அப்துல்லாஹ் இப்னு ஜஃபர்
ரழியல்லாஹு அன்ஹு
அலீ (ரழி) அவர்களின் சகோதரரான ஜஃபர் இப்னு அபூதாலிப்(ரழி) அவர்களின் மகனாவார். இவரது அன்னை அஸ்மா பின்த் உமைஸ் ஆவார். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரும், தோழரும் ஆவார். அபிசீனியாவில் பிறந்த முதல் முஸ்லிம் குழந்தை இவர்தான். ‘கைபர்’ போருக்குப் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) தனது குடும்பத்தினருடன் மதீனாவுக்குத் திரும்பினார். மூத்தா போரில் இவரின் தந்தை ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்கள் இறந்த பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் ஆளான இவர் பின்னர் அலீ (ரழி) அவர்களின் மகள் ஜைனப் அவர்களை திருமணம் செய்து, அலீ (ரழி) மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்தார். மக்களுக்கு பெருந்தன்மையாக கொடைகள் பல வழங்கியதால் ‘தாராளத் தன்மையின் கடல்’ என்னும் பொருள் படும் ‘பஹ்ருல் ஜூத்’ என்று அழைக்கப்பட்டார். உஸ்மான் (ரழி) அவர்கள் கிலாபத்திலும், அலீ (ரழி) அவர்கள் கிலாபத்திலும் நடந்த போர்களில் பங்கேற்று வெற்றிகளை ஈட்டியவர்.
ஆரம்பகால வாழ்வு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் மக்கா குறைஷிகளின் கொடுமைகள் தாங்க இயலாது இரண்டாவதாக அபிசீனியாவிற்கு கிளம்பிய குழுவில் ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களும், அவர்களது மனைவி அஸ்மா பின்த் உமைஸ் அவர்களும் குடிபெயர்ந்தனர். இவர்களுக்கு முதல் குழந்தையாக கி.பி.624 இல் அப்துல்லாஹ்வும் அதன் பின் இரண்டு குழந்தைகளும் அபிசீனியாவில் பிறந்தனர். அபிசீனியாவில் பிறந்த முதல் முஸ்லிம் குழந்தை இவர்தான். இதே சமயத்தில் நஜ்ஜாஷி மன்னரும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஜஃபர் குடும்பத்தின் குழந்தை பெயரை அறிந்ததும், அபிசீனியாவின் மன்னரும் தனது முதல் மகனுக்கு "அப்துல்லாஹ்" என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். ‘கைபர்’ போருக்குப் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) அவர்கள் தனது குடும்பத்தினருடன் மதீனாவுக்குத் திரும்பினார்.
இவரின் தந்தை மூத்தா சண்டையில் இறந்த பொழுது அச் செய்தியைத் தெரிவிக்க அவர்களின் இல்லத்திற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சென்ற சமயத்தில் குழந்தைகளாக இருந்த இவரையும் இவருடைய சகோதரர் முஹம்மதையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கட்டித் தழுவிக் கண்ணீர் சிந்தினர். மூன்றாவது நாள் இவர்களின் இல்லம் சென்று இவர்களின் தலை முடியைச் சிரைக்கச் செய்து, “முஹம்மது என் பெரிய தந்தை அபூதாலிப் போன்றுள்ளார். அப்துல்லாஹ்வோ என் போன்ற உடலமைப்பைப் பெற்றிருக்கிறார்” என்று கூறி அப்துல்லாஹ்வின் கைகளைத் தூக்கிப் பிடித்து, “இறைவனே! ஜஃபரின் மக்களை வணக்கவாளர்களாக்கி ஆசீர்வதிப்பாயாக!” என்று இறைஞ்சினர்.
‘தாராளத் தன்மையின் கடல்’ - ‘பஹ்ருல் ஜூத்’
பின்னர் அப்துல்லாஹ் வயதேறப் பெற்ற பொழுது அவர் ஆடுகளை விற்பனை செய்து கொண்டிருப்பதைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள். “இறைவனே! இவரின் வாணிபத்தை வளமுறச் செய்வாயாக!” என்றும் இறைஞ்சினர். அவ்விறைஞ்சுதல் காரணமாக இவர் தொட்ட தொழில்களெல்லாம் பொன் கொழிக்கத் துவங்கின. விரைவில் பெரும் செல்வராக ஆன இவர் பெரும் வள்ளலாகவும் விளங்கினார். எனவே மக்கள் இவரை ‘வள்ளல் பெருமகன்’ என்று பொருள் படும் ‘குத்துஸ் ஸஹா’ என்றும் ‘தாராளத் தன்மையின் கடல்’ என்று பொருள்படும் ‘பஹ்ருல் ஜூத்’ என்றும் அன்புப் பெயர்களைக் கொண்டு அழைத்தனர்.
போர் படைத் தலைவராக அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி)
திரிப்போலிக்கும், ஹர்ரானுக்கும் நடுவிலுள்ள தைர் அபில்குதாஸ் மீது நடத்தப் பெற்ற படையெடுப்பிற்கு இவரையே இஸ்லாமியத் தளபதி அபூ உபைதா (ரழி) அவர்கள் ஐந்நூறு பேர் கொண்ட சிறு படைக்குத் தலைவராக நியமித்தார். துவக்கத்தில் மிகவும் அபாயத்தில் சிக்கிக் கொண்ட இவர் பின்னர்க் காலித் (ரழி) அவர்கள் பெரும் படையுடன் உதவிக்கு வந்த பொழுது வீரத்துடன் போர் செய்து வெற்றியுடனும் ஏராளமான கொள்ளைப் பொருள்களுடனும் திரும்பினார்.
இவரின் தலைக்கு ஆயிரம் பொற்காசு, எதிரியின் அழகு மகள் பரிசு
உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது இவர் 40,000 போர் வீரர்களுடன் திரிப்போலியின் மீது படையெடுத்துச் சென்றார். ஓரிலட்சம் ரோமானிய வீரர்களுடன் கிரிகரி இவரை எதிர்த்து நின்றதோடு இவரின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஓர் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாகக் கொடுத்துத் தம் அழகு மகளையும் மணமுடித்துத் தருவதாகப் பறையறைவித்திருந்தார். இதனைச் செவியுற்ற சில முஸ்லிம்கள் இவரைக் கூடாரத்திலேயே இருக்குமாறு இவருக்கு ஆலோசனை கூற, இவரும் அவ்விதமே செய்தார்.
அவளை ஏன் உம் வீரத்தின் பரிசாகக் கேளாது வீற்றிருக்கிறீர்
ஸுபைர் (ரழி) அவர்கள் இவரைக் காணாது, “எங்கே நம்முடைய மகா தளபதி?” என்று வினவ, “அவர் கூடாரத்தில் இருக்கிறார்” என மறுமொழி வந்தது. அது கேட்ட ஸுபைர் (ரழி), “மகா தளபதியின் இருப்பிடம் கூடாரமா?” என்று கோபத்துடன் வினவ, இவர் கூடாரத்தில் இருந்த வண்ணமே நிலைமையை எடுத்துரைக்க “அவ்விதமாயின் நீங்களும் ’கிரிகரியின் தலையைக் கொணர்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் அன்பளிப்பதோடு அவரின் அழகு மகளையும் திருமணம் செய்து வைக்கப்படும்’ என்று எதிர்ப்பறை முழங்கினால் என்ன?” என்று வீர உரை பகர்ந்து விட்டு அடலேறெனப் பாய்ந்து போர் செய்து கிரிகரியை வெட்டி வீழ்த்தினார். ரோமானியர்கள் புறமுதுகிட்டோடினர். கிரிகரியின் மகள் சிறை செய்யப்பட்டு அப்துல்லாஹ்வின் முன் கொண்டுவரப்பட்ட பொழுது தம் தந்தையைக் கொன்ற ஸுபைர் ஆங்கு வீற்றிருப்பதைக் கண்டதும் கண்ணீர் உகுத்தாள் அவள்.
அமைதி குலையாது ஸுபைர் (ரழி) அவர்கள் இருப்பதைக் கண்ட அப்துல்லாஹ், “அவளை ஏன் உம் வீரத்தின் பரிசாகக் கேளாது வீற்றிருக்கிறீர்” என்று அவரை வினவிய பொழுது, “நான் இஸ்லாத்தின் மாண்பினை உயர்த்துவதற்காகப் போர் செய்கின்றேனேயன்றி வேறு எந்த இழிந்த ஆசைக்காகவும் போர் செய்யவில்லை” என்று கூறினார் அவர். “எனினும் தாங்கள் பறை முழக்குமாறு கூறிய வண்ணம் ஆயிரம் பொற்காசுகளையும், இந்த அழகு மங்கையையும் பெறத்தான் வேண்டும்” என்று கூறி அவளை அவருக்கு மணமுடித்து வைத்ததோடு ஆயிரம் பொற்காசுகளையும் வழங்கினார் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) அவர்கள்.
இறுதிகால வாழ்வு
அலீ (ரழி) அவர்களுடன் ஒட்டகப்போரில் கலந்து கொண்டார். ஒட்டகப் போரின் முடிவில், ஆயிஷா(ரழி) அவர்களை அவரது சகோதரர் முஹம்மது இப்னு அபூபக்ர் (ரழி) அவர்கள் பாதுகாப்பின் கீழ் மதீனாவுக்குத் திரும்ப அனுப்பும் பொழுது, அலீ (ரழி) அவர்கள், அன்னை ஆயிஷாவுக்கு 12,000 திர்ஹாம்கள் அளிக்க உத்தரவிட்டார். அந்தத் தொகை மிகக் குறைவு என்று எண்ணிய அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) ஆயிஷாவிற்கு ஒரு பெரிய தொகையைக் கொண்டு வந்து கொடுத்தார். ஸிஃப்பின் போரிலும் உறவினர்களுடன் கலந்து கொண்டு காலாட்படைக்குத் தலைமை தாங்கினார்.
முஆவியாவுடன் சமாதான உடன்படிக்கை செய்யும் பொழுது இமாம் ஹஸன் (ரழி) அவர்களுடன் இருந்தார். பின்னர் ஹுஸைன் (ரழி) அவர்களுடன் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் 'அவ்ன் மற்றும் முஹம்மது ஆகியோரை செல்ல அனுமதி வழங்கி கர்பலாவில் தனது இரு மகன்களின் இழப்பை எதிர்கொண்டார். யஜீத் இறந்த பிறகு, இவர்கள் அப்துல் மாலிக் இப்னு மர்வான் உடன் தொடர்பில் இருந்தார். ஆனால் 'அப்துல்-மாலிக் இப்னு மர்வானின் அடக்குமுறையின் காரணமாக, அவர் தனது வாழ்நாளின் இறுதியில் ஏழையானார். இறுதியாக உமையாத் கலீபா ஆட்சி காலத்தில் ஹிஜ்ரி 80 ஆம் ஆண்டு மதீனாவில் காலமாகிய இவர் ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.