அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்ர்
(ரழியல்லாஹு அன்ஹு)
ஆயிஷா (ரழி) அவர்களும் இவரும் உடன் பிறந்தவர்களாவர். இவர்களின் அன்னை உம்மு ரெளமான் ஆவர். ஆயிஷா (ரழி) அவர்களை விட வயதில் மூத்தவர் இவர். அபூபக்ர் (ரழி) அவர்களின் முதல் மகன் இவர்தாம். இவர் கி.பி 600 இல் மக்காவில் பிறந்தார். பத்ருப் போர், மற்றும் உஹத் போரில் இவர் குறைஷி படையில் இருந்து தனது தந்தை அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு எதிராக போர் புரிந்தார். இவரது குடும்பத்தினர் அனைவரும் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தினை தழுவ, இவர் மட்டும் கி.பி628 இல் ஹுதைபிய்யா உடன்பாடு ஏற்பட்ட பின்னர் இஸ்லாத்தைத் தழுவினார். இதன் பின் அப்துர் ரஹ்மான் பல காலம் வாழ்ந்திருந்து இஸ்லாத்திற்காக வீரப் போர் செய்தார்.
ஒரு முறை பத்ருப் போர் பற்றி பேசிக் கொண்டிருந்த சமயம்
ஒரு முறை தந்தையும், தனயனும் பேசிக் கொண்டிருந்த சமயம், “பத்ருப் போரின் போது தங்களை வெட்டி வீழ்த்த எத்தனையோ வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. எனினும் நான் அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளவில்லை” என்று இவர் கூறிய பொழுது, “அவ்வித வாய்ப்புகள் எனக்கு மட்டும் கிடைத்திருபின் நிச்சயமாக நான் அவற்றைப் பயன் படுத்திக் கொண்டிருப்பேன். நான் உண்மையின் பக்கம் இருந்தேன். நீ பொய்மையின் பக்கம் இருந்தாய். உண்மைக்கு மேலாகத் தந்தையின் அன்புக்கு உயரிய இடம் வழங்கி இருக்க மாட்டேன் நான்” என்று கூறினர் தந்தை.
மக்காவில் இஹ்ராம் கட்ட தன்யீம் என்ற இடத்தில் ‘மஸ்ஜிதே ஆயிஷா’ பள்ளிவாசல்
இறுதி ஹஜ்ஜின் போது ஆயிஷா (ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட காலை, “இது இறைவன் ஆதமுடைய பெண் மக்களுக்கு அளித்த நற்பேறாகும். எனவே இதைப் பற்றிக் கவலைப்படாது கஅபாவை இடம் சுற்றி வருவதைத் தவிர்த்துள்ள வேறு எல்லா ‘ஹஜ்’ஜுச் சடங்குகளையும் செய்வாயாக! ஹஜ்ஜின் பயனை அல்லாஹ் உனக்குத் தரப் போதுமானவன்” என்று கூறிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பின்னர்க் கல்லெறியும் நாள் அன்று அவர்களின் தமயன் அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் என்ற இடத்திற்க்குச் சென்று அங்கு இஹ்ராம் அணிந்து மக்கா வந்து உம்ராச் செய்யுமாறு கூறினர். அந்த இடத்தில் ‘மஸ்ஜிதே ஆயிஷா’ என்னும் பெயருடன் ஒரு சிறிய பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது. இங்கிருந்து செய்யப்படும் உம்ரா வுக்கு ‘சிறிய உம்ரா’ என்று பெயர் கூறப்படுகிறது.
அல்லாஹ்வின் தூதர் அவர்களின் இறுதி வேளையில்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறப்புப் படுக்கையில் கிடக்கும் பொழுது அவர்களைப் பார்க்க வந்த அப்துர் ரஹ்மான் கரத்தில் இருந்த பல் துலக்கும் குச்சியை உற்று நோக்கினார்கள் அவர்கள். அது கண்ட ஆயிஷா (ரழி) அவர்கள், “அது வேண்டுமா” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவினர். “ஆம்” என்று கூறுவது போல் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தலையை அசைக்க அதனைத் தம் தமயனிடமிருந்து வாங்கித் தம் பல்லால் கடித்து மெதுவாக்கி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தனர் ஆயிஷா (ரழி) அவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதைக் கொண்டு வேகமாகப் பல்துலக்கினர். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் பிற்காலத்தில் கூறும் பொழுது, “அல்லாஹ்வின் தூதர் அவர்களின் இறுதி வேளையில் என் எச்சில் அவர்களின் சிறப்புமிகு நாவில் பட்டது எனக்குச் சிறப்பு நல்குவதாகும்” என்று குறிப்பிட்டனர்.
இஸ்லாத்திற்காக வீரப் போர் செய்தார்
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, அப்துர்-ரஹ்மான் (ரழி) அவர்கள், முஸ்லிம்கள் நடத்திய அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டு, இஸ்லாத்திற்காக வீரப் போர் செய்தார். குறிப்பாக சிரியாவை முஸ்லிம்கள் கைப்பற்றியதில், ஒரு உக்கிரமான வீரராகப் புகழ் பெற்றார். குலபாயெ ராஷிதீன் இராணுவத்தின் முபாரிசூன் பிரிவு வாள்வீரர்கள், லான்சர்கள் மற்றும் வில்லாளர்கள் ஆகிய உயரடுக்கு வீரர்களால் ஆனது. போர்க்களத்தில், போரின் தொடக்கத்திற்கு முன், நேர்க்கு நேர் சண்டையில் கலந்து இவர்கள் எதிரிகளின் மன உறுதியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, அவர்களின் சாம்பியன்களை சண்டையில் கொன்றது போன்ற வீரச் செயல்கள் புரிந்தனர். . யமாமா போரில் முசைலிமாவின் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் முஹாக்கம் அல்-யமாமாவைக் இவர் கொன்றார்.
யார்மூக் போரில், பைசண்டைன் படையின் தலைமை தளபதி பைசண்டைன் தரப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்தார், மேலும் அவர்கள் முஸ்லிம்களை சண்டையிட சவால் விடுத்தனர். அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றார். யர்மூக் சமவெளியில் பல சண்டைகள் நடந்தன. அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் அனைவரையும் ஒன்றன் பின் ஒன்றாக கொன்று குவித்தார்.
பாஸ்ட்ரா வெற்றியில் பெரும் பகுதி இவரையே சாரும்.
பகலில் தம்மிடமிருந்து தப்பி ஓடிக் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்த அதன் புதிய ஆளுநரை, பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ரோமனஸ் அழைத்துச் சென்ற இரகசியப் பாதை வழியாகக் கோட்டைக்குள் புகுந்து சந்திக்கச் சென்றார். வீரர்களை வெளியே நிறுத்தி விட்டு அப்துர் ரஹ்மான் ரோமனஸுடன் புதிய ஆளுநரின் இல்லம் நுழைய, “என்ன விஷயம்?” என்று புதிய ஆளுநர் வினவ, “தங்களின் நண்பர் ஒருவர் தங்களைச் சந்திக்க வந்துள்ளார். அவருடன் வந்தேன்” என்றார் ரோமனஸ்.
“எந்த நண்பர்?” என்று புதிய ஆளுநர் வினவ, “தங்களின் நண்பர் அப்துர் ரஹ்மான் தான் வந்துள்ளார். தங்களை நரகத்திற்கு அனுப்பி வைக்க” என்று கூறினார் ரோமனஸ். நிலைமையை உணர்ந்து கொண்ட புதிய ஆளுநர் தப்பி ஓட முயன்ற பொழுது, “பகலில் தான் ஒரு முறை தப்பி ஓடி விட்டாய். இப்பொழுது முடியாது” என்று கூறி ஒரே வெட்டாக அவரை வெட்டி வீழ்த்தினார் அப்துர் ரஹ்மான். இதன் பின் ‘அல்லாஹு அக்பர்’ என்று இவர் முழக்கமிட இவருடன் வந்திருந்த வீரர்களும் எதிரொலி செய்து வாயிற்காப்போர்களைக் கொன்றொழித்துக் கோட்டைக் கதவைத் திறந்து விட முஸ்லிம் படைகள் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்களின் தலைமையில் கோட்டைக்குள் நுழைந்து பாஸ்ட்ராவைக் கைப்பற்றின.
இவரது இறப்பு
இவர் ஹிஜ்ரி 53 இல் கி.பி 675 ஆம் ஆண்டு மக்காவில் மரணமடைந்தார். இவரிடமிருந்து ஆயிஷா (ரழி) மற்றும் ஹஃப்ஸா (ரழி) ஆகியோர் பல நபிமொழி (ஹதீஸ்)களைக் கேட்டுப் பிறருக்கு அறிவித்துள்ளனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.