Home


 அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்

(ரழியல்லாஹு அன்ஹு)

        அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்கள் ஓர் ஏழைக் குருடர். இவரின் இயற்பெயர் அம்ர் இப்னு கைஸ் என்றும், இவர் ஹிலால் கிளையைச் சேர்ந்தவர் என்றும், இவரின் இயற்பெயர் அப்துல்லாஹ் இப்னு ஷுரை என்றும், இவர் லுவய்யி கிளையைச் சேர்ந்தவரென்றும் இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது. இவர் கதீஜா (ரழி) அவர்களின் மாமன் மகன் என்றும் ஒரு வரலாறும் உள்ளது. ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவிய நபித்தோழர் இவர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களை வருந்த செய்த வஹீ

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வலீத் இப்னு முகைராவை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்காக அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது இவர் குறுக்கிட்டுத் தமக்கு அறிவுரை நல்குமாறோ, குர் ஆனை ஓதிக்காட்டுமாறோ அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டிக் கொண்டார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரைப் பொருட்படுத்தாது வலீதுடன் பேசுவதில் ஈடுபட்டிருந்தனர். இஃது இவருக்குப் பெருவியப்பை அளித்தது. தமக்கு விரோதமாக இறைவனிடமிருந்து ஏதேனும் செய்தி வந்திருக்குமோ என்றும் இவர் ஐயுற்றார். இத்தகு மனோநிலையுடன் அவர் திரும்பிச் சென்றார்.

அது சமயம் இறைவனிடமிருந்து, “(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?) தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக. (நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க, அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்கள்?)” (80: 1-4) என்னும் திருவசனம் வந்தது. அது கண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடுநடுங்கிப் போய்விட்டனர். இப்பொழுது போன்று அவர்கள் எப்பொழுதும் வருந்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் பின் இவருக்கு அவர்கள் செய்த கெளரவங்கள்

        உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரின் பின்னே சென்று, இவரை அழைத்து வந்து, தங்களின் விரிப்பை விரித்து அதில் இவரை அமரச் செய்து, இவருக்கு ஆறுதல் நல்கினர்.

இதன் பின் இவருக்கு அவர்கள் பல கெளரவங்களைச் செய்தார்கள். இவரைப் பாங்கு சொல்வதில் பிலால் (ரழி) அவர்களுக்கு உதவியாளராகவும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நியமித்தனர். தஹஜ்ஜுத் தொழுகைக்கு பிலால் (ரழி) அவர்கள் அதான் கூறினால் ஸுப்ஹு தொழுகைக்கு இவர் பாங்கு சொன்னார்.

அர்ஷில் பாங்கு சொல்வதைக் கேட்ட பிறகு இங்கு பாங்கு சொன்னவர்

        குருடர் ஒருவரை எவ்வாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வைகறையின் நேரம் அறிந்து பாங்கு சொல்ல நியமித்துள்ளனர் என்று ஐயுற்ற அலீ (ரழி) அவர்கள், இவரைச் சோதிக்க எண்ணி ஒரு நாள், “வைகறை வேளை அண்மிவிட்டது. குருடரை நியமித்துள்ளதாலல்லவா நேரம் தெரியாது வெறுமனே வீற்றிருக்கிறார்” என்று பள்ளியில் கூச்சலிட்டனர். அது கேட்ட இவர், “ஏன் நீர் வீணே கூச்சலிடுகிறீர்? நான் கண் பொட்டையாயினும் அர்ஷில் பாங்கு சொல்வதைக் கேட்ட பிறகுதான் இங்கு பாங்கு சொல்கிறேன். இன்னும் அர்ஷில் பாங்கு சொல்லப்படவில்லையே” என்று கூறினார்.

இவருக்கான வரவேற்பும், உபசரிப்பும்

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர் மேற் சென்றபொழுது இரண்டு அல்லது மூன்று தடவைகள் இவரையே தம் பிரதிநிதியாக மதீனாவில் நியமித்து விட்டுச் சென்றனர். மேலும் இவர் தம்மிடம் வருந்தோறெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எவருக்காக என்னைக் கண்டித்தானோ அவருக்கு மும்முறை வரவேற்புகள்” என்று கூறி இவர் வந்த அலுவலை ஆவலுடன் விசாரித்து, ஆவன செய்து வந்தனர். ஆயிஷா (ரழி) அவர்களும் இவருக்கு தேனும், இனிய பண்டங்களும் அளித்து உபசரித்தனர்.

மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதி

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பத்ரு போருக்கு மதீனாவிலிருந்து வெளியேற ஆயத்தமானார்கள். அவர்களுடன் 310ற்கும் மேற்பட்டவர்கள் (313 அல்லது 314 அல்லது 317) வீரர்கள் வெளியேறினார்கள். இம்முறை மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) நியமித்தார்கள். நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேறி ‘ரவ்ஹா’ என்ற இடத்தை அடைந்த போது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி வைத்தார்கள்.

ஸுலைம் குலத்தவருடன் “குத்ர்”ல் போர்

        பத்ரிலிருந்து திரும்பி, ஏழு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் இந்தப் போர் ஏற்பட்டது. ஆனால், சிலர் முஹர்ரம் மாதத்தின் நடுவில் ஏற்பட்டதென்று கூறுகின்றனர். இப்போருக்குச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஸிபாஉ இப்னு உர்ஃபுதா என்ற தோழரை தனது பிரதிநிதியாக ஆக்கினார்கள். சிலர் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமைப் பிரதிநிதியாக ஆக்கினார்கள் என்றும் கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

நழீர் இனத்தவரிடம் போர்

        நபி (ஸல்) அவர்களுக்கு யூதன் ஹை இப்னு அக்தப் கூறிய பதில் கிடைத்தவுடன் தக்பீர் (அல்லாஹ் அக்பர் என்று) முழங்கினார்கள். தோழர்களும் தக்பீர் முழங்கினர். பின்பு நழீர் இனத்தவரிடம் சண்டையிட ஆயத்தமானார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அலீ (ரழி) படையின் கொடியை ஏந்தியிருக்க நபியவர்கள் படையுடன் புறப்பட்டுச் சென்று யூதர்களை முற்றுகையிட்டார்கள்.

பனூ குரைளா  போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்: “யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை குரைளாவனரிடம் சென்று தான் தொழ வேண்டும்” (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள் புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம் வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன் குரைழாவினரின் கோட்டையைச் சென்றடைந்தார்கள்.

லஹ்யான் போர் (ஹிஜ்ரி 6, ரபீவுல் அவ்வல்)

        லஹ்யான் கிளையினர்தான் ‘ரஜிஃ’ என்ற இடத்தில் பத்து நபித்தோழர்களை வஞ்சகமாகக் கொலை செய்தனர். இவர்களது இல்லங்களும் இருப்பிடங்களும் மக்காவிற்கு மிக அருகில்தான் இருந்தன. மக்காவிலோ இஸ்லாமிற்கு எதிரியாக இருக்கும் குறைஷி மற்றும் அரபு குலத்தவர்கள் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மக்கா எல்லை வரை சென்று லஹ்யான் இனத்தவர் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றமாகக் கருதவில்லை.

அகழ்போரில் குறைஷி மற்றும் அரபு இனத்தவரின் இராணுவங்கள் வலுவிழந்து சிதறி சென்று விட்டதால் நிலைமை ஓரளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக இருந்தது. எனவே, ரஜீஃயில் கொல்லப்பட்ட தங்களது தோழர்களுக்காக லஹ்யானியரிடம் பழிதீர்க்க நாடி ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ஜமாதுல் அவ்வல் மாதத்தில் இருநூறு தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஷாம் நாட்டை நோக்கிப் பயணிப்பதாகக் கூறி வெகு விரைவாகப் பயணத்தை மேற்கொண்டு அமஜ், உஸ்ஃபான் என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள ‘குரான்’ என்ற பள்ளத்தாக்கைச் சென்றடைந்தார்கள். அங்குதான் நபித்தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்காக அல்லாஹ்வின் கருணை வேண்டி பிரார்த்தித்தார்கள்.

உம்ரா பயணம் சென்று ஹுதைபிய்யா உடன்படிக்கை

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள முஸ்லிம்களையும், சுற்று வட்டார முஸ்லிம் கிராமவாசிகளையும் தன்னுடன் உம்ரா பயணம் புறப்படுமாறு கூறினார்கள். ஆனால், பெரும்பாலான கிராமவாசிகள் புறப்படுவதில் தயக்கம் காட்டினார்கள். அண்ணல் நபி (ஸல்) தங்களது ஆடைகளைக் கழுவி சுத்தம் செய்து கொண்டதுடன் பயணத்திற்காகக் ‘கஸ்வா’ என்ற தங்களது ஒட்டகத்தையும் தயார் செய்து கொண்டார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அல்லது நுமைலா லைஸி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் திங்கட்கிழமை நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். நபியவர்களுடன் அவர்களின் மனைவி உம்மு ஸலமாவும் 1400 அல்லது 1500 தோழர்களும் புறப்பட்டனர்.

திருக்குர்ஆன்  இறைவனின் வசனம் மேனாட்டாசிரியர்கள் உறுதி

        திருக்குர் ஆன் இறைவனின் வசனம் என்பதற்கு மேற்கூறப்பட்ட திருவசனங்கள் நல்ல சான்று என்றும், அது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சொற்களாக இருந்திருப்பின் அவர்கள் இவற்றை வெளியிடாது மறைத்திருக்கலாம் என்றும் மேனாட்டாசிரியர்களில் சிலர் கூறுகிறார்கள்.

நோய்யாளர்கள் போரில் கலந்து கொள்ளாதிருப்பதற்கான அனுமதி

        ”இறை நம்பிக்கையாளர்களில் போருக்குச் செல்லாது தங்கியிருப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போராடும் வீரர்களுக்குச் சரிநிகர் சமானமாக மாட்டார்கள்” என்ற திருவசனம் அருளப்பெற்றதை இவர் அறிந்ததும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்குக் கண் பார்வை மட்டும் இருப்பின் நானும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் பேற்றினைப் பெறுவேனே, என் செய்வேன்” என்று பெரிதும் வருத்தத்துடன் கூறினார்.

அப்பொழுது இறைவனிடமிருந்து, “இறை நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்களுடைய பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள்.” என்ற 4:95-ஆவது திருவசனம் அருளப்பட்டது.

இவ்வாறு நோயாளர்களுக்குப் போரில் கலந்து கொள்ளாதிருப்பதற்கான அனுமதி இவரின் காரணமாகவே இறைவனிடமிருந்து கிடைத்தது.

இறைவனுக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்தாலென்ன?

        இத்தகு அருளாளனாகிய இறைவனுக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்தாலென்ன என்று ஆவல் மிகுந்தவராய், “என்னைப் போர்க்களத்திற்கு அழைத்துச் சென்று இரு அணிகளுக்கு இடையில் நிறுத்தி விடுங்கள். கண் ஒளி இழந்திருப்பதால் போருக்கு அஞ்சி நான் ஓடாதிருக்க வசதியாயிருக்கும்” என்று இவர் கூறுவார்.

ஐவேளை தொழுகையும் பள்ளிவாசலில் வந்து தொழுதார்

        இவருக்கு குர் ஆன் முழுவதும் மனனமாக இருந்தது. அதனை இனிமையுடன் இவர் ஓதுவார். இவரின் இல்லம் பள்ளியிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்தது. அங்குப் பாங்கு சப்தம் கேட்டது என்ற காரணத்தால் இவர் ஒவ்வொரு நாளும் ஐவேளையும் பெரிதும் சிரமத்துடன் பள்ளிவாயிலில் வந்து தொழுது வந்தார்.

இவர்களின் மரணம் மற்றும் நல்லடக்கம்

        இவர் மதீனாவில் இறப்பெய்தி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார் என்றும், காதிஸிய்யாப் போரில் கலந்து கொண்டு வீர மரணம் எய்தினார் என்றும் இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.