ந்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலமான பின் ஒரு தடவை போர்க் கைதிகள் நால்வரை முஸ்லிம்கள் கையைக் கட்டி வைத்துக் கொன்று விட்டார்கள் என்பதைக் கேள்வியுற்ற இவர்கள் பெரிதும் அதிர்ச்சியுற்று, “இவ்வாறு எதிரிகளைக் கொல்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். நான் ஒரு கோழியைக் கூட இவ்வாறு கொல்ல மாட்டேன்” என்று கூறினர்.
இக்காலை ஒரு நாள் இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது தமக்கிருந்த அன்பின் மிகுதியால் தங்களின் முகத்தை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தின் மீது வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மதீனாவின் ஆளுநர் அவ்வழியே செல்ல, தாம் இவ்வாறு அன்பின் பெருக்கால் செய்வதை அவர் தவறாகப் புரிந்து கொள்வாரோ என்று எண்ணி, “நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருச்சமூகத்திற்கு வந்துள்ளேன். கற்களாலான கட்டடத்திற்கு வரவில்லை” என்று கூறினார்கள் இவர்கள்.
ஒரு முறை இவர்கள் சிரியாவிற்குச் சென்றிருந்த பொழுது அங்கு மலங்கழிக்கும் அறைகள் ‘கிப்லா’வை நோக்கிக் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, “இஃதென்ன விபரீதம்! இவ்விதம் கட்டப்படுவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனரே!” என்று கூறித் தம் வருத்தத்தைத் தெரிவித்தனர்.
தாயும் குழந்தையும் பிரிப்பது அக்கிரமம்
ரோமானியர்களுடன் நடந்த போரில் சிறை செய்யப்பட்ட ஒரு பெண் தன்னுடைய குழந்தையைத் தன்னை விட்டுப் பிரித்ததை எண்ணி அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் உடனே இவர்கள் அக்குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்து அவளிடம் ஒப்படைத்தனர். இது முஸ்லிம் படைகளின் மகா தளபதிக்குத் தெரிய வந்ததும் அவர் இது பற்றி இவர்களிடம் விசாரிக்க, “இவ்விதம் செய்வதை அக்கிரமம் எனக் கூறி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்” என்றனர் இவர்கள். மகா தளபதி மறு வார்த்தை பேச வில்லை.
மஃரிப் தொழுகையைத் துரிதப்படுத்த வேண்டும்
ஒரு நாள் எகிப்து நாட்டின் ஆளுநர் உக்பா இப்னு ஆமிர் மஃரிப் தொழுகையைச் சற்றுத் தாமதித்து வந்து தொழுத பொழுது, “இது என்ன தொழுகை, உக்பா” என்றனர் இவர்கள். “முக்கியமான அலுவலின் காரணமாக வரச் சற்றுச் சுணங்கிவிட்டது.” என்று அவர் பதில் கூறிய பொழுது, “தாங்களோ நபிதோழர். தாங்களே இவ்வாறு செய்யின் இந்த நேரத்தில் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தொழுதார்களோ என்று சாதாரண மக்கள் எண்ண ஏதுவாகும். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களோ மஃரிப் தொழுகையைத் துரிதப்படுத்த வல்லவா செய்தார்கள்” என்று கூறினர் இவர்கள்.
இதே உக்பா, தாம் இதுவரை கேள்விப் படாத நபிமொழி ஒன்றைக் கூறுகின்றார் என்று கேள்விப்பட்டு அதனை அவர் வாயிலாக கேட்டறிவதற்காக இவர்கள் மதீனாவிலிருந்து எகிப்துக்குச் சென்று அதனைக் கேட்டறிந்து, “தங்களைத் தவிர இந்த நபிமொழியைக் கூறுபவர் இப்பொழுது வேறு எவருமில்லை” என்று பாராட்டு மொழி பகர்ந்தனர்.
நபியின் வழிமுறையை அனுவத்தனையும் விடாது பின்பற்றி வந்த இவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் பொழுது துணியால் நாற்புறமும் மறைவு உண்டாக்கி அதற்குள் குளிப்பது போன்று இவர்களும் செய்வார்கள்.
நீங்கள் உங்களின் கரங்களை அழிவிலாக்கிக் கொள்ளாதீர்கள்
ஒரு போரின் போது எதிரிப்படைகள் அலை அலையாக வந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் வீரர் அதனைச் சிறிதேனும் பொருட்படுத்தாது முன் சென்று வீரப் போர் செய்வதைக் கண்ட ஏனைய முஸ்லிம் வீரர்கள், “இவர் தம்மை வீணே அபாயத்திற்குள்ளாக்கிக் கொள்கின்றாரே” என்று கூறினர். அதனைச் செவியுற்ற இவர்கள், “நீங்கள் உங்களின் கரங்களை அழிவிலாக்கிக் கொள்ளாதீர்கள்” என்ற திருமறை வசனம் மதீனாவின் ஆதரவாளர்களாகிய எங்களின் பொருட்டே வந்தது. ‘இஸ்லாம் வளர்ச்சியடைந்து விட்டது. ஏராளமானோர் அதில் சேர்ந்து விட்டனர். எனவே இனிமேல் தோட்டம் துரவுகளில் கவனம் செலுத்துவோம்’ என்று நாங்கள் கருதியபொழுது தான், “இஸ்லாத்திற்குப் பணிபுரியாத ஒவ்வொருவரும் சொந்த அலுவலில் ஈடுபடுவதே தம் கையால் தமக்கே தாம் அழிவை உண்டு பண்ணிக் கொள்வதாகும்” என்று இறைவன் கூறி எச்சரிக்கை செய்தான். ஆதலின் இறைவனுக்காகப் போராடாது ஒதுங்கி நிற்பதே ஒருவன் தன்னை அபாயத்திற்கும், அழிவிற்கும் உள்ளாக்கிக் கொள்வதாகுமேயன்றி அவனுக்காகப் போராடுவது ஒரு போதும் அவ்விதம் ஆகாது” என்று கூறினர்.
கலந்து கொண்ட போர்களும், போருக்கு சென்ற வழியில் மரணமும்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடத்திய எல்லாப் போர்களிலும் அபூ ஐயூப் அன்ஸாரி அவர்கள் கலந்துள்ளனர். அலீ (ரழி) அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சியில் இவர்கள் அலீ (ரழி) அவர்களையே ஆதரித்து நின்றனர். ஹிஜ்ரி 52 - இல் கான்ஸ்டான்டிநோபிள் மீது அனுப்பப்பட்ட படைக்கு நற்பேறு கருதி இவர்களைத் தலைமை தாங்குமாறு செய்தார் யஸீத். இவர்கள் செல்லும் வழியில் கடுமையான வயிற்றுப் போக்குக்கு ஆளாயினர். தாம் மரிப்பின் தம்முடைய உடலத்தை எடுத்துச் சென்று எதிரிகளுடன் முஸ்லிம்கள் போர் செய்யும் இடத்தில் அதனை நல்லடக்கம் செய்ய வேண்டுமென்று இவர்கள் கூறியதற்கேற்ப வழியில் மரித்த இவர்களின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு கான்ஸ்டான்டிநோபிளின் தலைவாசலின் முன் நல்லடக்கம் செய்யப் பட்டது.
பின்னர் அடக்கவிடம் கனவின் மூலம் காட்டப்பட்டது
கி.பி 1453 இல் சுல்தான் இரண்டாவது முஹம்மது கான்ஸ்டான்டிநோபிளை வெற்றி கொண்ட பொழுது, இவர்களின் அடக்கவிடம் அக் ஷம்சுத்தீன் என்னும் மகானுக்குக் கனவின் மூலம் காட்டப்பட்டுக் கண்டுபிடிக்கப் பட்டது என்று கூறப்படுகிறது. இவர்களின் அடக்கவிடத்தில் இரவில் வெளிச்சம் தோன்றியதிலிருந்து தான் அது கண்டுபிடிக்கப் பட்டது என்றும் ஒரு வரலாறு உள்ளது. சுல்த்தான் இரண்டாவது முஹம்மது அவ்வடக்கவிடத்தின் மீது கட்டடம் எழுப்பியதோடு அதன் அருகே அபூ ஐயூப் மஸ்ஜித் என்னும் பெயருடன் ஒரு பள்ளிவாயிலையும் நிர்மாணித்தார்; அங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நிணைவுப் பொருள்களை வைக்கவும் ஏற்பாடு செய்தார்.
இங்கு தான் துருக்கி சுல்தான்கள் மக்களிடம் ‘பை அத்’ செய்தபின் செல்வது வழக்கம். ஷைகுல் இஸ்லாம் இங்கு வைத்துத்தான் அவர்களுக்கு வாள் அணிவிப்பார். இச்சடங்கு தான் துருக்கி சுல்தான் முடிதரிப்பது போன்ற சடங்காகும். இங்குப் பஞ்ச காலத்தில் மழை வேண்டி கிரேக்கக் கிருஸ்தவர்கள் பிரார்த்தனைக்கு வந்து போவார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் வாயிலாக கிடைத்த நபி மொழிகள்
இவர்கள் வாயிலாக நூற்றி ஐம்பது (150) நபிமொழிகள் கிடைத்துள்ளன. எனினும் அவற்றில் பதின்மூன்றையே இமாம் புகாரீயும், இமாம் முஸ்லிமும் தங்களின் ஹதீதுத் திரட்டில் சேர்த்துள்ளார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.