அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்
ரழியல்லாஹு அன்ஹு
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களின் மகள் அஸ்மாவின் மகனாவார். இவர்களின் தந்தை உலகத்திலேயே சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) ஆவர். முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவில் குடியேறிய புதிதில் அவர்களுக்கு யாதொரு குழந்தையும் பிறக்காத பொழுது, “நாங்கள் முஸ்லிம்களுக்கு வஞ்சனை செய்து விட்டோம், எனவே முஸ்லிம்களுக்கு யாதொரு குழந்தையும் பிறக்காது” என்று யூதர்கள் பிதற்றித் திரிந்தனர். அப்பொழுது மதீனா வந்த அஸ்மா அவர்களுக்குக் குபாவில் வைத்து ஓர் ஆண்மகவு பிறந்தது. அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவி ஆயிஷா (ரழி) அவர்களை நோக்கி, “நான் அக்குழந்தைக்குப் பெயரிடும் வரை வேறு எவரும் அதற்குப் பெயரிட வேண்டாம்” என்று கூறினர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சென்று பெயரிட்டனர்
அதன் பின் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குபா சென்று, அக்குழந்தையைத் தம் மடியின் மீது வைத்து ஒரு பேரீத்தம் பழத்தைத் தம் வாயில் வைத்து நன்கு மென்று பின்னர் அதனை அக் குழந்தையின் வாயில் வைத்துத் தீத்தினர். இவ்வாறு அக்குழந்தையின் வயிற்றில் சென்ற முதல் உணவு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எச்சில் கலந்த பேரீத்தம் பழமாகவே இருந்தது. அதன் பின் தம் அன்புத் தோழரான அபூபக்ர் (ரழி) அவர்களின் பெயரை இணைத்து அபூபக்ர் அப்துல்லாஹ் என்று அக்குழந்தைக்குப் பெயரிட்டனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அதன் காதில் அபூபக்ர் (ரழி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பின்னர் அதற்கு நல்வாழ்வு நல்குமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைஞ்சினர்.
தொழுகையை மிகவும் பேணுதலுடன் தொழுது வந்தனர்
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் தொழுகையை மிகவும் பேணுதலுடன் தொழுது வந்தனர். “அபூபக்ர் (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுவது போல் தொழுவர். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்கள் தொழுவது போல் தொழுவர்” என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் தொழ நின்று விட்டால் ஒரு கழியைப் பூமியில் நட்டு வைத்தது போல் நிற்பர். ஸஜ்தாவில் கிடக்கும் பொழுது அசைவற்றுக் கிடப்பர். அப்பொழுது இவர்களின் முதுகில் குருவிகள் வந்து அமரும். சில பொழுது இரவிலிருந்து விடியும் வரை இவர்கள் ருகூவுவில் குனிந்து ஆடாது அசையாது நிற்பார்கள்.
ஒரு முறை இவர்கள் தொழுது கொண்டு நின்றபொழுது இவர்களின் தாடிக்கும் கழுத்திற்கும் நடுவில் எறிகல்லின் சிறிய துண்டு ஒன்று தாக்கிய சமயம் அதைச் சிறிதும் பொருட் படுத்தாது அமைதி குலையாமல் தொழுகையைச் செவ்வனே தொழுது முடித்தனர் என்றும், மற்றொரு முறை இவர்கள் தொழுது கொண்டிருந்த சமயம் இவர்களின் மகனைப் பாம்பு சுற்ற, அவர் அலற அது கேட்டுச் சிறிதும் அமைதி குலையாது இவர்கள் தொழுதனர் என்றும் கூறப்படுகிறது.
இயற்கையாக இவர்களுக்கு எவரும் அஞ்சும் வண்ணம் கம்பீரத் தோற்றம்
இவர்களுக்கு இறுதி வரை முகத்தில் உரோமம் முளைக்கவில்லை. ஆயினும் இவர்களைக் கண்டதும் எவரும் அஞ்சும் வண்ணம் கம்பீரத் தோற்றம் இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது. அலீ (ரழி) அவர்களுடன் கலீபா பதவிக்குப் போட்டியிட்ட இவர்கள் முஆவியா (ரழி) கலீபாவானதும் அமைதியாக மதீனாவிலேயே தங்கியிருந்தனர். முஆவியா (ரழி) தனக்கு பின் தனது மகன் யஸீதைக் கலீபாவாக நியமித்து விட்டு இறந்ததும் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்தார்.
மதீனாவின் ஆளுநர் வலீத் இப்னு உத்பாவின் நெருக்கடி
தந்தை முஆவியா இருந்த போது தன்னிடம் பைஅத் செய்யாதவர்களிடம் பைஅத் பெறுவதற்காக யஸீது முனைப்புக் காட்டினார். மதீனாவின் ஆளுநர் வலீத் இப்னு உத்பா இப்னு அபூ சுபியானுக்கு யஜீத் கடிதம் எழுதினார் அதில் தன்னுடைய பிரதிநிதியாக இருந்து இமாம் ஹுசைன் (ரழி) அவர்களிடமும், பைஅத் பெறவேண்டும், கலகக்காரர்களை அடக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
இதன் விவகாரமாக இமாம் ஹுஸைன் (ரழி) அவர்களிடம் தனியாக சந்தித்து பைஅத் செய்து தர கேட்டுக் கொண்டார் ஆனால் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை அப்போது அருகில் இருந்த மர்வான் கடுமை காட்ட சொன்னார் இந்த சூழ்நிலையில் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மதீனாவை விட்டு வெளியேறி மக்காவிற்கு சென்றார்கள். இவர்களுடன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்களும் யஸீதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதீனாவிலிருந்து மக்கா புறப்பட்டனர்.
ஹுஸைன் (ரழி) அவர்களின் கூஃபா பயணத்தை தடுக்க முயற்சி
அநீதியை எதிர்த்து அறப்போர் செய்வதும் தங்கள் புனித கடமை என்று கருதிய ஹுஸைன் (ரழி) அவர்கள் தங்கள் குடும்பத்தினர் நூறு பேர்களுடன் கூஃபாவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் பயணம் செல்வதற்காக ஆயத்தமான போது நீங்கள் எங்கே செல்கிறீர்கள் உங்கள் தந்தையை கொன்ற உங்கள் சகோதரரை கொன்ற அந்த மக்களிடமா? வேண்டாம் செல்ல வேண்டாம் என்று தடுத்தார்கள்.
பின்னர் கர்பலாவில் ஹுஸைன் (ரழி) அவர்கள் மரணத்தை தொடர்ந்து, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் இரகசியமாக ஆதரவாளர்களைத் திரட்டத் தொடங்கினார்.
கஅபா தீப்பற்றி எரிந்தது
யஸீத் கலீபாவானதும் அவருக்கு எதிராக கலகக் கொடி தூக்கிய இவர்கள், இறுதியாக மக்காவில் வந்து அடைக்கலம் புகுந்தனர். இவர்களை அடக்க யஸீத் ஒரு படையை அனுப்பி வைத்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) சரணடைய மறுத்ததை தொடர்ந்து, ஹிஜ்ரி 64 இல் அப்படையெடுப்பின் குண்டு வீச்சில், கஅபா தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த கருப்புநிறக் கல் (ஹஜருல் அஸ்வத்) அத்தீயில் வெடித்து மூன்று பெரிய துண்டுகளாய் நொறுங்கி சிதறுண்டது. பின்னர் சில மாதங்களில் யஸீத் இறந்த செய்தி அவரது படையினருக்கு கிடைத்ததும் அவர்கள் மக்கா முற்றுகையை கை விட்டு பின்வாங்கி சிரியா சென்றனர்.
கலீபாவாக ஒன்பது ஆண்டுகள் மக்காவில் இருந்து நல்லாட்சி
யஸீத் இறந்த பின் இவர்கள் கலீபா பதவி ஏற்று ஒன்பது ஆண்டுகள் வரை மக்காவில் இருந்து ஆட்சி புரிந்தனர். அப்பொழுது தான் கஅபாவை மீண்டும் நிர்மாணித்தார்கள். அப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை வெள்ளிக் கம்பியால் பிணைத்து அதற்குரிய இடத்தில் பதித்தார். ஹிஜாஸ், இராக், சிரியாவின் ஒரு பகுதி ஆகியவை இவர்களை கலீபாவாக ஏற்றுக் கொண்டன.
ஒரு வீரர் போன்று போரிட்டு வீர மரணம்
திமிஷ்கில் அரசோச்சிய கலீபா அப்துல் மலிக் இப்னு மர்வான், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்களை எதிர்த்து ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபின் கீழ் ஒரு படையை அனுப்பி வைத்தார். அந்தப் படை மக்காவை ஆறு மாத காலம் முற்றுகையிட்டது. அன்னை அஸ்மாவால் வீர உணர்ச்சி ஊட்டப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் ஒரு வீரர் போன்று போரிட்டு ஹிஜ்ரி 73-ஆம் ஆண்டு ஜமாதுக் ஆகிர் திங்கள் 17 - ஆம் நாள் இறப்பெய்தினர்.
இவர்களின் தலை வெட்டப்பட்டு, மதீனாவில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு, பின்னர் திமிஷ்குக்கு அனுப்பப்பட்டது. மூன்று நாட்கள் வரை தொங்கிக் கொண்டிருந்த இவர்களின் உடல் பின்னர் இவர்களின் அன்னையிடம் ஒப்படைக்கப் பட்டது. இவர்களின் உடலை இவர்களின் அன்னை மதீனா கொணர்ந்து தம் கையாலேயே குளிப்பாட்டி ஸஃபிய்யா (ரழி) அவர்களின் இல்லத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்ததாக ஒரு வரலாறு கூறுகிறது.
கலீபா அப்துல் மலிக் இப்னு மர்வானின் மிரட்டல் கடிதம்
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்களின் குராஸான் ஆளுநராக இருந்த இப்னு ஹாஷிமுக்கு கலீபா அப்துல் மலிக் மடல் அனுப்பித் தமக்கு அடிபணிந்து விட்டால் அவரை அப்பதவியிலேயே உறுதிப்படுத்துவதாகக் கூற, அத்தூதர் தம் குலத்தவராயிருந்ததால் வெறுமனே விட்டதாகக் கூறி அம்மடலை மென்று விழுங்குமாறு அத்தூதுவரைச் செய்தார் அவர். அது கேட்டு வெகுண்ட அப்துல் மலிக், அப்துல்லாஹ் இப்னு ஸுபைருக்கு நேர்ந்த கதியே அவருக்கும் நேரும் என்பதை உணர்த்த அவரின் தலையை இப்னு ஹாஷிமுக்கு அனுப்ப அவர் அதற்குத் தைலமிட்டு அவரின் குடும்பத்தினரிடம் மரியாதையுடன் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.