Home


அப்துல்லாஹ் இப்னு உமர்  (ரழியல்லாஹு அன்ஹு)

        ஹல்ரத் உமர் (ரழி) அவர்களின் மூத்தப் புதல்வர் அப்துல்லாஹ். பொதுவாக இப்னு உமர் என்று அழைக்கப்பட்ட இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் வருவதற்கு ஓராண்டுக்கு முன் மக்காவில் பிறந்தனர். தந்தை உமர் (ரழி) தாயார் ஜைனப் பின்த் மஸ்வூன் ஆவர். தந்தையுடன் சேர்ந்து இவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர். பெருமானார் (ஸல்) அவர்களின் மெய்காவலராகப் பணியாற்றியவர். இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்கள் அனைத்திலும் பங்கு பற்றியவர். மத வைராக்கியமிக்க அப்துல்லாஹ் ராணுவத் திறமை மிகுந்தவராகவும் இருந்தார். இதன் காரணமாக இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்களில் ஆயுள் பரியந்தம் நேரடியாகப் பொறுப்பேற்றிருந்தார் அப்துல்லாஹ் அவர்கள்.

இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்களில் இவர்கள்

        பத்ருப் போர் நடந்த காலத்தில் இவர்கள் பத்து வயதுச் சிறுவராய் இருந்தமையின் இவர்கள் அதில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படவில்லை. எனவே இவர்கள் வருத்தத்துடன் மதீனா திரும்பினர். இவர்கள் உஹத் போரில் கலந்து, கொண்டார்கள் என்று சிலரும், கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று வேறு சிலரும் கூறுகின்றனர். அகழ்ப் போரிலும், காலித் (ரழி) அவர்களின் தலைமையில் அரபு நாட்டின் உள்ளே  வாழ்ந்த கலகக் கூட்டத்தினரை அடக்கச் சென்ற படையெடுப்பிலும், நிஹாவந்த போரிலும், உஸ்மான் (ரழி) அவர்களின் காலத்தில் எகிப்துக்கு அனுப்பப்பட்ட உதவிப் போரணியிலும், தபரிஸ்தான் மீது படையெடுத்துச் சென்ற போரணியிலும், கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றும் நோக்குடன் யஜீதின் தலைமையில் சென்ற போரணியிலும் இவர்கள் பங்கு கொண்டுள்ளார்கள்.

தொழுகையில் அதிகப் பேணுதல் உள்ளவர்

        இளமையில் இவர்கள் தம்மை இரு வானவர் வந்து விண்ணகம் சுமந்து சென்றதாகக் கனவு, கண்டு தம் சகோதரி ஹஃப்ஸாவிடம் கூற அதனை அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க, “அப்துல்லாஹ் நல்லவர்; அவர் இரவில் தம்மால் இயன்ற அளவு அதிகமாக வணக்கத்தில் ஈடுபட வேண்டும்” என்று இயம்பினர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அவ்வாறே இவர்கள் தங்களின் இறுதி நாள் வரை செய்து வந்தனர். இவர்களின் படுக்கையின் அருகில் தொழுகை விரிப்பு எப்பொழுதும் விரித்த வண்ணம் இருந்து கொண்டிருக்கும். இரவுத் தொழுகை முடிந்து பள்ளிவாயிலிலிருந்து திரும்பியதும் இவர்கள் அவ்விரிப்பின் மீது நின்று தொழத் துவங்கி விடுவர். இவ்வாறு ஓரிரவில் நான்கு அல்லது ஐந்து தடவை கூட இவர்கள் செய்வார்கள். துயிலெழுந்ததும், ‘விடிந்து விட்டதா?’ என்று தம் ஊழியரிடம் சப்தமிட்டுக் கேட்பார்கள். “ஆம்” என்று அவர் பதில் கூறின் பள்ளி செல்வார்கள். இல்லையெனில் மீண்டும் தம் இல்லத்திலேயே தொழத் துவங்கி விடுவார்கள்.

        இவர்கள் சிறந்த கல்விமான், பேரறிஞர். “அப்துல்லாஹ் இப்னு உமரை விட அதிகப் பேணுதல் உள்ளவரையும், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸைவிட அதிகம் அறிந்தவரையும் நான் காணவில்லை” என்று மைமூன் இப்னு மஹ்ரான் என்ற தாபியீ கூறுகின்றார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றினர்

        அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது அளவற்ற அன்பு செலுத்தி வந்த இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறந்ததன் பின் அவர்களைப் பற்றி எதேனும் பேச்சு எழின் அழுது விடுவார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு கொண்ட எந்த இடத்தைக் கண்ட போதும் இவர்களையறியாமல் இவர்களுக்கு அழுகை வந்து விடும்.

        தங்களின் சின்னஞ்சிறு செயல்களிலும் இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றினர். தொழப் பள்ளி செல்லும் பொழுது இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்த இடத்திலேயே அமர்வார்கள். ஹஜ்ஜுச் செய்ய மக்கா செல்லும் பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சென்ற வழியிலேயே தங்களின் ஒட்டகையை ஓட்டிச் செல்வார்கள். மக்காவில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கி இருந்த இடத்திலேயே இவர்களும் தங்கி இருப்பார்கள். உண்பது, உடுத்துவது ஆகியவற்றிலும் இவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களையே பின்பற்றி வந்தார்கள்.

குர்ஆனிலும், ஹதீதிலும் ஆழிய புலமை உடையவர்

இவர்கள் அடிக்கடி நோன்பு நோற்பார்கள்; தொடர்ச்சியாகவும் பல நாட்கள் நோன்பு நோற்பார்கள்; திருக்குர்ஆனை மிகவும் உருக்கமாக ஓதுவார்கள். அப்பொழுது மறுமை பற்றிய திருவசனங்கள் வருந்தோறெல்லாம் தேம்பித் தேம்பி அழுவார்கள். இரவில் இவர்கள் அழுது அழுது இறைவனிடம் தம் பாவம் பொறுத்தருளுமாறு வேண்டுவார்கள்.

இவர்களுக்கு குர்ஆனிலும், ஹதீதிலும் ஆழிய புலமை இருந்தது. எனவே சிக்கலான பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் மக்கள் இவர்களிடமே ஆலோசனை வேண்டி வந்து கொண்டிருந்தனர்.

தாராளத் தன்மையுடையவர்களாகவும் இருந்தனர்

        ஒரு முறை இவர்களின் ஆட்டு மந்தையைச் சிலர் ஓட்டிக் கொண்டு சென்று விட்டனர். ஆடு மேய்த்த இவர்களின் அடிமை இதனை இவர்களிடம் ஓடோடி வந்து கூறிய பொழுது, “உன்னையும் அவர்கள் பிடித்துக் கொண்டு செல்லவில்லையா?” என்று கேட்டார்கள் இவர்கள். “என்னையும் பிடித்துக் கொண்டு சென்றார்கள் தாம். ஆனால் தாங்கள் நல்ல எசமானராதலின்  தங்களிடமே தப்பி ஓடி வந்து விட்டேன்.” என்று அவன் பதிலிறுத்தான். அது கேட்டு மகிழ்ந்த இவர்கள் அவனுக்கு அக்கணமே விடுதலை அளித்தார்கள். இவர்களின் அடிமைகள் இறைவன்பால் அதிக பயபக்தியுடன் நடந்து கொண்டால் உடனே அவர்களுக்கு இவர்கள் விடுதலையளித்து விடுவார்கள். இவர்கள் மிகவும் தாராளத் தன்மையுடையவர்களாகவும் இருந்தனர். “தங்களின் அடிமைகள் போலி பயபக்தியைக் காட்டித் தங்களை ஏமாற்றி விடுகிறார்களே” என்று இவர்களின் நண்பர்கள் இவர்களிடம் கூறிய பொழுது, “அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தானே அவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் பிழைத்துப் போகட்டுமே” என்று இவர்கள் கூறினர்.

        ஒரு முறை காட்டில் ஓர் இடையன் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “ஓர் ஆட்டை எனக்கு விற்கிறாயா?” என்று இவர்கள் வினவ, “நான் ஓர் அடிமைதான். இதன் எசமானர் வேறு” என்று கூறினான் அவன். “எனக்கு ஒரு ஆட்டை விற்று விட்டு ‘அதனை ஓநாய் தூக்கிக் கொண்டு போய் விட்டது’ என்று உம் எசமானரிடம் கூறிவிடுவதுதானே” என்று இவர்கள் அவனைச் சோதிப்பதற்காகக் கூற, “நாம் இறைவனுக்குப் பயப்பட வேண்டாமா?” என்று பதில் கூறினான் அவன். அவனுடைய பண்பையும், இறைவன் பால் அவனுக்கு இருந்த அச்சத்தையும் கண்டு மகிழ்ந்த இவர்கள் அவனுடைய எசமானரை அணுகி அவனை விடுதலை செய்ததோடு அந்த ஆட்டு மந்தையையும் வாங்கி அவனுக்கு அன்பளிப்புச் செய்தார்கள்.

        மற்றொரு முறை இவர்கள் தவறு செய்த ஓர் அடிமையைத் தங்களை அறியாமல் ஏசி விட்டனர். அடுத்தகணம் இவர்கள் அதற்காகப் பெரிதும் வருந்தி அவனை விடுதலை செய்து விட்டனர்.

        ஒரு நாள் இவர்கள் முப்பதாயிரம் திர்ஹங்களை ஏழைகளுக்கு அறம் செய்தனர். பின்னர் ஓர் ஏழை வந்த பொழுது அவருக்குக் கொடுக்கத் தம் கையில் காசில்லாது போகவே சற்று முன் தாம் பங்கு வைத்துக் கொடுத்த மனிதரிடமே சிறிது பணம் கடனாக வாங்கி அவ்வேழைக்குக் கொடுத்தார்கள்.

உலக ஆதாயங்களை நிராகரித்தவர்

        “எங்களில் எவருக்கேனும் உலகம் தலை குனிகிறது என்றால் அதற்குத் தகுதியுள்ளவர் இப்னு உமர் (ரழி) அவர்கள் தாம்” என்று அபூஸயீத் (ரழி) அவர்கள் கூறினர். “உலக ஆதாயங்கள் ஒருவரைத் தேடிவரினும் அதனைப் புறங்காட்டச் செய்து நிராகரித்தவர் எங்களில் இப்னு உமர் (ரழி) அவர்கள் தாம். அவர்களைத் தவிர வேறு எவரையும் காணவில்லை” என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் கூறியுள்ளனர்.

        “தங்களுக்குப் பின் கலீபா பதவி வகிக்கத் தங்களின் தனயரே தகுதியானவர்” என்று உமர் (ரழி) அவர்கள் இறப்புப் படுக்கையில் கிடக்கும் பொழுது மக்கள் கூறியபொழுது, “கலீபா பதவி என்னும் பெரும் சுமையை என் குடும்பத்தினர் எவர் மீதும் நான் சுமத்த விரும்பவில்லை. என் குடும்பத்தில் நான் ஒருவன் மற்றவர்களுக்காக இறைவனிடம் பதில் சொன்னால் போதும்” என்று கூறி அடியோடு மறுத்து விட்டார்கள்.

        அவர்களின் இறப்பு அண்மிவிட்டதை அறிந்த மக்கள் எவரையேனும் அவர்களுக்குப் பின் கலீபாவாகத் தேர்ந்தெடுக்குமாறு கூறிய பொழுது, “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எவரை அதிகமாக நேசித்தார்களோ, எவர்களுக்கு சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் மொழிந்தார்களோ அவர்களையே நீங்கள் பின்பற்ற வேண்டும். அவர்களில் அலீ, உஸ்மான், ஸஅத் இப்னு அபீவக்காஸ், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸுபைர், தல்ஹா ஆகியோர் உள்ளனர். இவர்கள் ஒருங்குகூடித் தங்களில் ஒருவரைக் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கட்டும். என் மகன் அப்துல்லாஹ் அந்த ஆலோசனைகளில் கலந்து கொள்ளலாமேயன்றி அவரைக் கலீபா பதவிக்கு ஒரு வேட்பாளராக நீங்கள் கருதக் கூடாது” என்று கண்டிப்பாகக் கூறினர் உமர் (ரழி) அவர்கள்.

        உஸ்மான் (ரழி) அவர்கள் கொலையுண்ட பின் அலீ (ரழி) அவர்கள் கலீபா பதவி ஏற்ற சமயம் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுமாறு அவர்கள் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் கூற, “என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். நபி தோழர்களில் முக்கியமானவர்களெல்லாம் செய்த பின் நான் செய்கிறேன்” என்று கூறினர் இவர்கள். அப்பொழுது அஷ்தர் நக்பி கையில் வாளேந்தி, “இப்பொழுதே தாங்கள் விசுவாசப் பிரமாணம் செய்ய வேண்டும்” என்று கூற இவர்கள் துணிவுடன் மறுத்து விட்டனர். பின்னர்த் தாம் கூறிய வண்ணம் விசுவாசப் பிரமாணம் செய்தனர்.

இவர் மறுமையைப் பற்றி விசாரமுள்ளவர்

        கலீபா பதவிக்காக அலீ (ரழி) அவர்கள், முஆவியா (ரழி) அவர்கள் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்ட பொழுதும், இவர்கள் அப்பதவியைத் தமக்கு விரும்பவில்லை.

        இவர்களைப் பற்றி முஆவியா (ரழி) அவர்கள் தம் மகன் யஜீதிடம் கூறும் பொழுது, “அவர் மறுமையைப் பற்றி விசாரமுள்ளவர். எனவே அவர் கலீபா பதவியை விரும்புவார் என்று நீ கவலைப்பட வேண்டாம்.” என்றனர்.

        முஆவியா (ரழி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்த இவர்கள் அவர்கள் தம் மகன் யஜீதைத் தமக்குப் பின் கலீபாவாகப் பிரகடனப் படுத்திய பொழுது, “இது ஜனநாயகத்திற்கு விரோதமானது” என்று கூறி யஜீதுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். இவர்களைப் பணம் கொடுத்தாவது வாங்க அம்ர் இப்னு ஆஸ் முயன்ற பொழுது அவரை வெளியே போகுமாறு கூறவும் இவர்கள் தயங்கவில்லை.

        யஜீத் கலீபாவானதும் நாட்டில் கட்சிப் பிளவு ஏற்பட்ட சமயம், “தாங்கள் கலீபா பதவி ஏற்றுக் கொளின் நாட்டில் அமைதி நிலவும்” என்று மக்கள் கூறிய பொழுது, “நான் அப்துல்லாஹ் இப்னு உமர் என்ற முறையிலேயே இறக்க விரும்புகிறேன்.” என்று இவர்கள் கூறி விட்டனர்.

இவர்கள் மீது வஞ்சம் கொண்ட ஹஜ்ஜாஜ்

        கலீபா அப்துல் மலிக் இப்னு மர்வான் இவர்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஹஜ் பற்றி இவர்கள் கூறும் வண்ணம் செயலாற்றுமாறு தம் ஹிஜாஸ் மாநில ஆளுநர் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபுக்குப் பணித்திருந்தார் அவர். ஹஜ்ஜுக் கிரியைகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்கெங்கு நின்று செய்தார்களோ அங்கெல்லாம் தமக்கு முன் இவர்கள் நிற்பதைக் கண்டு ஹஜ்ஜாஜுக்குப் பொறாமையாக இருந்தது. ஒருமுறை ஹஜ்ஜாஜ் குத்பாப் பேரூரை நிகழ்த்தும் பொழுது தொழுகைக்கான நேரம் தவறிவிடும் போலிருப்பதை உணர்ந்த இவர் ஹஜ்ஜாஜை நோக்கி, “உமக்காகக் கதிரவன் காத்திராது” என்று கூறினர். அது கேட்ட ஹஜ்ஜாஜ், “உமக்கு எதிரிலுள்ளவர் (அதாவது நான்) உமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீரா, என்ன?” என்று ஆணவத்துடன் வினவினார். “அவ்விதம் செய்யின் நீர் அநியாயக்காரராகவும், அறிவிலியாகவும் இருப்பீர்” எனப் பதிலிறுத்தனர் இப்னு உமர். அது கேட்டு இவர்கள் மீது வஞ்சம் கொண்ட ஹஜ்ஜாஜ் பின்னர் ஒருவனை ஏவி இவர்களுடைய பாதத்தில் விஷ அம்பினை எய்து கொன்றார்.

உடல் நல்லடக்கம்

        இவர்களின் இறுதி வேண்டுகோளின் படி இவர்களை மக்காவின் எல்லைக்குள் அடக்கம் செய்யவும் அவர் (ஹஜ்ஜாஜ்) அனுமதிக்கவில்லை. எனவே இவர்களின் வெற்றுடல் தீதுவா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது.

ஆதாரபூர்வமான ஹதீதுகள்

        இவர்கள் ஹிஜ்ரி 73-இல் இறக்கும் பொழுது இவர்களுக்கு வயது 86 என்றும் அப்பொழுது இவர்கள் கண்ணொளி மங்கப் பெற்றிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக நமக்கு 1630 ஹதீதுகள் கிடைத்துள்ளன. “இமாம் நாஃபிக்கு பின் இப்னு உமர் மூலமாக அறிந்து இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறிய ஹதீதுகளோ மிகவும் ஆதாரபூர்வமானவை” என்று இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றனர்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.